மாகாணசபை தேர்தல்களும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும் | தினகரன் வாரமஞ்சரி

மாகாணசபை தேர்தல்களும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும்

புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு வெகு முன்னதாகவே மாகாண சபைகளையும் அவற்றைக் கொண்டு வந்த அரசியலமைப்புக்கான 13து திருத்தத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மாகாண சபை முறைமைக்கு ஆதரவாக கருத்தை இதுவரை சொன்னதில்லை.

இது விடயத்தில் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரான சரத் வீரசேகர மாகாண சபை முறைமைக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவராக அவர் தன்னை அடையாளப்படுத்துகின்றார். அவ்வாறான ஒருவர், அவற்றுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி எந்த நோக்கத்தில் அவ்வாறு செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது.

அதேவேளை 2021 பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்ததாக மாகாண சபைகள் அமைச்சுக்கே கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.அதுவும் மற்றொரு புறத்தில் குழப்பத்தைத் தருகின்றது.

இத்தகைய பின்புலத்தில், மாகாண சபைகளுக்கு விரைவாக தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குமாறு புதிய தேர்தல்கள் ஆணைக்குழு பதவியேற்ற முதல் நாளே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதன் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார். முன்னைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் கலந்ததான புதிய தேர்தல் முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆணைக்குழுவிடம் கேட்டிருந்தார்.

புதிய முறையொன்றுக்கு பொருந்தக் கூடியதாக நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்து, அத்தகைய தெரிவுக் குழுவை நியமிக்குமாறு பாராளுமன்ற சபாநாயகரை ஏற்கெனவே தான் கேட்டிருப்பதாக பிரதமர் கூறினார். அதேவேளை முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி விட வேண்டுமென்பதில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மிகுந்த அக்கறையாக இருக்கிறார் என்பது தெரிகிறது. அநேகமாக 2021 மார்ச் -- ஏப்ரலுக்கு முன்னதாக அவை நடத்தப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

நாட்டில் மாகாண சபைத் தேர்தல்கள் பல வருடங்களாக நடத்தப்படவில்லை. அவ்வாறு செய்வதன் மூலமாக மாகாணபைகள் செயற்படாத காரணத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடவுமில்லை; தேர்தல்கள் தாமதிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் கிளர்ந்து எழவில்லையே என்று மாகாண சபைகளுக்கு எதிராக பேசுகின்ற கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளும் பிரதமர் ராஜபக்‌ஷ மேற்கொள்கின்ற முயற்சிகளுக்கு முன்னால் மௌனத்தை சாதிப்பதையே காணக் கூடியதாக இருக்கின்றது.

விவேகமான அரசியல் மதியூகி என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது புதிய கட்சிக்கு இரண்டாவது, மூன்றாவது மட்ட தலைவர்களையும் அரசியல் தொண்டர்களையும் உருவாக்கி பயிற்சியளிக்க நிறுவனங்களை செயற்படுத்த வேண்டிய தேவையை உணருகிறார் என்றும், அத்தகைய தலைவர்களை வளர்க்க மாகாண சபைகள் உதவுகின்றன என்ற நம்பிக்கையை கொண்ட பிரதமர் அந்தத் திசையில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார் என்றும் கொழும்பில் இருந்து இயங்கி வரும் மூத்த இந்திய பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பி.கே.பாலச்சந்திரன் எழுதியிருக்கிறார்.

வழமையாக பதவியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் வளருகின்ற வெறுப்புணர்வு தனது பொதுஜன பெரமுன அரசாங்கத்தை தீண்டுவதற்கு முன்னதாக மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தி விட வேண்டும் என்பதிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மிகவும் குறியாக இருக்கிறார் என்றும், கொவிட்19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பிராந்தியத்தின் பல நாடுகளையும் விட சிறப்பாக அரசாங்கம் செயற்படுவதாக நம்பும் அவர், தற்போதைய தருணம் தேர்தலை எதிர்கொள்வதற்கு நல்ல நேரம் என்று மதிப்பிட்டிருப்பதாகவும் தெரிகிறது என்றும் அந்த அரசியல் அவதானி கூறுகிறார்.

இந்தியாவின் அக்கறை:

மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சிங்கள பௌத்த கடும்போக்கு தேசியவாதிகள் விடுத்து வருகின்றனர். அந்தக் கோரிக்கையினால் கவலையடைந்த தமிழ் தேசியவாத கட்சிகள், இது விடயத்தில் இந்தியா தலையீடு செய்து மாகாண சபைகளை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு முயற்சியையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்த இரு சந்தர்ப்பங்களில் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், ஜனாதிபதியும் பிரதமரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அதைப் பற்றி எதையும் பேசாமல், பின்னர் வெளியில் வந்து இந்தியப் பத்திரிகைகளுக்கு வழங்கிய நேர்காணல்களில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பாத எதையும் தமிழர்களுக்கு வழங்க தங்களால் முடியாது என்று வெளிப்டையாக பிரகடனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இந்திய தலைமைத்துவம் அதிருப்தி கொண்டிருக்கிறது என்பது கொழும்புக்கு பல தடவைகளில் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ராஜபக்‌ஷ தரப்பினரின் இத்தகைய நிலைப்பாட்டினால், மாகாணபைகளுக்கும் 13வது திருத்தத்துக்கும் நேரக் கூடிய கதி குறித்து தமிழ்க் கட்சிகள் மேலும் கவலையடைந்தன.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மாகாணசபை ஒழிப்பு குறித்து ஒருபோதும் பகிரங்கத்தில் பேசியதில்லை. ஆனால், மாகாண சபை ஒழிப்பு குறித்து உச்சஸ்தாயியில் தனது கட்சியையும் அரசாங்கத்தையும் சேர்ந்தவர்கள் பேசும் போதெல்லாம் அவர் அதை கண்டிப்பதுமில்லை.
ஆனால், இது விடயத்தில் இந்தியாவின் அக்கறை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை நன்கு தெரிந்து வைத்திருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தருணமறிந்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் அக்கறை காட்டுகிறார்.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி விட்டால் தங்கள் அரசாங்கம் மாகாண சபைகளை ஒழிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை இந்தியாவுக்கு அளிப்பதாக அமையும் என்று மஹிந்த ராஜபக்‌ஷ நம்புவதாகத் தெரிகின்றது. இது மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கான அவரின் முயற்சிகளின் பின்னால் உள்ள மூலோபாய முக்கியத்துவமாகும் என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பிறகு, மாகாண சபைகள் இயங்கத் தொடங்கியதும் தமிழ்க் கட்சிகள் இந்தியாவிடம் முறைப்பாடு செய்வதும் நின்று விடும் என்று அரசாங்கம் நம்புகிறது.

இந்தியா_ -- இலங்கை_ -- மாைலதீவு கடல்சார் பாதுகாப்பு முத்தரப்பு மகாநாட்டுக்காக கொழும்பு வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை அரசாங்கத்துடன் இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். அதில் மாகாண சபைகள் முறை பற்றி தமிழர்களுக்கு இருக்கும் கவலை குறித்தும் நிச்சயமாக ஆராய்ந்திருப்பார் என்பதில் சந்தேமில்லை.
அதேவேளை டில்லி திரும்புவதற்கு முன்னதாக இறுதி நிமிடத்தில் கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் அவர் சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.

இந்தச் சந்திப்புக்களுக்குப் பிறகு மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அக்கறை காட்டுவது தானாக புரியும் தன்மையுடைய அரசியல் வியூகமாகும்.

Comments