கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்புகள்

இன்றைய கசப்பு வில்லையில் கொஞ்சம் இனிப்பும் கலந்திருக்கும் அதாவது, Sugar coated capsules என்று மருத்துவர்கள் சொல்லித் தருவார்களே, அந்த மாதிரி.  

அத்தோடு என் ‘தன் வரலாற்று’ வாழ்க்கைக் குறிப்புகளும் கொஞ்சம் கலப்பு அவசியம் கருதி. அந்த 1948களில் ரேடியோ சிலோன் ரேடியோ மாமா சரவணமுத்து அனுப்பிய மூன்று சத அஞ்சலட்டை அழைப்பில் ‘சிறுவர் மலர்’ நிகழ்ச்சியில் பங்குபற்ற டொரிங்டன் வானொலி நிலையப் படிகளை மிதித்த இந்தப் பத்தி எழுத்தாளன் 55களின் பிற்பகுதியிலும் ‘60களின் முற்பகுதிகளிலும் இருபதாம் அகவையைக் கடந்த நிலையில், முஸ்லிம் நிகழ்ச்சிகள் பகுதித் தமிழ்த் தட்டெழுத்தாளர் பஞ்சம் தீர்க்க நியமனமானது ஒரு விசித்திர விபத்து! அதுவும் 24- மணி நேரத்திற்குள்!  

அப்பொழுது தகவல் ஒலிபரப்பு அமைச்சுப் பொறுப்பிலிருந்த பிரபல கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், அவரால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் நிகழ்ச்சி ஆலோசனை சபையின் தலைவர் காலஞ்சென்ற தேசமான்யர், கலாநிதி ஏ.எம்.எம். சகாப்தீன் சிபாரிசில் அதனை வழங்கினார்.  

அப்பொழுது மொத்தமாக நாலே பேர்தான் முஸ்லிம் நிகழ்ச்சிப்பிரிவுக்கு! ஒரு கட்டுப்பாட்டாளர் (எம்.எச்.குத்தூஸ்), ஒரு தயாரிப்பாளர் (இஸட். எல்.எம். முகம்மது) ஒரு லிகிதர், (எம்.பாலசிங்கம்) ஒரு தட்டெழுத்தாளர் (எம்.எம். மக்கீன்),  

இப்படியெல்லாம் ‘நிகழ்ந்தன நினைத்தல்’ செய்யக் காரணம், கிட்டத்தட்ட 60ஆண்டுகளுக்குப்பிறகு இப்பொழுது அந்த ஒலிபரப்பின் அசுர வளர்ச்சியை அனைவரும் ஒப்பிட்டுப் பார்க்கவே!  

நாள் தோறும் காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 வரை நான்கு மணி நேரமும் இரவில் 08.00லிருந்து 09.00 வரை ஒருமணி நேரமும் நடக்கும் ஒலிபரப்பில் பற்பல மார்க்க நிகழ்ச்சிகள் அளவுக்கு அதிகமான விளம்பரங்களுடன். சில சமயங்களில் போதிய விளம்பரங்கள் கிடைக்காதபட்சத்தில் 10.30க்கே நின்றுவிடும். (அதாவது 2 1/2 மணி நேரம் மட்டும்) இவ்வொலிபரப்புக்காக பல ஏஜண்ட்மார்கள், தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள் என ஏகப்பட்ட பேர்வழிகள்!  

எவ்வாறாயினும் இன்றைய இளசுகளை வேறுபல பண்பலை ஒலிபரப்புகளும், இணையங்களும், வலைத்தளங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாலும் ஆண்கள் வேலைகளுக்குப் போய் விடுவதாலும் பெரும்பாலும் காலை நிகழ்ச்சிகளை இல்லத்தரசிகள் உணவுகள் தயார் செய்து கொண்டும் மூப்பான தாய்மார்கள் சில்லரை வேலைகளைச் செய்து கொண்டும் செவிமடுக்கிறார்கள்.  

உண்மை நிலை இப்படி இருந்தபோதிலும் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தேசிய வானொலியில் தான் முஸ்லிம் நிகழ்ச்சிகள் அதிகம்.  

இந்தப் பெருமையைக் கடந்த 60ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக்காக்கிறது இலங்கை வானொலி.  

இப்பொழுது இந்த 2020 இறுதிப்பொழுதுகளில் இரண்டு நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன. அதை, அரசின் தேசிய ஒலிபரப்புச் சேவைகளை நிர்வகிக்கும் மேலிடம் அமைச்சரது அனுசரணையில் செய்துள்ளது.  

ஒன்று, பெண் நேயர்களே முஸ்லிம் சேவைக்கு அதிகமதிகம் என்பதைப் புரிந்தோ என்னவோ, தலைமை நிர்வாகப் பொறுப்புக்கு ஒரு பெண் (உதவிப்) பணிப்பாளர் முதல் தடவையாக நியமனம்.  

இப்பெண்மணி (திருமதி ஃபாத்திமா றினோஷியா) ஒரு பட்டதாரி. ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துச் செய்திப்பிரிவுக்கு ஒரு தமிழ்ச் சுருக்கெழுத்தாளராகவும், தட்டெழுத்தாளராகவும் கால் பதித்தவர். அங்கே ஆறாண்டுகள். அப்புறம் இருபது ஆண்டுகள் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் பற்பல பதவிகள், பணிகள்! (ஆக சேவைக்காலம் 26!) பணிப்பாளர் பதவி பெற நல்ல தகுதியே! பொருத்தமே பாராட்டி வாழ்த்துவோம்.  

மற்றொரு நல்ல காரியம், ஆலோசனை சபை ஒன்றுக்கு ஐவர். 60 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக கலாநிதி பதியுத்தீன்மஹ்மூத், தேசமான்யர் ஏ.எம்.எம். ஸஹாப்தீன் தலைமையில் அமைத்த ஒன்றுக்குப்பிறகு இந்த 2020ன் புதிய சபை பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளது.  

கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் உப தலைவரும் பிரபல சமூக சேவகருமான, தொழில் அதிபர் ஹாஜி முஸ்லிம் சலாஹூத்தீன், கண்டி பிரபல வர்த்தகர், சமூக சேவகர், பள்ளிவாசல்களின் தர்மகர்த்தா அல்ஹாஜ் அப்ஸல் மரிக்கார், கண்டிமாவட்ட உலமா சபை உப- தலைவரும், வஃக்ஃப் சபை அங்கத்தவருமான அல்ஹாஜ் பஸ்லுர் ரஹ்மான் மஹ்ழரி, ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் ஸறூக் மற்றும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் முதலியோர் இச்சபை அங்கத்தவர்கள்.   மகிழ்வுடன் வாழ்த்து தெரிவிக்கும் அதே நேரம் ஒரு நெருடல், பெரும் ஆதங்கம்.  

இந்தச் சபையில் இஸ்லாமியக் கலை- இலக்கியத்துறை சார்ந்த அங்கத்தவர் ஒருவராவது நியமனமாகவில்லை.

நாளொன்றுக்கு 05 அல்லது  சில வேளைகளில் 03 1/2 மணி நேர சேவை என்பது மார்க்கப் பிரசங்கங்களுக்கும், அல்-குர் ஆன் விளக்கங்களுக்கும், அறபுப் போதனா வகுப்புகளுக்கும் மட்டுமான ஒன்றன்று. அவற்றையும் பிரதானமாக ஒலிபரப்பிக் கொண்டு ஜனரஞ்சக பல்சுவை கலை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் நேரம் அவசியம் ஒதுக்கியாக வேண்டும். இதைத் தான் 1955ல் அமைக்கப்பெற்ற Royal Commission of Broadcasting வழிகாட்டு அறிக்கை சொல்கிறது. ஆகவே, இதற்கு ஆலோசனை சொல்ல, சிறந்த பொருத்தமான அனுபவமிக்க ஒருவர் இருந்தாகவும் வேண்டும். ஆனால் அமைந்துள்ள சபையில் இல்லையே யாரும்?  

ஏற்கனவே ஒரு "தீயசக்தி" வானொலி முஸ்லிம் நிகழ்ச்சி பற்றி நச்சுக் கருத்துக்களைத் தூவிக் கொண்டிருக்கிறது.  

“வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சி என்ற பெயரில் அடிப்படைவாத மதப் பிரசாரங்களுக்கு பலமணி நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு முஸ்லிம் நிறுவனங்கள் விளம்பரங்கள் என்ற போர்வையில் பணத்தை வாரிக் கொட்டுகின்றன" என்றெல்லாம் தாறுமாறாகத் துப்பித் தீர்த்துவிட்டது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை.  

சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எழுத்து பூர்வமான கண்டனத்தையும், “ஒலிபரப்பே தடை செய்யப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் முன் வைத்திருப்பதாக, இதை அச்சுக்குக் கொடுக்கும் சமயம் செவிப்புலனில் விழும் செய்திகள் ஒலிக்கின்றன.  

ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள அவகாசமில்லாதவனாக ஒன்றையே ஒன்றை மட்டும் நான் இனிப்புடன் கூடிய கசப்புவில்லையாக வழங்குகின்றேன்.  

எந்தத் தீய துவேச சக்திகளுக்கும் சரியான பதிலடிகொடுக்க வானொலி முஸ்லிம் ஒலிரப்பில் மார்க்க நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது சிறந்த கலை – இலக்கிய – நாடக நடைச்சித்திர நிகழ்ச்சிகள், நேர் காணல்கள், கலந்துரையாடல்கள் உள்ளூர் இஸ்லாமிய கீத நிகழ்ச்சிகள் புகுத்தப்பட வேண்டும். அதற்கெல்லாம் நல்ல, ஆலோசனை வழங்க ஒரு கலை – இலக்கிய – நாடகத்துறை அனுபவசாலி சபையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லையே?  

இதை மிக மனவேதனையுடன் கசப்பாக வழங்கி நிறுத்திக் கொள்கிறேன்.  

இனிப்பு

‘புற்றீசல்’ – என்று விவரிப்பார்கள், ஒன்றுக்கு மேற்பட்டு ஒரு விடயம், ஒரே நேரத்தில் பல இடங்களில், (ஏன், பல நாடுகளிலும் கூட) நடக்கும் போது!  

அது நல்ல நிகழ்வாக இருந்தாலும் நெற்றியைச் சுளிக்க வேண்டியதுள்ளது.  

இந்த அதி நவீன தொழில்நுட்ப யுகத்தில் “Zoom Meeting’ என்றழைக்கிறார்கள். இந்த ‘Zoom’க்குக் ‘கானொளி’ 'செவியொலிக்காட்சி', என்றெல்லாம் நான் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  சரியான தமிழை மேமன்கவி போன்ற நிபுணர்கள் தெரிவிக்கலாம்.  

சமீபகாலத்தில் இந்த டிசம்பர் மாதத்தில், இலங்கைத் தமிழ் வட்டாரத்தை ஒருபுறம் ஒதுக்கி விட்டு, தமிழர், மலேசியா, சிங்கப்பூர், துபாய், லண்டன் என்று நோக்கினால் வெள்ளி – சனி- – ஞாயிறு நாட்களில் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக்கொண்டு ‘ஸூம் மீடடிங்’குகள். எதைக் கேட்பது, எதைத் தவிர்ப்பது  என்ற நிலை!

ஒரு புறம் இனிப்பான சங்கதி!  

கிருமி முடக்கத்திற்குச் சரியான பரிகாரம்! கலை- இலக்கியம் பேசப்படுகிறது. பலதரப்பட்ட கருத்தாடல்கள் நடத்தப்படுகின்றன.  
சிங்கப்பூர் போன்ற சிங்கார இடங்களில் ‘தமிழ்விழா’ என்று இரண்டு மூன்று நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள்.  

இந்த ‘ஸூம்’ பற்றியும் அதன் தொழில் நுட்பம் பற்றியும் சரிவர தெரியாதோர், புரியாதோர், (என்னையும் சேர்த்துத்தான்) தடுமாற்றம்! ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் பாடு படு திண்டாட்டம்!  

எவ்வாறாயினும், இன்றைய சூழ்நிலையில் இது மிக மிக இனிப்பான சுவை கூடிய கலை- இலக்கியச் சங்கதி.  

ஆனால்... ஆனால்..  எதிர்காலத்தில் கிருமி ஆக்கிரமிப்பு எல்லாம் தணிந்த காலத்தில்..... பொது நிகழ்வுகள், வெளியீட்டு விழாக்கள், ஒன்றுகூடல்கள், கலந்துரையாடல்கள், சிரித்து மகிழ்ந்து தேநீர் உபசாரங்களில் மூழ்குதல் அனைத்துமே அம்போ என்று ஆகிவிடுமோ என்ற கசப்பான உணர்வும் மேலிடுகிறது.  

“செலவு ரொம்ப ரொம்பக் குறைவு. அவரவர் வீட்டில் இருந்து கொண்டே ஸூம் ஸூம்,  தாம் தூம் எனக்குதிப்போம்” என்று எல்லோரும் சொல்லி வீட்டிலேயே முடங்கிக் கொண்டால் அழகழகான மண்டபங்கள் வௌவால், எலி வகையறாக்களின் குடியிருப்புகளாகி விடுமோ என்றச்சம்! பழையப் பாரம்பரியம் அழிந்து விடலாகாது.

காலமகளே, கலங்கடித்து விடாதே அம்மா, கலை – இலக்கிய நெஞ்சங்களை...!  

Comments