கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்புகள்

புத்தாண்டு பிறந்து மூன்றே நாட்கள் பூர்த்தி ஆகியிருக்கும் சமயத்தில் இந்தக் கசப்பைத் தரக் கூடாது.  

இருந்தாலும் கடமை என்று ஒன்றிருக்கிறது. அத்தோடு அனைவருக்கும் முந்திக்கொண்டு வழங்கும் பழக்கதோசம்.  

ஆகவே விழுங்க முயற்சி எடுங்கள். இந்த உருண்டை வடிவிலான பூமித்தாய், தான் பெற்றெடுக்கும் பிள்ளைச் செல்வங்களின் தொகையைப் பாதியாகக் குறைத்துக்கொள்ள இந்தப் புத்தாண்டில் சங்கல்பமாம்!  புரிகிறதா? உலகளவில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தைக் குறைத்துக்கொள்ள அன்னை பூமி முடிவு!  

இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எண்ணிக்கை குறைந்திருப்பது துல்லியமாகத் தெரியுமாம்!  

“டேக் இட் ஈஸி! ஏற்கனவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் வீழ்ச்சிதான்” என்கிறார் பேராசிரியர் கிரிஸ்டோபர் முர்ரே!  

எதிலும் முதலிடம் பிடிக்கத் துடியாய்த் துடிக்கிற சீனாவில்தான் முதல் தாக்கம்!  

இப்பவே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனாவில் இது நடந்தே ஆக வேண்டியிருக்கிறதாம்!  

140 கோடியிலிருந்து 2100 ஆம் ஆண்டு பிறக்கும் போது 73.02 கோடியாக ஆகிவிடுமாம். அப்பொழுதுதான் வசிக்க, வாழ போதிய இடம் கிடைக்கும்.  

இந்திய நாடு இதற்கு அடுத்தபடியான இடத்தைப் பிடிப்பதை யாராலும் தடுத்துவிட இயலாதென ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  

மொத்தமாகவே 2100ல் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23 நாடுகளில் மக்கள் தொகை பாதியாகக் குறைவதை தவிர வேறு மாற்று வழியில்லை.  

இப்பவே குழந்தைச் செல்வங்கள் பெறுவது கணிசமான அளவு குறைந்து குறைந்து போய்க் கொண்டிருப்பதை சாதாரணமாக அவதானிக்கலாம்.  

கடந்த 2017ல், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கியப்பிரிவு நடத்திய ஆய்வொன்றில் கண்டறிந்தது.பெண் குழந்தைப்பேறு 2.04 விழுக்காடு உலகளாவிய ரீதியில் குறைந்துள்ளது என்பதும் 2100ல் அது 01.07 ஆகக் குறையும் சாத்தியம்.  

இப்படி எல்லாம் ஒரு கணக்குப் போட்டிருக்கிறார்கள்.  

* 2064லில் அதிகபட்சமாக உலகின் மக்கள் தொகை 970 கோடிகள். அதுவே நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் 880 கோடியாக ஆகிவிடும்.  

* 2017ல் 12.08 கோடியாக இருந்த ஜப்பானின் அதிகபட்ச மக்கள் தொகை 2100 ஆம் ஆண்டை அண்மிக்கும் போது 05.03 கோடிகள் மட்டும்.
கிட்டத்தட்ட 07 கோடிகள் காணாமலாகும்.  
* இதே காலகட்டத்தில் இத்தாலியிலும் 06.01 கோடியில் இருந்து 02.08 கோடியாக மக்கள் குறைந்து போவர்.  
* ஸ்பெயின், போர்த்துக்கள், தாய்லாந்து, தென்கொரியா போன்ற 23 நாடுகளில் நிச்சயமாக இப்போதிருக்கிற தொகையில் பாதி குறைந்தே போகும்.  

அதே நேரத்தில் இந்த நாடுகளில் 80 அகவைகளைக் கடந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம்!  
அதனால் உலகளாவிய ரீதியில் பல பிரச்சினைகள் உருவாகலாமாம்!  

என்ன வெடிகுண்டு இது! இப்ப சுற்றிக்கொண்டிருக்கிற வைரஸை விட வைரம் பாய்கிற விவகாரமாக இருக்கிறது!  
வாருங்கள்.... வாருங்கள்.... மேலும் கசப்பு வேண்டாம். புத்தாண்டு பிறந்திருக்கிற நேரத்தில் நல்ல இனிப்புக்களைச் சுவைப்போம்....  

இனிப்பு

நான் நெடுங்காலமாக வாழும் மாளிகாவத்தை அடுக்ககத்தில் என்னைச் சுற்றிலும் சிங்கள, -இந்து,- கிறிஸ்தவப் பெருமக்களின் குடும்பங்கள். நாங்கள் மிக ஒற்றுமை. அதனால் கிறிஸ்மஸும், புத்தாண்டுத்தினமும் வீடு நிறைய இனிப்புகள்.   கிருமி ஆக்கிரமிப்பு இல்லாமலிருந்தால் அபிமானிகள் பலரையும் இல்லம் அழைத்து குவிந்த இனிப்புகளை வழங்கிக் குதுாகலித்திருக்கலாம்.  நல்லது. அந்த இனிப்பு சங்கதி இனிமையாக இதயத்துக்கு ஊறுவிளைவிக்காமல் ஊடாடட்டும்- , -2021 முழுவதிலும்.  

நான் ஒரு நூலை வழங்கி அது பற்றிய இனிப்பை வழங்குகிறேன்.  

2018ஆம் ஆண்டில் 456 பக்கங்களில் ஒளிக்கிற்றுகளை வாரி இறைத்தன அந்த மின்னும் தாரகைகள்!  

தலைப்புக்கு மிகப் பொருத்தமாக நட்சத்திரங்களுக்கு ஒப்பாக மின்னும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளக் கண்மணிகளைப் பற்றிய பதிவுகள்.  

உலகளாவிய ரீதியில் கணக்கிட்டால், இந்தச் சின்னஞ்சிறு மரகதத் தீவின் முஸ்லிம் பெண்களே கலை, இலக்கியத் துறைகளில், ஊடகங்களில் முன்னணி! அவர்களே வெற்றிக்கொடி நாட்டியவர்கள்!  

தமிழ்நாட்டவர்களை பின் தங்கிப் போகச் செய்த கைங்கரியத்தையும் அவர்கள் செய்திருக்கிறார்கள்.  

அத்தனை பேரையும்- மொத்தம் 140 அடையாளமிட்டு அலைகடலுக்கு அப்பால் உள்ளவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் ஒரு மலையகத்து பெண். சரியாகச் சொல்வதானால் கண்டிப் பகுதி ஹேவாஹெட்ட உடுதெனிய கிராமத்துப் பெண்.  

மிக எளிமையும், இனிய பண்புகள் நிறையவும் கொண்ட அவர் தன் பெயரிலேயே, வெளிச்சம் (ஒளி) எனக் கருத்துப்படும் “நூர்” என்னும் அறபு வார்த்தையை வைத்திருக்கிறார்.  

ஆம் அபிமானிகள் யூகம் சரி! நூருல் அயின் ரஷீத் ஆகிய திருமதி நஜ்முல் ஹுசைன் (வேறு யார், ‘நம்ம’ தனித்துவ கவிஞரே!  

கலை – இலக்கிய- ஊடகத்துறைகளில் அவர் ஏறிய ஏணிப்படிகள் எத்தனையோ. அரசாங்க தகவல் திணைக்களத்தின் முஸ்லிம் பெண் தகவல் அதிகாரியாக 20 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரே முஸ்லிம் பெண்ணாகத் துலங்கி ஓய்வு பெற்ற நிலையில் இப்பொழுது பொன் விழாவை நோக்கி....  

இந்த 2021 ஆம் புத்தாண்டில் அவர் புரிந்திருக்கும் பாரிய பணி தன் ‘மின்னும் தாரகை’களுக்குப் புதுப் பரிணாமம் கொடுத்து அதாவது அவரே மொழியாக்கம் செய்து பரந்து விரிந்துபட்ட சிங்கள கலை- இலக்கிய வட்டத்தினருக்கு வழங்கல்!  

திருமதி நூருல் அய்ன், சிங்கள வட்டத்திற்கு எம்மவர்களை அடையாளப்படுத்துவதென்பது சாதாரணமானவொன்றன்று. அவர்களை நம்மோடு ஊடாடச் செய்யும். நம் தமிழ்  படைப்பாளிகளை, ஊடகவியலாளர்களைத் தெரியவைப்பது இந்தத் தீவில் ஆண்டாண்டுகால இலக்கியப் பங்களிப்புகளைப் புரியச் செய்து அதிசயங்கொள்ளச் செய்யும்.  

அவரது ஆய்வு நூல் தமிழில் வெளியாகி ஈராண்டுகள், மூன்று மாத ங்கள் பறந்துவிட்ட நிலையில், ‘கிருமியாரை’ தாஜாபடுத்தி இந்த 2021- புத்தாண்டில், “திதுலன தாரகா” என்ற தலைப்பில் ‘மின்னும் தாரகை’களின் சிங்கள வடிவம் வெளியாகவுள்ளது.  

முழுக்கவும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய இந்நூலில் ஒரு விசித்திரத்தைச் செய்திருக்கிறார் திருமதி நூருல் அய்ன்.  
அணிந்துரைக்கு ஒரு பெண்மணியை அணுகாமல் மூத்த ஆண் எழுத்தாளர் ஒருவருக்குக் கௌரவம் அளித்து அசத்தியிருக்கிறார். அந்த எழுத்தாளருக்கும் அதுவே முதல் சிங்கள எழுத்து! ஆளைச் சொல்லவா? மிகப் பணிவுடன் பதிவிடுகிறேன், அடியேனே! அனைத்தும் அவன் எண்ணப்படும் திட்டப்படியும்!
******

2018 டிசம்பர் 25  
தமிழகம் ராமேஸ்வரம், ராமநாதபுரம், தூத்துக்குடி கார்ப்பட் நெடுஞ்சாலையில், ஒருகாலத் துறைமுகமும், பல விடயங்களில் பிரசித்திபெற்ற இடமுமான கீர்த்திமிகு கீழக்கரை உள்வாங்கி உள்ளது. மேற்படி தினத்தில் ஒரு திருமண வைபவத்தில் கிட்டத்தட்ட இலங்கை வாசிகள் நூறு பேர் விசேட விருந்தினர்! இந்தப் பத்தி எழுத்தாளனும் ஓர் ஆள்!  

அழைப்பு, இலங்கைத் தொழிலதிபரும், இலக்கியப் புரவலரும், கொடைவள்ளலுமான சதக் அப்துல் காதர் காக்கா. அன்னார் இல்லத் திருமணம்.  

இரவு 07லிருந்து 09க்குள் எல்லாவகை உணவுகளையும் உண்டு ருசித்தபின் ஆரம்பித்த திருமண நிகழ்வுகள் நள்ளிரவு வரை நீடித்தது.  
கடற்கரையை ஒட்டிய கீழையின் பெரிய வளாகமொன்றில் மார்கழிக் குளிருடன் குளிராய் வைபவங்கள் ஒன்று ஒன்றாய் நடக்க, குளிர் போக்க சுடச்சுட ஓர் ஏற்பாடு! அதுவும் விசேடமாக கிழக்கிலங்கையிலிருந்து இறக்குமதி!  

படத்தைப் பாருங்கள். ஒரு பெயர்ப்பதாகையையும் வாசியுங்கள். “காத்தான்குடி” பெரிய எழுத்தில் அதற்குக் கீழே “மசாலா டீ” என்று!  
ஆம்! அனைவருக்கும் சுடச்சுட அடிக்கடி வழங்கப்பட்டு குளிரைப் போக்க உதவிக் கொண்டிருந்தது. ஒரு காரமான, இனிப்பான தேநீர்!  
அதை விநியோகிக்க, கேரளத்துப் பாலக்காடு ஊர் பாவையர் நூறு பேர்!  

தமிழக விருந்தினர்கள் முதன் முதல் “காத்தான்குடி மசாலா டீ”யை ரசித்து ருசித்தார்கள். 2018 இறுதிப் பொழுதுகளில் ஏற்பட்ட அனுபவம் 2019-, 20களிலும் தொடர முடியாதபடி கிருமி ஒன்று மாற்றி மாயாஜாலம் செய்துவிட்டது!  
 

Comments