அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா சாத்தியம் இல்லை என்கிறது கம்பனி தரப்பு | தினகரன் வாரமஞ்சரி

அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா சாத்தியம் இல்லை என்கிறது கம்பனி தரப்பு

2021ம் ஆண்டு  மலர்ந்துள்ளது.  கடந்தாண்டுகளைப் போலவே  சம்பளப் பிரச்சினை இவ்வாண்டும் தொடரக்கூடாது என்ற எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள் தொழிலாளர்கள்.  கடந்த வாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் நலன்புரி சேவைகள் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.  

தொழில் அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தைக்கு தொழிலமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமைத் தாங்கினார். வழமைபோல் கூட்டு ஒப்பந்த பங்காளிகளான தோட்ட முதலாளிமார் சம்மேளனம், மலையக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் பங்கேற்றார்.  

முன்னரெல்லாம் கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை என்றாலே பரபரப்பு  காணப்படும். ஊடகங்களும் சுடச்சுட செய்திகளைத் தரும். ஆனால் இம்முறை அப்படியேதும் அமர்க்களம் இல்லை. கடந்தகால ஒப்பந்தங்கள் சப்பென்று ஆகிப்போன சலிப்பாகக்கூட இருக்கலாம்.  

ஆனால் இம்முறை இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தத்தில் மூன்று சிறப்புகள் காணப்பட்டன. அமரர் ஆறுமுகன் தொண்டமான் பிரசன்னம் இல்லாமல் நடந்தது ஒரு அம்சம். அடுத்தது இராஜாங்க அமைச்சர் இ.தொ.கா. சார்பில் பங்கேற்றமை. மூன்றாவது அம்சமாக 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின்போது பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, ஜனவரி முதல் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டுமென்று கேட்டிருந்த பின்னணியில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றமை. குறிப்பாக இந்த 1000 ரூபா சம்பள அதிகரிப்பு அவசியம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியும் குறிப்பிட்டிருந்தார்.  

இதனால் ஏதாவது அற்புதம் நிகழலாம் என்று கூட சிலர் எண்ணிக் கொண்டிருந் தனர். ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை. முதலாம் கட்ட பேச்சுவாாத்தை இடம்பெற்று முடிந்த சூட்டோடு சூடாக இ.தொ.காவின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில் பேச்சுவார்த்தை சுமுகமாக இடம் பெற்றதாகவும் கூட்டு ஒப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர்களுக்கு பாதகமான ஷரத்துக்களை நீக்குவது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 31ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.  

பேச்சுவார்த்தைகள் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் கருத்து  தெரிவித்த இ.தொ.காவின் உப செயலாளரும் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி, கடந்த பேச்சுவார்த்தையில் கம்பனிகள் தங்களது பணிப்பாளர் குழாம் மற்றும் தலைவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் 31ம் திகதி கூடுவதாக  தெரிவித்திருந்தனர். எனினும், காலம் போதாமையினால் முதலாளிமார் சம்மேளனம், தொழில் அமைச்சரிடம் 7ம் திகதி வரை பேச்சுவார்த்தையை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்கும். அதுகுறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது சம்பளப் பிரச்சினைக்கே முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கையில் எடுக்கப்பட்டதோ வேறு விடயம். ஒருவகையில் அதுவும் கூட அவசியமானதும் அலசப்பட வேண்டியதுமாகும்.  

1992ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அரசாங்கம் பெருந்தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கியது. சந்திரிகாவின் அமைச்சரவையில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் அங்கம் வகித்திருந்தார்.  

அன்றைய அரசாங்கம் இப்படியொரு முடிவுக்கு வரக்காரணம் அரசு நேரடி முகாமைத்துவத்தின் கீழிருந்த பெருந்தோட்டத்துறை நட்டத்தில் இயங்கிமை தான். ஆனால் அதற்கான காரணங்களை ஆராயாமல் தனியார் தலையில் கட்டிவிட்டுத் தப்பிக் கொள்ளலாம் என தப்புக்கணக்கு போட்டது அப்போதைய அரசாங்கம். கம்பனிகள் அதனை அறியாமல் இல்லை. அரசாங்கத்திடமிருந்து மானியங்களையும் சலுகைகளையும் பெறுவது என்றும் உறுதிப்பாட்டின் கீழ்தான் பெருந்தோட்டங்களை அவை பொறுப்பேற்றன.  

தனியார் கம்பனிகள் தோட்டங்களைக் கையேற்றமையானது மலையகத் தொழிற்சங்கங்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் அரசாங்கத்தின் பக்கம் பலமிக்க தொழிற்சங்க சக்தியாக இ.தொ.கா. இருந்ததால் எதிர்ப்புகள் பெரிதாக எடுப்படவில்லை.  

எல்லோரையும் சமாதானப்படுத்தும் நோக்கில் பெருந்தோட்டக் கம்பனிகள் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியது. தோடட்டத் தொழிலாளர்களது நலன் காக்கப்படும், அவர்களது வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும் என்றெல்லாம் கூறிவைத்தன. ஆனால் நாளடைவில் நடந்ததுதான் வேறு. இதுவரை காலமும் (அரச முகாமைத்துவம்) பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுவந்த சலுகைகளும் நிவாரணங்களும் கவ்வாத்துச் செய்யப்பட்டன. இதை மலையக தொழிற்சங்கங்கள் விமர்சனம் செய்து வந்தாலும் இ.தொ.காவை மீறி எதனையும் செய்ய திராணியற்றுக் காணப்பட்டன.  

தோட்டங்கள் கைமாற்றம் கண்ட பின் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அமைச்சரவையில் மசோதா ஒன்றை சமர்ப்பித்தார். அதுவே கூட்டு ஒப்பந்தத்துக்கான அத்திவாரம். பாராளுமன்ற அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால் கூட்டு ஒப்பந் தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பு சம்பந்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்பினருக்கே வழங்கப்பட்டது தான் இதில் முக்கிய அம்சம்.  

ஆரம்பத்தில் இக்கூட்டு ஒப்பந்தத்தில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம், இலங் கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளார் சங்கம் (ஐ. தே.க. தலைமையிலான தொழிற்சங்கம்) என்பனவே கையொப்பமிட்டன. மலையகத்தின் இதர தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் 10 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்பாக இணைத்துக் கொள்ளப்பட்டது. இருந்தும் ஒப்பந்தத்தில் இ.தொ.காவின் கையோங்கியிருப்பதாக தென்பட்டது.  

1992 வரை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் அரச சம்பள நிர்ணய சபையாலேயே கையாளப்பட்டது. இச்சபையில் அரச அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதால் எடுக்கப்படும் முடிவுகள் எல்லாமே அரசாங்கத்துக்கு சார்பாகவே இருப்பதையிட்டு அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் விரக்தியடைந்தார். இதற்காக இவர் தேர்ந்தெடுத்த ஒரு முறைமையே தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள நிர்ணயம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம்.  

இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அது ஈடேறவில்லை. பகீரதப்பிரயத்தனத்தின் பின்னரே ஆண் பெண் தொழிலாளர்களுக்கான சமசம்பளம் கைக்குக் கிட்டியது.  

சொல்லப்போனால் 1992இற்கு முன்பிருந்த சம்பள நிர்ணய சபையால் மேற்கொள்ளப்பட்ட சம்பள சம்பள நிர்ணயம் போலவே கூட்டு ஒப்பந்தத்தின் பின்னரான சம்பள அதிகரிப்பு சமாச்சாரமும் சொதப்பியது.  

அவ்வப்போது கூட்டு ஒப்பந்தம் மூலம் இணக்கம் காணப்படும் விடயங்களை தோட்டக் கம்பனிகள் கண்டுகொள்வதே இல்லை. இறுதியாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டங்களை துப்புரவாக பராமரிப்பது என இணங்கினாலும் அதை செய்யாமலே அடுத்த ஒப்பந்த்துக்கும் தாயாராகியுள்ளன இந்த கம்பனிகள்.

கூட்டு ஒப்பந்தத்தில் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளப்படும் புதிய அம்சங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவே அமைகின்றது. இதை இப்பொழுதாவது இ.தொ.கா. உணர்ந்திருப்பது வரவேற்புக்குரியதே. ஏனெனில் கூட்டு ஒப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர்களுக்கு பாதகமான ஷரத்துக்களை களைய வேண்டும் என்ற பிரேரணையும் இ.தொ.காவே கொண்டு வந்திருக்கிறது.

பதிலுக்கு தோட்டக் கம்பனிகளைப் பாதிக்கும் ஷரத்துக்கள் என்று இன்னுமொரு பட்டியலை முதலாளிமார் சம்மேளனம் முன்வைக்கவே போகிறது. இதனை இ.தொ.கா. எவ்வாறு எதிர்நோக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் முதலாவது சுற்றுப் பேச்சு வார்த்தையின்போது எடுக்கப்படவில்லை. ஆனால் இனிவரும் சுற்றுக்களில் எடுக்கப்பட்டே ஆக வேண்டும். ஆனால் கம்பனித் தரப்போ மீண்டும் தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அடம் பிடிக்கிறது கம்பனித் தரப்பு. ஆனால் இ.தொ.கா. ஆரம்பம் முதலே 1000 ரூபா அடிப்படை சம்பளமாகவே வேண்டும் என்று கூறிவந்திருக்கிறது.
ஜனாதிபதியும் பிரதமரு ம் கூட ஆயிரம் ரூபா சம்பளம் என்றே கூறுகிறார்கள். தற்போது எழுந்துள்ள பிரச்சினை இதுதான்.

தொழிலாளர்களுக்கு எல்லா கொடுப்பனவுகளையும் சேர்த்து 1000 ரூபாவா? அல்லது அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவா?.
கம்பனித் தரப்பு சகல கொடுப்பனவுகளையும் உள்ளடக்கி 1000 ரூபாய் சம்பளம் என்றால் பேசலாம் என்கிறது. அதுவும் நிபந்தனைகளுடன் தான்சாத்தியம் என்பது அதன் தர்க்கம்.

ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றுக்கு 105 ரூபாய், வருகைக்கான கொடுப்பனவு 70 ரூபாய், உற்பத்தி கொடுப்பனவு 75 ரூபா, மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்கான கொடுப்பனவு 75 ரூபாய் என்பது கம்பனிகளின் கணக்கு. இதன்படி பார்த்தால் நாளொன்றுக்கு 1025 ரூபாய் கிடைக்கும்.

ஆனால் அடிப்படைச் சம்பளம் இறுதியாகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப் பிரகாரம் அதே 700 ரூபாய்தான். இதனை இ.தொ.கா. ஏற்றுக்கொள்ளுமா? சிலவேளை அழுத்தங்களின் பேரில் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் எனும் கனவு என்னவாகும்? தவிர கம்பனிகளின் நிபந்தனைகளுடன் உடன்படுவோம் என்னும் அறிவிப்பின் பின்னணியில் பறிபோகக்கூடிய தொழிலாளர் நலன் சார்ந்த சங்கதிகள் ஏதும் இருக்குமோ என்னும் ஐயமும் எழாமல் இல்லை.

பன். பாலா

Comments