பழந்தமிழர் பாரம்பரியத்துடன் நம்மை இணைக்கும் தைப்பொங்கல் தமிழர் பண்டிகை | தினகரன் வாரமஞ்சரி

பழந்தமிழர் பாரம்பரியத்துடன் நம்மை இணைக்கும் தைப்பொங்கல் தமிழர் பண்டிகை

கால்நடை வளர்ப்பு என்பது தமிழரின் கலாசாரம் தொடர்பான ஒரு வர்த்தகம், விவசாயம் என்று நாம் சொன்னாலும் ஒரு காலத்தில் –ஏன் மிக நீண்ட காலமாகவே – உலகெங்கும் கால்நடை பொருளாதாரம் தான் பிரதான பொருளாதாரமாக விளங்கிவந்திருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக இருந்து இயக்கிக் கொண்டிருந்ததும் கால் நடை வளர்ப்புதான்.

ஆபிரிக்காவின் பிரதான பொருளாதார நடவடிக்கையாக பரந்த அளவில் இருந்து வந்தது கால்நடை வளர்ப்பு தான். கால்நடை வளர்ப்பு என்பது அவர்களுக்கு ஒரு கலை மட்டுமல்ல, அது ஒரு மதம், கலாசாரம் உயிர் மூச்சு என்றும் சொல்லலாம். இன்றைக்கும் ஆபிரிக்காவின் மூத்த பழங்குடிகள் மாடு வளர்ப்பதையே பிரதான தொழிலாகக் கைகொண்டு வருகிறார்கள். ஆபிரிக்காவிலும் இந்தியாவிலும் மாடுகள் என்றால் மத்திய கிழக்கு நாடுகளில் ஆடுகள் – செம்மறிகள் வளர்ப்பு முதன்மை பெற்றிருந்தது. இயேசு அவதரித்தபோது வெளியே புல்வெளியில் கால்நடைகளை மேய்த்து களைத்து உறங்கிக் கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் தோன்றும் தேவதூதர்கள் குழந்தை இயேசுவின் பிறப்பை அறிவிப்பதாக விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதம் இயேசுவை மந்தை மேய்பவராகவே வர்ணிப்பதோடு, காணாமற் போன அல்லது மந்தையை விட்டு விலகிப்போன ஆடுகளை தேடுபவராகவும் கிறிஸ்துவை குறிப்பிடுகிறது. கிறிஸ்தவ பாதிரிமாரை ‘பாஸ்டர்’ (இடையன் அல்லது மேய்ப்பன்) என்றே அழைக்கிறார்கள். இயேசுவின் பிறப்பு நிகழ்ந்ததும் ஒரு கால்நடைகளுக்கான தொழுவத்தில்தான். அது மாட்டுத் தொழுவம் என நாம் சொன்னாலும் அக் காலத்தில் மத்திய கிழக்கில் மாடுகள் வளர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. அவர்கள் செம்மறிகளையே வளர்த்தார்கள்.

இடையன் அல்லது மேய்ப்பன் என்பது நமது வழக்கில் உயர்வானது அல்ல. ஆனால் கிறிஸ்தவத்தில் இடையன் என்றால், விசுவாசி, விசுவாசிகளை வழிநடத்துபவர், விலகிச் செல்வோரை அரவணைத்து முன் செல்பவர், இரட்சகர் என்று பல்வேறு பொருள்களில் அர்த்தப்படுத்துக்கிறார்கள்.

இந்தியாவுக்கு வருவோமானால், யாதவ் குலம் என்றால் தாம் பெரிய ‘இடத்து ஆட்கள்’ என்ற செருக்கு அவர்களுக்கு உண்டு. தமது பெயருடன் யாதவ் என்ற குலப்பெயரையும், ரெட்டி, சர்மா போல சேர்த்துக் கொள்வார்கள். யாதவ் என்றால் யாதவர் என்று அர்த்தம். கோகுல கிருஷ்ணன் பிறந்த குலம் யாதவ குலம், அதாவது இடையர் குலம். ஆயர்பாடியில் வளர்ந்தவர் கிருஷ்ணர் என்பதும் வெண்ணெய் திருடி உண்பதும் ஆயர்பாடி பெண்களுடன் குழலூதி குலவுவதும் நாம் அறிந்தவையே. கிருஷ்ணரின் ஆயர்பாடி வாழ்க்கை நால்நடை வளர்ப்போருக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு பகுதியாக விளங்குகிறது.

மாடு வளர்ப்போரின் வாழ்க்கை ஏழ்மையானது, கடுமையானது என்பதே யதார்த்தமாக இருப்பினும் இயேசு கிறிஸ்து ஒரு தச்சரின் மகனாக தொழுவத்தில் பிறந்ததுபோல் விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர் ஒரு இடைச்சேரி வாழ்க்கை நடத்தியவர் என்பது கால்நடை வளர்ப்பாளர்கள் பெருமை பட்டுக் கொள்ள வேண்டிய ஒன்றே.

பண்டைய காலத்தில் கால்நடைகள் என்பது செல்வத்தின் குறியீடு. ஒரு அரசன் மற்றொரு நாட்டை சீண்டிவிட்டு யுத்தத்துக்கு அழைக்க விரும்பினால் அவன் முதலில் செய்யும் காரியம், அண்டை நாட்டு எல்லையோரமாக மேய்ந்து திரியும் கால்நடை நிரைகளைக் கவர்ந்து தமது நாட்டுக்கு கொண்டு செல்வதுதான். தனது நாட்டு பொருளாதார வளத்தை அபகரித்து செல்வதை பொறுக்காத அரசன் யுத்த அரைகூவல் விடுப்பதும் யுத்தம் நடைபெறுவதும் அக் காலத்தில் சாதாரணம்.

நதிக்கரை நாகரிகம் வழக்கத்துக்கு வந்த பின்னர் உலகெங்கும் கால் நடை வளர்ப்பு முக்கியத்துவம் பெற்றது. அமெரிக்காவிலும் மாடுகளை வளர்க்கும் பண்ணைத் தொழில் பெருவளர்ச்சி பெற்றிருந்தது. இலட்சக்கணக்கான மாடுகள் வளர்க்கப்பட்டு அவை கப்பல் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அமெரிக்காவில் பெரு முதலாளிகள் தோற்றம் பெற மாட்டுப் பண்ணைத் தொழில் உதவியது. இக் காலத்தில் தான் ‘கௌபோய்கள்’ என நாம் அழைக்கும் குதிரை சவாரி செய்யும் மேய்ப்பர்கள் தோற்றம் பெற்றார்கள். பிற்காலத்தில் ஹொலிவூட் கௌபோய் படங்களைத் தயாரித்து பெருமளவு பணம் ஈட்டியது வேறு கதை!

ஆடு, மாடு, செம்மறி – இவற்றுக்கு வேறெந்த மிருகத்துக்கும் கிட்டாத பெருமை உலகெங்கும் நிலவி வந்திருக்கிறது. பண்டைய எகிப்தியர்கள் மாடுகளையும் மம்மியாக்கி வைத்திருந்திருக்கிறார்கள். நாம் இங்கே குறிப்பிட விரும்புவது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கால்நடைகள் மனிதனுக்கு நெருக்கமான தாகத் திகழ்ந்திருக்கின்றன என்பதையே.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதிக எண்ணிக்கையில் மாடுகளை வைத்திருப்போர் சமூக அந்தஸ்து கொண்ட பண்ணையாளர்களாக மதிக்கப்பட்டனர். விவசாய உபகரணங்கள் இல்லாத அக் காலத்தில் வயல் உழுதல், மண்ணை செம்மைப் படுத்தல், போர் அடித்தல், நெல் மூடைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்லல் எனப் பல விவசாய நடவடிக்கைகளுக்கு எருதுகள் உறுதுணையாக இருக்க,

போஷாக்கு உணவான பால், தயிர் வெண்ணெய், மோர் என்பனவற்றை பசு வளர்ப்போருக்கு பசுக்கள் கொடையாக வழங்கின. வகை வகையான சத்துணவுகள் இல்லாத ஒரு காலப் பகுதியில் கால் நடைகளிடம் இருந்து பெறப்பட்ட பாலுணவுகளும் அவற்றின் மாமிசமும் மனிதனின் போஷாக்குக்கு பெருந்துணையாக இருந்தன.

கால் நடைகள் போஷாக்குக்கு உதவிய அதே சமயம் மனிதன் வேறு பல நன்மைகளையும் மாடுகளிடம் இருந்து பெற்றுக் கொண்டான்.
பசுவும் அது தரும் பால்பொருட்களும் சுபீட்சத்தின் குறியீடுகளாக இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கருதி வந்திருக்கின்றனர். நற் காரியங்களை ஆரம்பிக்கும்போதும் புதுமனை புகும்போதும் பால் பொங்குவது இன்னும் நடைமுறையில் உள்ளது. புது மனைக்குள் பசுவை அழைத்துச் செல்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அமங்கள காரியங்களுக்கும் பால் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவர் மரண படுக்கையில் இருக்கும்போது பால் பருக்குவது சுபகாரியமாகக் கைகொள்ளப்படுகிறது. ஒருவரை மயானத்தில் அடக்கிய பின் இரண்டாம் அல்லது ஐந்தாம் தினங்களில் அடக்கிய இடத்தில் பால் ஊற்றுவது தமிழர்கள் மத்தியில் காணப்படும் வழக்கமாகும். சடலத்தை எரியூட்டுவதற்கு சாணத்தில் தயாரிக்கப்பட்ட வரட்டி பயன்படுத்தப்படுகிறது.

தென்னிந்தியாவில் இவ்வழக்கம் காணப்படுகிறது. மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவதே விபூதி. ஆனால் கடைகளில் கிடைக்கும் விபூதி மாட்டு சாணத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!

தமிழகவீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிகட்டு விளங்குகிறது. ஸ்பானியாவில் நடைபெறும் மாட்டுச் சண்டையுடன் ஒப்பிடும்போது ஜல்லிகட்டு உண்மையாகவே வீர விளையாட்டுதான். கரணம் தப்பினால் காயம் அடைவதற்கும் மரணம் நிகழ்வதற்கும் ஜல்லிகட்டில் வாய்ப்பு உண்டு. ஸ்பானிய விளையாட்டில் காளை மாட்டை ஈட்டியால் தாக்கி கொன்றுவிடுகிறார்கள். காளையுடன் களத்தில் இறங்குபவர் காயம் அடைவதற்கான வாய்ப்பு குறைவு. ஜல்லிகட்டு அப்படியல்ல பொங்கல் முடிவடைந்ததோடு தமிழகக் கிராமங்களில் சிறியதும் பெரியதுமாக ஜல்லி கட்டு இடம்பெறுவதும், காளைகளுடன் பொருதுவதற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விருப்பத்துடன் முன்வருவதும் குறிப்பிடத்தக்கவை.

தான் வளர்க்கும் காளையை அடக்கும் வீரனுக்கே தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் முன்னர் தமிழகக் கிராமங்களில் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்திய தோல் இசைக்கருவிகளுக்கு மாட்டுத் தோலே பயன்படுத்தப்படுகிறது. தமிழர்களின் பறை, தவில், மேளம் போன்ற இசைக்கருவிகள் மாட்டுத் தோலினாலேயே உருவாக்கப்படுகின்றன. அதை இசைப்பவர்கள் புலால் உண்ணாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் இசைக்கும் கருவிகள் மாட்டுத் தோலினால் ஆனவை. மேலும் காலணிகள், இடைப்பட்டிகள், பைகள் என்பன மாட்டுத் தோலினாலேயே தயாரிக்கப்படுகின்றன என்பதோடு இலங்கை மற்றும் இந்தியா தோல் ஏற்றுமதி மூலம் பெருமளவில் அந்திய செலாவணியை ஈட்டவும் செய்கின்றன. பசு தேவலோகத்து காமதேனு அல்ல. உண்மையாகவே தமிழர் வாழ்வில் காமதேனுவாகவே திகழ்கிறது. திருமணமானதும் தாய் வீட்டு சீதனமாக பசுக்களை வழங்கும் வழக்கம் தமிழர் மத்தியில் இன்னும் உள்ளது.

மாடு என்பது அக் காலத்தில் ஒரு சொத்து. முதலீடு. ஒருவர் நான்கு மாடுகளை வைத்திருந்தால் தயங்காமல் கடன் கொடுப்பார்கள். இது இன்றைக்கும் பொருந்தும். சீமெந்தி பாவனைக்கு வருமுன் வீட்டை மெழுகவும், சமையல் கட்டை மெழுகவும் மாட்டுச் சாணமே பயன்படுத்தப்பட்டது. அது ஒரு பக்கவிளைவற்ற பசளை. மாட்டின் சிறுநீர் கோமியம் என அழைக்கப்படுகிறது. களிமண்ணோடு சாணம் கலந்து சுவர் எழுப்பினால் சுவர் வெடிக்காது என்பார்கள். முற்றத்துக்கு சாணம் தெளிப்பது இன்றைக்கும் தமிழ்க் கிராமங்களில் வழக்கில் உள்ளது.

பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளே மாட்டுப் பொங்கல் தினம். இம்மாடுகள் அல்லது கால் நடைகள் மனித வாழ்வில் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதைப் பார்த்தோம். முதல் நாள் சூரியனை பொங்கலிட்டு வழிடுகிறோம். இச் சூரிய வழிபாடு மிகப் பண்டைய வழிபாடு.
சூரிய வழிபாடு ஒரு சமயத்தில் உலகெங்கும் வழக்கில் இருந்து வந்திருக்கிறது. அனேகமாக, சமயங்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் சூரிய வழிபாடே ஆதி வழிபாடாக இருந்திருக்க வேண்டும். மனிதர்கள் நதிக்கரை நாகரிகத்தில் ஊன்றிநின்ற பின்னர் கால்நடைகளுக்கு வந்தனம் செய்யும் வழக்கம் உருவாகியிருக்கலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சீவக சிந்தாமணியில் பொங்கல் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.

மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுகலத்து எழுந்து தீம்பால் பொங்கல்

என்ற பாடலில் பொங்கல் பற்றி சொல்லப்பட்டிருப்பது, இதன் தொன்மையை எடுத்துச் சொல்வதாக உள்ளது. மேலும் சிலப்பதிகாரத்தில் ‘ஞாயிறு போற்றுதும்’ என்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எகிப்தியர்கள் ‘ரா’ என்ற சூரிய கடவுளை வணங்கினர். அபல்லோ என்பது பண்டைய கிரேக்க சூரியக் கடவுளின் பெயர். சௌராஷ்டிரம் நெருப்பை ஆதிவாஸ்துவாகக் கருதுகிறது. இந்து சமயத்தின் ஒரு பிரிவான சௌரநெறி சூரிய உபாசனையை பின்பற்றுகிறது. டிசம்பர் மாதம் 25ம் திகதியன்று பண்டைய ரோமர்களால் கொண்டாடப்பட்டு வந்த சூரியப் பண்டிகையே பின்னர் கிறிஸ்து பிறப்பு தினமாக மாற்றம் பெற்றது என்பது வரலாறு.

மிகப் பழைமையான மந்திரங்களில் காயத்ரியும் ஒன்று. இது அதிகாலை சூரியனைப் பார்த்து சொல்லப்படும் மந்திரமாகும். ஈசானிய உபநிடதத்தில் சூரியனை நோக்கிய பிரார்த்தனை இவ்வாறு அமைந்துள்ளது.

‘ஏ போஷகனே! ஒரே ஞானியே! ஆஞ்ஞனே! ஏ சூரியனே!
பிரஜாதிபதியின் வழித்தோன்றலே! உன் கதிர்களைப் பரப்பி நில்
உன் பேரொளியைக் கூட்டிவை
உன்னில் நான்பார்க்கும் எழிலார்ந்த
உன் உருவம்தான் என்னே!
தொலைவில் இருப்பவனே
நானே அவன்’

ஜப்பான், மலேசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் சூரிய வழிபாடு நிலவியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. பெருவின் இன்கா சுதேசிகளிடமும் சிவப்பிந்தியர் மத்தியிலும் சூரிய வழிபாடு பரவலாக இருந்துள்ளது. அமதரசு என்பது ஜப்பானிய பெண் சூரியக் கடவுளின் பெயர். இத் தெய்வம் ஜப்பானிய அரச பரம்பரையினரின் வழிபாட்டுக்குரியதாக விளங்குவதாக அறிய முடிகிறது.

ரோமில் அமைந்துள்ள புனித பீட்டர்ஸ் பேராலய கட்டட அமைப்பிலும் சூரிய செல்வாக்கைக் காணலாம். அதன் கிழக்கு வாசல்களை காலை வேளையில் திறந்து வைத்தால் காலைச் சூரிய ஒளி மத்திய சலவைக்கல் பீடத்தில் பட்டு தகதகக்குமாம்.

புதிய மதங்களின் தோற்றத்தின் பின்னர் சூரிய வழிபாடு தன் செல்வாக்கை இழந்தாலும் கூட தமிழர் மத்தியில் இப்பண்டைய ஆதி வழிபாடு உயிர்ப்புடன் இன்னும் திகழ்ந்து வருகிறது. இதில் நாம் அனைவருமே பெருமை கொள்ளலாம்.

ஒரு தமிழன் தான் ஒரு வரலாற்றுப் பெருமைக்குரிய இனத்தைச் சேர்ந்தவன் என்பதையும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட நாகரிகத்துடன் தொடர்புடையவன் என்பதையும் அவனுக்கு சொல்லித்தர வேண்டும். இது நமது கடமை. பாலைப் பொங்கி பொங்கலோ பொங்கல் எனக் கூவி முடித்துவிடுவதால் நன்மை ஏதும் இல்லை. பொங்கலின் சிறப்புகளும் நாம் கடந்து வந்திருக்கும் நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையை அப்பண்டிகை நினைவுபடுத்துகிறது என்பதையும் நாம் அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஐரோப்பியர் கடுங்குளிருடன் போராடியபடி கானகங்களில் வாழ்ந்தபோது, அமெரிக்காவும், கனடாவும் நாடுகளாக அறியப்படாத ஒரு காலத்தில் கீழடியில் கழிவு நீர் குழாய் வசதியுடன் வீடுகள் அமைத்து நகர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள் இந்தத் தமிழர்கள் என்பது நமது இளைய பரம்பரைக்கு சொல்லித்தரப்பட வேண்டும். நாம் பொதுவாக என்ன செய்கிறோம் என்றால், நாம் எந்தச் சமயத்தை சார்ந்திருக்கிறோமோ அச்சமயத்தை நமது பிள்ளைகளின் மேல் திணிப்பதிலேயே அதிக அக்கறை காட்டுகிறோமே தவிர அதை விட முக்கியமான மொழி, பரம்பரை, இனம் என்பனவற்றை அவர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி அவற்றை அவர்கள் மனதில் பதியச் செய்வதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.

இந்தத் தவறை புலம்பெயர்த் தமிழர்கள்தான் செய்கிறார்கள் என்றில்லை. இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ளத் தமிழர்களும் சமய உணர்வுகளை இளைய தலைமுறையினர் மத்தியில் பசுமரத்தாணியாகப் பதியச் செய்தில் காட்டும் அக்கறையை ‘நீ பெருமைக்குரிய தமிழன்’ என்ற உணர்வை பதியச் செய்வதில் காட்டுவதில்லை. எனவே, பொங்கலை கொண்டாடுங்கள். இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுங்கள்!

தெல்தொட்டை ஆர். நவராஜா

Comments