அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து உடனடியாக விடுவியுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து உடனடியாக விடுவியுங்கள்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவித்து புனர்வாழ்வு அளித்து அல்லது அவர்கள் உடனடியாக பிணையில் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பில் பிரதமரின் நிலைப்பாட்டை அறிய இருக்கின்றோம் என்கிறார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன். அவர் தினகரன் வராமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வி

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன?

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் முன் வைத்து வருகின்றனர்.

அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இன்றுவரை மேற்கொள்ளவில்லை என்பது தான் எனது கருத்தாக உள்ளது.

அதே நேரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட வேறு சிலரை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.
அவ்வாறான சூழ்நிலையில் இன்று சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. அவர்களுடைய உயிர்களுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை இருக்கின்றது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் இன்னும் மௌனம் காப்பது உசிதமானதல்ல

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இன்றைய சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது அவர்களின் குடும்பங்களை பொறுத்த வகையில் மிகவும் அவசியமான விடயமாக இருக்கின்றது.

எனவே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவித்து புனர்வாழ்வளித்து அல்லது அவர்ளை உடனடியாக பிணையில் செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டத்தை நடாத்தி வருகின்றன. இதுதொடர்பில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு என்ன?

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.

கட்சியில் இருந்த அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் இவ்விடயம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து அனைவரும் இணைந்து ஐ.நாவிற்கு ஒரே குரலாக தெரியப்படுத்துவதே எங்களுடைய எண்ணமாக உள்ளது. எனினும் நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளோம். முழுமையான சர்வதேச பொறிமுறை மிகவும் அவசியமானது

அவ்வாறு இருந்தால் மாத்திரம் தான் ஐ.நாவின் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பாக அமையும். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெற உள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் தமிழர்களுக்கு மிக முக்கியமானது. தமிழ்த் தரப்பு தங்களது கருத்தை ஒன்றாக
சமர்ப்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. முழுமையான சர்வதேச பொறிமுறை அவசியம் என்பது அனைவருடைய கருத்துமாக உள்ளது.

மாகாண சபை தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் ஆளும் கட்சி, எதிர் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபை தேர்தல் தேவையில்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறுகின்றார். இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

இனவாதிகள் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை. மாகாண சபை முறைமை இந்தியாவினால் உருவாக்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்கச் சிலர் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் சரத் வீரசேகரவின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு அறிக்கையும் அதற்கு எதிராகவே உள்ளது

சரத் வீரசேகர என்பவர் புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சராக இருந்து தற்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கின்றார். மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்பது சரத் வீரசேகரவின் கருத்தாக இருக்கின்றது.

பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் மாகாண சபை தேர்தல் மிக விரைவில் நடாத்தப்பட வேண்டும். தற்போது கொரோனா தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சினுடைய ஆலோசனைகளை பெற்று அந்த தேர்தல் மிக விரைவில் நடைபெற வேண்டும் என்பது எனது கருத்து.

தமிழ், சிங்கள பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய விமானப்படையினரை ஆசிரியர்களாக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிகின்றதே?

இலங்கை இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பலர் மரணித்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு நிம்மதியான வாழ்வை இழந்துள்ளனர். இவ்வாறாதொரு சூழலில் அவ்வாறான முடிவுகள் வரவேற்கப்பட மாட்டா.

எஸ்.ஆர்.லெம்பேட்
(மன்னார் குறூப் நிருபர்)

Comments