தூர நாட்டுத் துணை | தினகரன் வாரமஞ்சரி

தூர நாட்டுத் துணை

நான் இப்போது முகமூடி அணிந்து கொண்டு ஒருவித நாட்டியத்தில் ஈடுபடுகின்றேன் என்பதே உண்மையானது. தினமும் தனியாகத் துவளும் மனைவியாவேன். தன்னைப் பற்றி அநாவசியமான மதிப்பீடு செய்வதைப் போல் முட்டாள் தனம் ஏதுமில்லை என்பதை நான் இப்போது ஏற்றுக்கொள்கின்றேன். ஒருவருடைய வயது, அனுபவம் என்பனவற்றுக்கு ஏற்ப சில விபத்துக்கள் நெருங்குவதையும் எனக்கு மனத்தால் புறக்கணிக்க முடியாது. நீதியின் தயவை நாடவும் எனக்கு முடியவில்லை. அதனால், ஏற்படும் அவமானத்தைத் தாங்கிக் கொள்ள பிள்ளைகளுக்குக் கஷ்டமாக இருக்கும்.

நான் இரு பிள்ளைகளின் தாயாவேன். மூத்தது பெண் பிள்ளை. தலை நகரின் மகளிர் பாடசாலையில் பாலர் பிரிவில் பயில்கின்றாள். இளைய மகன் முன்பள்ளிக்குச் செல்கின்றார். நான் ஆங்கில ஆசிரியையாக அரசாங்கப் பாடசாலையொன்றில் சேவையாற்றினேன். தற்போது சர்வதேச பாடசாலையில் கடமை புரிகின்றேன். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அரசாங்க பாடசாலையை விட்டு கேட்டு விலகினேன். எனது புலமையாலும் தகைமையாலும் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் சர்வதேச பாடசாலையில் வேலை கிடைத்தது.

எனது தந்தை கட்டடக்கலைஞர், தாயார் கணக்காளர். நான் குடும்பத்தில் மூத்தவள். தங்கைமார் இருவரும் ஒரு தம்பியும் உள்ளதோடு அவர்கள் திருமணமானவர்கள். தம்பி ஒரு வைத்தியர். பெரிய தங்கை அரச வங்கியின் சட்டத்தரணி. கடைசி தங்கை விமானப் பணிப் பெண்ணாக உள்ளாள். நாங்கள் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் வளர்ந்தவர்கள். பெற்றோர் எங்களால் இன்னும் சந்தோஷமாக இருந்தாலும், எனது பிரச்சினை சகலருக்கும் வேதனையை ஏற்படுத்தியது.

நான் ஆங்கில ஆசிரியையாக பயிற்சி பெறும் காலத்தில் தூரத்து உறவுக்கார வியாபாரம் செய்யும் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டது. அது நாளுக்கு நாள் பலவீனமடைந்தது என்றே சொல்ல வேண்டும். காரணம் அவருக்குச் சரியான கல்வியறிவு இன்மையாகும். தகப்பனாரோடு பலகை வியாபாரத்தில் ஈடுபடலானார். அது நல்ல மட்டத்தில் இயங்கியது.

காசு பணம் இருந்தாலும் அவர் கல்வியறிவு இல்லாதவர் என்ற உணர்வு உண்மையிலேயே எனது அடிமனத்தை வதைத்தது. ஆங்கிலம் தெரியாதது மற்றொரு காரணமாகும். ஆனாலும் எனக்குப் பெரும் பிரச்சினையானது, என்னை வேலையை விட்டு விலகச் சொன்னதேயாகும். அதனை ஒருபோதும் நான் விரும்பவில்லை.

தம்பிக்கே எங்களது தொடர்பு முதலில் தெரிய வந்தது. எனக்குப் பொருத்தமில்லை என்பதைத் தெளிவாகவே கூறினார். இதனை அறிந்த அம்மா வெறுப்போடு பேசினார். தந்தை ஏதுமே கூறவில்லை. பெரிய தங்கை ஒருநாள் கூறிய காரணத்தால் நான் ஒடிந்து போனேன்.

“ஐயோ அக்கா எதற்காக நீங்கள் ஒரு முதலாளியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டீர்கள், உயரமும் தடிப்பும் இருந்தாலும் அவர் ஒரு முட்டாள்; ஓரிடத்திற்கு வந்தால் நடந்து கொள்ளும் அவலட்சணம்; நீங்கள் என்றால் பெரிய கஷ்டத்தில் விழுவீர்கள்; இந்த மனுசனை மணந்து கொண்டால்...

அழுவதற்கு ஆயத்தமாக இருந்த ஒருவருக்குக் கண்ணில் விரல் குத்தியதைப் போன்று இருந்தது. வேலையை விட்டு ஒரு போதும் நான் விலகப் போவதில்லை என்பதை முடிவாக நான் கூறியதும், அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாள் என்னைப் புண்படுத்தினார்.

“நான் கிடைக்கும் சொச்ச சம்பளத்தைப் போல் இருமடங்கு தருகிறேன் தொழிலை கைவிடுங்கள்...”

இந்தப் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. இவரோடு ஏன் பழகினேன் என்றே யோசிக்கத்தோன்றியது. அவர் விஜயகுமாரதுங்கவின் தோற்றத்தை ஒத்தவர். எனது இளைய தங்கை ஒருநாள் “வெளித்தோற்றத்திற்கு ஆசைப்பட வேண்டாம்" என்று கூறினார். இந்த அனைத்து ஒட்டுமொத்தத்தின் முடிவாக வந்தது நான் அவரிடமிருந்து தூர விலகலாகும். என்னைப் பின்தொடரத் தொடங்கினார். தற்கொலை செய்வதாகக் கூறுவதோடு, எனது பாடசாலைக்கு நித்தம் வந்து கடமையை செவ்வனே செய்ய முடியாதவாறு கஷ்டம் கொடுக்கலானார். இதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எனது தந்தையார் இங்கிலாந்தில் இருக்கும் தனது தம்பியிடம் என்னை அனுப்பினார். அப்பயணம் உயர்கல்வி கற்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இரகசியமாக போன எனது பயணத்துடன் முதல் காதல் கஷ்டமும் முற்றுப்பெற்றது. ஆனாலும் எனக்காக மகா தவறு நடந்தது இங்கிலாந்திலேயே. அங்கு உயர்கல்விப் பீடமொன்றில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியைத் தொடர்ந்தேன். அங்கு போகும் போது, தனது முதுமாணிக்காக புலமைப்பரிசில் பெற்று வந்துள்ள இலங்கையரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு கம்பீரமான மனிதர்! அவரைப் பற்றி எனது மனத்தில் இன்றும் உள்ளது ஒரு பெரிய மனிதருக்கான கௌரவமே. நான் எதிர்பார்க்காத போதே என்னை விரும்புவதாகத் தெரிவித்தார். அவரது சொற்களால் கவரப்பட்டேன் என்ேற நினைக்கத் தோன்றுகிறது.

எமக்குள் ஏற்பட்ட தொடர்பு நலமானது என்றே நினைத்தேன். பல மாதங்கள் சந்தோஷமாக கழிந்தன. நாங்கள் நம் நாட்டுக்குச் சென்று விவாகஞ் செய்ய தீர்மானித்தோம். எதிர்காலத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புகளோடு இலங்கைக்கு வந்தேன். திருமணம் செய்யாமல் இரு தங்கையரும் இருந்தனர். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவரும் இலங்கைக்கு வந்து எனது பெற்றோரிடம் கேட்டு, இரு குடும்பத்தினருமாக சாதாரணமாக திருமணத்தை நடத்தினர். மீண்டும் இங்கிலாந்துக்குப் பயணமானோம். அங்கேயே எனது மகள் பிறந்தாள். பாரிய சந்தோஷம் எங்கள் உலகில் நிலவியது. எனது கணவர் நிலன்தவின் உயர்கல்வி நிறைவடைந்ததால் அவர் தொழில் செய்யும் தாபனத்தால் நாட்டுக்குச் சென்று சேவையாற்றுமாறு பணிக்கப்படவே மீண்டும் இலங்கைக்கு வந்தோம். எனது பெற்றோரால் தெஹிவளையில் எனக்கு வழங்கப்பட்ட புதிய வீட்டில் குடிபுகுந்தோம். இந்த இடம் நிலன்தவுக்கு வேலைக்குச் செல்லவும் இலகுவாக இருந்தது. இரண்டு மாதங்களின் பின் மீண்டும் கருவுற்றேன். இரண்டாவதாக மகன் பிறந்ததும் நிலன்த மிகவும் நெருக்கமானார். அது ஏன் என்று புதிராகவே இருக்கின்றது. மகன் தனக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்ததாக அன்று உத்வேகத்துடன் நிலன்த கூறினார். அமெரிக்க கம்பனியொன்றில் தனக்கு உயர்பதவி கிடைக்கவுள்ளது என்றார். இதைப் பற்றி எதையும் நான் அறிந்திருக்கவில்லை. ஏனென்று நான் கேட்டபோது, தனக்கு கிடைக்கக் கூடிய சரியான இடத்தை இங்கு கொடுப்பதில்லை என்றே பதில் கூறினார். விண்ணப்பித்து ஒரு வார காலம் கூட ஆகமுதல் தனக்கு வேலை கிடைத்து விட்டதாகக் கூறினார். எனக்கும் எனது பெற்றோருக்கும் இது பிரச்சினையாகவே இருந்தது. சட்டரீதியாக இங்கு விலகிச் செல்வதைவிட குறித்த நேரத்தில் அங்குக் கடமையை ஏற்பதே முக்கியமானது எனத் தெரிவித்தார்.

கண்டியில் இருந்த தனது பெற்றோரைத் தனித்து இட்டுவிட்டுச் செல்ல விரும்பாத நிலன்த எனது பெற்றோருடனும் அவர்களுடனும் பேசி அவ்விருவரையும் தெஹிவளை வீட்டில் விட்டான். பிள்ளைளுக்கும் நல்ல பாதுகாப்பு என்று பல தடவைகள் கூறினான். நிலன்தவுக்கு வங்கியில் தொழில் புரியும் திருமணமான ஒரு தங்கை இருந்தாலும் அவள் குடும்பத்தாரோடு ஒட்டுவதில்லை என்பது எனக்குத் தெரியும்.

நிலன்த வெளிநாட்டிலிருந்து வந்து முன்ைனய இடத்கை் கணக்கு வழக்குகளை முடித்துக்கொண்டான். நாங்கள் இங்கேயே இருப்பதா? என்று நான் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதில் சரியாகவே இருந்தது. தனது பெற்றோரைப் பேணுவதற்கு அங்கு அதிக பணம் செலாவாகும் என்றும், அடுத்தது பிள்ளைகளின் கலாசாரம் பாதிப்படையும் என்றும் கூற அதை வீட்டார் தலையால் ஏற்றுக்கொண்டனர். எனக்கு ஒரு வினா தோன்றியது. நான் கேட்டேன்.

“நானும் பிள்ளைகளும் தொடர்ந்து இலங்கையில், நீங்கள் அமைரிக்காவில், எங்கள் வாழ்க்கை இவ்வாறு தான் கழிவதா?”

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இலங்கைக்கு வருவதாகவும் வியாபாரம் நிமித்தம் வரும் போதும் வரலாம் என்றும் நிலன்த கூறினான். நிலன்த கூறியவாறே சகலமும் நடந்தது. ஆனாலும், அவனது தகப்பனாரின் மரணத்தின் பின் வருகை குறைந்தது. தந்தையின் இறுதிக்கிரியைகளை முடித்து விட்டு ஏழு மாதங்களுக்கு பின்னே மீண்டும் வந்தான் அதைப்பற்றி கேட்ட போது நிறைய கடமைகள் இருப்பதாகவும் இனி வருடத்திற்கு இருதடவைகள் மாத்திரமே வரமுடியுமென்றும் சாதாரணமாகக் கூறினான். அவனது பேச்சால் எனது மனத்துக்குள் சோகத்தில் ரேகையொன்று வரையப்பட்டது.

நிலன்த அமெரிக்காவுக்குப் போய் இரண்டு வருடங்களிலேயே தாயின் மரணம் சம்பவித்தது. இது நிலன்தனின் இலங்கைப் பயணத்தின் முற்றுப்புள்ளி என நான் நினைக்கவில்லை. தொலைபேசி தொடர்பில் கூட மெல்ல மந்தநிலை ஏற்பட்டது. உறவினர்களின் மத்தியில் உயர்வான சுக சௌகர்யங்கள் நிறைந்தவளாகக் கருதப்பட்டேன். நிலன்தவும் எனது உறவினர் மத்தியில் பிரபல்யமானவர், மதிப்பு மிக்கவர். எல்லோரும் நினைப்பதைப் போல் வாழப் பழகிக்கொண்டேன்.

நிலன்தனைப் பற்றி எந்தப் பிழையும் சொல்ல காரணமில்லை. இலங்கைக்கு வந்தாலும் எனக்கும் பிள்ளைகளுக்கும் எவ்வித குறையும் வைப்பதில்லை. ஆனாலும், எனது மனத்தில் வார்த்தைகளால் கூறிக் கொள்ள முடியாத சோகமொன்று நிரந்திரமாக இருந்தது. எனது கணவன் என்ற வகையில் எந்தப் பொது நிகழ்வுக்கோ, பிள்ளைகளின் தேவைகளின் போதோ ஒரு வைத்தியரைக் காணச் செல்லும் போதோ நிலன்த என்னோடு இல்லாதது உணவுபூர்வமாக விளங்கியது. எதிர்பார்க்காத ஒரு நிகழ்வின் மூலம் எனது மனம் நொந்து போனது. அதையும் கூறத் தோன்றுகிறது.

ஆரம்பத்தில் நான் உறவுக்கார ஒருவரோடு எனக்கு காதல் தொடர்பு இருந்ததைப் பற்றி கூறியிருந்தேன். எனக்குப் பொருந்தாதவர் என்று மனத்தை மாற்றிக் கொண்டதும் உண்மையே. அவரது மனைவியும் ஓர் ஆங்கில ஆசிரியை, அழகான பெண்ணும் கூட. எங்களது உறவுக்கார ஒருவரது அந்தியேட்டி வீட்டுக்கு மனைவியோடு வந்திருந்தார். அவர் என்னோடு மனந்திறந்து பேசி, மனைவியையும் அறிமுகப்படுத்தினார். அவள் ஓர் ஆங்கில ஆசிரியை என்பதை அழுத்தமாகவும் சந்தோஷத்துடனும் கூறினார். அவளோடு நான் கதைத்தேன். அவள் குணமான பெண். குடும்பத்துச் சுப- அசுப நிகழ்வுகளில் இவர்களை நான் காண்பதுண்டு. மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் சமீபமானவர்; மனைவி மீது அன்பும் கௌரவமும் கொண்டவர் என்பதை உணரும் போதெல்லாம் இன்னும் என் மனம் சஞ்சலப்படுவதுண்டு. நான் நிலன்தவிடம் நீண்ட நாட்களுக்கு முன் கேட்ட கேள்வி ஞாபகத்தில் வந்தது.

“எங்கள் வாழ்க்கை இனியும் கழிவது இவ்வாறு தானா;

ஏன் வாழ்க்கையில் நல்லதில்லையா?

இந்த வாழ்க்கையில் சுகம் இல்லையா?”

அவன் கேட்ட கேள்விகள் மனத்தில் சிக்கிதை நான் யோசிப்பதுண்டு. சுகமான வாழ்க்கையென்றால் என்ன? உண்மையில் நான் உலகை ஏமாற்றும் போலி சுகபோக வாழ்க்கைக்குச் சொந்தக்காரியென்றே எண்ணத்தோன்றியது. அலங்கரித்த வீட்டின் தங்கப் பூச்சாடியிலுள்ள அழகான செயற்கை பூதானே நான்...? எனது பழைய காதலனின் மனைவி அழகான வாசலில் செழிப்பாக வளர்ந்த ரோஜாச் செடியில் பூத்துக்குலுங்கும் மலர் என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

எனது மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது தான் விமானப் பணிப் பெண்ணான எனது தங்கையும் விமானியான அவளது கணவரும், மகளும் அவர்களது தொழில் நிமித்தம் கிடைக்கும் வரப்பிரசாதமான ஒருவார கால வெளிநாட்டு சுற்றுலாவை முடித்துக் கொண்டு நாடு திரும்பினர். அம்மா அப்பாவை பார்த்து விட்டு எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவள் என்னைக் கட்டி அணைத்துக் கொண்டு அழத்தொடங்கியது எனக்குப் புரியாமல் இருந்தது. நான் அவளைக் கூட்டிச் சென்று கட்டிலில் இருத்தினேன். எனது வாழ்க்கையின் அபாக்கியத்தையும் பிளவையும் காதுகளால் கேட்க முடிந்தது. மனக்கண்ணால் காணமுடிந்தது.

இங்கிலாந்திலிருந்து பாரிசுக்குப் போகும் வழியில் நிலன்தவைக் கண்டதாகவும் ஒரே விமானத்தில் பயணம் செய்ததாகவும் கூறினாள். தங்கையின் கணவன் உடனே ஆராய்ந்து பார்த்ததில் அவனோடு வந்த இந்தியப் பெண் மனைவியென்றும் இரு பிள்ளைகள் இருப்பதையும் உறுதிப்படுத்தினார் என்றும், தனது கணவர் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமென்று கூறியதாகவும் தங்கை கூறினாள். தங்கை இரகசியமாக எடுத்த படங்களை எனக்குக் கொடுத்தாள். விமானத்தை விட்டு இறங்கி பயணிகள் ஒழுங்கையில் போகும் போது இரு சாராகும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது இந்தியப் பெண்ணுக்குத் தங்கையின் பெயரைக் கூறி அறிமுகப்படுத்திவிட்டு இலங்கையில் தனது நெருங்கிய குடும்பத்தினர் என்று கூறி உடனே சென்று விட்டதாகவும் கூறினாள்.

நிலன்தவை தேடிப்போக நினைத்தாலும் எதற்காக என்ற வினாவை தங்கை தொடுத்தாள். நிலன்தவுக்கு இரண்டு கல்யாணங்களா? நான்கு பிள்ளைகளா? இது தான் நிலன்த கூறிய சுகமான வாழ்க்கையா? என எண்ணத் தோன்றியது.

எனது நிலையைக் குடும்பத்தினருக்கு விளக்கினேன். நிலன்தவோடு தொலைபேசியில் கதைக்க முயற்சித்தாலும் பலன் ஏற்படவில்லை. எனது கணக்குக்குக் காசுமட்டும் வந்து கொண்டிருந்தது. அந்தக் காசும் என்னில் ஒருவித அருவருப்பை ஏற்படுத்தியது. எனக்குக் காசு அனுப்புவதை நிறுத்துமாறு கடிதம் எழுதினேன்.

காருண்யத்தோடு நடப்பவரைப் போல் காசு அனுப்புவதையும் நிறுத்தினார். இலங்கைக்கு வருகிறாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. என்னையும் பிள்ளைகளையும் பார்க்க வரவில்லை.

நிலன்தவின் உயர்கல்வி, உயர்பதவி மகானைப் போன்ற தோற்றம் எல்லாம் இருந்தாலும் அவன் ஓர் அநியாயக்காரன் இல்லையா? அப்பா வராததைப் பற்றிப் பிள்ளைகள் இப்போது என்னிடம் கேட்பதில்லை. நான் இன்னும் உண்மையைக் கூறவும் இல்லை. ஒவ்வொரு வினாடியும் மனத்தால் அழுதுகொண்டு வாழ்கின்றேன். பிள்ளைகள் நிலன்தவுடையதும், அவர்களின் உடலில் ஓடுவது நிலன்தவின் இரத்தம் என்பதும் உண்மையே. ஆனால், இவர்களை எனக்கு மறக்க முடியாது. இவர்களாலேயே எனது உயிர் இன்னும் வாழ்கிறது. இரண்டு பிள்ளைகளோடு இவ்வாறு வாழ்ந்து வருகிறேன். வீட்டார் என்னோடு முன்னரை விட சமீபமாக உள்ளனர். இந்த நெருக்கம் எனக்குச் சிறு வேதனையைத் தந்தாலும், நான் சகலதையும் இப்போது பொறுத்துக்கொள்வதுண்டு. ஆனாலும், மனச் சிக்கல் தீரவில்லை. தியானம் ஒன்றே எனது மனத்துக்கு உள்ள ஒரே ஆறுதல். எனது இருப்புக்கு எளிமையான ஆதாரம் தியானம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

கம்பளையூர் மஞ்சுளா கிருஷ்ணசாமி

Comments