பெருந்தோட்ட தபால் சேவைக்கான 2ஆம் கட்ட ஆள்சேர்ப்பு எப்போது நடைபெறும்? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட தபால் சேவைக்கான 2ஆம் கட்ட ஆள்சேர்ப்பு எப்போது நடைபெறும்?

- ஜீவன் தொண்டமானின் அவசர கவனத்துக்காக...

தோட்ட மக்களின் முகவரிக்கு வரும் கடிதங்கள், பதிவுத்தபால், தந்தி, வங்கி அடகுப்பத்திரம் மற்றும் இளைஞர் யுவதிகளின் தொழில்துறையுடன் தொடர்புடைய கடிதங்கள்  என்பவற்றை தாமதமின்றி நேரடியாக குடியிருப்பாளர்களின் வீட்டு வாசலுக்கே சென்று பட்டுவாடா செய்யும் வகையில்   பெருந்தோட்ட  தபால் சேவகர்களாக 353 பேருக்கு 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நியமனம் வழங்கப்பட்டது. 

கொழும்பு  தபால் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் அப்போதைய தபால், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த மஹிந்த விஜேசேகர தலைமையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. அன்றைய அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர்களாக இருந்த முத்து சிவலிங்கம், எம்.எஸ். செல்லசாமி, எம். சச்சிதானந்தன், எஸ். ஜெகதீஸ்வரன்,  தபால் மா அதிபர் உட்பட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.  

மாத்தறை மாவட்டத்தில் 6 பேரும், காலி மாவட்டத்தில் 4 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 7 பேரும், கண்டி மாவட்டத்தில் 20 பேரும், பதுளை மாவட்டத்தில் 116 பேரும், கேகாலை மாவட்டத்தில் 11 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் நியமிக்கப்பட்டனர்.  

ஆகக் குறைந்த கல்வித்தரம் 8ஆம் தரமாகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் தோட்டங்களில் நிரந்தர வசிப்பாளர்களாகவும் இருப்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தபால் திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு  இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.  

நியமனம் பெற்ற இவர்கள் ஆரம்பத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த நிலையில் கடமையை தொடர்ந்த போதிலும் தற்பொழுது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்று தமது கடமையாற்றி வருகின்றனர். எனினும் வேலைப்பளு அதிகமாகவே இருந்து வருகிறது. தபால் சேவகர் ஒருவர் விடுமுறையில் செல்வாரானால் அன்றைய தினம் தோட்டங்களுக்கான தபால் விநியோகம் இடம்பெறுவதில்லை.  

கடிதங்களை தபாலில் சேர்க்கும் வகையில்  தோட்டப்பகுதிகளில் முக்கிய இடங்களில் தபால் பெட்டிகள் பொருத்தப்படும் என கூறப்பட்ட போதிலும் இதுவரையில் அது இடம்பெறவில்லை.  அன்று இந்த பதவிக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் அடிப்படையில் இரண்டாம் கட்டத்தில் தபால் சேவகர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கூறப்பட்டது. இன்று பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும்  இரண்டாம் கட்ட ஆள்சேர்ப்பு மேற்கொள்ளப்படவில்லை.

அன்றைய ஆட்சியின்போது இந்த நியமனத்தைப் பெற்றுக்கொடுத்தவர்கள் அதே ஆட்சிக் காலத்தில் இரண்டாம் கட்ட நியமனத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வாய்ப்பிருந்த போதிலும் அதனை நிறைவேற்றிவைக்க  மறந்துவிட்டார்களா? அல்லது கைவிட்டு விட்டார்களா? கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இவர்கள் தவறிவிட்டனர் என்றே கூறவேண்டும்.  

நான்கரை வருடகால நல்லாட்சியிலும் நம்மவர் பலர் அமைச்சர்களாக இருந்தனர். இவர்களின் கவனத்துக்கும் பல தடவைகள்  கொண்டு செல்லப்பட்டது. அப்போதைய புதிய கிராமம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த எம். வாமதேவன் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி அக்கறையுடன் செயற்பட்டு பெரும் முயற்சி மேற்கொண்ட போதிலும் அது கைகூடவில்லை. நல்லாட்சியின் தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இது விடயத்தில் கவனம் செலுத்த முன்வராது உதாசீனமாக நடந்து கொண்டார் என்பது  மிகவும் கவலைக்குரியது.  

2008ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த நியமனத்தின் ஊடாக மலையக தபால் சேவையைப் புூர்த்தி செய்துவிட்டதாக ஒருபோதும் கருதிவிட முடியாது. தபால் சேவகர்கள் இல்லாத தோட்டப்பகுதிகளில் தோட்ட மக்கள் பெரும்  சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.  

தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டவர்களும்   தோட்ட மக்களுக்கான கடிதங்களை மட்டுமே விநியோகித்து வருகின்றனர்.  தோட்ட நிர்வாகங்களுக்குரிய கடிதங்களை  தோட்டத்  தபால் ஊழியர்களே   தபால் நிலையத்துக்குச் சென்று கடிதங்களைப் பெற்று  தோட்ட அலுவலகங்களில் ஒப்படைக்கின்றனர். 

அரச தபால் சேவகர்களின் சேவை கிடைக்கப்பெறாத  தோட்ட மக்களுக்கான கடிதங்களை தோட்ட தபால் ஊழியர்களே தபால் நிலையத்திலிருந்து எடுத்துச் செல்கின்றனர்.  

இவ்வாறு கொண்டு செல்லப்படும் கடிதங்கள் உரியவர்களுக்கு விநியோகிக்கப்படாது தோட்ட அலுவலகங்களில் போட்டு வைக்கப்பட்டு நாட்கள் கடந்த பின்னர் அவை வீசியெறியப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனால் தோட்ட  இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்க வேண்டிய முக்கிய கடிதங்கள் உரியவர்களுக்கு உரிய காலத்தில் கிடைப்பதில்லை.எனவே தோட்டப் பகுதிகளில் மேலும் தபால் சேவகர்கள் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும்.  மக்கள் பிரதிநிதிகளே இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தபால் நியமனத்தைப் பெற்றுக்கொடுத்தவர்களுக்கு ஆட்சியில் இடம் கிடைத்துள்ளது. மலையக தபால் சேவையின் இரண்டாம் கட்ட நியமனம் குறித்து இவர்களே கவனம் செலுத்தி அதனைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.  
இதனை நிறைவேற்றி வைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வருவரானால் காலஞ்சென்ற அவரது தந்தை முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா.வின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு உழைத்து அமரத்துவம் அடைந்த  எம்.எஸ். செல்லசாமி ஆகிய இருவருக்கும்  செலுத்தும் கெளரவமாக இருக்கும்.    

இங்கிரிய மூர்த்தி

Comments