வாயால் கெட்ட 'வண்ஷொட்' | தினகரன் வாரமஞ்சரி

வாயால் கெட்ட 'வண்ஷொட்'

நியாயத்திற்கும், அநீதிக்கும் தலை சாய்க்காது  அவற்றிற்கு எதிராக போராடிய பலர் இருக்கின்றார்கள். இலங்கையிலும், வீரபுரன் அப்பு போன்றவர்கள் உருவாகியதும் இத்தகைய அநீதிகளுக்கு எதிராகச் செயற்படுவதற்கேயாகும்.

“வண்சொட்” திரைப்படத்தில் விஜயவின் பாத்திரத்தில் நடித்த ரஞ்சன் ராமநாயக்காவுக்கு அவ்வாறான எல்லையற்ற அதிகாரம் உள்ளது என்பதுபோல அவர் காட்டினார். பயணித்துக் கொண்டிருக்கும் புகையிரதத்தை விட மிக வேகமாக ஓடிச் சென்று பஸ் ஒன்றின் கண்ணாடியை உடைத்து உள் நுழைந்து காட்டிய வீரத்தைப் போன்று, பயணிக்கும் ஒருவரின் கயிற்றில் கத்தியைப் போட்டு  கீழே விழும் அவரைப் பாதுகாப்பதும்,  நிஜ உலகில் இடம்பெறும் நிகழ்வுகள் அல்ல.

திரைப்பட உலகத்தினதும், நிஜ உலகத்தினதும் வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் அழிவே ஏற்படும். ரஞ்சன் ராமநாயக்கா தவறிழைத்ததும் இவ்விடயத்தில்தான். ரஞ்சன் ராமநாயக்கா மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். விசேடமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிபவர்களுக்காக அவர் குரல் கொடுத்துள்ளார். என்றாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் உள்ளது. எம்மால் பயணிக்கக் கூடிய தூரம் ஒன்றுள்ளது என்பதே அதுவாகும். நாட்டின் சட்டங்களை மதிப்பதற்கு நாட்டு பிரஜைகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசேடமாக இந்நாட்டு மக்களுக்கு சட்டங்களை வகுக்கும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அமைச்சர்கள் கண்டிப்பாக சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும்.

தேரர்களோடு பேசும் போதும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரோடு பேசும் போதும் கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அந்த சம்பிரதாயங்கள் சில நேரம் சட்டங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டே ரஞ்சன் ராமநாயக்காவின் விடயத்தைப் பற்றி நாம் பேச வேண்டியிருக்கின்றது.

ரஞ்சன் ராமநாயக்கா பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அதிக காலம் கடக்கும் முன்னரே அவர் தனது எல்லைகளைத்தாண்டிச்  செல்வதை அவதானிக்க முடிந்தது. முன்னர் கூறப்பட்ட நடிகரின் உலகத்தினதும், நிஜ உலகினதும் வித்தியாசத்தை அவர் புரிந்து கொள்ளவில்லையா என்ற சந்தேகம் தோன்றியது அவ்விடத்திலாகும். வண்சொட் மற்றும் மாயா போன்ற திரைப்படங்களைப் போன்று அவர் சட்டத்தைக் கையில் எடுக்க முயற்சிப்பதாக அனேக அரசியல்வாதிகள் அவர் மீது குற்றம் சுமத்தினர்.
அவர் ஒரு சமயம் திவுலப்பிட்டி பெண் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் உரையாடிய விதத்தை கண்டு பிரதேச செயலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வரைக்கும் சென்றார்கள்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

எஸ்.பி. திசாநாயக்காவுக்கு நேர்ந்த கதியை ரஞ்சனால் புரிந்துகொள்ள முடியாமல் போயுள்ளது. இதனால் ரஞ்சன் வாயால் தவறிழைத்துக் கொண்டார். ரணஸ்கல்ல தேரரினால் எழுதப்பட்ட பரோபகாரத்தில் “நல்லது கெட்டது இரண்டுக்கும் வாய்தான் காரணம்” என எழுதியுள்ளார். எனினும் சாதாரண தரம் சித்தியடைந்த ஒருவரால் அவ்வாறான அறிவைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதா  என இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது.

அதே போன்று வாயைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் கொக்குடன்  சென்ற ஆமைக்கு நேர்ந்த கதியை நாம் கேட்டிருக்கின்றோம்.

வாயைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத ரஞ்சனுக்கு இறுதியில் கடந்த 12ம் திகதி நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் பிரகாரம் அவரது பாராளுமன்ற உறுப்பினர் ஆசனமும் இல்லாமல் போகும். காரணம் சிறைத் தண்டனை ஆறு மாதத்திற்கு அதிகம் என்பதனாலாகும். அத்துடன் ரஞ்சனின் குடியுரிமையும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கடந்த 12ம் திகதியிலிருந்து பறிபோகும் போகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அவர் வெலிக்கடை சிறைக்கைதி ஒருவராக பதிவு செய்யப்பட்டு  பள்ளன்சேனவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

2015ம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை  பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக பிரதம நீதியரசரின் கையைப் பிடித்து அவரை வெளியே அழைத்துச் சென்றது ரஞ்சன் ராமநாயக்காவாகும். தான் பிரதம நீதியரசராகப் பணியாற்றும் போது இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் கண்டிப்பாக ரஞ்சன் ராமநாயக்காவை அந்நிமிடமே கைது செய்ய உத்தரவிட்டிருப்பேன் என இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என். சில்வா கூறியிருந்தார். பிரதம நீதியரசர் ஒருவரை அவ்வாறு கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முடியுமா?

அன்று ஆரம்பித்த ரஞ்சனின் சட்டத்தை மதிக்காத தன்மை படிப்படியாக அதிகரித்ததே தவிர குறையவில்லை.

அந்நேரத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரரும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறைச்சாலையில் இருந்தார்.

ரஞ்சனுக்கு அவை எதுவும் முக்கியமாக இருக்கவில்லை. அவர் எப்போதும் பல்வேறு கருத்துக்களையும் கூறியது நாட்டின் சட்டம், சம்பிரதாயங்கள் மற்றும் ஒழுக்கவிழுமியங்களையும் கூட மீறும் வகையிலாகும்.

2017ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் திகதி அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்கா, “இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுள் அனேகமானோர் மோசடிமிக்கவர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

நாட்டின் மொத்த நீதிபதிகளுள் 95 வீதமானவர்கள் மோசடிமிக்கவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த இராஜாங்க அமைச்சரின் இந்த கூற்றின் ஊடாக அவர் இந்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பு மீது பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர் குலைக்க முயற்சித்திருப்பதாகவும், அதன் மூலம் அவர் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றம் சுமத்தி மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோரால் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த இரண்டு முறைப்பாடுகளுக்கும் அமைய சட்டமா அதிபரினால் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதற்காக விசாரணை செய்வதற்கு ரஞ்சன் ராமநாயக்காவை உச்ச நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உச்ச நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ரஞ்சன் ராமநாயக்கா, தான் முன்னர் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் அங்கீகரித்து அதே கருத்தை தெரிவித்தார்.

அது 2017ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதியாகும். அங்கு அவர் கூறுகையில், “இந்நாட்டு நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் பணத்திற்காக திருடர்களையும், தூள் காரர்களையும் பாதுகாக்கிறார்கள்” எனக் கூறினார். அவர் ஏற்கனவே கூறிய கருத்துக்களை மீண்டும் உறுதிப்படுத்தினார். தான் கூறிய கருத்துக்கள் நிலையானது என்றும், அதனை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

அதே போன்று 2018ம் ஆண்டு மார்ச் 23ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றம் திருடர்களையும், கடத்தல்காரர்களையும் பணத்திற்காக பாதுகாக்கின்றது என்றும், நீதிமன்றம் தனக்குச் சிறைத் தண்டனை வழங்கி இன்பம் காண முயற்சி செய்தால் தான் அதற்காக சிறைக்குச் செல்ல தயார்” என்றும் கூறியிருந்தார்.

அவர் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், மீண்டும் அதே வருடம் ஜூன் 04ம் திகதி அந்தக் கருத்தை மீளவும் உறுதிப் படுத்தினார். தான் சிறைக்குச் சென்றாலும் உண்மையையே கூறுவதாகக் கூறிய அவர், மீண்டும் மீண்டும் கூற முயன்றது நீதிமன்றம் ஊழல்மிக்கது என்றாகும்.

அவர் இந்த இரண்டு கூற்றுக்களையும் கூறியது அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியே வந்த போது ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்ட  நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் வைத்தேயாகும்.

தனக்கு 21 வழக்குகள் உள்ளதாகவும், எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் தான் உண்மையையே பேசுவதக் கூறி அவர் நீதிமன்றத்தைக் கேலி செய்தார்.

இங்கு சிலர் அவருக்கு உற்சாகமூட்டினர். சட்டத்தை அறியாதவர்களுக்கும், நீதிமன்றங்களில் நீதி கோட்பாடு அல்லது நீதிமன்ற அவமதிப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு இது  மகிழ்ச்சியாக இருக்கலாம்.

நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றம் சுமத்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்துக் கூறல் உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்றதோடு, சிசிர டி. அப்றூ, விஜித மலல்கொட மற்றும் பிரித்திபத்மன் சுரசேன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இந்த வழக்கிற்கு காரணமான அவமதிக்கும் வகையிலான கூற்றுக்களைத் தன்னால் விலக்கிக் கொள்ள முடியாது என பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கா நான்கு சந்தர்ப்பங்களில் சபதமிட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன நீதிமன்றத்தில்  கூறினார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததன் பின்னர் நான்கு தடவைகள் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கா, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த வழக்கிற்கு காரணமான கேள்விக்குரிய அவதூறுமிக்க கூற்றுக்களை தான் விலக்கிக் கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக் காட்டினார்.

அனைத்து வழக்கு விசாரணைகளின்  முடிவின் போதும் நீதிமன்ற வளாகத்தினுள் ஊடகங்களுக்கு “நீதிமன்றம் திருடர்களை உற்சாகப்படுத்துகின்றது.... நீதிமன்றம் திருடர்களை ஊக்குவிக்கின்றது....” போன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இதன் மூலம் நீதிபதிகளால் மோசடிக்காரர்களைக் கைது செய்ய முடியாது என  பொது மக்களை நம்ப வைக்க முயற்சி செய்துள்ளதாக குற்றம் சுமத்தினார்.

நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன, ஒன்றரை வருடங்களுக்கும் அதிக காலம் சிறையில் இருந்துவிட்டு கடந்த புதன்கிழமை  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதிப்பது என்பது என்ன என்று இங்கு ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு ஏற்ற பல விடயங்களை குறிப்பிட முடியும்.
இங்கு நீதிமன்ற உத்தரவு ஒன்றை நடைமுறைப்படுத்துவதை நிராகரிப்பது, நீதிமன்ற உத்தரவு ஒன்றை சவாலுக்கு உட்படுத்துவது (மேன்முறையீடு ஒன்றை சமர்ப்பிப்பது அல்ல), நீதிமன்றத்தினுள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, நீதிமன்றத்தை அல்லது நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை விடுதல், நீதிமன்றத்தில் தானே வழங்கிய வாக்குறுதியை மீறுதல், நீதிமன்ற தீர்ப்பு / இடைக்கால தீர்ப்புக்கு அமைய நடந்து கொள்ளாமை, நீதிமன்ற மண்டபத்தினுள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது, (வாய் மூலமான, எழுத்து மூலமான அல்லது வேறு ஏதாவது செயற்பாடாக இருக்கலாம்), நீதிமன்றத்தின் அதிகாரத்தை  குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செயல்படுவது, (வாய் மூலமான, எழுத்து மூலமான அல்லது வேறு ஏதாவது செயற்பாடாக இருக்கலாம்), இதற்கு மேலாக நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படக் கூடிய செயற்பாடாக இருந்தாலும் செயற்படுத்த முடியும்.                    

ரஞ்சன் கடந்த 12ம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் 4 வருட கடுழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, தான் கூறிய அத்தனை விடயங்களும் உண்மை என்றும், அவற்றில் ஒன்றையேனும் வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், ஒரு போதும் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்றும் அவர் சத்தமிட்டு கூறினார்.

இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அவர் சபாநாயகரை நோக்கி, “ஆ... பெரியரே......” எனக் கூறினார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவர்கள் கூட சபாநாயகரை “கௌரவ சபாநாயகர் அவர்களே....!” என்றே அழைப்பார்கள். கடந்த 06ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது“அடுத்த வாரத்தில் தீர்ப்பு கிடைக்கும். நிச்சயமாக உள்ளே செல்ல வேண்டித்தான் வரும். வாயைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் தண்டனை அதிகமாகலாம் என எனது சட்டத்தரணிகள் கூறியிருக்கின்றார்கள்” எனக் கூறினார். அப்படி இருந்தும் “உண்மையைப் பேசி சிறைக்குச் செல்கிறேன். அது சந்தோசமானது”என்றும் கூறியிருந்தார். உண்மையைத்தான் பேச வேண்டும். என்றாலும் உண்மையாக இருந்தாலும் அதனைப் பேச வேண்டிய இடங்கள் இருக்கின்றன. அதனால்தான் வாயைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ரஞ்சனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது நல்லாட்சி அரசாங்க காலத்திலாகும். அந்தக் காலத்திலேதான் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. சில வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 12ம் திகதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதால் ரஞ்சனுக்கு மீண்டும் மேன்முறையீட்டைக் கூட சமர்ப்பிக்க முடியாது போகலாம். தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ரஞ்சன் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்காக அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் “நான் உண்மையையே பேசினேன். நான் கூறிய எதனையும் வாபஸ் பெற மாட்டேன். மன்னிப்புக் கோரவும் மாட்டேன். அவர் உண்மையிலேயே திருடன்தான்” என கூறினார். அந்நேரத்தில் சிறைச்சாலை பஸ்ஸில் அவரை ஏற்றும் போது சிறைச்சாலை அதிகாரிகளை பின்னால் தள்ளிவிட்டு “கொஞ்சம் பொறுங்கள் மச்சான்” என சிறைச்சாலை அதிகாரிகளிடம் கூறினார்.

வெலிக்கடை சிறைக்கைதியாக பதிவு செய்யப்பட்டு, சிறைக் கைதிகள் அணியும் “ஜம்பர்” அணிவிக்கப்பட்டு அவர் நீர்கொழும்பு பள்ளன்சேன இளம் குற்றவாளிகளுக்கான நன்னடத்தை நிலையத்திற்கு தனிமைப் படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒழுங்காக வாரத்தைகளைப் பிரயோகிக்காததாலேயே ரஞ்சனுக்கு இவை அனைத்தும் இடம்பெற்றுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தாரக விக்ரமசேகர
தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்

Comments