கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

சென்ற வாரத்து முதலாவது கசப்பு வில்லையில் இப்படி ஒரு சில வரிகளைப் பதித்திருந்தேன். 

பொதுவாகவே ஒரு பிரபலமான நபரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவமொன்று நிகழ்ந்து விட்டால் “ஆட்டம் குளோஸ்” என ஆரவாரப்படுவது மனித இயல்பு. 

ரஜினியைக் குறித்து இப்பொழுது இந்த வார்த்தை தான் பலராரலும் பலதடவை உரத்து ஒலிக்கப்படுகிறது.” 

இதில், ‘ரஜினி’ என்றிருப்பதை நீக்கிவிட்டு ‘அமெரிக்க ரொனால்ட் ட்ரம்ப்’ என்ற போட்டுப் படியுங்கள். அச்சொட்டாகப் பொருந்தும்! 

இந்த நூற்றாண்டின் ஒரு கேலி மனிதனாகிப் போன ஒரு பெரிய பதவியாளனைக் குறித்தும் “ஆட்டம் குளோஸ்” என்று தான் ஆரவாரப்பட வேண்டும். 

அமெரிக்காவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவின்படி எதிர்வரும் 20 புதன்கிழமை ஆட்டம் குளோஸ்! 17லும் ஜனநாயகத்திற்கு குற்றம் இழைத்த ஒருவராக ஆட்டம் குளோஸ்” என்று பதவி நீக்கம் செய்யப்பட்டு பெரும்பாலானா மக்கள் ஆரவாரப்படலாம் என்று இருக்கையில்,  பதவிலிருந்து கௌரவமாக விடைபெறுவதற்கு முன்பே குற்றவியல் பிரேரணையால் பதவி பறிபோனது. கடந்த புதன்கிழமை ஆட்டம் குளோஸ். 

எவ்வாறாயினும், இந்த மனிதனின் ஒரு ‘பிறவிக் குணத்தை இதழொன்றில் கண்டு அதிசயப்பட்டுபோய் அபிமானிகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசை ஆசை! 

அந்த மனிதன் “நாளொன்றுக்கு பன்னிரண்டு முறை பொய் சொல்வானாம்! அப்பொழுதுதான் மனத்திருப்தியாம்!  அதிரடித் தகவல்தான்! 

ஊடகவியலாளர்கள் சந்திப்பின் பொழுதும் பொதுமக்கள் முன் உரையாற்றும் போதும் ஏராளமான பொய்யான செய்திகளையும் தவறான தகவல்களையும் அளிப்பதாக அவர் மீது எப்போதுமே விமர்சனம் உண்டு. 

கடந்த சில வருடங்களில் மட்டும் டிரம்ப் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. “ஒரு நாளில் அவர் 12 முறையாவது பொய்யான தகவல்களைக் கூறிவிடுகிறார்.

கொரோனா பரவல் தீவிரமாகப் பரவத் தொடங்கிய கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை தவறான தகவல்களைக் கூறியுள்ளார்’ என வொஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ‘ஹஃபிங்கடன் போஸ்ட்” செய்தியாளர் ஷிரிஸ் டேட் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பை நோக்கி, “ஜனாதிபதியாகப் பதவி வகித்த மூன்றரை ஆண்டுகளில் அமெரிக்க மக்களிடம் கூறிய பொய்களுக்கு வருந்தியதுண்டா?” என்று கேள்வியெழுப்பினார். 

திடீரென்று, எதிர்பாராத நேரத்தில் தர்மசங்கடமான கேள்வியை எதிர்கொண்ட ட்ரம்ப் அமைதியானார். பத்திரிகையாளரின் செய்திக்கு பதிலளிக்க மறுத்தார். பத்திரிகையாளர் மீண்டும் அந்தக் கேள்வியை எழுப்ப, அந்தக் கேள்வியைப் புறக்கணித்த ட்ரம்ப் அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டார்.இந்தக் கேள்விக் குறித்து ஷிரிஷ் “டிரம்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்க 5 ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

கசப்பு 02 

அபிமானிகள் மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தக் கசப்பை மூன்றாவது தடவையாகத் தருகின்றேன். 

சற்றும் விருப்பமில்லாமலேயே வழங்குகின்றேன். 

ஒரு வானொலியின் (வசந்தம்) இரவு 07 மணிச் செய்தி வாசிப்பில் (சுமார் 18 – 20 நிமிடம்)

“இதேவேளை” என்றொரு வார்த்தைப் பிரயோகம்’ பிரவாகமாக தினமும்! தினமும்! 
அதுவும் ஒவ்வொரு மூன்று – நான்கு – ஐந்து வினாடிகள் இடைவெளியில்! 
கடந்த 28ம் திகதி நன்றாகவே கசந்து போனேன். 13ம் திகதி கொஞ்சம் குறைவாக 13. -------------------------  
அதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி அறிக்கைக்காரருக்கு அலுக்காதா, சலிக்காதா? 

ஒன்று எனக்குப் புலப்படுகிறது, நான், இப்பத்தியில் இந்த “இதேவேளை”யைத் தூக்கியப்பிடிப்பதால், 

“நீ என்னடா எழுதுவது” 

நாங்கள் என்ன கேட்பது” என்ற மனோபாவனையில் வேண்டும் என்றே அதிகரித்தே விளையாட்டுக் காட்டுகின்றனர். 

காரணம் – அவர்கள் வயசு அப்படி! ரொம்ப இளசுகள்! பெரும்பாலானோர் கிழக்கிலங்கை இறக்குமதி! அங்கே சில இளையதலைமுறைகளுக்கு அந்த ‘உடும்புப்பிடி, உள்ளது.  

அவர்கள் ஒன்றை அவதானிக்க வேண்டும். ஆங்கிலம் போன்று மொழிப் பஞ்சம் நம் அருமைத் தமிழுக்கில்லை.  

“இதேவேளை” என்பதற்குகப் பொருத்தமான அதே கருத்துடைய பத்துப் பதினைந்து வார்த்தைகளை தமிழன்னைப் பெற்றெடுத்திருக்கிறாள். நானே முன் பதிவில் தொகுத்து வழங்கி இருக்கிறேனே! பாவிக்கக் கூடாதா? இது அழிச்சாட்டியம் தானே? 

இனிப்பு

பாண்டியனும் சோழனும் ஆண்ட இலங்கை, அநுராதபுரத் தலைநகரில் ஒரு கல்வியாளர். அவர் பெயரில் இந்தியாவை ஆண்ட மன்னார் ‘ஷா’வும், ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரூஜியும் இருக்கிறார்கள். அத்தோடு அன்பொழுக அழைக்க ‘அன்பு’ம் இணைவு! அவர், அடக்கம், அமைதிக்குப் பெயர் பெற்ற “அன்பு ஜவஹர் ஷா”

இவர் எச் சமூகத்தவர் என டக்கென்று சொல்லி விடமுடியாத இக்கட்டு!  ஆனால், ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று விளித்தால் ஆளைப் புரியலாம். 

எவ்வாறாயினும் இப்பெயரில் தொடர்ந்து இலங்கியவராய் அந்த அநுராதபுரத்தில் பொன்விழா கண்ட ஒரு மாபெரும் கல்விக் கூடமான ‘ஸாஹிரா’ அதிபராய் ​சேவையாற்றியும் அதேசமயம் இலக்கியவாதியுமாகத்    திகழ்ந்து இப்போது ஓய்வு நிலையில் உள்ளவருக்கு தன் பெயரால் பிரச்சினை ஏற்படாமலா போனது? முக்கியமாக ‘ஆலிம் சாக்கள்’ (முஸ்லிம் மார்க்க அறிஞர்கள்) ஒவ்வாமை நோய்க்குள்ளாகி இருப்பரே! 

ஆனாலும், அவர் என்ன செய்வார் பாவம், அருமைத் தந்தையார் அறியாப்பருவத்தில் அப்படியொரு பெயரைச் சூட்டிவிட்டாரே!  

உண்மையில் அந்தத் தந்தை புதுமையும் புரட்சியும் செய்தார். பெயரில் என்ன இருக்கிறது என்கிறவர்களுக்கு நல்ல விளக்கமும் வைத்திருந்தார். 

உங்களுக்கும் தெரிய வேண்டுமே! என்றாலும் அபிமானிகள் இந்த இனிப்பின் இறுதிப் பகுதிவரை பொறுக்கவும் வேண்டுமே! 

பொறுங்கள் இந்த இடத்தில் அவர்தம் தந்தையை அறிமுகம் செய்வதே தலையாயப் பணி. 

அவர், 98 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். (1922/11/10) இடம் கலையும் இலக்கியமும், ஆன்மிகமும் தழைத்திருந்த கொழும்பு -02, கொம்பனித் தெரு, சர்ச் வீதி வீட்டில் இவரது நூற்றாண்டுக்கு இனினும் இரண்டே ஆண்டுகளே! 

அவரது தந்தையார் (அன்பு ஜவஹர்ஷா பாட்டனார்) இஸ்மாயில் அப்துல் காதர், காலி கோட்டையில் இரத்தினக் கல் வியாபாரியாக வலம் வந்தவர். அவர் மகனுக்கு வைத்த பெயர் முஹம்மது ஹனிஃபா தான்! ஆனால் நிரந்தரமாக நிலைத்துப் போனது “அன்பு தாசன்”! 

தந்தை போலவே இரத்தினக்கல் குவியலுக்குள் இருந்திருக்க வேண்டியவர், இலக்கிய ராஜ பாட்டைக்குள் உலவப் போய் “அன்பு தாசன்” ஆனார்! 

அந்த அழகிய பெயரை அவர் நெற்றியில் ஒட்டி வாழ்க்கைப் பாதையைத் திசை திருப்பி விட்டவர் ஒரு தத்துவ வித்தகர்! அவரை “அன்பர் பூபதி தாசர்” என அனைவரும் அழைத்தனர். “அன்பு இல்லம்” ஒன்றை கொழும்பு- 14 கிராண்ட்பாஸ், லேயார்ட்ஸ் பிராட்வேயில் இயக்கினார். 1939ல் ‘ஞானக் கடல்” ஆன்மிக இதழையும் நடத்தி, பின்னர் தேனகம், மட்டக்களப்புச் சென்று தங்கியிருந்த போதும் (1948) அங்கும் ‘ஞானக்கடலை அலைஓசை இடச் செய்தார். 

அன்பர் பூபதி தாசரை ஞானகுருவாகக் கொண்டு ஒரு சிஷ்யனாகி விட்ட ‘அன்பு தாசன்’ முகம்மது ஹனிஃபா, நாளடைவில் மேலும் மூன்று பிரபலங்களையும் சம்பாதித்துக் கொண்டார். 
முன்னாள் அமைச்சர், ‘சொல்லின் செல்வர்’ செ. இராசதுரை, ஊடக, இதழியல் ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம், முன்னோடி படைப்பிலக்கிய மாமன்னன் “பித்தன்” ஷா ஆகியோர். 

இந்நால்வருடன் இரண்டறக் கலந்து விட்டவர், பின்னாட்களில் புதுமைக் கவிஞராக மிளிர்ந்தார்.  

சிவநாயகத்தார் முத்திரையிட்டு பதித்த ‘தமிழின்பம்’ ‘பாரதி’, ‘சுதந்திரன்’ வீரகேசரி ஆகியவற்றில் அவர் ஆளுமை பளிச்சிட்டது. 

அன்றைய (1948 -=-1950) பிரபல “பாரதி” இலக்கிய இதழில் இடம்பெற்ற இவரது கவிதாசாரங்களின் ஒரு சிறு திறனாய்வை, இன்றைய வடபுலத்து “ஜீவநதி’யில் மற்றொரு ஆளுமை, ஆய்வுச் சிகரம் பேராசிரியர் செ.யோகராஜா ஒரே பக்கத்தில் பிழிந்து தந்து வியக்க வைக்கிறார். (ஜன. 2021 இதழ்). 

பின்னொருபொழுது (01.04.1987) ‘பித்தன்’ ஷா, தன் உற்ற நண்பர் ‘அன்பு தாசனின்’ மைந்தர் அன்பு ஜவஹர்ஷாவுக்கு அனுப்பியிருந்த ஒரு மடல் முக்கியம் புதிரைப் புரிய வைக்கிறது. 

அவர் எழுதுகிறார். “உங்கள் தந்தையிடம், ‘இந்தப் பெயரில் என்ன பெரிய, இலக்கியம் சிறை பட்டிருக்கிறது? இதை என் மகனுக்கு வைத்தீர்கள்? என்று கேட்டேன். 

“அப்பெயரில் இலக்கியம் எதுவும் சிறைபடவில்லை தான். என்றாலும் இலட்சிய மனிதர்கள் இருவர் இருக்கின்றனர். ஒருவர், ஆசியாவில் அரசியலில் முத்திரை பதித்த ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு. மற்றவர் என் உற்ற இலக்கிய நண்பன் ஷா! இந்த இருவர் போல் வேறெவரையும் இன்னும் ஒரு நூறு ஆண்டுக்குப் பிறகு மக்கள் காண்பரா என்பது என்ன நிச்சயம்? ஆகவே அவர்களிருவர் பெயர்களையும் என் மகன் தாங்கி நிற்கட்டுமே! இன்னொரு அதிசயத்தையும் 34ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இம்மடல் கொண்டுள்ளது. இதைப் புதையலாகக் கட்டிக் காத்து வைத்திருந்தது நம்ம பேரபிமானத்திற்குரிய மூத்த படைப்பிலக்கிய மாமனிதன் திக்குவல்லை கமால் எப்படி, அவருக்குப் போனது என்பது இன்னொரு புதிர். 

இவ்வாறாக, ஓர் அன்பு தாசனின் பிள்ளை ஒருவர் 1950 – நவ- 03ல் ‘முஹம்மது ஜவஹர் ஷா’ வாகப் பிறந்து, பின்னர் ஊடக, இலக்கியப் பங்களிப்புகளைத் தந்தை வழியில் வழங்கிய பொழுது இதழியல் ஜாம்பவான் சிவநாயகத்தாரால் ‘தினபதி வழி 1967லில் ‘அன்பு ஜவஹர்ஷா’ ஆனார்!. 

மேலும் இனிப்பு இனிப்பாக நிறைய வழங்க வேண்டியவை இன்னும் இருக்கின்றன. என் பத்தி எழுத்தில் இந்தளவு இடம் கிடைத்ததே பெரிய காரியம்! இங்கே படத்தில் அன்பு ஜவஹர்ஷாவின் தந்தையார் அழகேயுருவாக இளமைத் தோற்றத்தில் பேனாவும் பேப்பருமாகக் காட்சி! “தந்தையார் படமே போதும். என்னைத் தவிர்த்து விடுங்கள்” என்றார் தனயன்!  இது எப்படி இருக்கு? 

Comments