பெருந்தோட்டங்களில் வெளிவாரி முறை: தொழிலாளர் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதே கம்பனிகளின் நோக்கம் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டங்களில் வெளிவாரி முறை: தொழிலாளர் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதே கம்பனிகளின் நோக்கம்

இன்று பெருந்தோட்டங்களில் முறைசாரா முறை (போர்ட் லீப் முறை, மாற்றுபயிர்ச் செய்கைகள், மாற்று விவசாய முறைகள், கோழிப் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் இது வியாபித்துள்ளது.  

இந்த முறைசாரா முறைகளுக்கூடாக தொழிலாளர்கள் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம், தொழிலாளியாக அடிமைப்பட்டு வாழத்தேவையில்லை, தொழிற்சங்கங்களோ, கூட்டு ஒப்பந்தமோ, தொழிலாளர் பேராட்டமோ அவசியம் இல்லை, தொழிலாளர்கள் உச்சகட்ட வருமானத்தை ஈட்டிக்கொள்ளலாம் என பலவகையாக முறைசாரா முறையை தொழிலாளர் சந்தையில் விளம்பரப்படுத்தி, முதலாளிகள் தங்களுடைய வியாபாரத்தை மேற்கொள்கின்றார்கள். இதற்கூடாக அவர்கள் உச்சகட்ட இலாபத்தை அடைவதோடு தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்தப் படுகிறார்கள்.  

இம் முறைசாரா முறைகளில் ஒன்றுதான் போர்ட் லீப் முறை. முப்பது வருடங்களுகக்கு மேலாக தேயிலை பறிக்கப்பட்ட தோட்டக் காணிகளில் மீண்டும் நல்ல விளைச்சளை ஈட்டவேண்டுமாயின் தோட்ட நிர்வாகம் அதில் அதிக முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது சாதாரண புரிதலாகும். அவ்வாறான மலைகளை தெரிவுசெய்து தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுப்பதன் ஊடாக அந் நிலங்களில் தொழிலாளர்கள் தங்களது உழைப்பை மூலதனமாக்கி எடுக்கும் விளைச்சலை அதே கம்பனி விலைகொடுத்து வாங்கும் முறையே போர்ட் லீப் முறையாகும்.  
இம் முறைசாரா திட்டத்தினூடாக தொழிலாளர்கள் முகம் கொடுக்கக்கூடிய பிரச்சினைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்.  

நிரந்தரத் தொழிலாளர்கள் என்ற முறையிலிருந்து நீக்கப்படுவது முதல் விஷயம். அதாவது ஒரு தொழிலாளி நிரந்தர தொழிலாளியாக இருக்கும்போது அவர் தனக்கு உரிமை மீறல் ஏற்பட்டால் அதனை தட்டிக்கேட்பதற்கு அவருக்கு அதிகாரமும் அங்கீகாரம் உண்டு. ஆனால் முறைசாரா முறைக்கூடாக தொழிலாளி என்ற சிந்தனையை கம்பனிகள் தொழிலாளர் மத்தியில் மழுங்கடிக்கச் செய்கின்றன. இவ்வாறு காணிகளை பிரித்துகொடுப்பதற்கூடாக அவர்கள் காணிகளின் உரிமையாளர்கள் என்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றார்கள். அதன் பின்னர் தொழிலாளியின் வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு பணத்தாசை காட்டியோ அல்லது வற்புறுத்தல்கள், அழுத்தங்களுக்கூடாகவோ நிரந்தர சேவையை இடைநிறுத்த வைத்து இவ் போர்ட் லீப் முறைக்குள் அவர்களை உள்வாங்குகின்றார்கள்.

அன்றிலிருந்து இத் தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்கள் என்ற அந்தஸ்தை இழந்து விடுகிறார்கள். தமது வேலைத்தளங்ககளில் இடம்பெறும் அநீதிகளையோ, வன்முறைகளையோ, சுரண்டல்களையோ எதிர்த்து தொழிலாளர்கள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதவாறு அவர்களுடைய கைகள் கட்டிப்போடப்படுகின்றன.  

தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக இல்லாமல் போகும் பட்சத்தில் தொழிற்சங்கங்கள் வென்றெடுத்த தொழில் உரிமைகளான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம், மகப்பேற்று கொடுப்பனவுகள், மகப்பேற்று விடுமுறைகள், வேலைத்தள விபத்துக்களுக்கான பாதுகாப்பு மற்றும் காப்பீடுகள் என அனைத்து தொழில் உரிமைகளையும் நிரந்தரமாக இழக்க நேரிடும். இவ் வனைத்து உரிமைகளையும் (கொடுப்பனவுகளையும்) வழங்குவதற்கூடாக இதுவரை முதலாளிகள் தொழிலாளர்களுக்காக செலவுசெய்த செலவுகள் அனைத்தும் அவர்களுக்கு லாபமாக சேர்கின்றது என்ற விடயத்தை தொழிலாளர்களுக்கு மறைத்து முதலாளிகளுடைய இலாப வேட்டை தொடர்கின்றது.  

தொழிலாளர்கள் மீது அத்துமீறி திணிக்கப்படும் உழைப்புச் சுரண்டல்:  

இம்முறைக்கூடாக ஒரு ஏக்கர் காணி ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்படுமாயின் அந் நிலத்தில் சிறந்த விளைச்சளை ஒரு தொழிலாளி மேற்கொள்வதற்காக காணியை சுத்தப்படுத்தல் (முள் போடுதல், காண் வெட்டுதல், புல் வெட்டுதல்), உரம் போடுதல், கவ்வாத்து வெட்டுதல், கொழுந்து பறித்தல், அன்றாடம் கொழுந்தை கேட்கும் இடத்திற்கு கொண்டுசென்று பாரம் கொடுத்தல் என அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும். ஒரு தொழிலாளியினால் ஒரு ஏக்கர் நிலத்தை தனியாக பராமரித்து விளைச்சளை பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அவர் வேலைக்கு ஆட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  அவ்வாறு குறிப்பிட்ட தொழிலாளி வேலைக்கு ஆட்களை எடுத்தால்தான் உழைக்கும் உழைப்பில் இருந்து பெரும் தொகையை தொழிலாளர் சம்பளத்திற்கு செலவிட முடியும்.  

ஆகவே, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் உதவியை பெற்றுக் கொள்கின்றார்கள். அதன்போது அக்குடும்ப உறுப்பினர்களுக்கு தாங்கள் செய்த வேலைக்கு கூலி என அவர்கள் பங்கிடுவதில்லை. எனவே இத்தொழிலாளர் குடும்பத்தின் முழு உழைப்பையும் சுரண்டி ஒரு சொச்ச தொகையை கம்பனிகள் இத் தொழிலாளிக்கு வழங்குகின்றன. ஒரு ஏக்கர் நிலத்தை நல்ல விளைச்சல் நிலமாக மாற்றுவதற்கு நிர்வாகத்திற்கு மாதம் கிட்டத்தட்ட 14 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றார்கள். அதன்போது அவர்கள் கொடுப்பனவு மற்றும் பராமரிப்பு செலவாக நிர்வாகம் பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. அச் செலவையும் கம்பனிகள் தங்களுடைய லாபக்கணக்கில் சேர்த்துக் கொள்ளும்.  
சிறுவர் தொழிலாளர்கள் மீண்டும் இலங்கையில் உருவாக்கப்படுகின்றார்கள்: 

அதாவது இம் முறையில் குடும்ப உறுப்பினர்களது உழைப்பு இத் தோட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றபோது அதில் சிறுவர்களும் உள்ளடங்குகின்றார்கள். தங்களுடைய குடும்பத்திற்கு வருமானம் தேவைப்படும் பட்சத்தில் தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளை புல் புடுங்குதல், காண்களை வெட்டுதல் பேன்ற இதர வேலைகளுக்கு பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். எனவே அவர்களது கல்வியும் இடைநிறுத்தப்படும் ஆபத்து இருப்பதோடு, உழைப்பிற்கு ஊதியம் இல்லாத சிறுவர் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  

வேலைத்தள உடல்நல பாதுகாப்பு:

தற்போது தேயிலை, இறப்பர் மலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளின்போது கம்பனிகள் பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளதோடு, அவ் வாபத்தான நிலமையை மாற்றியமைப்பது அவர்களுடைய கடமையாகும். ஆனால் இவ் முறைசாரா முறையில் அவ்வாறான உடல்நலப் பாதுகாப்பு கவசங்கள்,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இத் தொழிலாளர்களே பொறுப்பாளர்களாவர். உதாரணமாக ஒரு மலையில் தொழிலாளி வழுக்கிவிழுந்து உயிர் இழந்தாலோ அல்லது அங்கவீனமுற்றாலோ அதற்கான நஷ்டஈட்டை முதலாளிகள் வழங்க வேண்டும். இம் முறையில் இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.

தொழிற்சங்கங்களை பலமிழக்கச் செய்தல்:

தொழிலாளர்கள் தொழிற்சங்கத்துக்குள் இயங்கும்போது அவர்களுடைய உரிமைகள் தொடர்பாக பேரம் பேசுதல்,போராடுதல், அழுத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் கூட்டுஒப்பந்தங்களை கைச்சாத்திடுதல் போன்றவற்றை சங்கங்கள் மேற்கொள்ளும். இம் முறைக்கூடாக தொழிலாளர்கள் மத்தியில் தாங்கள் தொழிலாளர்கள் இல்லை என்ற மனநிலையை ஏற்படுத்தி கட்சி அரசியல்சார் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி உண்மையான தொழிற்சங்கத்தின் விம்பத்தை உடைக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு தொழிற்சங்கங்களை பலமிழக்கச் செய்யும் சூழ்ச்சியையும் கனகச்சிதமாக முதலாளிகள் முன்னெடுத்துள்ளார்கள். தொழிலாளர்களுக்கு ஒற்றுமையே பலம். அதனை சிதைப்பதனுௗடாக தங்களுடைய நோக்கங்களை முதலாளிகள் மிகவும் சூட்சுமமான முறையில் தொழிலாளர் மத்தியில் திணிக்கிறார்கள்.

உதாரணமாக சொல்வதானால், போர்ட்லீப் முறைகளை அறிமுகம் செய்வது தொடர்பாக தொழிலாளர் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும் தொழிற்சங்கங்களுடன் நேரடியாக எவ்வித கலந்துரையாடல்களையும் முதலாளிகள் மேற்கொள்ளவில்லை. தாமாகவே ஒரு ஒப்பந்த பத்திரத்தை தயாரித்து அதில் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெற்று, கம்பனிகள் அதனை தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இம் முறைசாரா முறையை எதிர்த்து தொழிலாளர்கள் தொழில் திணைக்களங்களை நாடும்போது தொழிலாளர் விருப்பத்துடனேயே இம் முறையை அறிமுகப்படுத்தியதாக கம்பனிகள் அறிவிக்கின்றன. ஆனால் உண்மையில் தொழிலாளர்களுக்கு இந்த ஒப்பந்தம் என்ன கூறுகின்றது என்பதில் போதிய தெளிவில்லை என்பதே யதார்த்தம்.

எனவே போட் லீப் முறைமூலம் வாழ்க்கைக்கான பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு ஆகிய இரண்டும் இன்றி இத்தொழிலாளர் சமூகம் மீண்டும் அடிமைமுறை சமூகமாக பின்னோக்கி செல்வதற்கான சகல வழிமுறைகளும் உள்ளன என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.

முதலாளிகளின் விரைவாக பணம் ஈட்டும் இம் முறைக்கூடாக தொழிலாளர் வர்க்கம் தங்களுடைய உரிமைகளை இழந்து தங்கள் பிரச்சினைக்கு பொறுப்புகூறும் நபர்களின்றி அடிமைமுறை சமூகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவுசெய்யத் தேவையான பணத்தை அடையும் வழியான இம்முறையை தொழிலாளர் மத்தியில் காட்சிப்படுத்தி தொழிலாளர்களின் மீதேறி முதலாளித்துவம் சவாரிசெல்ல ஆரம்பித்துள்ளது என்பதை தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஆரம்ப காலங்களைப்போல தொழிலாளர்களை நேரடியாக தாக்கி, துன்புறுத்தி உழைப்பைச் சுரண்டும் யுக்தியில் இருந்து விடுபட்டு அவர்களுடைய தேவைகளை முன்னிறுத்தி, அவர்களின் தோளை தட்டிக்கொடுத்து அவர்கள் மீதே பயணிக்கும் யுக்தியை முதலாளிகள் மிகவும் சூட்சுமமான முறையில் கையாள்கின்றார்கள்.

இவ் முறைசாரா முறையின் அறிமுகமானது ஒரு நாட்டு பொருளாதாரத்தில் மற்றும் ஆட்சியில் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றது என்பதை பார்ப்போமேயானால் நாட்டியன் வருமானம் குறைய ஆரம்பிக்கும். உம்: தொழிலாளர்களுடைய EPF, ETF என்பன நாட்டின் வருமானத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. அவை மொத்தமாக இடைநிறுத்தப்படும்.

இப் பெருந்தோட்டத்துறை என்ற கட்டமைப்பு முழுமையாக மாற்றமடையும் அபாயம் உள்ளது. இதன் போது தேயிலை ஏற்றுமதி காரணமாக எமது நாட்டுக்கு வந்த அந்நிய வருமானம் இல்லாதுபோகும். மேலும் ஒருநாட்டின் நீடித்த அபிவிருத்திக்கு விவசாயமே என்பது பிரதானம். ஆனால் எமது நாட்டில் இவ் விவசாயமுறை இல்லாமல் போவதற்கூடாக நாட்டின் அபிவிருத்தி கேள்விக்குறியாகும்.

சர்வதேச ரீதியில் தொழில் உரிமைகளைப் பேணும் நாடாக எமக்குள்ள அங்கீகாரம் இம்முறைக்கூடாக இல்லாதொழிக்கப்படும். தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு சுரண்டல் மேலோங்கும்போது தொழில் திணக்களங்களையோ தொழில்சார் நிறுவனங்களையோ அணுகி தொழிலாளர்களால் தங்களுடைய உரிமைகளை தக்கவைத்துக் கொள்ளமுடியாது. எனவே, எமது நாட்டின் தொழிலாளர் உரிமைகளின் தரம் கேள்விக்குறியாகும்.

முறைசாரா முறையினூடாக ஏற்படுத்தப்படுகின்ற அழுத்தங்களையும், சுரண்டல்களையும் சரியாக தொழிலாளர்கள் அடையாளம் கண்டு அதனை தொழிலாளர்கள் எதிர்க்க முயற்சிக்கும் போதுநாட்டின் அமைதி மற்றும் சமூகத்தின் அமைதி குழைய ஆரம்பித்து பதட்டமான சூழ்நிலை அதிகரிக்கும்.

இறுதியாக இப் பிரச்சினைகள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க முற்படும் போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் முதலாளிகளோ, கம்பனிகளோ இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தனது நாட்டு தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதலாளிகள் தாம் விரும்பியவாறு அழுத்தங்களை மேற்கொள்ளும் அபாயம் தற்போது அதிகரித்து வருகின்றது.

எதிர்காலத்தில் இந்நிலை மேலும் உக்கிரமடையும்போது அரசு தலையிடுவதற்கான வாய்ப்பு முற்றாக அற்றுப்போகும்.

செங்கொடி சங்கம் அரசிடம் விடுக்கும் இரண்டு கோரிக்கைகள்

1. உடனடியாக இவ் முறைசாரா முறை பெருந்தோட்டத் துறையில் உட்புகுத்தப்படும் நிலையை தடுத்து நிறுத்தி மீண்டும் தொழிலாளர்கள் வழமையான முறையில் தொழிற் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேலை செய்யும் நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.

அல்லது

2. பெருந்தோட்டத்துறையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட முறைசாரா முறையை மாற்றி மீண்டும் பழைய நிலைக்குச் செல்லமுடியாத சூழல் இருப்பின் தொழிலாளர்களின் EPF, ETF, பிரசவச காயநிதி, தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்றை தயாரிக்க வேண்டும்.

ஆனந்தி சிவசுப்ரமணியம்
செங்கொடிச்சங்கம்

Comments