அஞ்சலித்தேன்! | தினகரன் வாரமஞ்சரி

அஞ்சலித்தேன்!

‘ஆரையம் பதி’ மண்ணில்
அவதரித்தீர்! பெருங்கவியாய்ப்-
பேரெடுத்தீர்! பல்துறையில்
பிறங்கினீர்! என் றைக்கும்
“மூனாக் கானா” வாய்
முத்தமிழில் நீர் வரைத்த
தேனான எழுத்து களின்
திறங்கண்டு வியந்தோமே!
பாட்டெழுதும், பாவ லனாய்
பரிணமித்தீர்! நடிப்புலகில்-
நாட்டமுள்ள நடிகர் நீர்;
நல்லகதை ஆசிரியர்!
நாட்டுக் கூத்து களில்
நனிசிறந்த விற்பன்னர்!
கேட்டோர் அறிந்தவர் உம்
கீர்த்தியினை மறுப்பாரோ?
ஆசிரிய னாய் இருந்தீர்
அதிபரென உயர் வுற்றீர்!
பேசரிய இலக்கி யத்தில்
பெயர்பொறிந்த கலைஞர்நீர்!
மாசில்லா மனத்த ரென
மனிதர்களில் புனித ரெனக்
காசினியில் வாழும் வரை
கண்ணியமாய் வாந்தவர் நீர்!
கலைமணியாய் கலைச்சுடராய்
கலைப்பரிதி, கவி மணியாய்
கலைமா மணி யென்றே
கனபட்டம், விருது களை
நிலையாகப் பெற்றிருந்த
நிலைகண்டு வழங்கி வைத்த
தலைக்கோல் விருதும் உங்கள்
தகுதிக்கோர் அடையாளம்!
கிழக்குமா காணம், அதன்
கீர்த்திமிகு கீத மதை-
அழகுசெந் தமிழி னிதே
அச்சாவாய் ஆக்கி வைத்தீர்!
இரண்டாயிரத்துப் பன்னிரண்டு
இனிதான சித்திரை நாள்,
இரசித்து மகிழ்ந்தி ருந்தேன்
இனியவர்நீர் இன்றில்லை!
கல்முனைக் கவிய ரங்கில்
கலந்துகொள்ள வருகையிலே,
இல்லமுள்ள ‘எம் பதி’யும்
இடையினிலே என்றீர்கள்!
‘அன்புடீன்’ எந்தனுடன்
அமிர்தகழி செ.குவும்
உங்களது செயற் றிறனை
உரைத்திடவே மகிழ்ந்திருந்தேன்!
பிறப்பவர்கள் இம் மண்ணில்
பிழைவிட்டும் வாழ்ந்த பின்பு
இறப்பதுவே நியதி யெனில்,
இறுதிவரை குறைவு படாச்
சிறப்புடனே வாழ்ந்தவர் நீர்!
செகம்மீது உம் பெருமை,
மறுப்பதற்கு இயலாதே;
மாமனிதா “அஞ்ச லித்தேன்!”

கவிமணி அ. கௌரிதாசன்,
ஆலங்கேணி கிழக்கு

Comments