உலக மகா வல்லரசாக அமெரிக்காவை மீண்டும் தூக்கி நிறுத்துவாரா ஜோ பைடன்? | தினகரன் வாரமஞ்சரி

உலக மகா வல்லரசாக அமெரிக்காவை மீண்டும் தூக்கி நிறுத்துவாரா ஜோ பைடன்?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆரம்பத்தில் அடம்பிடித்தாலும் இறுதி நேரத்தில் வெள்ளை மாளிகையை விட்டு விலகிச் சென்றார். அதிகாரத்தின் மீதுள்ள அவாவும் கிறுக்குத்தனமுமே அவரது இரண்டாவது பதவிக்கான வாய்ப்பினை பறித்தது. உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளான ஜனாதிபதியாக விடைபெற்றுச் சென்றுள்ளார். அவரது நடவடிக்கைகளால் அமெரிக்கா அதிக நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது என்பதே உண்மை. இதிலிருந்து மீள்வது கடினமானதாகவே அமையப்போகிறது என்பதை ஜோ பைடன் உணா்ந்துள்ளாா்.

இத்தகைய நெருக்கடி மிக்க சூழலில் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்குள்ள சவால்கள் அதிகமானவை. அதனைத் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஜோசப் பைடன் பதவியேற்றதும் பதினைந்துக்கு மேற்பட்ட தீர்மானங்களில் ஒப்பமிட்டு சாதனை படைத்துள்ளதாக தெரியவருகிறது. பதவியேற்றதுடன் எந்த ஜனாதிபதியும் மேற்கொள்ளாத பணியை ஜோ பைடன் ஆரம்பித்துள்ளார். அதற்கு அவரது எட்டுவருட துணை ஜனாதிபதி காலம் ஒரு காரணமாக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட ஆபத்தான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு உடையவராக ஜோ பைடன் காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. குறிப்பாக அவரது பதவியேற்பு விழாவில் அவராற்றிய உரையும் அவரது முதல் நாள் பணியையும் அவதானிக்கும் போது சில விடயங்கள் தெளிவாகின்றன.

முதலாவது பதவியேற்பில் அவா் ஆற்றிய உரை. அமொிக்க மக்களையும் அதன் தேசிய ஒருமைப்பாட்டையும் சீா்செய்வதாக அது அமைந்திருந்தது. தனது உரையில் இன ஒற்றுமை பற்றியும் அமைதியான வாழ்வு பற்றியும் அதிகம் முதன்மைப்படுத்தியிருந்தார். மேலும் அமெரிக்காவையும் அமெரிக்க மக்களையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க மக்கள் வேலைவாய்ப்பைப் பற்றி அச்சமடையத் தேவையில்லை என்ற கருத்தினை வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக கொரனோவினால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அதிலிருந்து விடுபடுவதற்கான 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. அது மட்டுமன்றி ஜனநாயகத்திற்கான வெற்றி எனப்பெருமிதம் கொண்ட ஜோ பைடன் ஜனநாயக விரோத செயல்களை கண்டனம் செய்தார். ஜனநாயத்தின் வெற்றிக்காக முன்னர் உழைத்த ஆபிரகாம் லிங்டனையும் மாட்டின் லுாதரையும் நினைவு கூர்ந்தார். அதனையே துணை அதிபரான கமலா ஹரிசும் சுட்டிக்காட்டினார்.

பெண் விடுதலை பற்றியும் இன ஒற்றுமை பற்றியும் அவரது ஆரம்ப உரை அமைந்திருந்தது. அவரது உரையின் சாரம் அமெரிக்க தேசியம் அதன் இன ஐக்கியம் மற்றும் சமாதானத்தின் அவசியப்பாடு என்பதாகவே தெரிகிறது.

ஜோ பைடன் ஒப்பமிட்ட விடயங்களாக அமைந்திருப்பவை அனைத்தும் அமெரிக்கா உலகத்துடன் கொண்டுள்ள நட்புறவு சார்ந்ததாகும். குறிப்பாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமையவுள்ளது என்பதற்கான சமிக்ஞையாகவே அவரது ஒப்பமிட்ட விடயங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக பருவநிலைமாற்றம் தொடா்பில் ட்ரம்ப் நிர்வாகம் பின்பற்றிய தீர்மானத்தை இரத்து செய்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலிலிருந்து விலகிக் கொண்டமையையும் அவர் இரத்து செய்ததுள்ளார். மெக்ஸ்சிக்கோ- அமெரிக்க எல்லையில் ட்ரம்ப் மேற்கொண்ட சுவர் எழுப்பும் தீர்மானத்தை விலக்கியக் கொண்டிருப்பதோடு உலக சுகாதார நிறுவனத்தில் மீண்டும் இணைவதற்கான ஒப்புதலையும் முன்வைத்துள்ளார். சில முஸ்லிம் நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு நுழைவதற்கு விதித்திருந்த தடைகளை நீக்கியமையும் பாலின சமத்துவத்தையும் இன சமத்துவத்தையும் அங்கீகரித்தமை மற்றும் அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருப்பதும் அவர் எடுத்திருக்கும் உடனடி நடவடிக்கைகளாகும்.

இவற்றை அவதானிக்கும் போது ஜோ பைடனது நிர்வாகம் கடும் போக்கற்ற மற்றும் மிதவாதத் தன்மை கொண்்டதாக அமையும் போலத் தெரிகிறது. உலகத்தோடு ஒத்து இயங்கும் போக்கினை அடுத்துவரும் நான்கு ஆண்டுகளாக பைடன் நிர்வாகம் கை கொள்ளப் போகிறது என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது. அதே நேரம் அமெரிக்கா ஒரு சுப்பர் வல்லரசாக விளங்கும் முயற்சிகள் சீன ரஷ்ய அரசுகளின் தற்போதைய நிலைப்பாடுகளினால் இலகுவானதாக அமையப் போவதில்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. எனவே ஜோ பைடனுக்குரிய சவால்கள் அதிகமானவை.

முதலாவதாக உள்நாடட்டில் தற்போது சீர்குலைந்துள்ள இன ஒருமைப்பாட்டையும் சமத்துவத்தையும் மீளக்கட்டியமைக்க வேண்டிய கட்டாயத்துக்குள் பைடன் தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக கறுப்பினத்தவா் மற்றும் இஸ்லாமியர் மீதான ட்ரம்பின் அணுகுமுறைகளால் ஏற்பட்டுள்ள இடைவெளியை சீா் செய்யத் தவறினால் அமெரிக்காவின் எதிர்கால ஐக்கியமும் ஒருமைப்பாடும் சிதைந்துவிடக் கூடும். இது 1860 களை நோக்கிய நிலைக்குள் அமெரிக்காவை இட்டுச் செல்லலாம், பல்லினத் தன்மை கொண்ட தேசம் என்பதை இழக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படுவது எதிரிகளுக்கு கொண்டாட்டமாகப் போய்விடும்.

இரண்டாவது, உள்நாட்டில் எழுந்துள்ள ஜனநாயக மறுப்புக்கான போராட்டம். இது வன்முறையை நோக்கிய அமெரிக்காவை உருவாக்கும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. அதனால் அமெரிக்காவுக்குள் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் ஜனநாயகமே அமொிக்க தேசியத்தின் அடிப்படையாகும். உலகத்திற்கு நவீன தேசிய ஜனநாயகத்தை தந்த நாடு என்ற பெருமையை அமெரிக்கா தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இப் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. அமெரிக்க தேசிய ஜனநாயகம் மீளவும் கட்டமைக்கப்பட வேண்டிய பொறுப்பு ஜோ பைடனுக்குரியது.

மூன்றாவது, கொவிட்-19 ஏற்படுத்திய அழிவு. இது பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதிலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறுகளால் அமெரிக்கா சந்தித்திருக்கும் அழிவு சரிசெய்ய முடியாத கட்டத்தை எட்டியுள்ளது. இதனை வெற்றி கொள்வது ஜோ பைடன் முன்னேயுள்ள பிரதான சவாலாகும். தொற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல் கொவிட் மரணங்களை முதலில் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்புக் குரியவராக ஜோ பைடன் காணப்படுகின்றார். நுகர்வுச் சமூகத்தினையே தற்போது அமெரிக்கா இழந்துள்ளது. அதனை நிரப்புவது கடினம் என்பது மட்டுமல்ல பொருளாதார ரீதியில் ஆபத்தானதாகவே அமையப் போகிறது.

நான்காவது, அமொிக்கா உலகத்தின் முதமை நாடு என்பதை மீள நிறுவ வேண்டிய அவசியம். முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் இலாப நட்ட கணக்குப் பார்ப்பது போல் உலகத்தையும் உலக நாடுகளையும் அணுகியதால் ஏற்பட்ட செல்வாக்கு சரிவை ஜோ பைடன் நிரப்ப வேண்டும். தென் பூகோள நாடுகளுடனான அணுகுமுறையில் பின்பற்றிய போக்குகள் அனைத்துமே மீளமைக்கப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது.
ஐந்தாவது, சீனாவுடனான உறவு. அந் நாட்டுடன் போட்டி போட வேண்டியது அவசியம். சீனா மிகத் தெளிவாகவே உலகளாவிய அதிகாரத்தை கைப்பற்ற தொடங்கியுள்ளது. அதற்கான வலையமைப்புகளையும் உபாயங்களையும் கடந்த நான்கு ஆண்டுகளாக மிகத் தெளிவாக விரிவாக்கம் செய்துள்ளது. அமெரிக்காவால் தனித்து எதிர்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதில் வர்த்தகப் பொறியானது உலகளாவிய தளத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதிப்பதாகவே தெரிகிறது.

அதனை எதிா்கொள்வதா அல்லது முறியடித்து பயணிப்பதா என்பது ஜோ பைடனுகுக்குரிய சவாலாக உள்ளது. எதனைத் தெரிவு செய்தாலும் ஆபத்தானதாகவே தெரிகிறது. அதாவது சீனாவை முறியடிப்பதும் கடினம். அதே நேரம் சீனாவுடன் ஒத்துழைப்பதும் ஆபத்தமானதே. ஆறாவது இராணுவ ரீதியிலான ரஷ்யாவின் வளர்ச்சியும் ஆதிக்கமும் தொடர்வதாகும்.

தொடர்ச்சியாக ஆயுத பரிசோதனைகளையும் வலுமிக்க ஆபத்தான ஆயுத தயாரிப்புகளையும் மேற்கொள்ளும் தேசமாக ரஷ்யா விளங்குவது அமெரிக்காவுக்குசு மிக முக்கிய சவலாக அமைந்துள்ளது. ஜோ பைடனது காலமானது இராணுவ ரீதியில் ரஷ்யாவை எதிர் கொள்வதில் பாரிய நெருக்கடியொன்று தோன்றுவதற்கான காலமாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி அமெரிக்கா வலுவாக இருந்த பிராந்தியங்களில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. அத்தகைய பிராந்தியங்களில் ரஷ்யா இராணுவக் கூட்டுக்களையோ அல்லது அணிகளையோ உருவாக்கி நகர்த்தி வருகிறது.

ஏழாவது, மேற்காசியாவில் அமெரிக்காவுக்கு எழுந்துள்ள பாரிய சவாலாக, ஈரான், துருக்கி மற்றும் இஸ்ரேலின் அணுகுமுறைகளைச் சொல்லலாம். ஜோ பைடனுக்கு சவால் மிக்க களமாகவே இது அமையும். கடந்த நான்கு ஆண்டுகளும் ட்ரம்ப் பின்பற்றிய கொள்கைகளால் அதிக இழப்புக்களை அமெரிக்கா அடைந்திருக்கிறது. அதனை சரிசெய்வது இலகுவானதல்ல. 

அத்தகைய இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு நாடும் தனது இருப்பினை தக்கவைக்க வேண்டிய உபாயங்களை வகுத்துள்ளன. நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கி ரஷ்யாவின் நெருக்கமான நட்புறவுக்குள் இருப்பதுடன் இராணுவ ரீதியில் மிக நெருக்கமான தொடர்புகளை உருவாக்கியுள்ளது.

இவ்வாறே வெனுசுவெலா, வடகொரியா போன்ற நாடுகளது அணுகுமுறைகளும் காணப்படுகின்றன. வடகொரியாவுடனான அமெரிக்காவின் இராஜதந்திர ரீதியான தோல்வி, வரலாற்றில் மீளமைக்க முடியாத தோல்வியாகும். எனவே ஜோ பைடனுக்குரிய சவால்கள் இரட்டைப் பரிமாணம் கொண்டவை. ஒன்று உள்நாட்டு மட்டத்திலுள்ளவை. இரண்டு சர்வதேச மட்டத்திலானவை. இரண்டையும் இலகுவில் வெல்வது கடினமானதாகும். வெற்றி கொள்ளத் தவறுவாரானால் உலகளாவிய அமெரிக்க ஆதிக்கம் சரிவை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments