எவ்வாறு அமையப்போகின்றன ஜோ பைடனின் பொருளாதாரக் கொள்கைகள்? | தினகரன் வாரமஞ்சரி

எவ்வாறு அமையப்போகின்றன ஜோ பைடனின் பொருளாதாரக் கொள்கைகள்?

உலக வல்லரசாகிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கடந்த இருபதாம் திகதி பதவிப் பரமாணம் செய்து கொண்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளிவருமுன்பே தாமே வெற்றி பெற்றவராக அறிவித்துக் கொண்டவரும் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் தமது வெற்றியை எதிராளிகள் தட்டிப்பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமது ஆதரவாளர்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டு அமெரிக்க அரசவைக் கட்டடத்தை முற்றுகையிட்டு கெத்துக்காட்ட முயன்று மூக்கறுபட்டவருமான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி புளோரிடாவில் உள்ள தனது மாளிகையில் குடியேறி கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறு முன்பு விடுத்த அறிக்கையில் “இப்போது போகிறேன் மீண்டும் வருவேன்" என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது மகனோ லயன் கிங் படத்தில் வருவது போல கெட்ட சிங்கம் நல்ல சிங்கத்தை கூட்டத்தை விட்டு விலக்கி வைத்து விட்டதாகவும் நல்ல சிங்கம் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் கூறியிருக்கிறார். டோனால்ட் ட்ரம்ப் புதிய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட குறிப்பொன்றை வைத்துச் சென்றிருக்கிறார். அதன் உள்ளடக்கத்தில் " ஜோ உனக்குத் தெரியுமா நானே வென்றேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை ட்ரம்புக்கு எதிரான குற்றவியல் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் பிரேரணை விசாரணைக்கு வரும் எனவும் தெரிகிறது.

ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் பத்துக்கு மேற்பட்டோர் ஆதரவளித்தால் மட்டுமே அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட முடியும். இறுதி வாக்கெடுப்பின்போது செனட்டர்கள் பலர் பிரேரணைக்கு ஆதரவு வழங்க முன்வரக்கூடும் என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. குற்றவியல் பிரேரணை வெற்றி பெற்றால் ட்ரம்ப் அரசியலில் ஈடுபடமுடியாத நிலை உருவாகும். அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்காவின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் முரட்டுக் கோமாளியாக கருதப்படும் டொனால்ட் டரம்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

புதிய ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்று இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் பதினேழுக்கும் மேற்பட்ட முக்கியமான நிறைவேற்று உத்தரவுகளை அதிரடியாகப் பிறப்பித்திருக்கிறார். அவற்றுள் பல முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் நிறைவேற்றிய அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிறைவேற்று உத்தரவுகளை ரத்துச் செய்யும் உத்தரவுகளாகும்.

குறிப்பாக சீனச் சார்பாக செயற்படுகிறது எனக் குற்றஞ்சாட்டி உலக சுகாதார தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பாரிஸ் காலநிலை மாநாடு பற்றிய ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடான மெக்ஸிக்கோவுடனான சர்வதேச எல்லையில் சட்டவிரோதக் குடியேறிகள் உள்நுழைவதைத் தடுக்க நீண்ட மதில் சுவரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது. சில முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் ஆட்கள் உள்நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் சர்வதேசக் கடப்பாடுகளை மீறும் வண்ணம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை அமெரிக்காவின் நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகப் பார்க்கப்பட முடியும். அமெரிக்காவின் அரச கட்டடங்களுக்குள் நுழைய வேண்டுமானால் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் முகக் கவசத்தை அணிந்து கடமையாற்றுவதைக் காணமுடிகிறது. முன்னாள் ஜனாதிபதி முகக் கவசம் அணிவதை மறுத்துவந்த நிலையில் அவரது ஆதரவாளர்களும் முகக்கவசம் அணிய மறுத்தனர். இப்போது அது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் கோவிட் நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உச்சளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது.

புதிய ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் சீராகச் செயற்பட வேண்டுமானால் அதற்கு அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளில் எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் ஆதரவு மிக முக்கியமானது. அத்துடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை போன்ற விவகாரங்களில் தீவிரமான மாற்றங்களை சடுதியாக மேற்கொள்ளக்கூடிய ஏதுநிலைகளும் மிகக்குறைவு.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இலங்கையிலிருந்து சிலநூறு மைல்கள் தொலைவிலுள்ள தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் அரசியல்வாதியொருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிதரும் ஒரு விடயமாக இருந்தாலும் இலங்கையிலுள்ள சிலருக்கு அது வயிற்றில் புளியைக் கரைத்து விட்டுள்ளது.

இந்தியாவின் ஒரு குக்கிராமத்திலிருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுபான்மை இனப்பெண் உலக முதன்மை வல்லரசு நாடாகிய அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உயர முடியுமாயின் அதேபோல் ஒரு ஆபிரிக்க கறுப்பின பின்னணி கொண்ட பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியான வரமுடியுமாயின் அமெரிக்க ஜனநாயகம் உண்மையிலேயே போற்றப்பட வேண்டியது ஒன்றுதான். இலங்கை போன்ற நாடுகளில் அத்தகைய ஒன்றைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

ஜனாதிபதி ஜோ பைடனைச் சுற்றி இரு பலமான பெண்மணிகள் உள்ளனர். ஓருவர் முதற்பெண்மணியான கலாநிதி ஜில் பைடன். மற்றவர் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ். இருவருமே கல்வியறிவும் அரசியல் அறிவும் மிக்கவர்கள். ஜனாதிபதியை சிறப்பாக வழிநடத்தக் கூடியவர்கள். அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, பில் கிளின்டன் ஆகியோரின் ஆதரவும் அனுசரணையும் அவருக்குண்டு.

ஆட்சி மாற்றம் காரணமாக சீனாவுடனான அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளில் தலைகீழான மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ஆனால் வர்த்தகப் போட்டாபோட்டியில் சில விட்டுக் கொடுப்புகள் ஏற்பட இடமுண்டு. அத்துடன் உலக நாடுகளுடனான வர்த்தக உறவுகளை புதுப்பித்துக் கொள்வதில் புதிய அரசாங்கம் கரிசனை காட்டும்.

மேலும் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் விட்டுப்போன சர்வதேச உறவுகளை மீட்பதிலும் அக்கறை கொள்ளும் என நம்பலாம். கோவிட் நோய் காரணமாக சிதைந்து போயுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதும் வருமானத்தைப் பெருக்குவதும் முக்கிய நோக்கங்களாக இருக்கும். உடனடியாக ஒரு சலுகைப்பொதியை அறிமுகப்படுத்தி தொழில் இழந்து போயுள்ளவர்களுக்கு உதவும் அதேவேளை நோய்க்கட்டுப்பாட்டின் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர புதிய அரசாங்கம் முயற்சி செய்யும்.

டொனால்ட் ட்ரம்ப் செய்தது போல பொருளாதாரத்தை மூடிவைத்து உள்ளூரில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதற்கு பதிலாக உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து பயணிக்க புதிய அரசாங்கம் முயற்சி செய்யலாம். அவ்வாறு செய்தால் மாத்திரமே அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சியடைய முடியும். அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சியடைந்தால் மாத்திரமே உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மீட்சியடையும். அவ்வாறான ஒரு பொருளாதார மீட்சியை சீனாவால் ஏற்படுத்த முடியாது. காரணம் சீனாவின் பிரதான ஏற்றுமதி நாடாக இப்போதும் அமெரிக்காவே உள்ளது என்பதனாலாகும்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments