தொப்புள் கொடி உறவை துண்டாடும் பாக்குநீரிணை! | தினகரன் வாரமஞ்சரி

தொப்புள் கொடி உறவை துண்டாடும் பாக்குநீரிணை!

மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டின் வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பது முடிவின்றித் தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்பரப்புக்குள் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவமானது, இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி இரவு வேளையில் நெடுந்தீவின் வடமேற்கு பகுதியில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, 8 கடல் மைல் தொலைவுக்கு வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்திய மீனவர்களின் 50 இற்கும் அதிகமான இழுவைப் படகுகள் இவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

அந்த வேளையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்ய இலங்கை கடற்படையினர் முயற்சித்துள்ளார்கள். பல படகுகள் தப்பிச் சென்ற நிலையில், இந்திய மீனவர்களின் ஒரேயொரு படகு மாத்திரம் வேகமாக வந்து இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகுடன் மோதியுள்ளது. இது ஒரு விபத்து ஆகும்.

இந்த விபத்தினால் குறித்த படகு கடலில் மூழ்கியதுடன், அதிலிருந்த நான்கு மீனவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மீனவர்களின் சடலங்களை கடற்படையின் சுழியோடிகள் மீட்டிருந்ததுடன், இச்சடலங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய சம்பவம் இடம்பெற்று இரண்டு தினங்களில், வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

வடமராட்சி, சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவப் படகொன்றில் இருந்தவர்கள், அங்கிருந்த இலங்கை மீனவர்களின் 20 இற்கும் அதிகமான வலைகளை அறுத்துச் சென்றிருப்பதுடன், வடமராட்சி மீனவர்களின் படகுகளை நோக்கி கற்களை வீசி தாக்கியிருப்பதுடன், பொல்லுகளாலும் தாக்க முயற்சித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் இந்த வன்முறைச் சம்பவத்தால் 4 இலட்ச ரூபாவுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் சார்பில் தகவல் தந்த சுப்பர்மடம் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தே.தேவதாசன் தெரிவித்தார்.

இச்சம்பவம் ஒருபுறமிருக்க, இதற்கு முன்னதாக நெடுந்தீவு கடற்பரப்பில் நடந்த சம்பவம் காரணமாக தமிழகத்தில் நான்கு மீனவர்கள் உயிரிழந்து விட்டனர். தமிழக கரையோர மாவட்டங்களில் அந்த நான்கு குடும்பங்கள் உழைப்பாளிகளை இழந்துள்ளன. உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அக்குடும்பங்களின் வருமானமும் இழக்கப்பட்டுள்ளது.

இவை போன்று சொத்து இழப்புக்கள், உயிரிழப்புக்கள் என்பன மாறி மாறி இரு பக்கங்களிலும் இடம்பெறுகின்ற துயரம் தொடர்ந்து வருகிறது. 2009ஆம் ஆண்டு வரை நிலவிய நீண்ட கால யுத்தத்தினால் இலங்கையின் வடபகுதி மீனவர்களால் கடலுக்கு தொழிலுக்காகச் செல்ல முடியாத நிலையிருந்தது. இதனால் தமிழக மீனவர்கள் எதுவித கட்டுப்பாடுமின்றி இலங்கைக்  கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடியில் ஈடுபட்டனர்.

யுத்தம் முடிவுற்ற பின்னரும் அத்துமீறிய அந்நடவடிக்கையை இன்னும் தொடர்வதே தமிழக மீனவர்களின் எண்ணமாக இருக்கின்றது.
இலங்கை மீனவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து அவர்கள் சற்றும் சிந்திப்பதாக இல்லை. மற்றொரு நாட்டு எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பது தவறென்றும் அவர்களுக்குப் புரியவில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட போதும் இன்னமும் கச்சதீவு தமக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டிலேயே தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக தங்களது கடல் எல்லையையும் தாண்டி வந்து இலங்கைக் கடற்பரப்புக்குள்  மீன்பிடியைத் தொடர்கின்றனர்.

மறுபுறத்தில், யுத்தம் முடிவடைந்த பின்னரே வடபகுதி மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் சென்று சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில், தமிழக மீனவர்கள் தமது வழமையான அத்துமீறிய சட்டவிரோத இழுவைப்படகு மீன்பிடியைத் இன்னும் தொடர்வது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.

இரு நாட்டு மீனவர்களுக்குமிடையே நடுக்கடலில் இடம்பெறுகின்ற முறுகல்களால் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படுகின்றது. வடபகுதித் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்குமிடையே இதனால் கசப்புணர்வு தோன்றி விடக் கூடுமென்பதே தமிழ் உணர்வாளர்களின் கவலையாக உள்ளது.

1983 ஆம் ஆண்டு இனவன்முறை இடம்பெற்ற காலத்தில் இருந்து வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பாதுகாப்புக்காகவும், நலன்களுக்காகவும் தமிழ்நாடு குரல் கொடுத்து வந்ததை இலங்கைத் தமிழர்கள் ஒருபோதுமே மறந்து விட முடியாது. இலங்கையில் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கியதிலிருந்து தமிழர்களை தொப்புள் கொடி உறவுகளாக எண்ணி ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டவர்களும் தமிழக மக்களென்பதை மறக்க இயலாது.

இந்நிலையில் தமிழக மீனவர்களின் ஊடுருவல் காரணமாக உருவாகியிருக்கும் பதற்ற நிலைமையானது இலங்கை- இந்திய தமிழர்களுக்கிடையே கசப்புணர்வைத் தோற்றுவித்து விடக் கூடாதென்பது இருநாட்டு தமிழ் உணர்வாளர்களின் கவலையாக இருக்கின்றது.

அதேசமயம் தமிழக மீனவர்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதையடுத்து, பொறுமையின் விளிம்புக்குச் சென்றுள்ள வடபகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களைத் தடுக்க தாங்களே போராடப் போவதாகக் கூறியுள்ளனர். மறுபக்கத்தில் கடற்படையினரின் ஒத்துழைப்பையும் எமது மீனவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். மீனவர்கள் மாத்திரமன்றி தமிழ் அரசியல்வாதிகளும் கடற்படையினரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதை சில சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற மீன்பிடி அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வடபகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடற்படையினருக்கு அதிகாரத்தை வழங்கியாவது தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கொரோனாவுக்கு முன்னரான காலப் பகுதியில் கடற்படையினரின் கடினமான ரோந்து நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் அத்துமீறல் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும், தற்பொழுது நிலைமை மோசமாகியுள்ளது என்பது அவர்களின் கருத்தாகவிருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறுகலான கடற்பகுதியொன்றே காணப்பட்டாலும் இலங்கையின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவது எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அது மாத்திரமன்றி இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி அவர்கள் மேற்கொள்ளும் 'பொட்டம் ட்ரோலிங்' எனப்படும் மீன்பிடி முறை இலங்கையில் தடை செய்யப்பட்ட முறையாகும்.

அதாவது பாரிய வலையொன்று கடலின் அடிப்பகுதி வரை செலுத்தப்பட்டு நீண்ட தூரத்துக்கு இழுத்துச் செல்லப்படும். இவ்வாறு இழுத்துச் செல்லப்படும் போது மீன்களின் இனப்பெருக்கத்தின் உறைவிடமாகக் கருதப்படுகின்ற பவளப்பாறைகள் அழிக்கப்படுகின்றன. அதேசமயம் சிறிய மீன்குஞ்சுகள் உட்பட அனைத்து கடல் வளங்களும் வலையுடன் இழுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகின்றன. இவ்வாற தொடர்ச்சியாக இவ்வாறான சட்டவிரோத செயல் தொடர்வதால் மீன்கள் பெருகுவதற்கான வளம் குறைந்து விடும் என்பது கடல்சார் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக உள்ளது. தமிழக மீனவர்கள் தங்களது நாட்டு கடல் வளத்தை அழித்து விட்டு தற்பொழுது எமது கடல் வளத்தை அழிப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டியுள்ளனர் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதற்காக தமிழக மீனவர்களைக் குறை கூறுவதில் எவ்வித பயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் உள்ள கடற்றொழிலாளர்களைப் பொறுத்த வரையில் 80 வீதத்துக்கும் அதிகமான படகுகளின் உரிமையாளர்கள் பாரிய வியாபாரிகளாகவும், அரசியல் பின்புலமுள்ள நபர்களாகவுமே காணப்படுகின்றனர். தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக நாட்கூலிக்குப் பணியாற்றும் அப்பாவி மீனவர்களே இவ்வாறு எல்லை தாண்டி வருகின்றனர்.

அதிக மீன்களைப் பிடித்தால் சற்று அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்பதே அவர்களின் நோக்கமாகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமை மற்றும் இந்தியாவை விட பரப்பின் அளவில் சிறியதாக இலங்கை காணப்படுவதால் பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளத் தேவையில்லையென அவர்கள் கருதுகின்றார்களோ தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் இதனால் பாதிக்கப்படப் போவது இருநாட்டு மீனவர்களுக்கிடையிலான உறவுகளும் அவர்களின் வருமானங்களுமே ஆகும். பெரும் எண்ணிக்கையான இழுவைப் படகுகள் சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடியில் ஈடுபடுகின்றன என்பது செய்மதிப் படங்கள் ஊடாக இந்தியாவின் மத்திய அரசுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ள போதும் இதனைத் தடுப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. இழுவைமடி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்றுத் தொழிலுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான ஒதுக்கீடுகளையோ அல்லது திட்டங்களையோ அவர்கள் முன்வைத்திருப்பதாகத் தெரியவில்லை.

மறுபக்கத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை எப்பொழுதும் தமது உள்ளக அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கும் தமிழக அரசியல்வாதிகள் மீன்பிடி விவகாரத்தை எக்காலமும் தீர்க்காத பிரச்சினையாக வைத்திருப்பதற்கு முயற்சிப்பதாகவே தெரிகிறது. அவ்வப்போது இதனை வைத்து தமது வாக்கு வங்கிகளைத் தக்கவைக்க பிரயத்தனங்களை மேற்கொள்வதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது,

அதேநேரம், பிராந்தியத்தில் 'பிக் பிரதர்' ஆகக் காணப்படும் இந்தியாவை இவ்விடயத்தில் பகைத்துக் கொள்ள இதுவரை காலமும் அதிகாரத்தில் இருந்த இலங்கை அரசுகளும் விரும்பவில்லை. இதனாலேயே இராஜதந்திர ரீதியில் இப்பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்க்க அவ்வப்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

தற்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘ஒன்லைன்’ ஊடாக தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார். அண்மையில் இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களிலும் இவ்விவகாரம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தடைப்பட்ட பேச்சுக்களைத் தொடர்வதற்கும் இதில் இணங்கப்பட்டது.

இராஜதந்திர மட்டத்தில் எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டாலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலமே இப்பிரச்சினையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

பி.ஹர்ஷன்

Comments