கடற்படை கப்பலில் மோதுண்டு பலியான 4 தமிழக மீனவர்களின் சடலங்கள் ஒப்படைப்பு | தினகரன் வாரமஞ்சரி

கடற்படை கப்பலில் மோதுண்டு பலியான 4 தமிழக மீனவர்களின் சடலங்கள் ஒப்படைப்பு

இலங்கை கடற்படைக் கப்பலில் மோதி பலியான 04 தமிழக மீனவர்களான மெசியான், செந்தில்குமார், சாம்சன், நாகராஜ் ஆகியோரின் சடலங்கள் இந்திய கரையோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் நேற்றுக்காலை ஒப்படைக்கப்பட்டன.

மரணமான தமிழக மீனவர்களின் சடலம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைகள் நிறைவடைந்ததும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
04 மீனவர்களினதும் பிரேத பரிசோதனைகள் நிறைவுற்றதையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

அதனையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலத்தில் உத்தியோகபூர்வமாக சடலங்கள் கையளிக்கப்பட்டன. யாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகரால த்தின் வேண்டுகோளுக்கமைய சடலங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைக்கான பொறுப்பை இலங்கை கடற்படை ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து 04 பேரின் சடலங்களும் நேற்றுமுன்தினம் இரவே காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டன.

அந்த சடலங்களையும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் 04 பேரின் உடல்களையும் கரையோர காவல்படைக்குச் சொந்தமான படகில் எடுத்துக்கொண்டு நேற்றுக் காலை 7.20 மணிக்கு சர்வதேச கடல் எல்லைக்கு புறப்பட்டனர்.

அவர்களின் உடல்களை பெறுவதற்காக கோட்டைப்பட்டினத்திலிருந்து 02 விசைப்படகுகளில் 10 மீனவர்கள் வந்திருந்தனர். எனினும் இலங்கை கடற்படையினர் உத்தியோக பூர்வமாக இந்திய கரையோர காவல் படையினரிடமே ஒப்படைத்தனர்.

நேற்றுக் காலை சுமார் 10.00 மணியளவில் இந்திய கரையோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் 04 பேரின் சடலங்களையும் கரையோர காவல்படைக்குச் சொந்தமான ‘அதுல்யா’ (ICGS ATULYA) என்ற கப்பலிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களின் சடலங்கள் கோட்டைப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தயார் நிலையில் 04 அமரர் ஊர்தி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஏற்றி மீனவர்களின் உடல்கள் இராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

ஒப்படைக்கப்பட்ட மீனவர்களின் சடலங்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து கப்பலில் எடுத்து வரப்பட்டு இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் 18 மைல் தூரம் மணமேல்குடிக்கும், 40 மைல் தூரம் இராமேஸ்வரத்திற்குமிடையே இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

கே.அசோக்குமார்

 

Comments