தடுப்பூசி ஏற்றல்; அடுத்த வாரம் பரீட்சார்த்த நடவடிக்கைகள் | தினகரன் வாரமஞ்சரி

தடுப்பூசி ஏற்றல்; அடுத்த வாரம் பரீட்சார்த்த நடவடிக்கைகள்

கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கு முன்னர் பரீட்சார்த்த நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

பெப்ரவரி நடுப்பகுதியில் இந்த தடுப்பூசி இலங்கை மக்களுக்கு கிடைக்கப் பெறுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார். அத்துடன், ஆரம்பகட்டமாக இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமான மக்களுக்கு கொவிட்19 தடுப்பூசி கிடைக்கப் பெறுமெனவும் மேலதிகமாக 30 சதவீத தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படுமெனவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே தடுப்பூசி பரீட்சார்த்த நடவடிக்கை எதிர்வரும் வாரம்முதல் நடைபெறவுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தெரிவுசெய்யப்பட்ட நபர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டு முதல் பரீட்சார்த்து
நடவடிக்கைகள் நடைபெறும். புதிய தடுப்பூசிகள் செலுத்தப்படும்போது அவை சில சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ஆகவே, முதல்கட்டமாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு இது செலுத்தப்படும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோயற்றவர்களாக உள்ளவர்களுக்கே தடுப்பூசிகள் முதல் செலுத்தப்படும்.

தடுப்பூசிகளை எவ்வாறு செலுத்துவது, அதற்கான நபர்களை எவ்வாறு தெரிவுசெய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பரீட்சார்த்தமாக செய்யப்படும்.

என்றாலும் முதலில் கொண்டுவரப்படவுள்ள தடுப்பூசி யாதென இன்னமும் எமக்கு அறிவிக்கப்படவில்லை. அதன் பிரகாரம் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெறும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments