கூவ ஆற்றில் குட்டி வாத்து | தினகரன் வாரமஞ்சரி

கூவ ஆற்றில் குட்டி வாத்து

தலைநகரில் மாலை நேரம்... ஸ்டீபன் அவனது மோட்டார் சைக்கிளை மெதுவாக எகனொமி வேகத்தில் 'மெரைன் ட்ரைவ்' வழியே பெட்டா நோக்கி முறுக்கிக் கொண்டு சென்றான்... மண்ணரிப்பைத் தடுக்க போடப்பட்ட பாறாங்கற்களின் மேல் கடலலைகள் ஓங்கி அடித்து மெரைன் ட்ரைவ் முழுதும் உப்புக் காற்றை வீசிக் கொண்டிருந்தன.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீதி வெறிச்சோடிப்போய்க் கிடந்தது.ஓர் அழகான மாலை நேரம்.. ஆனால், ஸ்டீபன் மனத்தில் அறவே நிம்மதி இல்லாததால், முகம் இருண்டு போய் இருந்தது. மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்த அவனின் கண்கள் அவன் பார்ப்பவைகளுக்கெல்லாம் கருப்புத் திரை விரித்தது. அவனது அடித்தொண்டை வலி தந்து கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். அழாமல் அடக்கி வைத்திருப்பதாலே வலிக்கின்றது என்று அவனுக்குத் தெரியும். இருந்தும் அழாமலே சைக்கிள் ஓட்டினான்.

பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கோல் பேஸ் எல்லாம் தாண்டி கடைசியாக பெட்டா வந்தடைந்தான். அவன் வழமையாக சிகரட் வாங்கும் ஹோட்டலிற்குச் சென்று வழமைக்கு மாறாக ஒரு முழு சிகரட் பக்கற்றும் ஒரு லைற்றரும் வாங்கிக்கொண்டு.. லேக் ஹவுஸின் பின்பக்கமாய் உள்ள subwayல் போய் அமர்ந்தான். அந்த subway இல் அமர்ந்து கதைத்துக்கொண்டிருக்க பல பென்ச்சுகள் போடப்பட்டிருந்தாலும், அதற்கு முன்னால் subway இனூடாக செல்லும் சாக்கடையின் நாற்றத்தை சகிக்காததால், பெரிதாக எவரும் அங்கே இருப்பதில்லை; அமர்வதில்லை. ஆனால், தன் இதயமே இரத்த ஓட்டத்தையெல்லாம் மறந்து சாக்கடை போல் ஓடிக்கொண்டிருக்க, இந்த நாற்றமெல்லாம் ஸ்டீபனின் மதிக்கு அவ்வளவாக ஏறவில்லை. தனது பைகளிற்குள் கை விட்டுப் புதிய சிகரட் பெட்டியையும் லைற்றரையும் எடுத்து.. அதிலிருந்து ஒரு சிகரட்டைப் பற்ற வைத்து புகை இழுத்து வானம் நோக்கி ஊதினான்... அவன் ஊதும் விதத்தில் தெரிகிறது இஃது இவனுக்கொன்றும் புதிதில்லையென... அவன் சலித்த மனத்திற்குள் சில ஞாபக ஓட்டங்கள், அவன் முன்னால் செல்லும் கூவம் போல் ஓடியது.. ஒவ்வொரு புகை இழுவையிலும் ஒவ்வொரு நினைவு நின்று கொன்றது.  

" ஒரு காலத்துல நான் எப்பிடி இருந்தேன்.. இப்ப எப்பிடி ஆயிட்டேன்.. இப்பிடியெல்லாம் யோசிக்கிற அளவுக்கு எனக்கென்ன அப்பிடி வயசாயிட்டா?.. வெறும் இருபது.. அப்பிடி இருந்தும் மனம் நிம்மதி இல்லாம வாழ்க்கைய யோசிச்சு சலிச்சு சலிச்சு சாக்கடையா ஓடுது"..... அவன் கண்கள் கொஞ்சமாகத்தான் விரிந்திருந்தன.. அதில் கண்ணீர் வெளியே விழும் கடைசி தறுவாயில் உள்ளது.. அவன் அழவில்லை..... ஐந்து நிமிடத்திற்குள் அடுத்த சிகரட்... அதையும் பற்ற வைத்து ஊதினான்..ஊதித்தள்ளினான் சங்கிலித் தொடராக!  

"என்கிட்ட எவ்வளவோ கெட்டித்தனம் இருந்தும், எத எடுத்தாலும் செய்யக்கூடிய இயலுமை இருந்தும், படிப்புல நான் முன்னிலையில இருந்தும்.. எ​ைதயும் என்னால முழிசா உணர முடியலயே.. என்னதான் நான் செய்தாலும் ஏதோ ஒரு கொற என் தை்துக்குள்ள ஒட்டிக் கெடக்கு... இதெல்லாம் ஏன்??.. சுயமாக ஒரு முடிவெடுக்கத் தெரியாத தறுதலையாயிட்டனே.. ஏதோ ப்ரோங்ராம் பண்ணின கம்ப்யூட்டர் போல எண்ட பொழப்பு ஓடுது.. ஏன் இப்பிடி இருக்கன்... எனக்குத் தெரியும்... ஏன்னா, எல்லாம் எங்க அப்பா, அம்மாவ சொல்லணும்... ஒரு மிஷினாவே வளந்துட்டன்ல எப்பிடி முடியும்?.. என்ன மிஷினாவே வளர்த்ததால என் உணர்ச்சிகளுக்கெல்லாம் ஒரு பைசா மதிப்புமில்ல... எம் மனசுல மங்கிக் கெடக்குற எத்தனையோ சம்பவங்கள் என் மனச துளைச்சி துளைச்சி ஒண்டுக்கும் ஒதாவத ஓட்ட வீடா மாத்திடிச்சு....எனக்கு நாலோ அஞ்சோ வயசுன்னு நெனைக்கன்.. சித்தப்பாட வீட்டுல வருசத்துல ஒரு மொறயாச்சும் குடும்பமெல்லாம் ஒண்டு கூடி சாப்பாடும் பாட்டும் என்னு ஒரே கலகலப்பா இருக்கும்.. பொதுவா வாறவங்க எல்லாரும் காலையில வந்தாங்கன்னா ராத்திரி தங்கி நின்னுதான் போவாங்க.. அப்படி ஒரு கொண்டாட்டம்....ஒரு நாள் இருக்கும்.. எங்க சித்தப்பா எங்க வீட்டுக்கு வந்து நாளைக்கி சாப்பாடு போடப்போறதாவும் அதுக்கு மரக்கறி வாங்கும் பொறுப்ப நீயே எடுத்துக்கோன்னு எங்கப்பாட்ட சொல்லிட்டு போகவும் வந்திருந்தாரு.. டீ குடிச்சிட்டே இத சொல்லிட்டிருந்தவரு  

"எங்க ஏன் மருமகன்"  

என்னு கேக்க..  

எங்கப்பா  

"அவன் பக்கத்து வீட்டுக்கு விளையாட போயிருக்கான்"   என்னு சொல்லி எங்க சித்தப்பா மூலம் கெடைக்க இருந்த ஐம்பது ரூபாவுக்கு ஆப்படிச்சாரு.. நான் எங்கயுமே விளையாடப் போகல்ல போகவும் முடியாதே.. என்னயத்தான் உள்ளேயே பூட்டு போட்டு மூடிப்படிக்க வச்சுட்டாங்கல்ல.. நாலு வயசுலயே...  

அப்பிடி படிப்பு.. இவிங்க பேசுற எல்லாத்தையும் நான் கதவுல காது வச்சே கேட்டுட்டிருந்தன்.. சரி அந்த ஐம்பது போனாப் போகுது நாளைக்கு சாப்பாட்டுல எல்லாத்தைய புடிச்சுக்குவம்னு அதையெல்லாம் மறந்து நானும் விட்டுட்டன்.. .. நாளைக்கு விடிய முந்தியே எழுந்துட்டன்.. பிறகு அம்மா படிக்கச் சொல்லுவாளேன்னு மறுபடியும் படுத்துட்டன்.. எங்கப்பா ஏதோ மரக்கறி சாப்பாடுன்னு முணு முணுக்க தூங்கிருந்த நான் எழுந்து ஓடி அவர் முன்னால அடிக்கடி கிராஸ் ஆனன்.. அவர் கூடவே மார்கட்டுக்கு போக ஆசப்படுறன் என்னு தெரிஞ்சும் என்ன பாக்காமலயே விட்டுட்டுப் போயிட்டாரு.. அந்த நேரத்துல வலிக்க தொடங்கிய தொண்ட.. இப்பவுமே வலிச்சுட்டு இருக்கு.. அது மட்டுமா அந்த சாப்பாட்டுக்கே நான் சாப்பிடுற நேரத்துல தான் போனேன்... ராத்திரியும் நிக்கல்ல சாப்பிட்ட கையோட என்னய சைக்கிள்ள போட்டு வீட்டுக்குத்தான் ஓட்டினாரு

எங்கப்பா....அப்போல்லாம் நான் சின்னவன் என்டதுல எனக்கு எதுவுமே புரியல்ல.. போகப் போகத்தான் புரிஞ்சுது.. நான் கெட்டுப்போயிடுவேன்னு பயத்துலதான் இப்படி செஞ்சிருக்காங்க.. இப்பவும் அது தொடந்துகிட்டே இருக்குது.. ஒவ்வொரு வருசமும் அந்த சாப்பாடு பகலோடையே எனக்கு முடிஞ்சிடும்..இதையெல்லாம் நெனைக்க சிரிப்பா வருது.... எம்மேல எங்க அப்பா அம்மா நம்பிக்க வச்சதே இல்ல.. எதுக்கெடுத்தாலும் கொறஞ்சது ஏழாயிரம் கேள்வி இருக்கும்..அது மட்டுமா ஏதாவது நான் இஷ்டப்பட்டு செய்யப் போனாலும் அத ஒத்துக் கொண்டதில்லை.... ஏன்னா நான் கெட்டுப்போயிடுவேன்னு அப்பிடி பயம்.. நான் முன்ன பின்ன கூட கெட்டுப் போற அளவுக்கு ஏதும் செஞ்சதில்லை.. அக்கறை காட்டுறதா நெனச்சு என்ன அழிச்சதுதான் மிச்சம்.."  

மாலை நேரத்தின் கடைசிப் பகுதியில் சூரியன் எரிந்து கொண்டிருந்தான்... மற்றொரு சிகரட்டை எடுத்தான்... பற்ற வைத்தான்.. அவனின் முன்னால் உள்ள சாக்கடையில் சில வாத்துகள் நீந்திக் கொண்டிருப்பதைக் கன நேரமாக பார்த்துக் கொண்டிருந்தான்... அதைப் பார்த்து சிரித்துக்கொண்டே புகை ஊதினான்..  

"எனக்கு மட்டுந்தான் இந்த நெலமையான்னு யோசிச்சேன். ஆனா அப்பிடி இல்ல போல.. இதோ இந்தச் சாக்கடையில நீந்துகிற வாத்துதான் நான். இந்தச் சாக்கடை தான் என் வாழ்க்கை.. இந்த வாத்து இந்தக் கொழும்புல எவ்வளவுதான் தேடினாலும் நல்ல தண்ணியில நீந்த முடியாது.. ஏன்னா இங்க நீந்தித்திரிய நல்ல தண்ணியே இல்ல.. சரியா மீனயோ பூச்சியையோ தின்னிட்டிருக்க வேண்டியது.. இந்த சாக்கடையில மலத்த அள்ளித் தின்னிட்டிருக்கு.. அது நெனச்சாலும் வேற எதுவுமே தின்ன முடியாது.. இ​ைதப்பதை்தான் நான் வாழ்ந்துட்டு இருக்கன்... நான் எப்பிடித்தான் நெனச்சாலும் நான் இவங்களோட வாழ்ற வாழ்க்கைய விட்டு போகவே முடியாது.. ஆனா, நான் காத்துட்டு இருக்கன்.. எனக்கு ஒரு நல்ல சிறகு மொளைக்கிற வரைக்கும் காத்துட்டு இருக்கன்.. அது மொளச்ச ஒடனேயே இந்த மலத்தையெல்லாம் அள்ளி எறிஞ்சி கூவத்த விட்டுட்டு வானெல்லாம் பறந்து நல்ல தண்ணி தேடிப்போய் சந்தோஷமா நீந்துவன்.."  
இலேசாய் இருள் சூழ்ந்து subway விளக்குகள் எரியப்பட்டன...ஞாயிற்றுக்கிழமை இரவின் அமைதி ஸ்டீபனின் இருண்ட மனத்திற்கு ஆறுதலாய் அமைந்தது...இதமாய் இருந்தது. ரூமிற்குச் செல்வோமா என்று யோசித்தவன்.. எஞ்சியிருக்கும் இரண்டு சிகரட்டைப் பற்றிவிட்டுச் செல்வோமென்று இருந்துவிட்டான்....

வாழ்க்கையில் எவ்வளவுதான் மங்கலகரமான நிகழ்வுகள் நடந்தாலும் கெட்டதை மாத்திரமே நம் மனம் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ளும்.. அதுதான் யதார்த்தம்... அப்படி ஒரு சில நிகழ்வைப் பற்றி நாம் சிந்திக்கும் போது எம் சந்தோஷத்தையெல்லாம் அஃது ஒதுக்கி விடும்.. ஆனால், ஸ்டீபன் வாழ்க்கையில் சோகமானதே அதிகம் நிகழ்ந்ததால், அஃது அவனுக்குப் பழகிப்போயிருந்தது... பென்ச்சின் மேல் காலை வைத்துக்ெகாண்டு இருந்து தலையை பின்னே தொங்கப் போட்டவாறு வானத்தைப் பார்த்துக் கொண்டே புகையை ஊதினான், ஸ்டீவன்.

வதாவதன்

Comments