பொத்துவில் - பொலிகண்டி அல்ல; பொத்துவிலிலிருந்து பொல்காவலையாக மாற்றும் போராட்டங்களே அவசியம்! | தினகரன் வாரமஞ்சரி

பொத்துவில் - பொலிகண்டி அல்ல; பொத்துவிலிலிருந்து பொல்காவலையாக மாற்றும் போராட்டங்களே அவசியம்!

சுதந்திர தினத்தன்று (04.02.2020) வட்டுக்கோட்டையில் ஒரு முதியவர் ஒரேயொரு கத்தரிக்காயை 90 ரூபாய்க்கும் ஐம்பது கிராம் புளியை 200 ரூபாய்க்கும் 50 கிராம் பச்சை மிளகாயை 50 ரூபாய்கும் வாங்கிக் கொண்டு செல்வதைக் கண்டேன். அதற்கு மேல் வாங்குவதற்கு அவருக்குக் கட்டுப்படியாகாது.

அந்தளவுக்கு ஒவ்வொரு பொருளும் உச்சவிலையிலிருந்தன. ஆனால், அவர் வாங்க வந்தது இதையும் விட அதிகமாக. அதற்கு அவருடைய கொள்வனவுச் சக்தி – வருமானம் - இல்லை.

திரும்பி வரும் வழியில் இயக்கச்சியில், தன்னுடைய வீடிருந்த காணியைத் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார், காமாட்சி அக்கா. அந்தக் காணியில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் படையினர் நிலை கொண்டுள்ளனர். அவரோ இன்னும் வேறு யாருடையதோ வீட்டில் தற்காலிகமாகக் குடியிருக்கிறார்.

இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபோது, நெஞ்சிலும் தலையிலும் அடித்துக் கதறிக் கொண்டிருந்தனர் கறுப்பு உடையணிந்த முதிய தாய்மார். “எங்களுடைய பிள்ளைகள் எங்கே” என்று கதறும் குரல் காதை நிறைத்தது.

தொடர்ந்து வந்த செய்தியில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான நடை ஊர்வலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து சென்றனர். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்படியொரு இணைவு தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிகழ்ந்திருப்பது தெரிந்தது. எல்லோரும் அரசாங்கத்தைக் கண்டித்துச் சென்றனர்.

இதற்கடுத்ததாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 100 க்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்த காட்சி போனது. அதில் எந்த அரசியற் கைதிகளுக்கும் விடுதலை கிடைத்திருக்கவில்லை. மேலும் கொவிட் 19 தொற்றினால் 700 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். மூவர் மரணமடைந்ததாகவும் சொல்லப்பட்டது. ஒரு பெருமூச்சோடு இரவு படுக்கைக்குச் சென்றேன்.

நெருக்கடி நிலையில் நாடிருப்பதாகத் தோன்றியது. இது யுத்த காலத்தையும் விட மோசமான நிலையாகும்.

உண்மையில் யுத்தம் முடிந்தபோது பலரும் எதிர்பார்த்தது, நாட்டில் இனி அமைதி நிலை தோன்றி விடும். பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு மீளும். அரசியற் கொந்தளிப்புகளும் குழப்ப நிலையும் தணிந்து விடும். சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நீங்கி, சுமுக நிலை உருவாகும். அரசியல் தீர்வு எட்டப்படும். வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் நீங்கும் அல்லது குறையும் என்றே.

ஆனால், நடந்திருப்பதும் நடந்து கொண்டிருப்பதும் வேறு. இதற்கு மாறானது.

யுத்த காலத்திலிருந்ததையும் விட மோசமானதாக இலங்கைச் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியும் முரண்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக யுத்த காலத்தில் முஸ்லிம் சமூகமும் மலையக மக்களும் அரசாங்கத்துடன் அல்லது ஆட்சியாளர்களுடன் ஒரு இணக்க நிலையையே கடைப்பிடித்திருந்தனர்.

இன்றோ இவர்கள் அரசாங்கத்துக்கு எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

2015 இல் இருந்த அரசாங்கத்தோடு சம பங்காளிகளாக தமிழ்த்தரப்பு இருந்தது. ஆனால், தமிழ் மக்கள் காண்பித்த அந்த அரசியல் நல்லுறவும் இணக்கப்பாடும் பொருளற்று உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. பதிலாக அவர்கள் தொடர்ந்தும் அந்நியர் என்ற நிலையில், தோற்கடிக்கப்பட்டோர் என்ற வகையில் அவர்கள் நோக்கப்படுகின்றனர். அப்படியே கையாளப்படுகின்றனர். இதனால் அவர்கள் மறுபடியும் அரச எதிர்ப்பு மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு தங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வும் நீதியும் கிடைக்கும் என்பதற்கு மாறாக இந்தியா, அமெரிக்கா, ஐ.நா என்று வெளிச் சக்திகளிடம் தீர்வையும் நியாயத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.

இதேவேளை ஐ.நா, அமெரிக்கா, இந்தியா, சீனா எனப் பல்வேறு தரப்பினர்களுடைய வெளி அழுத்தங்களும் தலையீடுகளும் வலுவடைந்துள்ளன. பொருளாதார நெருக்கடி உச்சமைடைந்துள்ளது. உள்ளுர் உற்பத்தியைப் பெருக்கி இதைச் சரிப்படுத்திவிடலாம் என்று அரசாங்கம் சிந்திக்கிறது.

ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்காமல், அவற்றின் விலையைக் குறைக்காமல், மக்களின் வயிற்றுப் பசியைப் போக்காமல் எந்த அபிவிருத்தியையும் செய்து விட முடியாது. பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடும் என்பதற்கும் அப்பால் பதினைந்தும் போய் விடும் என்பதே உண்மை. இதற்குப் பதிலாக 27 அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்குறைப்புச் செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இது அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சொல்கிறார்.

அப்படியென்றால் மூன்று மாதங்களுக்குள் நிலைமை சீராகி விடுமா? பொருளாதாரத்தில் மேம்பாடு கிட்டி விடுமா? என்று கேட்கிறார்கள் சனங்கள்.

அறுவடை செய்யும் நெல்லை காய வைப்பதற்கு முடியவில்லை. அதற்குரிய களங்களுமில்லை. களஞ்சியமுமில்லை என்று வீதி நீளத்துக்கும் நெல்லைப் பரப்பி வைத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

கூடுதலான நெல் உற்பத்திப் பிரதேசங்களில் ஆண்டுக்கு ஒரு களஞ்சியத்தை நிர்மாணித்தாலே விவசாயிகளின் நெருக்கடி தீர்ந்திருக்கும். அபிவிருத்தி என்பது தேவைகளைப் பகுப்பாய்வு செய்து, சரியாகத் திட்டமிட்டு முறையாகச் செய்தாலே வெற்றியளிக்கும். இல்லையெனில் அது குறைவிருத்தியாகவே போய் முடியும்.

ஏறக்குறைய இந்த நிலைதான் இலங்கையில் உள்ளது. அதனால்தான் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கத்தரிக்காய், பாவற்காய், மஞ்சள், புளி போன்ற சமையலுக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாத அளவுக்கு விலை ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது.

உண்மையில் இந்தப் பொருட்களை இப்படி இந்தளவு அதிகரித்த விலைக்கு விற்க வேண்டிய தேவை என்ன? நியாயம் என்ன? இவற்றின் உற்பத்திச் செலவு இந்தளவுக்கு ஒரு போதுமே இருக்காது என்பது அனைவருக்குமே தெரியும். அப்படியிருந்தும் விலை கூட்டப்பட்டுள்ளது என்றால் இதைக் கவனிப்பதும் கட்டுப்படுத்துவதும் யாருடைய பொறுப்பு? இப்படித்தான் இன்று நாட்டில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டிருப்பதும். அரசாங்கம் விலைக்குறைப்புச் செய்த பொருட்களும் அறிவிக்கப்பட்ட விலைக்குத்தான் விற்பனை செய்யப்படும் என்பதற்கு எந்த வகையான உத்தரவாதமும் இல்லை. இதை ஏன் துணிந்து கூற முடிகிறது என்றால், அரசாங்கம் அறிவித்தபடி அரிசியின் கட்டுப்பாட்டு விலை எங்குமே கடைப்பிடிக்கப்படவில்லை. அது இடத்துக்கிடம் கடைக்குக்கடை வெவ்வேறு விதமாக விற்கப்படுகிறது. கூட்டுறவுக் கடைகளில் கூட அரசு அறிவிப்புக் கணக்கில் கொள்ளப்படவில்லை.

சனங்கள் இப்படிப் பல விதமான பிரச்சினைகள், நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே வாழ வேண்டியுள்ளது. இதற்குள் வேலையில்லாப் பிரச்சினை, சம்பளம் போதாமை என்ற பிரச்சினைகள் வேறு. பொருட்களின் விலை இந்தளவுக்கு அதிகரித்திருக்கும்போது நாளொன்றுக்கு 1000 ரூபாய் கூலியைக் கொடுக்க முடியாது என்று மலையக மக்களின் உழைப்புரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இதைச் சரிப்படுத்தலாம் என்று அரசாங்கம் கருதினாலும் நினைக்கும் அளவுக்கு இதை எளிதில் செய்ய முடியாது என்பதை நிலைமைகள் காட்டுகின்றன.

ஆகவே நாட்டில் கவனிக்கவும் தீர்வு காணவும் பட வேண்டிய ஆயிரம் அவசிய – அவசரப் பிரச்சினைகள் உள்ளன. அதையெல்லாம் மூன்றாம் பட்சம், நான்காம் பட்சமாக்கி விட்டு தொல்லாய்வுப் பணிகள் போன்றவை முக்கியப்படுத்தப்பட்டுள்ளன. முதன்மைப்படுத்தப்படுகின்றன.

இதனால்தான் எதிர்த்தரப்புகளும் அரசுக்கு எதிராகச் சனங்களைத் திரட்ட வாய்ப்பாகிறது. இப்பொழுது வடக்குக் கிழக்கில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான எதிர்ப்பு நடைப்பயணம் நடந்து கொண்டிருக்கிறது. இது சரியா பிழையா என்பது ஒரு புறமிருக்கட்டும். இதற்கு வாய்ப்பான சூழல் இதை முன்னெடுப்போருக்குக் கிடைத்துள்ளதை மறுக்க முடியாது.

மக்கள் இந்தப் போராட்டத்தின் பக்கம் அணிதிரள்வதற்கான உளநிலையை உருவாக்கியதில் அரசுக்குப் பங்குண்டு என்பதையும் மறுக்க முடியாது.

இதெல்லாம் நிலைமைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியே தீரும். எவருக்கும் இதனால் நன்மைகள் விளைந்து விடப்போவதில்லை. சரியாகச் சொன்னால், இதனால் கூடுதலான நன்மைகளை வெளிச்சக்திகளே பெறும். குறிப்பாக இந்தியாவும் மேற்குலகும். நாட்டைக் கொந்தளிப்புக்குள்ளாக்கி, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தித் தங்கள் வாணிபத்தையும் வல்லாதிக்கத்தையும் அதற்குள் பிரயோகிப்பதற்கே சீனா தொடக்கம் இந்தியா, அமெரிக்கா வரையில் முயற்சிக்கின்றன. இதற்குத் தேவையில்லாத வகையில் பலிக்கடாவாகிக் கொண்டிருக்கிறோம் நாமெல்லாம்.

இதேவேளை பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான எதிர்ப்பு நடைப்பயணத்தில் சில குறிப்பிடக் கூடிய விடயங்களும் நடந்துள்ளன. அதில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் இணைவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் முக்கியமானவை. இது வழமையான தமிழ் தேசிய கோரிக்கைகள் அல்ல என்பது கவனத்துக்குரியது என்கிறார் ராகவன் என்கிற சின்னையா ராஜேஸ்குமார். பிரிவினை கோரிய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு காலகட்டத்தின் முதன்மைப் போராளித் தலைவர்களில் ஒருவராக இருந்த ராகவன், இப்பொழுது விடயங்களை நோக்கும் நிலையே வேறு. “சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுத்தல் மூலமே இலங்கை தீவுக்குள் சிறு பான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்ற நிலைப்பாட்டிருக்கு வந்திருக்கிறார் ராகவன்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடைபவனியைப் பற்றி ராகவன் மேலும் சொல்லும் விடயங்கள் கவனத்திற்குரியவை.

“ஜனசா எரிப்பு, மலையக மக்களின் சம்பளக்கோரிக்கை, அகழாய்வு போன்ற பல்வேறு அம்சங்களை அடக்கியிருப்பது தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் கலாச்சார இருப்பை இலங்கைக்குள் உறுதி செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவே தெரிகிறது.

ஆனால் விலைவாசி உயர்வு, மக்களின் அன்றாட வாழ்வு போராட்டம் சம்பந்தமான கோரிக்கைகள் ( மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிக்கை தவிர்த்து) இல்லாதது பற்றி கவனித்தல் அவசியம். அத்துடன் இந்த பேரணியின் அடிப்படை ஐ நா வையும் உலக நாடுகளையும் கவனத்தில் ஈர்ப்பதற்கான போராட்டமாக காண்பிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் உண்டு. ஐ நா வோ உலக நாடுகளோ சிறுபான்மை மக்களின் போராட்டங்களை செவி மடுத்து அவர்களுக்கான தீர்வை வழங்க மாட்டாது என்பது வரலாற்று அனுபவம். எனவே போராட்டங்களின் அடிப்படை மக்கள் சார்ந்து இருத்தல் அவசியம். அத்துடன் சிவில் உரிமை போராட்டங்களுக்கான நீண்ட கால திட்டங்களும் தந்திரோபாயங்களும் அவசியம். சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுத்தல் மூலமே இலங்கை தீவுக்குள் சிறு பான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். இதற்கான அரசியல் தயாரிப்பு கூட்டமைப்பிடமோ அல்லது மற்றைய கட்சிகளிடமோ இல்லை. தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அமைப்பு ரீதியான கட்டுமானமும் இல்லை. 07 ஆம் தேதிக்குப்பின் அடுத்த போராட்டம் என்பது எப்போ என்பது யாருக்கும் தெரியாத நிலை. தமிழரசு கட்சியோ (1961 சத்தியாகிரகம் தவிர்ந்து) கூட்டமைப்போ இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்களை செய்வதில்லை.

பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகளே அவர்களுக்கான முக்கிய விடயமாக இருக்கிறது. இந்த சிந்தனை முறையிலிருந்து மீளாவிட்டால் பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை. பொத்துவிலிலிருந்து பொலிகண்டி பொத்துவிலிலிருந்து பொல்காவல வுக்கு மாறுவது அவசியம். தமிழ் பேசும் சமூகங்கள் இலங்கையின் பிரஜைகள் அவர்களுக்கான சமூக நீதியை உறுதிப்படுத்தல் இலங்கையின் ஜன நாயக வாழ்வுக்கான முதல் படி என்பதை அனைத்து மக்களும் உணரும் வகையிலான போராட்டங்களே அவசியம்” என.

கருணாகரன் 

Comments