சம்பளப் பேச்சுவார்த்தையில் முள்ளுத் தேங்காய் பயிரிடுதலை நுழைக்கப் பார்க்கும் கம்பனி தரப்பு | தினகரன் வாரமஞ்சரி

சம்பளப் பேச்சுவார்த்தையில் முள்ளுத் தேங்காய் பயிரிடுதலை நுழைக்கப் பார்க்கும் கம்பனி தரப்பு

பெருந்தோட்டத்துறை காணிகளை சிறுதோட்டங்களாக பிரித்து தொழிலாளர்களுக்கு  வழங்குவதால் தேயிலை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படும். கண்டிப்  பகுதியில் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் பரீட்சார்த்தமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட சில தோட்டங்கள் இன்று இருந்த  இடம் தெரியாமல் போய்விட்டிருப்பது சரியான சான்று என்கிறார் பாத்தியா புலுமுல்ல.

சம்பள நிர்ணயத்துக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய முறிவடைந்துள்ளன. மீண்டும் கூடிப் பேச திகதி குறிப்பிடப்படாமலே இழுத்தடிப்பு நடக்கிறது. அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பதை ஏற்றுக் கொள்ள கம்பனி தரப்பு தயாரில்லை.

கொடுப்பனவுகளுடன் கூடிய 1005 ரூபாய் வழங்க அது முன்வந்துள்ளது. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதற்கு உடன்படுவதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்தபடி கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பும் இன்னும் இருக்கின்றன.  

இ.தொ.கா. தமது தீர்மானத்தை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதால் தொழிலாளர்கள் பெற்றுவரும் வரப்பிரசாதங்கள் இல்லாமல் போகுமென அது யோசிப்பதாக தெரிகின்றது.
இ.தொ.கா. இப்படியோசிப்பதில் புதுமையொன்றும் கிடையாது. ஏனெனில் கூட்டு ஒப்பந்தம் இ.தொ.காவின் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு ஒரு துரும்பாக பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது.  

மலையக புத்திஜீவிகளைப் பொறுத்தவரை கூட்டு ஒப்பந்தம் ஒரு சாபக்கேடு, ஏமாற்று. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதே சிறந்தது என்று அவர்கள் கருதுகின்றார்கள்.  

இதற்கிடையே சிங்கள வாரப்பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தி நமது கவனத்தை ஈர்க்கின்றது. பெருந்தோட்டக் கம்பனிகள் 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டுமெனில் தேயிலைச் செடிகளுக்கு ஊடே முள்ளுத்தேங்காய் பயிரிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளதாம். கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வரும் அமைச்சர்களிடமே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதாம். அதுவும் மலையக தொழிற்சங்கங்கள் எதுவும் பக்கத்தில் இல்லாதபோ ேத இவ்விவகாரம் தொடர்பாக பேசப்பட்டதாக அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  

முள்ளுத்தேங்காய் உற்பத்திக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முற்றாக த டைவிதித்துள்ளார். இத்தடை மலையகத்துக்கும் பொருந்தும். அதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கோரிக்கையை கைகழுவி விட்டதாக தெரிகிறது.  

முன்பு வெளிவாரி உற்பத்தியை விதந்துரைத்துவந்த பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஓரங்கமான தோட்டத் துரைமார் சங்கம் தற்போது அதனை அடக்கி வாசிக்க தலைப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இலங்கை தோட்ட துரைமார் சங்கத்தின் புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல இதனை உறுதி செய்திருக்கின்றார். பெருந்தோட்டத்துறை காணிகளை சிறுதோட்டங்களாக பிரித்து தொழிலாளர்களுக்கு வழங்குவதால் தேயிலை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படும். கண்டிப் பகுதியில் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் பரீட்சார்த்தமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட சில தோட்டங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டிருப்பது சரியான சான்று என்கிறார் அவர்.  

எனினும் மேலதிக தேயிலைக்கான விலைக் கொடுப்பனவு, உற்பத்தித் திறன் சலுகை, வருகை அடிப்படையிலான ஊக்குவிப்பு என்ற அடிப்படையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை வரையறை செய்வதே தோட்டத் துரைமார் சங்கத்தின் முனைப்பாக இருக்கின்றது.

இதற்கு இணக்கம் காணாவிட்டால் வேறு இரு முன்மொழிவுகளை அது சமர்ப்பித்திருக்கின்றது. தேயிலைச் செடிகளுக்கிடையே (மாற்றுப் பயிர்ச்செய்கை) முள்ளுத் தேங்காய் உற்பத்திக்கு அனுமதி அல்லது உழைப்புக்கேற்ற ஊதியம் என்னும் அடிப்படையில் வெளிவாரி உற்பத்தி முறைமையை கைக்கொள்ளல் என்பனவே அந்த யோசனைகள்.    பெருந்தோட்டத் துறையில் மாற்றுப் பயிர்செய்கை என்பது புதிய விடயமல்ல. 1823ஆம் ஆண்டு ஜோர்ஜ் போர்ட் என்பவர்  கம்பளையில் 400 ஏக்கர் காணியில் ஒரு தோட்டத்தை உருவாக்கினார்.  இதுவே பெருந்தோட்டப் பரவலுக்கு அடித்தளமாக அமைந்தது.  அதில் கறுவா உற்பத்தியே முதன்மை பெற்றிருந்தது. இதில் வீழ்ச்சி ஏற்பட மாற்றுப் பயிர்ச்செய்கையாக கோப்பிப் பயிர்ச் செய்கையே அந்த இடத்தை பிடித்தது 1824 எட்வர்ட் பான்ஸ் கன்னொருவையில் கோப்பி த் தோட்டம் ஒன்றை உருவாக்கினார். இதன் பின்னர் கோப்பிப் பயிர்ச்செய்கை பணப்பயிராக பரிமாற்றம் கண்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன.    குறுகிய காலத்தில் கூடிய இலாபத்தை தந்தது கோப்பி உற்பத்தி. இதற்காகவே 1820 / 1840 காலப்பகுதிகளில் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் 1870களில் ஹெமிலியா வெஸ்ட்ராறிக் என்ற பூச்சி இனம் நாசப்படுத்த ஆரம்பித்தது.

இதனால் பருவக்கால பயிராய் இருந்து அமோக வருமானத்தை தந்து கொண்டிருந்த கோப்பி உற்பத்தி கேள்விக் குறியானது.  

எனவே இதற்கு மாற்றுப் பயிர்ச் செய்கை அவசியமானது. இப்படி அறிமுகமானதுதான் தேயிலை. 1851ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லரால் கண்டி ஹெவாஹெட்ட  லூல்கந்துர தோட்டத்தில் பரீட்சார்த்த பயிரிடல் நடந்தது. காலவரையில் இத்தேயிலைப் பயிரீடு வியாபித்து. கோப்பிக்கு பதிலீடானது. பெருந்தோட்ட விவசாயத்தில் தேயிலையுடன் கொக்கோ, தென்னை என்பனவும் பயிரிடப்பட்டன. இந்த மாற்றுப் பயிர்ச்செய்கை எந்தவொரு வகையிலும் தேயிலைப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தேயிலைச் செடிகளை அழித்துவிட்டு மாற்றுப் பயிர்ச்செய்கை இடம்பெறவில்லை. சில தனியார் நிறு வனங்கள் மட்டும் தேயிலைச் செடிகளுக்கிடையில் தென்னை வளர்ப்பை  மேற்கொண்டன.  

இதேநேரம் இறப்பரும் மிக முக்கியமான பெருந்தோட்டப் பயிரானது. இதற்காக புதிய காணிகளே பயன்படுத்தப்பட்டன. எனவே தேயிலைப் பயிரின் நிலைமை முதன்மையாகவே இருந்து வந்தது. தேயிலை நீண்டகால முதலீட்டுப் பயிர். ஆகவே இதில் ஆங்கிலேய கம்பனிகள் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தன. எனினும் பெருந்தோட்டங்களில் பயிரான கொக்கோ, தென்னை என்பன போதிய பராமரிப்பின்றி அழிவடைந்து வரும் நிலைமையே இன்று காணப்படுகிறது. தேயிலையும் இறப்பரும் கூட இன்று சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

402 பெருந்தோட்டங்களை  22 தனியார் கம்பனிகள் குத்தகைக்கு பெற்றது முதல் தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கை கேள்விக் குறியாகி வருகின்றது. இன்று தேயிலை, இறப்பர் விளைந்த காணிகளின் அளவு குறைவடைந்துள்ளது. பெரும்பாலானவை கைவிடப்பட்டு காடுகளாகிக் கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியான அனுகுமுறைகளால் பெருந்தோட்டக் காணிகள் துண்டாடப்பட்டன. மாற்றுப் பயிரிடல் என்ற பெயரில் பைனஸ் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உள்நுழைந்ததுதான் முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கை.

நிலவளம் நீர்வளம் மாசடையவும் இயற்கையின் கொடைகளை இல்லாமலாக்கவும் முள்ளுத்தேங்காய் வழிவகுக்கும் என்பதை இன்று அரசாங்கமே ஏற்றுக்கொண்டு முள்ளுத்தேங்காய் உற்பத்திக்கு முழுமையாக தடை விதித்துள்ளது.  

தேசிய ரீதியிலான செயற்திட்டங்களில் இருந்து பெருந்தோட்டத்துறை தனிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளமையால் முள்ளுத்தேங்காய் பயிரிடல் தடையும் எங்களைப் பாதிக்காது என்ற மனோபாவத்துடன் கம்பனி தரப்பு இன்னும் இருப்பதாகவே தெரிகின்றது. இல்லாவிட்டால் தேயிலைச் செடிகளுக்கிடையே முள்ளுத்தேங்காயைப் பயிரிடும் யோசனையை முன்வைக்குமா?.  

பெருந்தோட்டங்களில் மீள் பயிர்ச்செய்கைக்கான முதவீடு நீண்டகாலம் கழித்தே பிரதிபலனைத் தரும் என்பதால் அதுகுறித்து தோட்டக் கம்பனிகள் அக்கறை காட்டுவதில்லை. எனவே அவை பயிர்ச் செய்கையை பன்முகப்படுத்தி மாற்றுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகின்றது. தவிர பெருந்தோட்டங்களை கையேற்கும் தருணத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி காலத்துக்குக் காலம் பயிர்ச்செய்கைகளை மாற்றும் உரிமை அதற்கு இருக்கவே செய்கின்றது.

இதனடிப்படையிலேயே தொழிற்சங்கங்களின் எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது முள்ளுத்தேங்காய் உற்பத்தியில் நாட்டம் காட்டியது. இன்னும் காட்டுகின்றது.  

இவ்வேளையில் தொலைநோக்குடன் பிரச்சினையை கையாளவேண்டிய கடப்பாடு தொழிற் சங்கங்களையே சார்ந்துள்ளது. தேயிலையை அடியோடு துவம்சம் செய்யும் போக்கிலான மாற்றுப் பயிர்ச்செய்கையை ஏற்றுக்கொள்ளவே கூடாது. எனவே கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி மலையகத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுகூடி பேசி சரியான  தீர்மானம் ஒன்றுக்கு வருவதன் மூலம் மட்டுமே கம்பனி தரப்பின் கைவரிசையை கட்டுப்படுத்த முடியுமாயிருக்கும்.  

பிந்திய தகவலாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் அரச சம்பள நிர்ணய சபையின் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாவது மாற்றம் ஏதாவது ஏற்படுமாயின் பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் பிரகாசமானதாக அமையுமென நம்பலாம். 

பன். பாலா

Comments