இலங்கைத் தமிழர்களின் மறைமுக நட்பு சக்தியாக சீனா | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைத் தமிழர்களின் மறைமுக நட்பு சக்தியாக சீனா

“பலரும் இதை மறுக்கலாம். ஆனால், தமிழருக்கு இப்போது நேச சக்தி சீனாவே” (சீனா மறைவிதமாக தமிழர்களுக்கு நன்மை செய்கிறது, ஆகவே நட்புச் சக்தியாக உள்ளது எனும் அர்த்தத்தில்) என்றொரு பதிவை கடந்த வாரம் முகநூலில் எழுதியிருந்தேன். பல தமிழ் நண்பர்களும் பதட்டமாகி விட்டனர். “ஐயோ, அதெப்படிச் சீனா தமிழர்களுக்கு நட்புச் சக்தியாக இருக்க முடியும்? அது சிங்களத் தரப்போடல்லவா நெருங்கிச் செயற்படுகிறது? என்றவாறாக பலரும் கொதித்தனர். ஒரு நண்பர், அவர் நீண்டகாலமாகவே அரசியல் மற்றும் கலை இலக்கியம் ஊடகம் மற்றும் புலமைத்துவத் தளத்தில் முக்கியமானவர்.

இதெல்லாத்துக்கும் மேலேபோய், “உங்கள் கனவு பலிக்கட்டும். வேண்டுமானால், (சீன சார்பு தமிழ் இடதுசாரிகளினால் நடத்தப்படும் தமிழ் இதழொன்றின் பெயரைக் குறிப்பிட்டு) அந்த இதழை வெளியிடும் குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யலாம்” எனக் கிண்டலாகப் பதில் எழுதியிருந்தார். மிகச் சிலர் மட்டும், இந்த அரசியலின் உள்ளோட்டங்களைப் புரிந்துகொண்டு நிதானமாகத் தங்கள் கருத்துகளை எழுதியிருந்தனர். அரசியல் விவாதங்களில் இப்படியெல்லாம் நடப்பதுண்டு. கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் சொல்லும் புகழ்பெற்ற வார்த்தையைப்போல “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்பதற்கும் அப்பால் “அரசியல் உரையாடலில் இது சகஜம்” என்ற அளவுக்கு நிலைமை வந்துள்ளது. ஆனால் இதை அப்படிச் சகஜமான ஒன்றாகக் கடந்து சென்று விட முடியாது. அப்படிக் கடந்து செல்வதற்காகப் பதிவுகளையோ கருத்துகளையோ முன்வைக்கவும் முடியாது.

ஏனென்றால், அந்தளவுக்கு அரசியலினால் காயடிக்கப்பட்ட மக்களாகவும் நாடாகவும் நாமும் நம்முடைய நாடும் உள்ளோம் என்பது துயரமான ஒன்று. இதை இனியும் இனியும் அப்படி இப்படி என்ற நிலையில் ஓட்டிச் செல்ல முடியாது. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. யுத்த காலத்தையும் விட நெருக்கடி நிலையில் நாட்டு மக்களும் நாடும் உள்ளதை சிந்திக்கக் கூடிய அவராலும் புரிந்து கொள்ள முடியும்.

பொருளாதாரத்தில் நாடு மிக இக்கட்டான நிலைக்குள்ளாகியுள்ளது. பணத்தின் பெறுமதி வரவரக் குறைந்து கொண்டு போகிறது.

வாழ்க்கைச் செலவு உயர்கிறது. நாளாந்தம் சாப்பாட்டுக்கே மக்கள் கஸ்ரப்படும் நிலை வந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை என்றும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதைத் தவிர, சமூகங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் முரண்களும் சந்தேகங்களும் இடைவெளியும் அதிகரித்துச் செல்கிறது. இந்த நிலையில் நாம் அரசியலைக் குறித்தும் நாட்டின் நிலைமையைக் குறித்தும் சீரியஸாகச் சிந்தித்தே ஆக வேண்டும். நம்முடைய விருப்பு வெறுப்புகள் வேறு.

தேவைகளும் யதார்த்தமும் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் திசையில் நம்மை ஒழுங்கு படுத்த வேண்டும்.

சரி, இப்போது சீனாவைப் பற்றிப் பேச வந்து வேறு எதையோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்களே! என்று நீங்கள் கேட்கலாம்.

ஆகவே சீனா – இலங்கைத் தமிழர் விவகாரம் என்ற விசயத்துக்கே வருவோம். இப்பொழுது மட்டுமல்ல, எப்போதும் இலங்கையில் சீனா, இன ரீதியாக யாரோடும் எந்தத் தரப்புகளோடும் உறவாடல்களை வைத்துக் கொண்டதல்ல.

அரசியல் விவகாரங்களைக் கையாண்டதுமில்லை. சீனாவினுடைய அரசியலும் அணுகுமுறையும் வேறு. அது நீண்ட கால நோக்கில், தன்னுடைய வளர்ச்சிக்கேற்ப விஸ்தரிப்பைச் செய்யும் அடிப்படைகளைக் கொண்டது. அதற்கமைய விடயங்களைக் கையாள்வது. இதற்குள் சில நாடுகள் தாமாகவே சிக்கிக் கொள்வதுண்டு. சிலவற்றைச் சீனா மடக்கிப் பிடிப்பதுண்டு.
இலங்கையில் முதலாவது வகையான தானாகவே சிக்கிக் கொண்ட நிலைமையே நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சீனாவைக் குறித்த எச்சரிக்கை உணர்வும் வெறுப்பும் பெருந்திரளான தமிழ் மக்களுக்கு எப்போதுமே இருக்கிறது. இதற்குக் காரணம், தமிழர்களில் பெருந்திரளானோர் எப்பொழுதும் மேற்குச் சாய்வானோராக இருப்பதுவே. பிரிட்டிஸ், அமெரிக்க ஈடுபாடு அவர்களை அறியாமலே உள்ளுணர்வில் ஊறிய ஒன்று. இதில் அவர்கள் சரி, பிழைகளைப் பற்றி ஆராய்வதே இல்லை. இதற்குக் காரணம், அவர்கள் (பெருந்திரளினர்) எப்போதும் வலதுசாரிச் சிந்தனையுடையோர்.

வாழ்க்கையையும் அந்த அடிப்படையில் ஒழுங்குபடுத்தி வைத்திருப்போர். இதனால்தான் அவர்கள் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் தெரிவு செய்து வருகின்றனர். இதனாலேயே இலங்கையில் கூட அவர்களுக்கு மற்ற எந்தத் தரப்பையும் விட ஐ.தே.கவுடன் ஒரு மென் ஈடுபாடு எப்போதும் இருப்பதுண்டு. இப்படியான பின்புலச் சூழலில் சீனாவைக் குறித்து இவர்கள் அச்சமடைவதும் எதிர்ப்புணர்வுடன் பேசுவதும் புதியதல்ல. ஆச்சரியமூட்டக் கூடிய ஒன்றுமல்ல.

ஆனால், தமிழர்களுடைய இனப்பிரச்சினை விவகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சீனா செலுத்திய – செலுத்திக் கொண்டிருக்கும் இடையீடுகளை விடவும் இந்தியாவும் மேற்குலகமும் செலுத்தும் தாக்கமும் தொடரும் இடையீடுகளும் அதிகம். அத்துடன் பாதகமானவையுமாகும். இதைப்பற்றி இங்கே மீளச் சொல்வது சலிப்பூட்டக் கூடியது. ஆனாலும் ஓரிரு வார்த்தைகளில் அதைச் சொல்லிச் செல்ல வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா தலையிட்ட அளவுக்கும் தமிழ்த்தரப்பு நம்பிய அளவுக்கும் (இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் அளவுக்கும்) அது முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.

அதனால் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையே இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. மேற்குலகமோ தமிழர்களின் போராட்டத்தையும் அதன் தாற்பரியத்தையும் புரிந்து கொள்வதாகவும் அங்கீகரிப்பதாகவும் காண்பித்துக் கொண்டே அதனை அழிக்கும் எதிர்மறைப் பாத்திரத்தையே வகித்தது. இன்னும் அப்படியே வகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இறுதிப்போரின்போது மக்கள் கொல்லப்படுவதையெல்லாம் நன்றாக அறிந்து கொண்டே அதைத் தடுப்பதற்கு முயற்சிக்காமல் இருந்து விட்டு, நடத்தப்பட்டது கொலை எனவும் அதற்கு விசாரணை எனவும் இன்று குரல் எழுப்பிக் கூறுகிறது. இது இலங்கை அரசைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வருவதற்காக விட்டுக் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு பொறியாகும். இது வெளியே காண்பிப்பது ஒன்று. உள்ளே (மறைவாக) செயற்படுவது இன்னொன்று என்பதாகும். இந்த எளிய உண்மைகளை விளங்கிக் கொள்வதொன்றும் கடினமானதல்ல. மறுவளத்தில் சீனா இலங்கையின் இனப்போருக்கு அரசாங்கத்துக்கு ஆயத உதவியும் நிதியுதவியும் செய்திருக்கிறது. இதைச் சீனா மட்டும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் (1970 – 1990 வரையில்) அதிகளவான உதவிகளைப் பெற்றது மேற்கிடமே. பின்னர்தான் சீனாவிடம் உதவி கோரப்பட்டது. சீனாவின் உதவிகள் ஏறக்குறைய 1990 க்குப் பின்பே கூடுதலாகக் கிடைக்கத் தொடங்கின.

இது உண்டாக்கிய எரிச்சலுணர்வே சீனாவின் இல்மனைற் கப்பல் ஒன்றை புலிகள் தாக்குவதற்குக் காரணமாகியது. ஆனாலும் சீனா இதைப் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது இதற்குப் பிறகும் அது தமிழர் சிங்களவர் என்ற வேறுபாடுகளின் அடிப்படையில் விசயங்களைப் பார்க்க முற்படாது, இலங்கைத்தீவு என்ற கண்ணோட்டத்திலேயே தன்னுடைய அரசியலையும் பொருளாதாரப் பாதையையும் விருத்தி செய்ய முற்பட்டது. இதனை அப்போது ஈரோஸ் அமைப்பின் தலைவராகவும் பின்னர் புலிகளின் முக்கியஸ்தராகக் கருதப்பட்டவருமான வே.

பாலகுமாரன் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் - “தன்னுடைய பொருளாதார மண்டலத்தை சீனா விஸ்தரிக்கும் நடவடிக்கையில் மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதால், அதனுடைய தாக்க விசையும் தலையீடுகளும் இலங்கையில் கூடுதலாக இருக்கும். ஆகவே இன்றைய (2000 களின்) இலங்கைச் சூழலில் சீனாவைப் புறந்தள்ளி விட்டு – அதைக் கவனத்தில் எடுக்காமல் எந்த வகையான அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது. அது ஆபத்தானதாக முடியும்” என.

ஆனால், இதை அப்பொழுதும் பலரும் கவனத்திற் கொள்ளவில்லை. அப்பொழுது எல்லோருடைய கவனமும் மேற்குலகத்தின் அனுசரணையோடு நோர்வேயின் மத்தியஸ்தம் வழங்கிய பேச்சுவார்த்தையிலும் மேற்குலகப் பயணங்களிலுமே இருந்தது. இப்பொழுதும் பெருந்திரளான தமிழர்கள் இந்தியாவையும் மேற்குலகத்தையுமே நம்புகின்றனர். இதற்கு அவர்கள் அந்த நாடுகளில் வாழ்கின்றமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சீனாவின் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சியின் பாற்பட்டவை. அதனை மேலும் விஸ்தரிப்பதற்கானவை. இதைப்பற்றி தொடர்ந்து பலரும் பலவிதமாக எழுதியும் பேசியும் வருகின்றனர். இன்று மிகத் துரிதமான வளர்ச்சியில் இருக்கும் சீனாவை இலங்கை மட்டுமல்ல, இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கின் வல்லரசுகளே எதிர்கொள்வதில் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. சீனாவின் தொழில் நுட்பமும் உற்பத்தி வேகமும் அறிவியல் சாதனைகளும் இதில் முக்கியமானது. இதுதான் முதலாம் இரண்டாம் உலகப் போரின்போதும் நிகழ்ந்தது. அன்று உருவாகிய தொழில்நுட்ப வளர்ச்சியும் அது உண்டாக்கிய உற்பத்திப் பெருக்கமும் அதற்குத் தேவையான சந்தைக்கான போட்டியும் அரசியல் நெருக்கடிகளைத் தோற்றுவித்து, போரில் கொண்டு போய் நிறுத்தின. ஆனால், இன்றைய நிலை நேரடியாக அப்படியொரு போரில் கொண்டு போய் விடாது. அப்படித்தான் ஒரு நிலைமை ஏற்பட்டாலும் அது போரைக் கையில் எடுக்காது.

ஆனால், அந்தப் போர் வேறு விதமாக நடக்கும். அது நடந்து கொண்டும் இருக்கிறது. அதில் ஒன்றுதான் இலங்கையைச் சுற்றி வளைத்துத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சீன எத்தனமாகும்.

இதுதான் நம்முடைய கவனத்தின் முக்கிய புள்ளியாகும்.

சீனா இலங்கையைச் சுற்றி வளைக்கும்போது அது இலங்கையின் எதிர்ப்புக்குள்ளாகாமல் (அப்படி நேருமாக இருந்தால் இலங்கை இந்தியாவின் பக்கமோ மேற்கின் பக்கமோ சென்று விடும் என்பதால்) இலங்கையின் பலவீனமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி, அதற்குள்ளால் நுழைந்து தன்னுடைய வேலைகளைப் பார்க்கிறது. ஆகவே இந்தியாவைப் போலவும் மேற்குலகத்தைப்போலவுமே இலங்கையில் பிரித்தாளும் தந்திரத்தையே சீனாவும் செய்கிறது. வல்லரசுகளின் குணாம்சம் எப்போதுமே இப்படித்தானிருக்கும். தம்முடைய நலனுக்காக பின்தங்கிய நாடுகளைப் பயன்படுத்த விளைவதும் அந்த மக்களைப் பற்றிப் பொருட்படுத்தாமல் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாகும்.

அப்படியென்றால், எப்படிச் சீனா, தமிழருக்குச் சாதகமாகச் செயற்படுகிறது? என்ற உங்கள் கேள்விக்குப் பதில், இலங்கை அரசுக்குச் சார்பாக சீனா நெருங்கும்போது இந்தியாவும் மேற்கும் தவிர்க்க முடியாமல் தமிழ் பேசும் மக்களின் பக்கமும் அரசுக்கு வெளியே உள்ள சக்திகளின் பக்கமுமாக நெருங்கும். இதுவும் அவர்களுடைய நலனுக்கான ஒரு ஏற்பாடே. ஆனால், இதற்குள் சில அனுகூலங்கள் கிடைக்கும். அது சீனாவின் நெருக்கத்தின் விளைவுகளே. ஆகவே அந்தச் சூழலை சீனா உருவாக்கித் தருகின்றது என்ற வகையில் நட்புச் சக்தியாக – மறைவிதமாக உள்ளது. இது பழைய சூத்திரந்தான். என்ன செய்வது எப்போதும் இரண்டும் இரண்டும் நான்குதானே. மேலே எறிந்த கல் எப்படியும் கீழேதான் வரும். இது தவிர்க்க முடியாத மாறா விதிகள். அப்படித்தான் இந்தச் சூத்திரமும் மாறாத அடிப்படையைக் கொண்ட ஒன்றாக உள்ளது.

இதைப் புரிந்து கொண்டு செயற்படுவதே இன்றுள்ள தெரிவாகும். இதை எப்படிச் செயற்படுத்துவது என்பதே பொறுப்பானோரின் பொறுப்பாகும்.

கருணாகரன்  

Comments