இலங்கையின் பத்திரிகைத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடி டி. ஆர் விஜேவர்தன | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் பத்திரிகைத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடி டி. ஆர் விஜேவர்தன

இலங்கையின் தேசிய வீரர்களில் ஒருவராகவும் இந்நாட்டின் அச்சு ஊடகத் துறையை ஒழுங்கமைத்த முன்னோடியாகவும் விளங்கும் டி.ஆர். விஜேவர்தனவின் ஜனன தினத்தின் நிமித்தம் இன்று இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கையின் அச்சு ஊடகத் துறையை ஒழுங்மைத்து, பத்திரிகை வெளியீட்டுத் துறைக்கென தனியான நிறுவனத்தை ஸ்தாபித்தவரும் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனி தினசரிப் பத்திரிகைகளை தம் நிறுவனத்தின் ஊடாக முதன் முதலில் வெளியிடவும் ஆரம்பித்தவர் டி. ஆர். விஜேவர்தன ஆவார். இவர் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகள் வெளியீட்டு துறைக்கு ஆற்றியுள்ள சேவைகள் மற்றும் பங்களிப்புகள் இந்நாட்டு ஊடக வரலாற்றில் அழியாத் தடம் பதித்திருக்கின்றன.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் இவர் 1886 இல் கொழும்பில் பிறந்தார். தம்  ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை உள்நாட்டில் பெற்றுக்கொண்ட டி.ஆர் விஜேவர்தன, உயர்கல்வியை பிரித்தானியாவிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்று பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்த இவர்,  1912 இல் தாயகம் திரும்பினார். அதனைத் தொடர்ந்து கொழும்பு, புதுக்கடை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இவர் தொழிலை ஆரம்பித்தார்.

இக்காலப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தேசிய இயக்கத்தின் செயலாளராக 1913 இல் டி.ஆர். விஜேவர்தன தெரிவானார்.

இருப்பினும் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது தங்கியிருந்த வீதியில் தான் அந்நாட்டின் முன்னணி பத்திரிகைகளது அலுவலகங்கள் அமைந்திருந்தன. அதனால் அப்பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கும் அவர் சென்று வந்தார்.

அவற்றின் ஊடாக பத்திரிகைத் துறையின் முக்கியத்துவத்தையும் அதன் பெறுமதியையும் அவர் உணர்ந்து கொண்டார். அத்தோடு அவரது சக மாணவர்கள் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களாக  இருந்தனர். அவர்களில் இந்திய மாணவர்களான லாலா ராஜ்பாட் ராய், பெபின் சந்திர பால், சுரேந்திர நாத் பெனர்ஜி, கோபால் கிரிஷ்ணா கோக்கிலே போன்றவரகள் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவரது சக மாணவர்களும்  தத்தம் நாடுகளது சுதந்திரத்திற்கு வெவ்வேறு வழிகளில் பங்களித்து கொண்டிருந்ததையும் இவர் அவதானித்தார்.

இந்தப் பின்னணியில் இவர் கல்வி பெறவென இலண்டன் புறப்பட்ட சமயமும், அங்கிருந்து நாடு திரும்பிய போதும் இந்நாடு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழேயே  இருந்தது. ஆனால் இக்காலப்பகுதியில் இந்நாட்டில் சுதந்திரத்தின் தேவையும் முக்கியத்துவமும் பரவலாக உணரப்பட ஆரம்பமானது. அதன் வேட்கையும் வெளிப்படத் தொடங்கியது.

இவ்வாறான சூழலில் நாடு சுதந்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியதன் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவையும் மேலெழுந்து காணப்பட்டது. அதற்கு பத்திரிகை ஊடகம் பெரிதும் பயன்படும் என டி.ஆர். விஜேவர்தன கருதினார். அத்தோடு பௌத்த மறுமலர்ச்சி, தொழிலாளர் மறுமலர்ச்சி உட்பட மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் பத்திரிகைககள் உதவும் எனவும் அவர் நம்பினார்.

இவ்வாறான பின்னணியில் அன்றைய காலகட்டத்தில் மூடப்படும் நிலையில் காணப்பட்ட ‘தினமின’ என்ற சிங்கள மொழிப் பத்திரிகையை வாங்கி புதிய தோற்றத்துடன் வெளியிட இவர் தீர்மானித்தார். அந்தடிப்படையில் எச். எஸ். பெரேராவினால்  ஆரம்பிக்கப்பட்டு வெளியிட்டு வந்த இப்பத்திரிகை அவர் நோய் வாய்ப்பட்டிருந்த சூழலில் மூடப்படும் நிலையை அடைந்திருந்தது. இந்த சூழலில் தான் டி. ஆர் விஜேவர்தன இப்பத்திரிகையை கொள்வனவு செய்து 1914 முதல் புதிய தோற்றத்துடன் ஒழுங்கமைத்து வெளியிடத் தொடங்கினார். இதன் ஊடாகப் பத்திரிகை வெளியீட்டுத் துறையில் இவர் காலடி வைத்தார்.

இப்பத்திரிகைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கப்பெற்றது.

இதன் விளைவாக சட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த டி.ஆர் விஜேவர்தன பத்திரிகை வெளியீட்டாளரானார். இதே காலப்பகுதியில் அதாவது 1916 இல் ஏ.ஜி. ரூபி மீதெனியாவைத் திருமணம் செய்து குடும்ப வாழ்விலும் பிரவேசித்தார் இவர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் கிடைக்கப்பெற்றனர்.

என்றாலும் பத்திரிகை வெளியீட்டு துறையை முழு நேரத் தொழிலாகக் கொண்ட  விஜேவர்தன அத்துறையை மேம்படுத்துவதிலும் அதனை ஏனைய ஆங்கிலம், தமிழ் மொழிகளுக்கு விஸ்தரிப்பதிலும் கவனம் செலுத்தினார்.  

இப்பின்புலத்தில் சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் வெளியிட்டு வந்த ஆங்கில தினசரியான ‘த சிலோனிஸ்’ என்ற பத்திரிகையை 1918 இல் ரூபா 16,000.00 க்கு கொள்வனவு செய்த இவர், அதற்கு ‘சிலோன் டெய்லி நியூஸ்’ எனப் பெயரிட்டு புதிய தோற்றத்துடன் வெளியிடவும் தொடங்கினார்.  அத்தோடு இப்பத்திரிகைக்கு முக்கிய போட்டிப் பத்திரிகையாக விளங்கிய ‘த இன்டிபென்டன்ட்’ என்ற பத்திரிகையையும் இவரே வாங்கினார். இவரது ஆங்கிலப் பத்திரிகைக்கும் மக்கள் மத்தியில் நல்ல ஆதவு கிடைத்தது.  இதேவேளை 1834 முதல் வௌிவந்து கொண்டிருந்த ‘த ஒப்சேவர்’ பத்திரிகையை 1923 இல் கொள்வனவு செய்தார்  விஜேவர்தன. இவ்வாறான சூழலில் ‘அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் ‘ (லேக் ஹவுஸ்) என்ற நிறுவனத்தை 1926 இல் ஸ்தாபித்த இவர், அதன் கீழ் அவரது எல்லாப் பத்திரிகைகளையும் வெளியிட ஆரம்பித்தார்.

அத்தோடு அச்சு ஊடகத்துறை நிறுவனமான தம் நிறுவனத்தில் ஆசிரியபீடம், நிர்வாகப் பகுதி,  விளம்பரப்பகுதி என்பவற்றையும் அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்தார்.

இவரது சிங்கள மொழிப் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம், தேவை, அவசியம் என்பன குறித்து  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆங்கில மொழிப் பத்திரிகை இந்நாட்டு மக்களின் சுதந்திரத்தின் தேவை, எதிர்பார்ப்பு அதற்கான வேட்கை தொடர்பில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் ஆங்கிலம் கற்றவர்களுக்கும் கொண்டு செல்லவும் செய்தது. 

நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து இப்பத்திரிகைகள் செயற்பட்டன. குறிப்பாக இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெறுவதற்கு ஏற்ப புதிய அரசியலமைப்பின் தேவையை வலியுறுத்துதல், அது தொடர்பிலான மக்களின் எதிர்பார்ப்பு, அபிலாஷைகள், அவற்றுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தேவை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் ‘தினமின’ மற்றும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகைகளில் தொடராக வெளியாகின.

இவ்வாறான சூழலில் அமைக்கப்பட்ட முதலாம், இரண்டாம் மனிங் சீர்திருத்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைக்கு வந்த போதிலும் அவற்றிலுள்ள பலவீனங்களையும் குறைபாடுகளை மாத்திரமல்லாமல் அவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பாதிப்புக்களையும் சுட்டிக்காட்டவும் இவரது  பத்திரிகைகள் தவறவில்லை.

அதன் காரணத்தினால் அக்குறைபாடுகளையும் பலவீனங்களையும் சீரமைக்கும் நோக்கில் 1927 இல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட டொமூர் ஆணைக்குழு 1931 இல் மட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி அதிகாரத்துடனான இலங்கை அரச பேரவை திட்டத்தை முன்வைத்தது. டொனமூர் ஆணைக்குழுவின் யாப்பு சீரமைப்பில் காணப்பட்ட குறைநிறைகளையும் கூட இவரது பத்திரிகைகள் சுட்டிக்காட்டவே செய்தன.

இவ்வாறான சூழலில் இந்நாடு சுதந்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியதன் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்தும் அதன் நிமித்தம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்தும் தமிழ் பேசும் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் அவசியத்தை டி.ஆர் விஜேவர்தன உணர்ந்தார். அதன் பிரதிபலனாக 1932.03.15 முதல் ‘தினகரன்’ என்ற பெயரில் தமிழ்ப் பத்திரிகையை வௌியிடத் தொடங்கினார். இப்பத்திரிகை முற்றிலும் உள்நாட்டு மண்வாசனை மிக்க பத்திரிகையாகத் திகழ வேண்டும் என்ற தௌிவான நிலைப்பாட்டுடன் அவர் செயற்பட்டார். இதன் ஊடாக ஒரே நிறுவனத்தில் இருந்து மூன்று வெவ்வேறு மொழிகளில் தினசரி பத்திரிகைகளை வெளியிடும் பாரம்பரியத்தை இவர் தொடக்கி வைத்தார். அதன் ஊடாகவும் இந்நாட்டு அச்சு ஊடக வரலாற்றில் டி.ஆர். விஜேவர்தன தனியிடம் பிடித்துள்ளார்.

தினகரன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட முன்னர் இந்நாட்டில் வெளியான தமிழ் தினசரியானது இங்கு வெளியான போதிலும் அது இந்நிய சுதந்திரப் போராட்டம் குறித்த செய்திகளை இந்நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடியதாகவே இருந்தது.

அதனால் உள்நாட்டின் சுதந்திரத்திற்காக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் செய்திகளை உள்நாட்டு தமிழ் பேசும் மக்களுக்கு கொண்டு செல்ல தமிழ் மொழி தினசரி இல்லாதிருந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையிலேயே அவர் தினகரன் பத்திரிகையை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து பின் வந்த காலங்களில் தினகரன் வார மஞ்சரி உள்ளிட்ட வார பத்திரிகைகளையும் இவர் வௌியிடத் தொடங்கினார்.

இவ்வாறு பத்திரிகைகள் வெளியிடுவதில் அகலக் கால் பதித்த டி. ஆர் விஜேவர்தன, ‘நான் ஏன் பத்திரிகைகளை வெளியிட ஆரம்பித்தேன்’ என்ற தலைப்பில் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் 1943.3.30 அன்று இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

‘நான் சொத்து செல்வங்களை அடைந்து கொள்வதற்காக பத்திரிகை வெளியீட்டு துறையில் பிரவேசிக்கவில்லை. பணம் தேட வேண்டிய தேவை இருந்திருப்பின் பத்திரிகைத் துறையை விடவும் பல வசதி வாய்ப்புக்கள் உள்ளன.

இத்துறையில் நான் பெரும் அர்ப்பணிப்புகளை செய்துள்ளேன். பொதுமக்கள் சேவையும் தேசிய அபிவிருத்தியுமே எனது பத்திரிகை கலையின் நோக்கம்’ எனத் தெரிவித்திருந்தார். இந்த அடித்தளத்தில் தான் அவரது எல்லா பத்திரிகைகளும் தொடர்ந்தும் பயணித்து பணியாற்றி வருகின்றன. இந்நாட்டின் சுந்திரத்திற்கு இவரது பத்திரிகைகள் அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளன. சுதந்திரத்திற்கு பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில் இவரது பத்திரிகைகள் சுட்டிக்காட்டிய விடயங்களை அந்தந்த அரசாங்கங்கள் ஏற்று செயற்பட்டிருக்கின்றன. அதற்கு பல சான்றுகளும் உள்ளன.

குறிப்பாக சுதந்திரத்தின் பின்னர் நாட்டின் முதலாவது பிரதமராகப் பதவி வகித்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா மரணிக்கும் வரையும் ஒவ்வொரு புதன் கிழமையும் நாட்டு நடப்புகள் குறித்து டி.ஆர் விஜேவர்தனவுடன் நேரம் ஒதுக்கிக் கலந்துரையாடக் கூடியவராக இருந்துள்ளார். அதேபோன்று டட்லி சேனநாயக்காவும் செயற்பட்டுள்ளார். டி.ஆர். விஜேவர்தன 1950 இல் இயற்கையெய்தும் வரையும் இந்நிலைமை நீடித்துள்ளது. இவ்வாறு இந்நாட்டின் பத்திரிகை வெளியீட்டு துறையில் பல்வேறு வகைகளிலும் வரலாற்று தடங்களைப் பதித்துள்ளவராக விளங்குகின்றார் டி.ஆர். விஜேவர்தன.

அவரது நோக்கத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்பவே அவர் ஸ்தாபித்த நிறுவனத்தின் பத்திரிகைகள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுவும் அவர் மறைந்து 70 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதே பாதையில் பயணிப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்தளவுக்கு உறுதியானதும் நிலைபேறானதுமான அடித்தளத்தை பத்திரிகை வெளியீட்டு துறைக்கு இட்டுள்ளார் டி.ஆர். விஜேவர்தன என்றால் அது மிகையாகாது.

மர்லின் மரிக்கார்

Comments