கிழக்கிந்திய டச்சு கம்பனியும் ஆங்கிலேய கம்பனியும் உருவாக்கிய புதிய பொருளாதாரம் | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கிந்திய டச்சு கம்பனியும் ஆங்கிலேய கம்பனியும் உருவாக்கிய புதிய பொருளாதாரம்

இலங்கையின் அமைவிடம் காரணமாக வரலாற்றுக் காலந்தொட்டே வேறு நாடுகளுடன் வணிக தொடர்புகளை மேற்கொண்டிருந்தமை பல்வேறு சந்தர்ப்பங்களில் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அவ்வணிக நடவடிக்கைகளை இலங்கையின் பெரும்பான்மை இனமாகிய சிங்கள மக்கள் மேற்கொண்டார்களா அல்லது தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களும் அரேபிய பின்னணியைக் கொண்ட முஸ்லிம்களும் மேற்கொண்டார்களா என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் தேவைப்படுகின்றன.  

கண்டி இராச்சிய காலப்பகுதியில் நிலவிய சமூகக் கட்டமைப்பின்படி விவசாயமே மிகவுயர்ந்த தொழிலாகக் கருதப்பட்டதுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது உள்ளூர்வாசிகளால் தகுதி குறைந்த தொழிலாகக் கருதப்பட்டது என்பது ஆங்கில மொழியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள   இலங்கையின் வரலாற்றுத் தகவல்கள்  மூலம் அறிய முடிகிறது. கண்டி இராச்சிய காலப்பகுதியில் கிராமங்கள் சுயதேவைப்பூர்த்தி நோக்கில் இயங்கியதுடன் தலைச்சுமை வியாபாரிகளே கண்டி இராச்சியத்தில் கிடைக்கப்பெறாத கிராம மக்களுக்குத் தேவைப்பட்ட உப்பு, கருவாடு, புடவைகள் போன்றவற்றை கொண்டு சென்று பண்டமாற்று அடிப்படையில் விற்பனை செய்தனர்.  

இவர்கள் பெரும்பாலும் தென்னிந்திய வியாபாரிகளும் முஸ்லிம் வியாபாரிகளும் ஆவர். இது மட்டுமன்றி இலங்கையின் ஆரம்ப வங்கியாளர்களாகவும் இலங்கையர்களன்றி தென்னிந்தியாவைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களே இயங்கினர். நாடுபூராகவும் இவர்கள் இயங்கியமைக்கு சான்றாக 'செட்டி' என்ற பெயரைப் பகுதியளவிலேனும் கொண்ட பல ஊர்கள் உள்ளமையைக் குறிப்பிடலாம். இன்றும் செட்டி என்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட பலரை நாம் காணமுடியும்.

இலங்கையின் வங்கித்துறையின் ஆரம்பகால வளர்ச்சியில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களின் வகிபாகம் குறித்த வரலாற்றுப் பதிவுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த சுதேசிகள் வர்த்தகத்தை தீண்டத்தகாத ஒன்றாகப் பார்க்கவில்லை என்பதனால் அவர்களில் பலர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தெரிகிறது. எனினும் தென்னிந்தியத் தமிழ் வணிகர்களும் முஸ்லிம் வணிகர்களுமே முதன்மை பெற்றிருந்தனர். 1505 தொடக்கம் இலங்கை அந்நிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த போதிலும் 1831 இன் பின்னரே இலங்கைப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு கட்டமைப்பு சார் மாற்றங்கள் ஏற்பட்டன. காரணம் இலங்கை பூராகவும் ஒற்றையாட்சியின் கீழ் வந்தமையினால் வர்த்தக விரிவாக்கம் ஏற்பட ஏதுவாகியது.

அதற்கு முன்னர் கண்டிராச்சியம் சுதந்திர இராச்சியமாகவே இயங்கியது.  

கண்டிராச்சியத்தின் விளைபொருள்கள் கரையோரத் துறைமுகங்கள் ஊடாகவே ஏற்றுமதி செய்யப்பட வேண்டியிருந்தமையினால் வரிகளைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாக இருந்தது. 1831 வரையில் அந்நியர்களின் ஆட்சி இலங்கையின் கரையோரப் பகுதிகளிலிருந்து நாட்டின் உட்பகுதியை நோக்கி இருபது மைல்களுக்கு அப்பால் சென்றிருக்கவில்லை என்ற குறிப்புகள் உண்டு.

போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் தமது ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த கரையோரப்பகுதிகளில் விளைந்த கறுவா வர்த்தகத்தின் மூலம் அதிகளவு பொருளீட்டினர். நாட்டின் உட்புறத்தில் இயற்கையாகவே விளைந்த கோப்பி, ஏலம் மற்றும் ஏனைய வாசனைத் திரவியங்கள் மற்றும் இரத்தினக்கற்கள் போன்றனவும் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.  

இலங்கையில் வணிகரீதியில் பெருந்தோட்டச் செய்கையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் ஒல்லாந்தராலேயே மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் வடபுலத்தில் பருத்திச் செய்கையை பெருந்தோட்டச் செய்கையாக மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆங்கிலேய ஆதிக்கத்தைத் தொடர்ந்து இடைநடுவில் கைவிடப்பட்டது.     வீ ஓ சி என அழைக்கப்பட்ட கிழங்கிந்திய டச்சுக் கம்பனியே (Vereenigde Oostindische Compagnie- - VOC) இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியைத் நிறுவுவதிலும் வர்த்தகத்தில் ஈடுபடுவதிலும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தது. இலங்கையில் ஒல்லாந்தரைத் துரத்தி ஆங்கிலேயரின் ஆட்சியை ஏற்படுத்துவதில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியே (English East India Company) ஈடுபட்டது.  

இவ்வாறு மேற்குலக காலனித்துவ அரசாங்கங்களின் அதிகாரம் வழங்கப்பட்ட தனியார் வணிகக் கம்பனிகளே கீழைத்தேய நாடுகளிலிருந்து ஆரம்பத்தில் வணிகச் சரக்குகளை பெற்றுக் கொள்வதிலும் பின்னர் அந்நாடுகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் முன்னின்று செயற்பட்டன. தென்னிந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் சிற்றரசன் பற்றிய திரைப்படத்தில் வரும் ஆங்கிலேயக் கதை மாந்தர் ஆங்கிலக் கம்பனியின் பிரதிநிதிகளாக சித்தரிக்கப்பட்டமை நினைவிருக்கலாம்.

எனவே மேற்குலகத்தினர் கம்பனிகளை ஆதிக்கப் பெருக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர் என்பதை புரிந்துகொள்வது சிரமமில்லை. இன்றைய சூழலில் பல்தேசியக் கம்பனிகள் கீழைத்தேய நாடுகளில் நேரடி முதலீடுகள் ஊடாக பொருளாதார நீதியில் செல்வாக்குச் செலுத்தும் விதமும் நமக்கு மிகப்பரிச்சயமானது தான். 

இலங்கையில் ஆங்கிலேய கிழக்கிந்கியக் கம்பனி வலுவாக நிலைகொண்டதுடன் உள்நாட்டில் நிலவிய அரசியல் போட்டா போட்டிகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி 1815 வரை சுயாதீன இராச்சியமாக இயங்கிய கண்டி இராச்சியத்தின் ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். எவ்வாறாயினும் 1831 வரை கண்டிராச்சியம் தனியாகவே நிருவகிக்கப்பட்டு வந்தது.

இலங்கையின் நிருவாகச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் கோல்புறுக் மற்றும் கமரன் ஆகிய இருவரின் சிபாரிசுகள் காரணமாகவே இலங்கையில் முதன் முதலாக ஒற்றையாட்சி ஏற்படுத்தப்பட்டது. 

இதே காலப்பகுதியில் இங்கிலாந்தில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின்  விளைவாக அந்நாட்டின் ஆற்றுநீர் மாசுபட கைத்தொழிற்சாலைகளில் வேலைசெய்வோருக்கு உற்சாக பானமாக வழங்கப்பட்ட பியரைக் குடித்த பலர் வாந்திபேதியினாலும் மாண்டு போயினர். எனவே பியருக்கு மாற்றீடாக நீரைக் கொதிக்கவைத்து தயாரிக்கப்படும்  உற்சாக பானம் தேவைப்பட்டது.
அத்தகைய உற்சாக பானமாக கோப்பி தெரிவு செய்யப்பட்டமையால் கோப்பிக்கான கேள்வி அதிகரித்த. இலங்கை உட்பட்ட ஆங்கிலேய காலனித்துவ நாடுகளில் கோப்பித்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட இதுவே காரணமாய் அமைந்தது.  

கைத்தொழிற் புரட்சியின் மூலம் திரட்டப்பட்ட இலாபங்கள் காலனித்துவ நாடுகளில் கோப்பித்தோட்டங்களை ஆரம்பிப்பதில் முதலீடு செய்யப்பட்டன. அதற்கு வசதியாக நிலங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றவாறு பல்வேறு சட்டங்களும் இயற்றப்பட்டன.  

இலங்கையில் பெருந்தோட்டங்களை அமைப்பதற்கான நிலங்கள் முடிக்குரிய காணிச்சட்டம் மற்றும் தரிசு நிலச்சட்டம் என்பவற்றின் மூலம் பெறப்பட்டு ஆங்கிலேய தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன. மன்னராட்சி  காலப்பகுதியில் பொதுவசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஊழிய சேவையினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்ட இராஜகாரியம் என அழைக்கப்பட்ட இலவச கட்டாய ஊழிய சேவை வழங்கும் முறையினை ஒழிப்பதன் மூலம் பெருந்தோட்டங்களுக்குத் தேவையான ஊழியத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டது.

அத்துடன் வரிச்சுமைகளை அதிகரித்து உள்ளூர்வாசிகளை பெருந்தோட்ட வேலைகளுக்கு ஈர்த்துக்கொள்ளவும் முயற்சிக்கப்பட்டது.  

ஆயினும் அடிப்படைத் தேவைகள் மிகவும் குறைந்த மெதுவான கதியிலான வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட உள்ளூர்வாசிகளை பெருந்தோட்டங்களில் ஊழியத்தை வழங்கும் பொருட்டு ஈர்ப்பது சாத்தியப்படவில்லை.
பெருந்தோட்டங்களுக்குத் தேவையான நிதிவசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் இங்கிலாந்தின் ஒரியன்டல் பேங்கிங் கோர்பரேசன் வங்கி தனது கிளையை இலங்கையில் ஆரம்பித்தது. நாட்டுக்கோட்டை செட்டியார்களின் நிதி நடவடிக்கைகளுக்குப் போட்டியாக  வந்த முறைசார்ந்த வங்கியொன்றின் பிரவேசமாக இதனைக் கருதலாம். ஆயினும் இவ்வங்கியின் நடவடிக்கைகள் பெருந்தோட்டங்களுக்கு தேவையான வங்கி வசதிகளை வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தபடியினால் அதன் சேவை விரிவாக்கப்படவில்லை. அத்துடன் 19ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதியளவில் இங்கிலாந்தில் இவ்வங்கி முறிவடைந்து போனது.  

இலங்கையில் கோப்பித் தோட்டங்களின் உருவாக்கத்துடன் அத்துறைக்கு சேவை வழங்கும் பல்வேறு துணைச் சேவைகளின் விரிவாக்கமும் இலங்கையை அதுவரை அனுபவித்திராத புதிய பொருளாதார முறைமையொன்றுக்குள்     இட்டுச் சென்றது. அதுவரை காலமும் சுயதேவைப்பூர்த்தி இலக்கில் இயங்கிய குடும்பங்கள்,  கிராமங்கள் யாவும் படிப்படியாக பணப்பொருளாதாரத்திற்கு பழக்கப்படவும் புதிய பொருள்களை இறக்குமதி செய்து பயன்படுத்தவும் கற்றுக் கொண்டன.

குறிப்பாக கோதுமை மா, மண்ணெண்ணெய்,   தீப்பெட்டி, இலாந்தர் விளக்கு, பெற்றோமெக்ஸ் விளக்கு போன்ற புதுப்பொருள்களின் வருகை கிராமப்புறங்களில் வணிக நடவடிக்கைகளின் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவியது.  
வர்த்தகத்தை தீண்டத்தகாததாகப் பார்த்த சிங்கள சமூகம் படிப்படியாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு மாறியது கோப்பித் தோட்டங்களும் அதன் பின்னர் வந்த தேயிலைத் தோட்டங்களும் வெளிநாட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இலங்கையின் இறப்பர் தோட்டங்களும் தென்னந்தோட்டங்களும் உள்ளூர்வாசிகளுக்கு சொந்தமானவையாக இருந்தன. பிரித்தானிய ஆட்சியில் அவர்களுக்கு ஏவல் புரிந்து செல்வந்திரட்டிய நிருவாக அதிகாரிகளும் தனவந்தர்களும் இத்தகைய தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக  இருந்தனர்.  

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பொழுது இலங்கை ஒரு ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதார நாடாக மாற்றப் பட்டிருந்ததுடன் உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளும் அவற்றுக்கான துணைச் சேவைகளாகிய வங்கி, காப்புறுதி, போக்குவரத்து,  தபால் தொலைத்தொடர்பு களஞ்சியப்படுத்தல் போன்றனவும் கணிசமானளவு முன்னேறிய நிலையில் காணப்பட்டன. அபிவிருத்திக்கான ஆசியாவின் சிறந்த தெரிவாக இலங்கை இருந்தது என்று சொல்லப்படுவதன் காரணமும் அதுதான். (தொடரும்) 

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments