சட்டத்தின் பிடி இறுகப் போகும் இறுதிக் கட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

சட்டத்தின் பிடி இறுகப் போகும் இறுதிக் கட்டம்!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று காலை கொழும்பு சங்கிரில்லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், சினமன்ட் கிரான்ட் ஹோட்டல், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டிய சென்.செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் உள்ளடங்கலாக ஒரு சில நிமிட வித்தியாலத்தினுள் எட்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.

தெஹிவளை விருந்தினர் விடுதியொன்றிலும், தெமட்டகொடவில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றிலும் தற்கொலைக் குண்டுதாரிகள் தமக்குத் தாமே குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.

உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களுக்கு அன்றைய தினமானது மிகவும் முக்கியமானதொரு நாளாகும். இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறு தினதை உலகம் எங்கும் கிறிஸ்தவ மக்கள் அனுஷ்டித்து வருகின்றனர்.

அவ்வாறான புனிதமான தினம் ஒன்றில் இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான இந்தக் குண்டுத் தாக்குதல்கள் எமது நாட்டு மக்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் உறையச் செய்திருந்தன.

தேவாலயங்களுக்கு வழிபாடுகளுக்குச் சென்ற மக்கள், உயிர்த்த ஞாயிறு நாளைக் கொண்டாட ஹோட்டலுக்குச் சென்றவர்கள் என 270 உயிர்கள் பறிக்கப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானவர்கள் அன்றைய குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் இன்னமும் எழுந்து நடமாட முடியாது உடல்வழு இழந்தவர்களாக சக்கர நாற்காலிகளிலும், கட்டில்களில் படுத்த படுக்கையாகவும் இருக்கும் சோகம் தொடர்கிறது.

சஹரான் என்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுதாரி தலைமையிலான குழுவொன்றே இந்தத் தாக்குதல்களை நடத்தியிருந்ததுடன், இவர்கள் சர்வதேச கொடிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடிக்கு முன்னால் நின்று சபதம் எடுத்துக் கொள்ளும் வகையிலான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் அவ்வேளையில் வெளியிடப்பட்டிருந்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு அப்பால், அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த தற்கொலைக் குண்டுதாரிகளின் உறவினர்கள் எனக் கூறப்படுபவர்கள் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒளிப்பதிவு செய்த காட்சிகளும் ஊடகங்களில் அப்போது வெளியிடப்பட்டிருந்தன.

அப்பாவி மக்களைக் கொலை செய்வதற்குக் காரணமாகவிருந்த அச்சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத் துறையினரின் விசாரணைகளுக்கு அப்பால், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

அதன் பின்னர் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்ததுடன், ஆட்சி மாற்றத்தின் பின்னர் இது தொடர்பாக மீண்டும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் ஏறத்தாழ 214 நாட்களில் 457 பேருடைய சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு 472 பக்கங்கள் 215 இணைப்புக்கள் மற்றும் ஆறு பகுதிகளைக் கொண்டதாக இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இறுதி அறிக்கையை கடந்த 01ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கையளித்திருந்தனர். இந்த அறிக்கையில் பல்வேறு முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதுடன், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான இந்தத் துன்பியல் சம்பவத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டிய பலர் தமது பொறுப்புக்களிலிருந்து தவறியிருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனயீனமாக இருந்து விட்டார்கள் என கடந்த ஆட்சியாளர்கள் மீதும், அன்றைய அரசாங்கத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான முக்கிய அதிகாரிகள் மீதும் குற்றங்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதியின் கரங்களுக்குச் சென்றுள்ளது.

இது ஒருபுறமிருக்க, அப்பாவி கிறிஸ்தவ மக்கள் பலிக்கடாவாக்கப்பட்டிருந்த இத்தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், விசாரணைகள் நியாயமான முறையில் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்றும் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதன் பின்னர் 2020இல் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஆகியவற்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசாரங்களில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவேன் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார். அந்த துயர சம்பவம் தொடர்பாக இத்தனை காலமும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது ஒருவர் சுமத்திக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. இந்நிலையில் விசாரணை அறிக்கை தற்பொழுது ஜனாதிபதியின் கரங்களுக்குச் சென்றுள்ளது.

இதற்கு சமாந்தரமாக அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றுமோரு விசேட ஆணைக்குழுவை நியமித்துள்ளார். இவ்விரு ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையில் சட்டரீதியான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள விடயங்கள் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க் கட்சி வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. இவ்வார ஆரம்பத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்க் கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல ஆணைக்குழு அறிக்கைகள் இரண்டையும் உடனடியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார். எனினும், அரசாங்கத்திடமிருந்து இதற்கு எவ்விதமான பதில்களும் உறுதியாக வழங்கப்படவில்லை.

அதேசமயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஆரம்பம் முதலே உரிய அழுத்தத்தைக் கொடுத்து வந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரியுள்ளார்.

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் நீதியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவ்வாறு எமது மக்கள் எதிர்பார்க்கும் நீதி கிடைக்கா விட்டால் நாம் சர்வதேச அமைப்புகளின் உதவியை நாட நேரிடும்' என அவர் இப்போது கூறியுள்ளார்.

அது மாத்திரமன்றி, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை நான் கோரியுள்ளேன். அது இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. இனியும் எம்மால் காத்திருக்க முடியாது. ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கையின் பிரதியை விரைவில் எமக்குப் பெற்றுத் தர வேண்டும். அவ்வாறு கிடைக்குமானால் எமக்கு அது தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக் கொள்ள முடியும்” என்றும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கர்தினால் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை வழங்குமாறு சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த நாடும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அப்பாவி உயிர்களை பலியாக்குவதற்குக் காரணமாகவிருந்தவர்கள் யார் என்பது இந்த அறிக்கையில் புலப்பட்டுள்ளனவா என்பது எதிர்வரும் நாட்களில் வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பி.ஹர்ஷன்

Comments