வடக்கில் தமிழ் பௌத்தம்; பௌத்தம் ஏன் வடக்கில் செல்வாக்கு இழந்தது | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் தமிழ் பௌத்தம்; பௌத்தம் ஏன் வடக்கில் செல்வாக்கு இழந்தது

சென்றவாரத் தொடர்...

இலங்கையின் பௌத்த மத வரலாற்றில் முன்னிலைப்படுத்தி சிறப்பாக அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி கூறும் மகாவம்சத்தில்  கூட தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் 200 ஆண்டு காலப்பகுதியில் அனுராதபுரத்தை 21 மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் அதில் 10 தமிழ் மன்னர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தார்கள்.

அவர்கள் பௌத்தத்துக்கு மாறான மதத்தை உடையவர்கள் என்று மகாவம்சம் கூறினாலும் தமிழ் மன்னர்கள் பௌத்தத்தை ஆதரித்து அதன் வளர்ச்சிக்கு உதவியதற்கும் பௌத்த விகாரைகள் அமைத்ததற்கும்  அந்த இலக்கியத்தில் ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இந்த தமிழ் பௌத்தம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது. அபயகிரி விகாரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாம் நூற்றாண்டு தமிழ் சாசனம் முக்கிய ஆதாரமாக காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் வெல்கம் விகாரை அழைக்கப்படுவது சோழர் ஆட்சியில் ராஜராஜ பெரும்பள்ளி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. அந்த விகாரையின் வளர்ச்சிக்காகவும் நிர்வாகச் செயற்பாடுகளுக்காகவும் சோழர்கள் தானம் வழங்கியதை அங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன.

இவ்வாறு தமிழ் பௌத்தம் பிற்காலத்திலும் தொடர்ந்தற்கு நீர்கொழும்பு, குருநாகல், புத்தளம் போன்ற பகுதிகளில் 1970 களில் வாழ்ந்த தமிழ் பௌத்தர்கள் அரச நியமனங்களுக்காக சிங்கள பௌத்தர்களாக மாறியதற்கும் ஆதாரங்கள் உண்டு.

ஆகவே பௌத்தம் என்பது தமிழ் மக்களுக்கு ஒரு அந்நியமான மதமாக இருந்தது இல்லை. தென்னாசியாவிலேயே இந்து மதம் என்ற பெயர் 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் இடப்பட்ட ஒரு பெயராகும். இஸ்லாமிய மதத்திலிருந்து ஏனைய மதங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இந்து மதம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அந்த இந்து மதத்திற்குள்ளேயே பௌத்தமதம் அச் சமயத்தில் காணப்பட்டது.

இலங்கையில் பௌத்த மதம் பரவுவதற்கு வட இந்திய தொடர்பு ஒரு காரணமாக இருந்தாலும் அது வளர்வதற்கு தென்னிந்திய குறிப்பாக தமிழக தொடர்புகளும் செல்வாக்குமே முக்கிய காரணமாகும். ஏனெனில் இலங்கை பௌத்த விகாரைகளில் தங்கியிருந்து பாலி மொழி இலக்கியங்களுக்கு விளக்க உரை எழுதுவதில் தமிழ் பௌத்த குருமாரே முக்கிய பங்கு வகித்தார்கள் குறிப்பாக புத்தகத்த புத்ததேரோ, தர்மபால வச்சிரபோதி போன்ற பௌத்த துறவிகள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்து இங்கு தங்கியிருந்து விளக்க உரை எழுதியதாக பாலி இலக்கியங்கள் கூறுகின்றன.

கி.பி நான்காம் நூற்றாண்டில் சோழ நாட்டைச் சேர்ந்த மஹிந்த இலங்கைக்கு வந்து மகாயான பௌத்தம் மகா சாயனன்காலத்தில் வளர்வதற்கு காரணமாக இருந்தார் என பாலி இலக்கியங்கள் கூறுகின்றன. 

அதிலும் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், போதிசத்துவர்  சிலைகள், புடைப்புச் சிற்பங்கள் இலங்கையில் காணப்படாத ஒரு வகை பளிங்கு கற்களால் செய்யப்பட்டவை ஆகும். அந்த பளிங்கு கற்களால் செய்யப்பட்ட சிலைகள் ஆந்திராவில் இருந்தும் தமிழகத்தில் இருந்து வட இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக  பேராசியர் பரணவிதான உட்பட பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகவே இலங்கையில் சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழர்களும் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மையாகும். இன்று  சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் பௌத்தர்களாக இருப்பதை கொண்டும் தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாக இருப்பதை கொண்டும் பண்டைய காலத்திலும் அவ்வாறே இருந்தது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனெனில் பண்டைய காலத்தில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததற்கும் சிங்கள மன்னர்கள் மக்கள் இந்துக்களாக இருந்ததற்கும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக நீங்கள் பொலன்னறுவை இராசதானி கால வரலாற்றை ஆராய்ந்தால் அதில் 50 வீதமான கால ஆட்சியில் இருந்த மன்னர்கள் இந்துக்களாகவே இருந்திருக்கின்றார்கள். குறிப்பாக கஜபாகு இறுதிவரை ஒரு இந்து மன்னனாகவே இருந்து இறந்தான் என கோணேஸ்வர கல்வெட்டும் அவன் வெளியிட்ட தமிழ் கல்வெட்டுகளும் கூறுகின்றன. ஆகவே எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாடாக பார்க்கலாமே ஒழிய அதிலும் ஆதிகால எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாடு  எச்சங்களாக பார்க்கலாமே தவிர ஒரு இனம் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாக பார்ப்பதே இவ்வாறு முரண்பாடுகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகும்.

கே: வடக்கிலிருந்து பௌத்தம் மறைந்தமைக்கான காரணம் என்ன?

இதையிட்டு அறிஞர்கள் மத்தியில் வேறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். ஒன்று, ஏழாம்  நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் ஏற்பட்ட பக்தி  இயக்கத்தின் செல்வாக்கு.

பேராசிரியர் கேம் டீ சில்வா பக்தி இயக்கத்தின் செல்வாக்கு இலங்கையில் இந்து பௌத்தம் என்ற சமய முரண்பாடு தோன்றுவதற்கும் அது தமிழ், சிங்கள இன முரண்பாடு வளர்வதற்கும் காலப்போக்கில் தென்னிந்திய
படையெடுப்பாளர்களுக்கு தமிழர்கள் வாழும் பிராந்தியங்கள் ஆதரவு வழங்கும் தளங்களாக மாறுவதற்கும் காரணம் எனக் குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் பத்மநாதன் போன்ற அறிஞர்கள், பக்தி இயக்கத்தின் செல்வாக்கைத் தொடர்ந்து இலங்கை தமிழ் சிங்கள மக்கள் தமது தனித்துவத்தை அரசியலிலும் பொருளாதாரத்திலும் இராணுவத்திலும் காட்டுவதில் முனைப்பு பெற்றார்கள் என கூறுகின்றார்கள். இந்த பக்தி இயக்கத்தின் முரண்பாட்டால் இலங்கையில் பரந்துபட்டு வாழ்ந்த தமிழர்கள் இனம் மொழி மதம் பண்பாடு என்பவற்றால் ஒன்றுபட்ட தமிழகத்துடன் ஒன்றுபட்டார்கள். தமிழகத்துக்கு அண்மித்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இலங்கையில் வாழ்வது பாதுகாப்பாக அமையும் என்று இலங்கைத் தமிழர்கள் கருதியதாகவும் ஒரு கருத்தும் உண்டு. ஆகவே பௌத்தம் முற்றாக மறையாவிட்டாலும் கிபி ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் படிப்படியாக தளர்ச்சி அடைந்தது என்று ஒரு கருத்தை சொல்லலாம்.

13 நூற்றாண்டுக்குப் பின்னர் வடக்கில் புதிதாக பௌத்த ஆலயங்கள் தொடங்குவதற்கு வாய்ப்புக்கள் அமையவில்லை. ஏனெனில் 13ஆம் நூற்றாண்டு பொலநறுவையில் ஆட்சி புரிந்த கலிங்கமாகன் தமிழ் கேரள படைகளையே தனக்குப் பாதுகாப்பாக கொண்டிருந்ததனால் அவனுடைய அரசியல் நடவடிக்கைகள் பௌத்த சிங்கள மக்களுக்கு எதிராகவே இருந்தன.

பல பௌத்த விகாரைகளையும் சிங்கள மக்களுடைய வயல்களையும் பறித்து தமிழ் படைவீரர்களுக்கு வழங்கினான் என்ற குற்றச்சாட்டும் பாலி இலக்கியங்களில் காணப்படுகின்றது. கலிங்கமாகனை ஒரு தமிழ்  மன்னனாகவும் பல இடங்களில் வர்ணிக்கப்படுகின்றது. இந்த கொடூர ஆட்சியை விரும்பாமலே  பொலனறுமை இராசதானியும் சிங்கள மக்களும் தெற்கு நோக்கி நகர்ந்த்ததை காணமுடிகிறது.

இதைப் பாலி சிங்கள  இலக்கியங்கள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. அவ்வாறு தெற்கு நோக்கி நகர்ந்த சிங்கள ராஜதானியும் சிங்கள மக்களும் ஆரம்பத்தில் தம்பதேனியாவுக்கும் பின்னர் யாப்பபாஹூவ,  குருநாகல் கம்பளை கோட்டை எனவும் காலத்துக்கு காலம் இடம் மாறியதற்கும்  வரலாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றது.

இவ்வாறு பொலநறுவை வீழ்ச்சி அடைந்து சிங்கள மக்களும் இராஜதானியும் தெற்கு நோக்கி நகர்ந்த பொழுது கலிங்கமாகன் தலைமையிலே வடக்கில் ஒரு பலமான என்று சொல்ல முடியாவிட்டாலும் அவனுடைய ஆதிக்கம் நிலவியதாக சூலவம்சம் கூறுகின்றது.

அவ்வாறு சூலவம்சம் கூறுகின்ற இடங்கள் கிழக்கில் திருகோணமலை உள்ளிட்ட வட இலங்கை முழுவதுமே அவனுடைய ஆதிக்கம் நிலவி இருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள்  காணப்படுகின்றன. குறிப்பாக சோழ வம்சத்தில் கலிங்கமாகனின்  படைகளின் கோட்டைகள்  இருந்த இடங்களாக திருகோணமலை, கோணாமலை, பதவியா, மன்னார்,  மன்னார் பட்டனம் மாந்தை இலுப்பக்கடவை காக்தை தீவு வலிகாமம் போன்ற இடங்கள் குறிப்பிப்படுகின்றன.

கலிங்கமாகனிற்கு  பின்னர் சாகவனுடைய ஆட்சி வட இலங்கையில் ஏற்பட்டது. அவனுடைய படையெடுப்புகளும் கலிங்கமாகன் ஆதிக்கம் செலுத்திய இடங்களில் குறிப்பாக குறுந்தலூர் (குறுந்தூர்மலை), கலிங்கமாகன் - சாகவன்ஆட்சியில் முக்கிய ஒரு மையமாக இருந்ததாக பாலி இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.

இங்கே கலிங்கமாகனும், சாகவனும் பௌத்த்தை ஆதரிக்காத  மன்னர்களாக இருந்த படியினால் வட இலங்கையில் புதிதாக பௌத்த ஆலயங்கள் தோன்றியிருக்க வாய்ப்புகள் இருந்திருக்க முடியாது. இதுவே பௌத்தம் வட இலங்கையில் செல்வாக்கு இழப்பதற்கு காரணம் என்று நான் கருதுகிறேன்.

கலிங்கமாகன், சாகவன் ஆட்சியை தொடர்ந்து வடக்கிலே வன்னிப்பெரு நிலப்பரப்பில் ஏழு வன்னி மையங்களின் ஆட்சி உருவாகியது யாழ்ப்பாணத்தில் நல்லூரை தலைமையாகக் கொண்டு ஆட்சி உருவாக்கியது. ஆகவே இந்த காலகட்டத்தில் அவர்கள் இந்துக்களாக இருந்தமையால் வடக்கில் பௌத்த ஆலயங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை.

மேலும் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியில் சுதேச மதங்களுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிததனால் அவர்களுடைய ஆட்சியில் வன்னிப் பிரதேச கரையோரங்களில் அல்லது குடாநாட்டின் கரையோரங்களில் இந்து ஆலயங்கள் தோற்றம் பெறுவதற்கு வாய்ப்பு அமையவில்லை. ஆகவே 1812 வரை வன்னிச் சிற்றரசர்களின் ஆட்சியும் வடக்கே யாழ்ப்பாணத்தில் நல்லூர் ராஜதானியின் ஆதிக்கமும் இருந்ததால் அந்த காலகட்டத்தில் பௌத்தம் செல்வாக்கு இழந்தது என்பது என்னுடைய கருத்தாகும். (அடுத்தவாரம் முடியும்)

தமிழ்ச் செல்வன்

Comments