இன, மதவாத அரசியலை தாண்டினாலேயே சுபீட்சம் | தினகரன் வாரமஞ்சரி

இன, மதவாத அரசியலை தாண்டினாலேயே சுபீட்சம்

சமீபகாலமாக இலங்கையில் இருந்து வெளிவரும் அரசியல் செய்திகள் பிராந்திய அரசியலை மையப் புள்ளியாகக் கொண்டதாகவும் எனவே அவை சர்வதேச கவனத்தையும் கூடவே உலகத் தமிழர்களின் பார்வையையும் ஈர்த்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.  

ஒரு தீவு என்ற வகையில் அதுவும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் தீவாகவும் அமைந்திருப்பதால் ஒரு தீவுக்குரிய பண்புகளை இந் நாட்டில் காணலாம். இந்திய பெருநிலப்பரப்புக்கு அண்மித்ததாக அமைந்திருப்பதால், கலை, கலாசாரம், மருத்துவம், மொழி, சமயம் என மனித வாழ்க்கைக்கு மிக நெருக்கமான அம்சங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம். இது புவியியல் சார்ந்தது. இதை எவ்வகையிலும் மறுப்பதற்கில்லை. வளங்கள் நிறைந்த ஒரு தீவில் பலரும் குடியேறவும், தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் முனைவதும் இயல்பு. உதாரணத்துக்கு சைப்ரசைச் சொல்லலாம். அருகே இருக்கும் கிரேக்கத்தினதும் துருக்கியினதும் செல்வாக்குக்கு அத் தீவு உட்பட்டிருந்ததைச் சொல்லலாம். 

இலங்கைத் தீவும் இப் பண்புக்கு விலக்கானது அல்ல. புராண காலத்தில், நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், இராமன் இலங்கை மீது படையெடுத்து வெற்றி கொண்டதையும் பினனர் வங்காளத்து விஜயனும் அவனது தோழர்களும் இலங்கையில் குடியேறியதையும், தமிழ்நாட்டுத் தொடர்புகளுடன் அவனது வம்சம் வளர்ந்து விரிந்ததையும் காண்கிறோம். பின்னர் சோழர்கள் இலங்கை மீது படையெடுத்தனர். காசியப்பனை வீழ்த்துவதற்காக தென்னிந்திய சேனைகளுடன்தான் முகலன் திரும்பி வந்து சகோதரனை வீழ்ந்துகிறான். ஆங்கிலேருக்கு இறுதிவரை அடிபணியாது இலங்கையில் ஒரு சுதோ ஆட்சியை 1815வரை காப்பாற்றி வந்தவர்கள் தமிழ்பேசும் தெலுங்கு நாயக்க வம்சத்தின் ராஜசிங்கன்களே. பெளத்தமதம், பௌத்த கலாசாரம், குண்டலகேசி, மணிமேககலை ஆகிய பௌத்த காப்பியங்கள், இலங்கையின் ஆதாரகலைகள் என்பன இந்தியாவில் இருந்தே வந்தன.  

எனினும் சுதந்திரத்தின் பின்னர் தேர்தல் அரசியல் காரணங்களை முன்னிட்டு ஒரு இந்திய எதிர்ப்பு மனப்பான்மை, சிங்கள சமூகத்தில் புரையோடிப்போகும் அளவுக்கு, திட்டமிட்ட ரீதியாகக் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கிசைவாக இலங்கை சரித்திரம் வெகு நேர்த்தியாக எழுபதுகளின் பின்னர் மாற்றப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு பாடசாலைகளில் போதிக்கப்படும் வரலாற்றுப் பாடம், ஒரு பல்மத பல்லின, பல் கலாசார நாட்டில் இன, மத ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு உதவுவதாக இல்லை என்ற கருத்து கல்வியாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. வடக்கு கிழக்கை எடுத்துக் கொண்டாலும் சமூகங்களை பிரித்து நோக்கும் மனப்பான்மையை வளர்க்கும் வகையிலேயே அங்கே சமூக கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 1969இல் ஜே.வி.பியின் நிறுவிய தலைவரான றோஹண விஜேவீரவின் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற இளைஞர்களுக்கான வகுப்பு, இந்தியா நம்பிக்கைக்குரிய நாடு அல்ல என்ற விதையையே சிங்கள இளைஞர்மத்தியில் விதைத்தது. சிங்களம் படிக்க வேண்டியதில்லை என்ற மனப்பான்மை தமிழர் மத்தியில் விதைக்கப்பட்ட அதேசமயத்தில் தமிழ் கற்பதால் எந்த இலாபமும் கிட்டப்போவதில்லை என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் கிளர்ந்தது. 

இலங்கையில் காணப்படக்கூடிய இந்திய எதிர்ப்பு மனோநிலை, கட்சி அரசியல் சார்ந்த வெற்றிகளுக்கு பயன்படுமே தவிர, பொருளாதார சுபீட்சத்துக்கோ அல்லது விரிவானதொரு அபிவிருத்திக்கோ இட்டுச் செல்லப்போவதில்லை. 

கடந்த மார்ச் மாதம் இலங்கையில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் விளைவாக ஏற்கனவே பலவீனப்பட்டிருந்த எமது பொருளாதாரம் பெருத்த சரிவை சந்தித்திருக்கிறது. எமது முதல் பணி இச்சரிவில் இருந்து மீண்டு வருவதும், பொருளாதாரத்தை செப்பனிட்டு அபிவிருத்தி காண்பதுமாக இருக்க வேண்டும். அதற்கு தடையாக இருக்கக் கூடியவற்றை, அவற்றை பிரயோகிப்பதால் தேர்தல் வெற்றிகளைப் பெறக் கூடியதாக இருப்பினும், அகற்றுவதே இப்போது முக்கியம். கொரோனா தொற்றின் ஊடாக நாம் சில பாடங்களை கற்றேயாக வேண்டும். இந்நாட்டு மக்கள் இன, மத அடையாளங்களுடனும், பிரதேச அடையாளங்களுடனும் பார்க்கப்படுவதும் அழைக்கப்படுவதும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு இனம் மற்றொரு இனத்தை பரம்பரை சிந்தனைகளுடனும், நம்பிக்கைகளுடனும், ஆதாரமற்ற சந்தேகங்களுடனும் தொடர்ந்தும் நோக்கி வருமானால் எதிர்காலத்தில் நாம் சேமித்து வைக்கப்போவது எதுவுமாக இருக்கப்போவதில்லை. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டுடனான ஒரு முடிவுக்கு வர வேண்டியது மிகவும் முக்கியம். அதை நீடிக்கச் செய்வதில் பலன் இல்லை.
வன்மத்தால் ஆகப்போவது எதுவுமில்லை. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டா போட்டியால் நாம் பாதிக்கப்படும் நாடாக இருக்க முடியாது. சீனாவின் பிரசன்னம் இலங்கையில் அதிகரித்து வருவதாகவும் சீனாவின் கடல் பட்டுப்பாதையில் முக்கிய தளமாக இலங்கையை மாற்றுவதில் சீனா திட்டமிட்ட ரீதியாக செல்பட்டு வருவதாகவும் இந்தியா கருதுகிறது. அதற்கான நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. இந்தியாவின் முயற்சிகள் சீனா இலங்கை மீது கொண்டிருக்கும் செல்வாக்கை மட்டுப்படுத்துவதாக அல்லது சமன்படுத்துவதாக இருக்கிறது. இவ்விரு நாடுகளும் இலங்கையில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இரு நாடுகளையும் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக நாடு பயனடையலாம் என்றொரு கணக்கு இருந்தாலும் நீண்ட கால பலன்கள் கிட்டும் என்று சொல்வதற்கில்லை. தன் செல்வாக்கு மையத்தில் இருந்து இலங்கை நழுவிச் செல்வதை இந்தியா நிச்சயம் விரும்பாது. சீனக்கடல் பிராந்தியத்தில் வெளியார் தலையீடு செய்வதை சீனா முற்றிலும் விரும்பாததைப் போலவேதான் இந்தியா இலங்கை சீனா விவகாரத்தைப் பார்க்கிறது.

யாழ்ப்பாணத்தை அண்டிய முன்று தீவுகளில் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதற்கு இலங்கை அனுமதி வழங்கி இருப்பதை இந்தியா நிச்சயம் விரும்பப்போவதில்லை. தன் எல்லையோரமாக சீனா கட்டுமானங்களை மேற்கொள்வதை இந்தியா தடுக்கவே முயற்சிக்கும். 

ஒரு முறை இலங்கை விவகாரத்தில் இந்திராகாந்தி எவ்வாறு நடந்துகொண்டார் என்பதில் எமக்கு அனுபவம் உண்டு. கொரோனாவில் இருந்து மீண்டு வரும் ஒரு காலக்கட்டத்தில் இந்தியா, சீனா விவகாரத்தில் இலங்கை அரசு வெகு சாமர்த்தியமாகவும் அரசியல் தெளிவுடனும் காய்களை நகர்த்த வேண்டியது அவசியம். நாம் வெளிவர வேண்டியது இன, மத அரசியலில் இருந்து மட்டுமல்ல; இந்திய, சீன கூர் நகங்களில் இருந்தும் தான்.

Comments