விமல் வீரவன்சவின் ஒரேயொரு கருத்து! | தினகரன் வாரமஞ்சரி

விமல் வீரவன்சவின் ஒரேயொரு கருத்து!

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அன்றைய ஜனாதிபதியாக பதவியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து மிகவும் குறுகிய காலத்தில், அதாவது நான்கு ஆண்டுகளில் மிகத் தீவிரமாக உருவெடுத்த கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகும். மிகக் குறுகிய
காலத்தினுள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற கட்சியாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விளங்குகின்றது.

அக்கட்சி உருவாகி இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் வேறோரு அரசியல் கட்சி இவ்வாறு குறுகிய காலத்தில் எழுச்சி பெற்றதாக அறியப்படவில்லை. 

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் நடந்த சகல தேர்தல்களிலும் அதிக வாக்குகளைப் பெற்று தனது பலத்தை அக்கட்சி நிரூபித்துள்ளது.

இரண்டு தடவை ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ, 2015ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்தத் தோல்விக்கு அவர் பொறுப்பேற்ற அதேசமயம், மீண்டும் தங்களது ஆட்சியை உருவாக்குவேன் என அன்றைய ஆட்சியில் பொருளாதார அமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். தனது உறுதிமொழியை அவர் காப்பாற்றியும் உள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அன்று ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் அரசாங்கத்தின் ‘கிங் மேக்கராக’ பசில் ராஜபக்ஷ கருதப்பட்டார். மக்கள் மத்தியில் அவர் கொண்டிருந்த செல்வாக்கு மற்றும் அவரது அரசியல் மதிநுட்பம் ஆகியவையே இந்த நம்பிக்கைக்கான காரணங்களாகும்.

2015 தேர்தல் ஏற்பட்ட தோல்வியின் பின்னரும் அவர் சலிப்புற்று விடாமல், தனது ஒன்றிணைக்கும் ஆற்றலால் தாமரை மொட்டின் ஆட்சியை உருவாக்கியுள்ளார். இவ்வாறு உருவாக்கப்பட்டு, இன்று அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறியுள்ள பொதுஜன பெரமுன கட்சியானது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்தியதுடன் மாத்திரமன்றி, 2020 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பொதுஜன பெரமுன மாத்திரமன்றி, அதன் தோழமைக் கட்சிகளின் பங்களிப்பும் அதிகமாகவிருந்தது.
குறிப்பாக அன்று ஜனாதிபதியாக பதவியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததும் அவரை முன்னிலைப்படுத்தி மீண்டும் ஆட்சியை உருவாக்குவதற்கு முன்னின்றவர்களில் தற்போதைய அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன போன்றோர் முக்கியமானவர்கள்.

பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்படுவதற்கு முன்னர், ஒன்றிணைந்த எதிர்க் கட்சியாக மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி இவர்கள் செயற்பட்டு வந்தனர். பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்ட பின்னர் அதன் பங்காளிக் கட்சிகளாக இவர்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

அரசியல் பின்னணி இவ்வாறாகக் காணப்படும் நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச இன்றைய வேளையில் பொதுஜன பெரமுனவின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கடந்த வாரம் அமைச்சர் விமல் வீரவன்சவை கடுமையாகச் சாடியிருந்ததுடன், அவர் பொதுமன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். சாகர காரியவசம் கூறியிருந்த இக்கூற்று ஆளும் பொதுஜன பெரமுனவுக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் சிறியதொரு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஊடகங்கள் சமீப தினங்களாக பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கைத்தொழில் அமைச்சராக பதவியிலிருக்கும் விமல் வீரவன்ச சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் கூறிய கருத்தே இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்த கருத்தே இந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அக்காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக பதவியில் இருந்த போது நாட்டுக்காக அதிகளவு சேவையாற்றியிருந்தார். எனினும் நாட்டின் தலைவராக அவர் பொறுப்பேற்றதிலிருந்து சிறந்த அனுபவம் மிக்க ஒருவராக அரசியலில் ஈடுபடுவதாயின், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக  நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை மேற்கொள்ளாது அவரை ஜனாதிபதி அலுவலகத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தி வைத்திருப்பது பொருத்தமானது அல்ல. இது அவருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இணைப்பைப் பலவீனப்படுத்துவதாக அமையும். இது நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் நல்லதல்ல.

இவ்வாறு ஆபத்தான சூழ்நிலை உருவாக அனுமதிக்க வேண்டும் என்பது யாருடைய விருப்பம் என எனக்குத் தெரியவில்லை” என்பதே விமல் வீரவன்சவின் சர்சையை ஏற்படுத்தியிருக்கும் கூற்றாகும்.

அமைச்சர் விமல் வீரவன்சவின் இப்பேட்டி வெளியாகி சில நாட்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, அமைச்சர் விமல் வீரவன்சவை கடுமையாகச் சாடியிருந்தார்.

“பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சியின் தலைமைத்துவம் குறித்து விமர்சிப்பதற்குத் தகுதி அற்றவர். பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்குமாறு கூறுவதற்கு விமல் வீரவன்சவுக்கு எவ்வித தகுதியும் கிடையாது” என்று சாகர காரியவசம் கடும் தொனியில் தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமன்றி, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கு ஆதரவு வழங்கும் இரு உறுப்பினர்களையும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கொண்டிருப்பதாகவும், இந்தக் கருத்துத் தொடர்பில் விமல் வீரவன்ச உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் சாகர காரியவசம் கூறியிருந்தார்.

அதேசமயம், கடந்த வாரம் நடைபெற்ற ஆளும் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விமல் வீரவன்சவுக்கு எதிராக சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அன்றைய தினம் நீதிமன்றத்துக்குச் சென்ற காரணத்தால் அமைச்சர் விமல் வீரவன்ச அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும், விமல் வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற அமைச்சர்கள் சிலரும் ஏனைய உறுப்பினர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

இறுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்விவகாரத்தில் தலையிட்டு இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. எதுவாக இருந்தாலும், தனது நிலைப்பாட்டில் விமல் வீரவன்ச உறுதியாக உள்ளார் என்பது ஊடகங்களுக்கு அவர் வழங்கிய பதிலிலிருந்து புலனாகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் அசௌகரியத்தை எதிர்கொண்ட சில தினங்களிலேயே ஆளும் கட்சிக்குள் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன.
இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஜனாதிபதி பொதுக் கூட்டமொன்றில் கூறியிருந்த நிலையில், இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தை வழங்கும் முயற்சிகளை அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்த்திருந்தமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்தது.

துறைமுக தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு விமல் வீரவன்சவும் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததுடன், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய மற்றும் வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி போன்றனவும் அந்த ஆதரவுடன் இணைந்திருந்தன. கிழக்கு முனைய விடயத்தில் ஆளும் கட்சிக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தமை இன்றைய கருத்து வேறுபாட்டுக்கு திரைமறைவிலான காரணமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வாறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாகச் சந்தித்திருந்தன. இந்தத் திடீர் சந்திப்புத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, “நீண்ட நாட்களாக பங்காளிக் கட்சிகள் சந்திக்கவில்லை. அதனாலேயே சந்தித்தோம். அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்த விதமான நோக்கமும் எமக்குக் கிடையாது” எனக் கூறியிருந்தார்.

பங்காளிக் கட்சிகளின் இது போன்ற செயற்பாடுகள் பொதுஜன பெரமுனவை அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் இன்று சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஜே.வி.பியின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்த விமல் வீரவன்ச, தனது கட்சியின் கடப்பாடுகளை மீறி அப்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அரசாங்கத்துடனும் இணைந்து கொண்டார். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராகவும், அவரின் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராகவும் தொடர்ந்து வருகிறார்.

இன்றைய இந்த சர்ச்சையைத் தீர்ப்பதில் அரசின் முக்கியஸ்தர்கள் இன்று களத்தில் இறங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்விவகாரம் விரைவில் முடிவுக்கு வந்து விடுமென்பதே அரசாங்கத் தரப்பில் உள்ள முக்கியஸ்தர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

பி.ஹர்ஷன்

Comments