பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் இலங்கை விஜயம் 23ஆம் திகதி | தினகரன் வாரமஞ்சரி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் இலங்கை விஜயம் 23ஆம் திகதி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை மறுதினம் 23ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நாளை மறுதினம் 23 மற்றும் 24 ஆம் திகதி ஆகிய இரு தினங்கள் இலங்கையில் தங்கியிருப்பதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட உள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட வுள்ளதுடன் அவரை கௌரவிக்கும் வகையில் விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதையும் நடைபெறவுள்ளது.

23ஆம் திகதி பிற்பகல் 4. 15 மணிக்கு இலங்கைக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் பிரதமர் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.

மேற்படி நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதுடன் அதனையடுத்து 6.30 மணியளவில் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளனர்.

அதை வேளை மறுநாள் 24ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதனயடுத்து அன்றைய தினம் முற்பகல் 11 30 மணியளவில் கொழும்பு ஷெங்ரிலா ஹோட்டலில் நடைபெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள வுள்ள பாகிஸ்தான் பிரதமர், 12.30 மணியளவில் சபாநாயகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரால் ஒழுங்கு செய்யப்படும் மதிய போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாவல, கிரிமண்டல மாவத்தையிலுள்ள விளையாட்டு மத்திய நிலையத்தையும் அவர் பார்வையிட வுள்ளார். அன்றைய தினம் பிற்பகல் 03.00 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கப்பட உள்ள ராணுவ அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகை நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றதுடன் அமைச்சர் அதனையும் நேற்று பார்வையிட்டார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments