பார்வையால் ஊகிக்காதே | தினகரன் வாரமஞ்சரி

பார்வையால் ஊகிக்காதே

பங்குனி வெயில் சுட்டெரிக்கிறது நேரமோ பன்னிரண்டைக் கடக்கிறது மதிய சாப்பாட்டிற்கு மல்வத்தைக்கு போகவேண்டும் காலையில் குடித்த தேநீர் மட்டுமே பசியும் வேற ஒரு பக்கம் வயிற்றை கொல்கிறது. பஸ் வேற இன்னும் வரக்காணவில்லை. கடன் காரனிடம் கொடுத்த காசை மீட்க முடியாதவன் போல காத்திருப்பின் உச்சத்திலும் பொறுமையின் பக்குவமாய் காரைதீவு முற்சந்தியில் நிற்கிறான் குலேந்திரன்.

உச்சி வெயிலின் தாக்கமோ மேலங்கியை தாண்டியும் உடம்பில் வியர்வையை உண்டாக்கிய வண்ணம் இருக்கிறது. எதிரே இருக்கும் பிரதேச சபையில் போய் இருக்கவும் முடியாது காரணம் அன்று விடுமுறை தினம். திக்கு தெரியா காட்டில் திணறி திரியும் பசுபோல் பாதை ஓரத்தில் உள்ள மரத்தில் சாய்ந்து கொண்டு தனது கையடக்க அலைபேசியில் “ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்” எனும் பாடலை ஒலிக்கச் செய்து தனது அலுப்பை போக்கிக் கொண்டிருந்தான். 

நிமிடங்கள் கடந்தன பாடலும் முடியும் தறுவாயில் உள்ளது. இசையையும் வரிகளையும் ஒன்றித்தே ரசித்தான் குலேந்திரன். இருந்தும் அவன் பார்வை பாதையை நோக்கியே இருந்தது. ஏக்கத்தோடு அவன் கண்களுக்கு ஒரு விருந்து கிடைத்தாற் போல் தூரத்தில் ஒருவன் வருவதைக் கண்டான்.

“அப்பாடா! தனிமையின் அலுப்பை போக்க ஆள் வருதப்பா” என்று பெருமூச்சு விட்டான்.

புதுப்பொலிவுடன் பூரித்த அவன் முகம் இஞ்சி உண்ட குரங்கு போல முகம் சுளித்தான்.

மங்கையின் நளின நடையும் தலையை நாட்டிய பெண்போலவும் அசைத்து அசைத்து வரும் அவனைப் பார்த்து “அண்ணே கிழங்கு வேணுமா?” என்று விசித்திர குரலில் கூவி வந்தான். பாடலின் பின்னணி இசையிலும் அவன் நடத்தையிலும் அவன் ஒரு திருநங்கையோ என்ற எண்ணம் ஒரு பக்கம் குலேந்திரனின் மனதை குழப்புகிறது. மறு பக்கமோ வாட்டும் பசியும் உடம்பையும் முறிப்பது போல் இருக்கிறது. எது எப்படி இருப்பினும் உணவே மனிதனின் முதல் தேவையாச்சே “ அண்ணா எவ்வளவு” என்றான் குலேந்திரன்.

“ கூறு ஒன்று ஐம்பது ரூபாய் தம்பி” என்றான். “ஐம்பதா!” என்னடாப்பா. இவன் யானை விலை சொல்றானே ஒரு கூறிலே நான்கோ இல்லை ஐந்து தானே இருக்கிறது வேற என்ன செய்யிறது என்று முணுமுணுத்துக்கொண்டு “தாங்க அண்ணன்” என்றான். “என்னப்பா செய்யிற வெயில் காலமாச்சே பனங்கிழங்கும் பெரிசா இல்ல சரியான தட்டுப்பாடு நானும் நஷ்டத்தில தான் வாங்குற இந்தாப்பா” என்று புலம்பிக் கொண்டே பையில் இருந்த கூறுகளில் நல்ல கூறாப் பார்த்து ஒன்றை எடுத்து கொடுத்தான்.

குலேந்திரனும் வியப்புக்கலந்த வெட்கத்திலே இவன் எப்படிடா நாமா மனசுல நினச்சத்தை சொல்கிறான் என்று மெதுவாக கூறில் இருந்த கிழங்கை எடுத்து மெல்ல உடைத்து வாயில் இட்டான் “ம்ம் நல்ல கிழங்குதான் அண்ணே” என சிரித்துக்கொண்டு “ இது உங்களுக்கு கட்டுமா” என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். “வழியில்லா வாழ்க்கைக்கு வேறென்ன செய்ய முடியும இது தான் மிச்சம்” என்று சொல்லிக்கொண்டே பணத்தை பையினுள் வைத்தான். 

மெதுவாய் நகர்கிறது நேரமும் “ தம்பி எங்க போகனும் நீங்க இந்த மதியத்தில” என்றான் பனங்கிழங்கு வியாபாரி. “அண்ணே நான் வீரமுனை போகணும்” என்று பதில் சொல்லிக்கொண்டு “அண்ணன் நீங்க எந்த ஊர்” என்றான். “நான் கழுதாவளை பக்கம்” “கழுதாவளையா!” என்று மெல்ல உரத்த குரலில் கேட்டான் குலேந்திரன். “அப்போ எப்படி உங்களுக்கு இலாபம் வரும் அண்ணன் இங்க வருவதற்கு பஸ் காசு ஒரு பக்கம் நேரமும் கூட தேவைப்படும்” என்றான்.

“தம்பி நான் ஒரு நாளைக்கு ஆறு கிலோ கிழங்கு வாங்குவன் அதில் சுமார் நூறு தொடக்கம் நூற்றி பத்து கிழங்குகள் இருக்கும் அப்படியே அதை நல்லா துப்புரவு செய்து தண்ணீரில ஒரு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் ஊற போடுவன் பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு நல்லா அவிப்பன் அவிச்ச கிழங்க மீண்டும் கழுவி ரகம் ரகமா பிரிப்பன்.” என்று கூறிக் கொண்டு இருந்தார்.  

இடை இடையே வியாபாரியின் பெண்ணை போல உள்ள அவரது நடத்தையை நோக்கி கொண்டு இருந்த குலேந்திரன் தலை குனிந்தும் வேறு பக்கம் திரும்பியும் ஏளன சிரிப்பை அவருக்கு தெரியாமல் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தான். என்ன செய்வது மனித இயல்பே அடுத்தவரின் குறைகளையும் பிழைகளையும் கேலி செய்வதே தொழிலாய் போய் விட்டதே. இதை அவதானித்த வியாபாரியும் “என்ன தம்பி என்னை பார்த்தா சிரிப்பு வருதா? என்னத்த சொல்றப்பா என்னைப் போல் தெருவோர வியாபாரிகள பார்த்தா எல்லாருக்கும் கிண்டலும் கேலியும் தான் இது பரவாயில்லை நாங்க சுத்தமாத்தான் கொண்டு வாறம் ஆனால் வாகன புகைகளும் விதி தூசிகளும் எங்க பொருட்கள் மேல விழுது நாங்க என்ன பண்ண முடியும் மூடி வச்சாலும் காற்றில பறக்குது.

வாங்கிய பின் நீங்கதான் நல்லா கழுவி சாப்பிட வேண்டும். ஆனால் நீங்க எங்கள் மேல பிழை என்று சொல்லுவீங்க அப்படி இருந்தும் வேற யாரும் வாங்குனாலும் அது கூடாது என்று அவங்களையும் தடுத்தா என்னப்பா எங்க நிலமை” என்று தனது சோகத்தை புலம்பிக் கொண்டு இருந்தான் வியாபாரி. ஐயோ! பிழை செய்துவிட்டோமே என்று சிந்தித்துக் கொண்டே “அண்ணே அப்படி இல்ல நான் சும்மா தான் சிரிச்சன் மன்னிச்சு கொள்ளுங்க” என்று சமாளித்தான். வெட்கத்தில் துவண்டு போன குலேந்திரனை பார்த்து “உங்களை சொல்லவில்லை தம்பி பொதுவாகத்தான் சொன்னன்” என்றான்.  

மன்னித்த மறுகணத்திலே பிழை செய்பவனே நிகழ்கால மனிதன் ஆவான் என்று ஆகிவிட்டதே என்ன செய்வது குலேந்திரனும் அதற்கு விதிவிலக்கில்லை. அடுத்தவரின் குறை அறிந்து அவர் பிரச்சினைகளை கேட்டு அதில் குளிர் காய்வதில் அவனுக்கு அலாதி இன்பம் காரணம் நாகரிக வளர்ச்சியாம். கையில் இருந்த கிழங்கும் முடிந்து விட்டது “அண்ணன் இன்னுமொரு கூறு தாங்க” என்று கேட்டு வாங்கிக் கொண்டு “ஏன் அண்ணா நீங்க இப்படி இருக்கீங்க” என்றான் குலேந்திரன். வியாபாரியும் கவலையை மறைச்சிட்டு மெதுவான சிரிப்புடன் முகம் சுளிக்காமல் “தம்பி நீங்க கேட்க வாறது என்ன என்று நல்லா விளங்குது” என்று சாடினார். ஆகா என்ன ஒரு சந்தோசம் குலேந்திரனுக்கு மற்றவர் கவலையைக் கேட்டு ருசிப்பது என்றால் ஆர்வத்துடன் அந்த கதையை கேட்பதற்கு வியாபாரியைப் பார்த்த படியே நிற்கிறான் குலேந்திரன். “இவன் விட மாட்டான்” என்று நினைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

“தம்பி எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.ஒன்றுக்கு வயசு இந்த ஆடியோட பதினைந்தாகுது மற்றதுக்கு இப்போ தான் ஏழு  வயசு இளையவளுக்கு இரண்டு வயசு ஆகும்போது அவங்க அம்மா இறந்து விட்டாள். சொந்தம் பந்தம் என்று யாரும் பெரிசா இல்லை எல்லாமே தூரத்து உறவுகள் தான் நாங்க நல்லாத் தான் இருந்த” என்று பெருமூச்சு விட்டான்.

“பிறகு என்னாச்சு அண்ணே” மெதுவாக துருவ ஆரம்பித்தான். “எங்க ஊர் பக்கம் விவசாயம் தானே பெரும்பாலும் தொழில் நானும் அப்படித்தான் எனக்கு வீட்டோட சேர்த்து இரண்டு ஏக்கர் காணி இருந்தது. அங்கு நான் கத்தரி வெண்டி மற்றும் மிளகாய் போன்ற பயிர்கள் செய்தேன். அந்த வருமானமே தாராளமாய் இருந்தது குடும்ப செலவுக்கு திடீரென அவளுக்கு வந்த புற்று நோய்க்கு தான் காணிய வித்து செலவு செய்தேன் அதனால் காணியும் கடன்ல போயிற்று. பிறகு வாடகைக்கு தான் பயிர் செய்து வருகிறேன். பெண் பிள்ளைகளைப் பெற்றால் செலவும் அதிகம் தான்” என தனது சோகத்தை பகிர்ந்தான். 

பேருந்து ஒன்று அந்த வளியால் வந்து நின்றது அதில் நடத்துனன் சம்மாந்துறை தொழிநுட்ப கல்லூரி வரைக்கும் தான் போகும் என்றார். இதைக் கேட்ட குலேந்திரன் இல்லை நான் வரவில்லை என்று சைகையில் சொன்னார். இதை அவதானித்த வியாபாரி உடனே “தம்பி நீங்க வீரமுனைக்கு தானே போக வேண்டும் அப்போ ஏன் போகவில்லை” என்று கேட்டார். பொய்யை கண்டு பிடித்து விட்டானே இவனை எப்படி சமாளிக்கலாம் என்று திணறினான் குலேந்திரன்.

“இல்லை நான் பிழையாய் சொல்லிவிட்டன் மல்வத்தைக்குத்தான் போக வேண்டும்” என்று கூறினான். படிக்காத ஏழையோ உண்மையைத்தான் பேசுகிறான் ஆனால் படித்த நாமோ முன் எச்சரிக்கை எனும் பெயரில் சின்னச் சின்ன விடயத்திற்கும் பொய் சொல்லியே பழகிவிட்டோம் இருந்தாலும் பரவாயில்லை “வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது” இன்னுமொரு சுகமான செயலாய் போன பின்பு என்ன செய்வது நாம். அப்படித்தான் குலேந்திரனும் “அண்ணன் பிறகு என்னாச்சி?” என்று மீண்டும் துருவத் தொடங்கினான். அவனும் சலிக்காமல் “அவள் போன பின்பு பிள்ளைகளை வளக்கும் பொறுப்பு எனக்குத்தான் பெரியவள் கொஞ்சம் பரவாயில்லை இளையவள் தான் அறவே பிடிகொடுக்கமாட்டாள். நான் பொண்டாட்டியின் சட்டையை போட்டு தான் இரவில் பிள்ளைகளை தூங்க வைப்பன் ஆரம்பத்தில் அடம் பிடித்தாள் பின்பு நானும் கொஞ்சம் அவள் அம்மாவ போல பேசவும் நடிக்கவும் பழகினேன். தொடர்ந்து சில வருடமாக செய்து வர எனக்கும் அது பழக்கமாய் போய் விட்டதே பழக பழக பாலும் புளிக்கும் அதுபோல” என்றான். 

கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தால் போதுமே நமக்கு எப்படி ஆலோசனை வழங்கலாம் என்று எதிர்பார்ப்பிலே இருக்கிறோம் “அண்ணன் நீங்க இந்த பழக்கத்தை நிறுத்த ஏதும் முயற்சி செய்யவில்லையா?” என வினவினான். “ஆம் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வருகிறேன்” என்றான் வியாபாரி. “நல்லம்” என்று கூறும் போதே அம்பாரை செல்லும் பேருந்து வந்துவிட்டது. குலேந்திரனும் அதில் ஏறிச் சென்று விட்டான். இப்படித்தான் மற்றவரின் பிரச்சினைகளைக்கேட்டு அறிகின்றோம் இறுதியில் அது நமக்கு களிப்பூட்டும் கதையாய் மட்டும் கேட்டு விட்டு நகர்கிறோம். 

காரைதீவு சயூரன்

Comments