கொரோனா மரணங்கள் அடக்கம்; பரிந்துரைகள், நிபந்தனைகள் அடுத்தவார முற்பகுதியில் வெளியீடு | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா மரணங்கள் அடக்கம்; பரிந்துரைகள், நிபந்தனைகள் அடுத்தவார முற்பகுதியில் வெளியீடு

கொரோனா வைரஸ் மரணங்கள் அடக்கம் செய்வது தொடர்பில் பரிந்துரைகள், நிபந்தனைகள் மற்றும் கட்டளைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் விசேட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றுள்ள நிலையில் அது தொடர்பான பரிந்துரைகள், நிபந்தனைகள் மற்றும் கட்டளைகளை எதிர்வரும் வாரத்தின் முதல் பகுதியில் வெளியிடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவ ஆரம்பித்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணமடைவோரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டே வந்துள்ளன.

அதேவேளை சுகாதார அமைச்சின் தகவல்களின் படி கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைவோரை அடக்கம் செய்யும்போது அதற்கான பிரதேசங்கள் அரசாங்க சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புடன் வழங்கப்பட்டு அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணமடையும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்தல் அல்லது தகனம் செய்தல் தொடர்பாக தேவையான புதிய வழிகாட்டல்களை தயாரிப்பதற்காக நேற்றைய தினம் அதற்கான நிபுணர்கள் குழு கூடி ஆராய்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அடுத்த வாரம் அதற்கான பரிந்துரைகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் மரணமடையும் நபர்களை அடக்கம் செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பத்துடன் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கிணங்க இதுவரை நடைமுறையில் இருந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடான செயற்பாடுகள் திருத்தத்துக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை பல்வேறு சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments