மலையக வீடமைப்புத் திட்டம்: தோட்டத் தொழிலைச் சாராதோரும் உள்வாங்கப்பட வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

மலையக வீடமைப்புத் திட்டம்: தோட்டத் தொழிலைச் சாராதோரும் உள்வாங்கப்பட வேண்டும்!

கடந்த வாரம் மலையக வீடமைப்புத் திட்டம் கால தாமதமாகி வருவதன் காரணம் குறித்து பார்த்தோம். இந்த வீடமைப்புத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் ஏற்படப்போகும் பாதகத் தன்மை குறித்து இங்கே சிறிது அலசுவோம்.  

இவ்வாறான அணுகுமுறையால் தொடர்ந்தும் மலையகத்தில் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் போய்விடும் அவலம் இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்கள் மாற்று வீடுகளில் வாழும் அதேநேரம் தோட்டத் தொழிலைச் சாராதோர் பழைய லயன் வாழ்க்கையிலேயே காலம் தள்ள வேண்டி நேரிடும்.

இதனால் புதியதோர் சமூகப் பிறழ்வு இடம்பெற வழியேற்படப் போகிறது. ஒரு சாரார் அடிப்படை வசதிகளுடன் கூடிய தனித்தனி வீடுகளுடன் வாழ்வார்கள். இன்னுமொரு சாரார் லயக் காம்பராக்களிலும் தற்காலிக குடிசைகளிலும் குடியிருக்கும் சூழல் உருவாகும்.  

இதேநேரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில வீடுகளின் நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? பல இடங்களில் மூடப்பட்டு கிடக்கும் காட்சிகளை காணலாம். சில கைமாற்றம் கண்டுள்ளன. வாடகைக்கும் விடப்பட்டுள்ளன.   இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம் இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளானோர், பாதிப்புக்குள்ளாகலாம் என்னும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்போர் மற்றும் தீ விபத்தினால் நிர்க்கதியானோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. இத்தனி வீடு திட்டம் தொடர்பில் சில விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.

அரசியல் தொழிற்சங்க இலாபங்களை முன்னிலைப்படுத்தி தோட்டத்திற்கு 25, 50 வீடுகள் அடிப்படையிலும் தொழிற்சங்க ரீதியாக தமது அங்கத்தவர்களை மையப்படுத்தியுமே வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தோட்டங்களில் வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை தகுதி குறிப்பிட்ட தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக இருக்க வேண்டும் என்பதேயாகும் என்றும் குறைகாணல்கள் இருக்கின்றன.  

கட்டப்படுகின்ற வீடுகளின் தரம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதை ஊடகங்கள் ஆதாரத்தோடு வெளியிடவே செய்கின்றன.

அரசாங்கத்தின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த வீடமைப்புத் திட்டம் பற்றிய உத்தரவாதத்தை அரசாங்கமே தமது பொறியியலாளர்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பலரது அபிப்பிராயமாக இருக்கின்றது.  

இதேநேரம் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த சகல தரப்பினரும் உள்வாங்கப்படுகிறார்களா? என்ற கேள்வியெழுகின்றது. 1.8 மில்லியன் பேர் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இதில் 0.2 மில்லியன் பேர் மட்டுமே பெருந்தோட்டத்துறை தொழிலை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றார்கள்.  

இதன் மூலம் கணிசமானோர் காலத்தின் கட்டாயத்தின் பேரில் இத்துறைக்கு வெளியே தொழிலின் நிமித்தம் வெளியேறிய நிலை நிலவுகிறது. இப்படி வெளியேறியிருந்த போதும் அவர்களின் வாழ்விடமாக மலையகமே விளங்குகின்றது. ஆனால் மலையக வீடமைப்புத் திட்டம் பெரும்பாலும் பெருந்தோட்டங்களில் தற்போது வேலை செய்து கொண்டிருப்பவர்களை மட்டுமே மையப்படுத்துகின்றது. இதனால் தோட்டங்களில் வேலை செய்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வெளியிடங்களில் வேலை செய்வோர், தோட்ட சேவையாளர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்.

இதனால் தோட்டங்களையே நிரந்தர வாழ்விடமாக வரித்துக் கொண்டோர் பெரிதும் மனக்கிலேசம் அடைந்துள்ளனர்.   இன்று பெருந்தோட்டத்துறையில் போதிய வேலை வாய்ப்பு இல்லை. அதேநேரம் உழைப்புக்கேற்ற ஊதிய உயர்வும் கிடைப்பது இல்லை. இதனால் விரக்தியடைந்த தொழிலாளர்கள் வேறு வேலைகளைத் தேடி நகர்ப்புறங்களைத் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். லயக் காம்பிராக்களை மூடிவிட்டு குடும்பத்தோடு இப்படி வெளிவேலைக்காக சென்றோரும் உள்ளார்கள். இவ்வாறு வெளியேறிச் செல்வோர் அனைவரும் சுகபோக வாழ்வை அநுபவிக்கவில்லை. மாறாக அன்றாடம் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. சுரண்டல்களுக்கு ஆளாகும் பரிதாப நிலை. தொழில் சார்ந்த பாதுகாப்பு இல்லை. தொழில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இருந்தும் இவர்கள் வெளியிடங்களிலேயே தங்கி நிற்பதற்குக் காரணம் வேறு வழியேதும் இல்லாமையே ஆகும்.  

இதேபோல மலையக சமூகத்திடமிருந்து பெருமளவிலான ஆசிரியர்கள் உள்வாங்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. இவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளேயாவர். ஆசிரியர்களைத் தவிர அரச உத்தியோகத்தர்களும் தனியார் நிறுவனங்களில் பனிபுரிபவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் வெளியிடங்களில் தங்கி நிற்கக்கூடிய சூழலே காணப்படுகின்றது. எனினும் இவை நிரந்தரமான வாழ்விடங்கள் அல்ல. இவர்களது நிரந்தரமான வதிவிடம் என்பது பெருந்தோட்டப் பிரதேசமாக இருக்கின்றது. இவ்வாறானோர் சிலர் தோட்டக் குடியிருப்புகளை தமது பொருளாதார நிலைக்கேற்ப திருத்தியும் பெருப்பித்தும் கொண்டுள்ளார்கள்.  

இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் தொடர்ந்தும் லயன் காம்பிராக்களில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கான தார்மீக உரிமை இவர்களுக்கு இருக்கின்றது. இதற்கென காணித்துண்டுகளை பெற்றுத் தருவது முக்கியம்.

காணித்துண்டுகள் உரிமையாக்கப்படுமாயின் இவர்கள் சுய வீடமைப்புத் திட்டங்கள் மூலமாவது கடனுதவி பெற்று வீட்டுத்தேவையை பூர்த்திசெய்து கொள்ள வசதியாக இருக்கும். உண்மையில் தோட்டங்களுக்கு வெளியே வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே முன்னேற்றகரமான நிலையில் உள்ளார்கள்.

அநேகர் இன்றைய நிலையிலும் பின்னடைவை எதிர்நோக்கியே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வாடகை வீடுகளில் காலம் தள்ளுவது கடினம். நகரப்புரங்களில் சொந்தமாக நிலங்களை வாங்கவோ பொருளாதார வசதியும் போதாது. இதனால் இவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே காணப்படுகின்றது.  

தோட்ட ஆசிரியர்களுக்கென வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படுமென சொல்லப்பட்டது. அது தொடர்பில் இதுவரை எதுவும் ஆகவில்லை.

பெருந்தோட்டச் சேவையாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வரும் என்று கூறப்பட்டது அப்படியேதும் வந்தபாடில்லை. ஓய்வு பெற்றவர்களையும் ஒதுக்க மாட்டோம் என்றெல்லாம் வாக்குறுதிகள் வந்தன. ஆனாலும் நாட்கள் மட்டுமே நகர்ந்துக் கொண்டிருக்கின்றன.  

தேசிய ரீதியிலான வீடமைப்புத் திட்டம் வெவ்வேறு அம்சங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

சுயவீடமைப்பு முறைமை, விசேட வீடமைப்பு திட்டம், இலவச வீடமைப்புத் திட்டம் இப்படி பல. இதேபோல மலையக வீடமைப்புத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலைச் சாராத, தோட்டத்துக்கு வெளியே வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்ட மக்களும் பயன்பெறும் வண்ணம் சரத்துக்கள் உள்வாங்கப்படுவது அவசியமாகும். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இது குறித்து ஆவண செய்வாராயின் வரவேற்கக் கூடியதாக இருக்கும்    

பன். பாலா

Comments