கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

கடந்த ஞாயிறு (28.02.2021) ‘வசந்தம்’ தொலைக்காட்சியின் ‘தூவானம்’ நேர்காணல் நிகழ்வைக் கண்டு ரசித்து கேட்கவேண்டிதாயிற்று.

காரணம் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துத் தமிழ் தேசிய ஒலிபரப்பு செய்திகளை வாசிப்பதில் சிகரம் தொட்ட இருவர் சம்பந்தப்பட்டிருந்தனர்.

வேர்விளை – மருதானையூர் ஸனூஸ், எம் ஃபெரோஸ், கம்பளையூர் நாகபூஷணி கருப்பையா ஆகியோரின் வானொலிப் பங்களிப்பில் மிகவும் கவரப்பட்டவன். ரசிகன் இதில் மாற்றுக் கருத்து இல்லை.

இவர்களில், நேர்காணப்பட்டவர் ஸனூஸ். கண்டவர் நாகபூஷணி.

ஆசை ஆசையாக ஆர்வமாக ஸனூஸ் தன் வானொலி அனுபவங்கள் – முக்கியமாக அறிவிப்பாளனான விதத்தை அழகுற விவரித்துக் கொண்டே போனதை ரசித்துப் பார்த்துக் கேட்டவண்ணம் இருந்த பொழுது –
ஒரு கட்டம். “ஒரு லேடி” – “ஒரு லேடி” என ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஸனூஸ் ஒருவரைப் பற்றி அவர் பெயர் குறிப்பிடாமலேயே, சொல்லியவண்ணம் இருந்தார்.

அந்த “ஒரு லேடி” அத்தனை முக்கியமானவரே! அவர்தான் அவருக்கு அறிவிப்புக் கலையை, நுணுக்கத்தைச் ‘முதன் முதல்’ சொல்லிக் கொடுத்தவர்.

அதுவும் வானொலி நிலையம் வந்த பிறகல்ல. அல்லது ஒரு பயிற்சிக் கூடத்தில் அல்ல! ஒரு பாடசாலை விளையாட்டு நிகழ்வு (Sport meet) அவர் ஊரிலேயே நடந்த போது... அப்பாடசாலையின் அதிபராக இருந்த வெலிகம முக்தார். ஏ. முஹம்மத், மேனாள் கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலய ஆசிரியராகவும் இருந்தவர் (எனது நெருங்கிய நண்பர்) அந்தப் பின்தங்கியப் பிரதேச ஆசிரியமணியான “ஒரு லேடி” யையும் அந்தப் பாடசாலை விளையாட்டு அறிவிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அவரும் அறிவிப்பில் லேசுபட்ட அம்மணி அல்லர். ஆனால் வானொலியில் அன்று கொழும்புப் பகுதிப் பாடசாலை விளையாட்டு வைபவங்களுக்கு அவர்தான் அறிவிப்புத் திலகம்.

நம்ம ஸனூஸ் அப்பாடசாலையின் மாணவன். அறிவிப்பு என்றால் அத்தனை ஆர்வம்! வானொலிப் பெட்டியில் ஒலிக்கும் அறிவிப்புகளும், அறிவிப்பாளர்களும் அத்துப்படி!

அதிபர் முக்தார் ஏ. முஹம்மதை அணுகி, “ஸேர், ஸேர், எனக்கொரு சான்ஸ் தந்து பாருங்க ஸேர்” எனக் கெஞ்ச, பலருக்கு ஏணியாகவே வாழ்ந்த என் அதிபர் நண்பர், “சரியப்பா சரி! இந்த மேடத்தைக் கொழும்பிலிருந்து அழைப்பித்திருக்கிறேன்.
அவருக்கு உதவியாக மேடையில் இருந்து, அவரிடமே அறிவிப்பு நுணுக்கத்தை அறிந்து, உன் அறிவிப்பு ஆசையைத் தீர்த்துக் கொள்” என்று சம்மதிக்க அன்று வேர்விலையின் ஒரு ஸனூஸ் மாணவன் அறிவிப்பாளன் ஆனான்!

இந்த விவரங்கள் அத்தனையையும், அன்றைய நேர்காணலில் ஸனூஸ் எம். பெரோஸ் விவரித்து வானொலிப் படிகளை மிதித்த அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போனார்.

அவரை தொலைக்காட்சியில் கண்டவாரே கேட்கும் போது மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

நாகபூஷணியும் மிக ஆர்வமாக, எந்த இடைக்கேள்வியும் இடாமல் ஒரு ரசிகையாகவே கேட்டுக் கொண்டே இருந்தார்.

அப்பொழுது ஒரு லேடி ஒரு லேடி” என ஸனூஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை
சொன்னார.

அப்படிச் சொன்னவர், “அந்த ஒரு கொழும்பு லேடி யார், அவர் பெயர் விவரம் எதையுமே சொன்னாரில்லை! நாகபூஷணியும் இடைமறித்துக் கோட்டாரில்லை!

இது எப்படி இருக்கு?

இந்தக் கசப்பிலே கசந்து போய் நான் வழங்குகையில் அபிமானிகளுக்கும் இயற்கையாகவே ஓர் ஆவல் ஏற்பட்டிருக்கும், யார் அந்த ஒரு லேடி, என்பதை அறிய.

எனக்கோ, நேர்காணல் முடிந்த பிறகு ஏற்பட்டது, ஏன் இப்படி இருட்டடிப்பு? அந்த “ஒரு லேடி” அத்தனை அபாயகரமான பெண்ணா! அறிவிப்புத்துறையில் வளர, புகழடைய ஓர் ‘ஏணி’ யாக இருந்தவர் தானே....

இதற்குப் பதில் இருவருமே சொல்ல வேண்டும். அதாவது, ஸனூஸ் – நாகபூஷணி!

கசப்பு-2

தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் நன்றாகவே சூடுபிடித்து, நம் நாட்டைப் போலவே நானாவித ‘நாடக அரங்கேற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

சிறுபான்மைச் சமூகங்களாக தமிழர், முஸ்லிம்கள், கிறித்தவர், மலாயர் இங்கிருப்பது போல் அங்கு தமிழகத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மை. அப்படி இருந்தும் அவர்களை வளைத்து வாக்குகள் சேகரிக்க அங்கே பல கட்சிகளிடையே பலத்த போட்டி.

அந்த வகையில் சிறுபான்மை முஸ்லிம்கள் ‘சிதறு தேங்காய்கள் போல் சிதறி, பிரிந்து ஒருவருக்கொருவர் விரோதம் காட்டி வேறு வேறு, பள்ளிவாசல்களுக்குத் தொழப்போகின்றனர்.

நாகூர் கோவில் – கோட்டார் பிரதேசததில் உள்ள மூத்த எழுத்தாளர் “நமது முற்றம்” என்ற முஸ்லிம் சஞ்சிகை ஆசிரியர் ‘அபூ ஹாஷிமா’ என்ற ஜாம்பவான் கட்சி வாரியாக முஸ்லிம்கள் எப்படிப் பிரிந்து போய்க் கிடக்கின்றனர் என்பதற்குப் பட்டியல் தந்திருக்கிறார். பாருங்கள்.

* திமுக முஸ்லிம்கள்* அதிமுக முஸ்லிம்கள் * அமமுக முஸ்லிம்கள்* மதிமுக முஸ்லிம்கள் (வைகோ)* விசிக முஸ்லிம்கள்* பாமக முஸ்லிம்கள் (ராமதாஸ்)* இடது கம்யூனிஸ்ட் முஸ்லிம்கள்* வலது கம்யூனிஸ்ட் முஸ்லிம்கள்* தேமுதிக முஸ்லிம்கள் (விஜயகாந்த்)* சரத்குமார் கட்சி* முஸ்லிம் லீக்* தேசிய முஸ்லிம்லீக்* தமுமுக ஹைதரலி* மமக ஜவாஹிருல்லா* மஜத தமீமுல் அன்சாரி* எஸ்.டி.பி.ஐ. முஸ்லிம்கள்* ஆம் ஆத்மி முஸ்லிம்கள்* மதசார்பற்ற ஜனதாதளம் முஸ்லிம்கள்* காங்கிரஸ் முஸ்லிம்கள்* பிஜே. குறூப் முஸ்லிம்கள்* அல்தஃப் குறூப் முஸ்லிம்கள்* ததஜ குறூப் முஸ்லிம்கள்* சீமான் கட்சி முஸ்லிம்கள்* கமல்ஹாசன் கட்சி முஸ்லிம்கள்* இடி முரசுக் கட்சி முஸ்லிம்கள்* ரஜினி ஆதாரவுக் கட்சி முஸ்லிம்கள்* சமாஜ்வாடி முஸ்லிம்கள்* பாக்கா ஆதரவு முஸ்லிம்கள்* உனவசிக் கட்சி முஸ்லிம்கள்இப்பொழுது மூச்சு விடுங்கள்! அத்தனை பெரிய நீண்ட பட்டியல். அத்தனை பெரியபிரிவினை! இலங்கை முஸ்லிம்கள் பரவாயில்லையோ? மூன்று நான்கு கட்சிகளுக்குள் தாவித்தானே அடிபிடிகள்?

இனிப்பு

இந்த இனிப்பு சாதாரண இனிப்பு அன்று! அதிகமகமான சுவை கொண்டது. அதுவும், நமது முதுசம், நமக்கே சொந்தமான மகத்தான கலைஞர் பாடகர் வி. முத்தழகு பற்றியது. அவருக்கு மிகச் சமீபத்தில் நிகழ்ந்துள்ள ஓர் இன்பமான நிகழ்வு அவருக்கு அவர் குடும்பத்தாருக்கும் அமைதியும் ஆனந்தமும் அளிக்கக் கூடிய ஒன்று.

சிறிது நீட்டி முழக்கியே இந்த இனிப்பைப் பதிவிடுகிறேன்.

பெரும்பாலான நம்மகக் கலைஞர்களுக்கு-, அவர்கள் பாடகர்களாகவோ, நடிகர்களாகவோ, ஓவிய மணிகளாகவோ எப்படியும் இருக்கலாம் – ஆண்டாண்டு காலமாக உள்ள பிரச்சினை வீட்டுப் பிரச்சினை. கலைச்சேவை செய்து விட்டு அகாலத்தில் வந்தால் ஓய்வுக்கு ஒரு வசதியான இல்லிடம் இல்லை.

தோட்ட வீடுகளில் துணைவி குழந்தைகளுடன் கஷ்டவாழ்க்கை.

நம் அருமைப் பாடகர் முத்தழகுவும் அத்தகையவரே. இலங்கை வானொலி நிலையம் சமீபாக உள்ள டொரிங்டன் அவனியுவில் ஒரு தோட்டத்தில் வீடு. அதைத் தாண்டினால் டொரிங்டன் அடுக்கங்கள்.

நானறிய 50 ஆண்டுகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மாறி மாறி வரும் எந்த ஆட்சியிலும் வீட்டு விசயத்தில் விடிவு காலம் பிறக்கவில்லை. இத்தனைக்கும் பல அரசியல் மேடைகளின் இசைக் கச்சேரியில் தமிழில் முத்தழகுவும் சிங்களத்தில் ‘சூரியகுமார் முத்தழகேயும் ஒலிவாங்கிமுன் நிற்பார்கள்.

2020 இறுதிப் பொழுதுகளில், திம்பிரிகஸ்யாயப் (கொழும்பு -05) பகுதி பிராந்திய செயலகத்தில் உள்ள ஒரு பெண்மணிகள் விழித்தெழுகிறார்கள்.
பிரியந்த திஸ்ஸநாயக்க என்ற செயலகத்தலைவி, சுமித்ரா ஹேரத் என்ற கலாசார உத்தியோகத்தர் இருவரும், ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் புகழ்பூத்துள்ள ஓர் ஓவிய மணியான முயின் ஸஹீது என்பாருடன் முத்தழகு தோட்ட வீட்டின் முன் வந்து நிற்கிறார்கள். அவரை அழைக்கிறார்கள். உங்கள் வீட்டை பார்க்க முடியுமா என்கிறார்கள்.

பார்வையிட என்ன இருக்கிறது. கீழே ஒரு தட்டும் மேலே ஒரு தட்டுமான சிறு வீடு பயங்கர வசதிக்குறைவு. பார்க்கிறார்கள். செல்கிறார்கள்.
அதற்கு சில நாட்களில் அதிரடி காரியங்கள் தொடர்கின்றன.

உலகளாவிய புகழ் கொண்ட அந்த ஓவியர் முயின் ஸஹீத் தன் சொந்தப் பணத்துடன் சிலரிடம் நீதியும் திரட்டி மேசன்மார்கள் சிலருடன் வந்து சேர்கின்றார்.

வந்த தொழிலாளிகள் படுவேகமாக வீட்டுப் பழுதுகளைச் சீர்செய்கிறார்கள். வெள்ளையும் அடித்து முடிக்கப்படுகிறது.  ஓவியர் முயீன் ஸஹீத், தன் நவீன ஓவியத்திறமையை வீட்டுக் கதவில் காட்டுகிறார். (இங்கே, படத்தில் பார்க்கலாம்) இன்னும் எத்தனையோ அழகுபடுத்தல்கள் அரங்கேறுகின்றன. பிராந்தியச் செயலகப் பெண்மணிகளிருவரும் தோன்றாத்துணை.
இரண்டே வாரங்களில், அருமைபெருமையான பாடகரின் பாழ்பட்டுப் போய்க் கொண்டிருந்த வீடு புதுப் பொழிவுடன் காட்சியோ காட்சி!

நல்லவேளையாக, எந்த அரசியல்வாதியும் மூக்கை நுழைத்து படம் பிடித்து நாளேடுகளுக்கு அனுப்பவில்லை. நாளையோ மறுநாளோ எப்படியோ?

கசப்பையும் இனிப்பையும் வழங்கும் இந்தச் சாமான்ய எழுத்தாளனின் எழுது முனை விடுக்கும் வினா ஒன்று, புரவலர்களும், புகழுக்குரியவர்களும் பணத்தில் புரள்கிறவர்களும் தன் சமூகத்துப் பாடகன் ஒருவனுக்குப் பங்களா கட்டிக் கொடுக்க வசதியில்லாமல் போனாலும் இருக்கிற இரண்டு தட்டு ஒரு தோட்டத்து வீட்டை பழுது பார்த்துக் கொடுக்கவும் வக்கு இல்லாத வங்குரோத்துக் காரர்களாகி விட்டார்களா கேவலம், கேவலம்.

Comments