சர்வதேச மகளிர் தினம் மலையகத்தில் வெறும் பேசுபொருள் மட்டுமே | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச மகளிர் தினம் மலையகத்தில் வெறும் பேசுபொருள் மட்டுமே

தொழிற்சங்க காரியாலயங்களில் குறைந்த சம்பளத்தில் பெண்கள் பலர்  வேலை செய்து  வருகிறார்கள். இவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட மலையகத் தலைமைகள்  வழங்கத் தயாரில்லை. இந்த இலட்சணத்தில் இவர்கள் முழு மலையக பெண்களினதும்  விமோசனத்துக்காக மகளிர்  தினத்தில் மட்டும் குரல் கொடுப்பதும் வெறும்  ஏமாற்று. மலையக சமூகம் இதனைப் புரிந்து கொண்டு தம்மைச் சுதாகரித்துச்  செயல்படாதவரை பெண் விடுதலை, பெண்ணுரிமை எல்லாம் வெறும் பேசுபொருளாகவே  தொடரும்

சர்வதேச மகளிர் தினம் நாளை 8ம் திகதி கொண்டாடப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் பெண் தொழிலாளர்களது நிலைமையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இவர்களின் நிலைமையும் வேறுபடுகின்றது.  

சுமார் 100 கோடிக்கும் அதிகமான பெண்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளில் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஓரளவேனும் சமூக அந்தஸ்தைப் பெறக்கூடியவர்களாக காணப்படுகின்றார்கள்.
சமத்துவம், அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் இவர்களது அபிலாஷைகளுக்கு இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பாகுபாடு, அடக்குமுறை, உரிமைக்கான அங்கீகாரம் இன்மை, சமூகப் பாதுகாப்பு இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.  

இந்தப் பெண் தொழிலாளர்களின் நிலைமையை விட மிக மோசமான நிலைமையிலேயே பெருந்தோட்டப் பெண்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பெருந்தோட்டத் துறையில் 50 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கின்றனர். இதில் குடும்ப வருமானம் கூட இவர்களின் உழைப்பையே அடிப்படையாக கொண்டே  தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த அர்ப்பணிப்புக்கான கெளரவம் இவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதே கேள்வி.  

இன்று,  இலங்கை மகளிருக்காக அரசியலில் இட ஒதுக்கீடு, சிறப்பு சட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருக்கின்றன. குறிப்பாக  25 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம் மலையக பெண்களை சென்றடையப் போவதில்லை. சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்தியில் விடுதலைக்கான அறைகூவல்களிலேயே இப்பெண் சமூகத்தின் தலைமுறைகள் கரைந்து கொண்டிருக்கின்றது.  குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளிலும் தெற்காசிய நாடுகளிலும் பெண்களுக்கு அரசியல் சமவுரிமைமீதாக நசுக்கப்படுதல் இடம்பெறும் நிலையில் இங்கு மலையக பெண்கள் சகல துறைகளிலும் அடக்கியொடுக்கப்படும் பெருந்தோட்ட கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இன்று இவர்கள் வீடு, தொழில் என்ற வட்டத்துக்குள்ளேயே சுழல வேண்டிய கட்டாயத்தில் சமூகநிலை உள்வாங்கப்பட்டுள்ளது.
இவர்களை தன்னம்பிக்கை மிக்க சமூகமாக மாற்ற வேண்டிய கடமையை முன்னெடுக்க இங்கு யாரும் தயாரில்லை. இது மரபு ரீதியிலான பெண்ணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு.  

இதனால்தான் இவர்கள் மகளிர் தினங்களில் மட்டும் மகிமைப்படுத்தும் அம்சமாக மாற்றப்பட்டுள்ளார்கள். இங்கு மலையக பெண்களுக்கு சமஉரிமை, அரசியலில் இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுவோர் இவர்களின் அடிப்படைத் தேவைகளே ஆட்டம் கண்டிருப்பதை கவனத்தில் கொள்வது இல்லை. வேலைத்தள வன்முறைகள், வீட்டு வன்முறைகள் இவர்களை உளவியல் ரீதியாக பாதிப்பதை இவர்கள் புரிந்து கொள்வது இல்லை. 

உயர்தரம், சாதரணதரம் கற்ற பெண்கள் கூட கொழுந்து பறிக்கும் தொழிலுக்குத் தள்ளப்படும் சூழ்நிலை குறித்து எவருமே கவலைப்படுவது கிடையாது.   இங்கு சமூக எழுச்சிக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தவிர மலையகத்தில் தாராளமாக அனுமதிக்கப்பட்டுள்ள மது பாவனைக்கான வசதிகள்  சமூக, பொருளாதார  சீர்கேட்டினை உருவாக்குவதன் அழுத்தங்களினால் முற்றுமுழுதாக ஆக்கிரமிப்புக்குள்ளாவது மலையகப் பெண்களே!  

பிற மகளிர்  தாம் வாழ்ந்து கெண்டே வேறு சவால்களுக்கு முகம்கொடுக்கும்போது மலையக பெண்கள் வாழ்க்கையையே சவாலாக எதிர்நோக்க வேண்டியுள்ளது. குடும்ப மட்டத்தில், சமுதாய ரீதியில் ஓரங்கட்டப்படும் போக்கே நிலவுகின்றது. பாரம்பரியம், கலாசார மரபு போன்ற அலங்கார வார்த்தைகளால் இவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவது உண்மை. இவர்களது உணர்வுகளுக்கு மதிப்பே இல்லை.  பால் அடிப்படையிலான வேலைப் பாகுபாடு, கல்வி, சுயதொழில் வாய்ப்பற்ற நிலை, குடும்பம், சமூக ரீதியில் அவர்களது அர்ப்பணிப்பு அங்கீகரிக்கப்படாமை, குடும்ப ரீதியிலான வன்முறைகள், லயன் அறை வாழக்கை முறைமை, அடிப்படைத் தேவைகளுக்கான அலைச்சல், வேலைத்தள பாதுகாப்பின்மை (சிறுத்தை, பன்றி, குளவி தாக்குதல்கள், விஷ ஜந்துக்கள் கடி) வேலைத்தளத்திலும், வீட்டிலும் ஓயாத உழைப்பு, வருமான குறைவால் போஷாக்கின்மை, தொற்றுநோய், தொற்றாநோய்த் தாக்கு, பிரசவ மரணம், கருச்சிதைவு என பல பிரச்சினைகளால் நேரடியாகவே தாக்கத்துக்குள்ளாகி வருகின்றார்கள்.  

ஆனால் அதுபற்றிய கரிசனையோ, விழிப்புணர்வோ ஏற்படுத்த போதிய முயற்சிகள் இங்கு எடுக்கப்படுவதில்லை. இதுபற்றி அக்கறையின்றி வருடம் ஒருமுறை வரும் மகளிர் தினத்தில் மட்டுமே இவர்களை மாண்பு படுத்திப் பேசுவதும் ஆக்ரோஷமாக கோஷம் எழுப்புவதும் இவர்களை ஏமாற்றுவதே ஆகும்.  நாளாந்த தொழில் ரீதியிலான பிரசினைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வாக்குகளுக்காக இவர்களைப் பயன்படுத்தும் தொழிற்சங்க அரசியல் சுரண்டல்கள் நிறுத்தப்படுவது முக்கியம். மலையகப் பெண்கள் தமது சக்தியை உணர வேண்டியது கட்டாயம். எல்லாவற்றையும் தலையில் சுமந்து நாளாந்த வாழ்வியலோடு போராடி தாங்கும் இவர்கள் தாம் பிறரிலேயே தங்கியிருப்பதாக எண்ணும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும். இதற்கு தன்னம்பிக்கை கட்டாயம் அவசியம்.  
இதற்கு அமைப்பு ரீதியிலான செயற்பாடு தேவையாயிருக்கின்றது. மலையக தொழிற்சங்கங்கள் முயற்சித்தால் இதனை செய்யலாம். முடியாதது என்று எதுவுமே இல்லை. மலையக பெண்களுக்கு இப்போது முக்கியத்தேவையாக இருப்பது வாழ்வுரிமை. அதையாவது வழங்க முன்வருமா இச்சமூகம்? ஏனெனில் இன்று ஐ.நா போன்ற அமைப்புகளோ உலக பொருளாதாரத்தில் பெண்கள் வகிபாகம் பற்றியும் தொழிற்துறையிலும், பொதுப்பணிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் குறித்துமே பேசும் நிலை காணப்படுகிறது. மாறிவரும் தொழில் உலகில் பெண்கள் என்ற தொனிப்பொருளுடன் கடந்த வருட சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது இதன் அடிப்படையிலே ஆகும்.  

ஆனால் பெயருக்கு மகளிர் தினத்தை கொண்டாடும் நிலையிலேயே மலையக சமூகம் வழி நடத்தப்படுவது அவர்களது அறியாமைக்கு தீனி போடுவதாகவே அமையும். இந்நிலைமை மலையக தொழிற்சங்க, அரசியல் தலைமைகளுக்குச் சாதகமாக இருக்கலாம். ஆனால் மனிதபிமான ரீதியில் மாபெரும் துரோகம்.! நாட்டின் பொருளாதாரத்தில் இவர்களின் பங்களிப்புக்கு உரிய கெளரவம் கிடைக்கும் பட்சத்திலேயே இவர்களின் துன்பியல் வாழ்வு முற்றுபெற முடியும். பெண்களின் உரிமைகள் தேவைகள் அவர்கள் எதிர்நோக்கும் பிாச்சினைகள். முகம்கொடுக்கும் அநீதிகள் போன்றவற்றை இனங்கண்டு தீர்வுகாணும் நடவடிக்கைகளை எடுப்பதே மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதன் நோக்கம். 
மலையகப் பெண்களைப் பொறுத்தவரையில் இவையாவும் வெறும் கனவுகளாகவே இருக்கின்றன. மலையக தொழிற்சங்கங்கள் மாதர்  சங்கம், மகளிர் பிரிவு என்றெல்லாம் வைத்துக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்க காரியாலயங்களில் குறைந்த சம்பளத்தில் பெண்கள் பலர்  வேலை செய்து வருகிறார்கள். இவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட மலையகத் தலைமைகள் வழங்கத் தயாரில்லை. இந்த இலட்சணத்தில் இவர்கள் முழு மலையக பெண்களினதும் விமோசனத்துக்காக மகளிர்  தினத்தில் மட்டும் குரல் கொடுப்பதும் வெறும் ஏமாற்று. மலையக சமூகம் இதனைப் புரிந்துகொண்டு தம்மைச் சுதாகரித்துச் செயல்படாதவரை பெண் விடுதலை, பெண்ணுரிமை எல்லாம் வெறும் பேசுபொருளாகவே தொடரும்.

பன். பாலா

Comments