கிராமங்களை வலுப்படுத்தல்: அது நுகர்வு கலாசாரத்தை பின்பற்றியதாக இருக்கக்கூடாது! | தினகரன் வாரமஞ்சரி

கிராமங்களை வலுப்படுத்தல்: அது நுகர்வு கலாசாரத்தை பின்பற்றியதாக இருக்கக்கூடாது!

மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் கொழும்பை விட்டுவெளியேறி பிறந்த கிராமத்தில் ஒருசில நாட்கள் தங்கும் வாய்ப்புக் கிட்டியது. பிறந்து வளர்ந்து திரிந்த கிராமமே அடையாளம் காணமுடியாத அளவுக்கு எல்லாமே மாறிப் போயிருந்தது. ஆனால் அந்த புகையிரத நிலையம் மாத்திரம் அதே பாழடைந்த தோற்றத்துடன் மாறவே மாட்டேன் என்று அடம் பிடிப்பது போல் காட்சியளித்தது. கூடவே பாடசாலைக்கு ரயிலேறித் திரிந்த நான்கு தசாப்தங்களுக்கு முந்திய நினைவுகளையும்  கொண்டு
வந்து சேர்த்தது.

கடந்த நான்கு தசாப்தங்களில் இலங்கையின் குக்கிராமங்களில் கூட பாதைக் கட்டமைப்புகளும் கட்டடங்களும் பெருமளவில் அமைக்கப்பட்டு போக்குவரத்து ஓரளவு சீராக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. பாதைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. கோவிட் 19 நோய் காரணமாக உள்ளூர் விவசாயத்தை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக தற்போது உள்ளூர் மரக்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது. வாகனம் பயணித்த நெடுஞ்சாலையின் இருபறமும் மரக்கறி மற்றும் உள்ளூர் பழவகைகள் விற்கப்படும் தற்காலிக கொட்டில்களையும் சில இடங்களில் பெரிய விவசாய விளைபொருள் விற்பனை நிலையங்களையும் காணமுடிகிறது.  

அது மட்டுமன்றி உள்ளூர் நீர் நிலைகளிலிருந்து பெறப்படும் குளத்து மீன்களும் பாதையின் இருமருங்கிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கோவிட் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் உள்ளூர் விவசாயத்துறையும் உள்ளூர் மீன்பிடியும் இக்காலப்பகுதியில் விருத்தி கண்டன என்பது மத்தியவங்கி புள்ளிவிபரங்களிலிருந்து ஏற்கெனவே நமக்குத் தெரிந்தது தான்.  

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அந்நாட்டின் விவசாயத்துறை நவீனமயப் படுத்தப்பட்டிருப்பது அவசியமாகும். முக்கியமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பு முக்கியமான ஒரு அடிப்படைத் தேவைப்பாடாகும். வறுமை, பசி, பட்டினி போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் விவசாயம் தவிர்ந்த கைத்தொழில் மற்றும் சேவைத்துறையில் ஈடுபட்டுள்ளோரின் உணவுத் தேவைகளைக் குறைந்த செலவில் புூர்த்தி செய்யவும் விவசாய உற்பத்தித்துறை நவீனமயப்படுத்தப்பட வேண்டியது மிகமுக்கியமாகும்.  

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பணவீக்கம் ஏற்பட உணவுப் பொருள் விலையேற்றமே முக்கிய காரணியாக உள்ளது. உள்ளுர் விவசாயத்துறை நவீனமயமாக்கம் செய்யப்பட்டால் விவசாய உற்பத்திகள் அதிகரிக்கும். இதனால் உணவு விலை அதிகரிப்பதைத் தடுக்கலாம். சாதாரண மக்களின் வாழ்க்கைச் கணிசமான பகுதி உணவுக்காகவே செலவிடப்படுவதால் உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமானால் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள் எழுவதைத் தடுக்கலாம். உற்பத்திச் செலவின் மிகப்பெரிய பகுதி சம்பளங்களாக இருப்பதால் அதன் மூலம் உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்தலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது பொருளாதாரக் கட்டமைப்பில் விவசாயத்துறையின் பங்களிப்பு குறைவடைந்து கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகளின் பங்களிப்பு அதிகரித்துச் செல்வது பொதுவாக அவதானிக்கப்படும் ஒரு விடயமாகும். இலங்கையில் அத்தகைய ஒரு கட்டமைப்பு மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளமையை காணமுடிகிறது.  

2011 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு 8.83 சதவீதத்திலிருந்து 2019 ஆண்டில் 7.42 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை இதே காலப்பகுதியில் கைத்தொழிற்றுறையின் பங்களிப்பு 27சதவீதத்திற்கும் 28 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக இருந்ததுடன் சேவைகள் துறை 55.1 சதவீதத்திலிருந்து 58.2 வீதமாக அதிகரித்துள்ளது.  

எனவே பொருளாதாரத்திற்கு வழங்கப்படும் பங்களிப்பு என்ற வகையில் விவசாயத்துறையின் முக்கியத்துவம் வீழ்ச்சியடைந்து சென்றுள்ளது. ஆனால் இன்னமும் நாட்டின் கணிசமான எண்ணிக்கையினர் விவசாயத்துறையிலேயே தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். 2011 ஆண்டில் நாட்டின் தொழில் புரிவோரில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 33.1 சதவீதத்தினர் விவசாயத்துறையிலேயே வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்தனர். 2019 ஆண்டில் இச்சதவீதம் 25.3 ஆக வீழ்ச்சியடைந்த போதிலும் இன்னமும் தொழில் புரிவோரில் காற்பங்கினர் விவசாயத்துறையிலேயே உள்ளனர்.

சுருக்கமாகக் கூறினால் இலங்கையில் தொழில் புரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் நாட்டின் மொத்த உற்பத்திக்கு வெறும் 7.42 சதவீதப் பங்களிப்பை மாத்திரமே செய்கின்றனர். ஒரு வகையில் இது நாட்டின் முக்கிய வளமாகிய உழைப்பினை வீணடிக்கும் ஒரு செயலாகவே கருதவேண்டும். விவசாயத்துறையில் ஊழியத்தின் உற்பத்தித் திறன் மிகக்குறைந்த மட்டத்தில் உள்ளமைக்கு இதுவே காரணமாகும். விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதும் அத்துறையில் தங்கியுள்ள மிகை ஊழியத்தை அகற்றுவதன் மூலம் விவசாயத்துறையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.  

அத்தகைய ஒரு மாற்றம் கிராமிய மட்டத்தில் மிக மெதுவாக ஏற்பட்டு வருவதைக் காண முடிகிறது. கிராமிய விவசாயிகளாக இருந்தவர்களின் சந்ததியினர் இலவசக் கல்வி என்னும் ஏணியைப்பற்றி சமூகத்தின் மேல்மட்டத்திற்கு சென்றிருப்பதையும் அடுத்துவரும் சந்ததி அதில் முன்னரைவிட முனைப்பாக இருப்பதையும் உணரமுடிகிறது. இன்றும் கூட கொழும்பில் அரசதுறை நிறுவனங்களில் மிகஉயர்ந்த பதவிகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கிராமிய விவசாயத்துறையில் இருந்த வந்தவர்களாக இருப்பதைக் காணலாம்.  

ஏப்ரல் மாதத்தில் புதுவருட விடுமுறை காலப்பகுதியில் கொழும்பு வெறிச்சோடிப் போவதற்கு மக்கள் தங்கள் சொந்தக் கிராமங்களை நோக்கிச் செல்வதே காரணமாகும். நாம் ஆரம்பத்தில் சொன்ன கிராமத்தில் விவசாயத்துறையின் நவீன மயமாக்கம் பல்வேறு வடிவங்களில் இடம் பெற்று வருவதைக் காணமுடிந்தது. விவசாயத் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் நாற்றுமேடைகளில் வளர்க்கப்படும் சிறந்த விதைநாற்றுகள் தொடக்கம் கட்டுப்படுத்தப்பட்ட வளமாக்கி மற்றும் கிருமிநாசினிப் பிரயோகம் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் போன்ற மேன்மைப்படுத்தப்பட்ட நீர்முகாமைத்துவ முறைமைகளும் பின்பற்றப்பட்டு வருவதையும் நோக்க முடிகிறது. எவ்வாறாயினும் அறுவடையின் பின்னரான பயிரழிவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் போதியனவாக இல்லை. அத்துடன் போதிய களஞ்சியப்படுத்தல் மற்றும் முறையான சந்தைப்படுத்தல் வசதிகள் இன்னமும் எல்லா விவசாயிகளுக்கும் கிட்டுவதாகத் தெரியவில்லை.

தேங்காயின் விலை அதிகரிப்பு காரணமாக தென்னைப் பயிர்ச்செய்கையில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். புதிய தென்னந் தோட்டங்களும் உருவாகிவருவது மகிழ்ச்சி தரும் ஒன்றுதான்.

ஒரு கிராமம் தனது கிராமியத் தன்மையை இழந்து நகரமயமாக்கப்படுவதையும் நகர்ப்புற வாழ்க்கைக்குரிய நடை, உடை, பாவனைகள் வாழ்க்கை முறைகளின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வதையும் ஒன்றாகக் காணமுடிந்தது. காலையில் எழுந்தால் வகைவகையான குருவிகளின் ஓசைகள் அந்திசாயும் நேரம் தென்னைகளில் அடையவரும் கிளிகளின் கீச்சும் இரவில் கத்தும் வண்டுகளின் ஒலியும் ஆந்தையின் அலறலும் என கிராமத்துக்கே உரிய ஒலிகள். இன்னும் அவை கேட்கத்தான் செய்கின்றன. கூடவே இப்போது மயில்களின் அகவலும் சேர்ந்து கேட்பது ஆச்சரியமானது தான். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கடைத்தெருவில் ஒரு செல்லப்பிராணிக் கடை (pet shop) யையும் காணமுடிந்தமைதான்.
முன்னரெல்லாம் கிளி அல்லது மைனாவைப் பிடித்து வீட்டில் வளர்த்தார்கள். இப்போது வெளிநாட்டுப் பறவைகளை இங்கே இனப்பெருக்கம் செய்து பணம் பார்க்கும் தொழில்களும் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டபோது அவற்றை வாங்கும் அளவுக்கு நுகர்வுக் கலாசாரம் ஊடுருவி விட்டதா என்ற வியப்பே எஞ்சியது. முன்னர் கிராமத்தில் இருந்த கடைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது. வாங்குவோர் இருந்தால் தானே விற்போர் பல்கிப் பெருக முடியும்? ஆரம்பத்தில் அறிமுகமான பழைய வர்த்தகர்களில் ஒருசிலர் அடையாளங் கண்டு அதே சிநேகப் புன்னகையுடன் குசலவிசாரிப்புகள். கடைத்தெருக்களில் கொழும்பில் உள்ள அதே பிரதான வர்த்தக நாமங்கள் டெடிகேடட் ரெடிமேட் புடைவைக்கடைகள் என பலவும் நுகர்வுக் கலாசாரத்தின் பெருக்கத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

கிராமிய விவசாயப் பொருளாதாரம் பலமான ஒரு பொருளாதார அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அங்கிருந்து நிதிகளை நகரங்களுக்கு மாற்றும் கலாசாரம் பெருகிவருவதை வலியோடு நோக்க நேர்ந்தது. விவசாய ஏற்றுமதிக் கைத்தொழில்களோ அல்லது வேறு உற்பத்திக் கைத்தொழில்களோ அங்கு உருவாகி இருப்பதாகத் தெரியவில்லை. பெரிய கட்டடங்கள் உருவாகியுள்ள போதிலும் அவை வாங்கி விற்கும் தொழில்களின் பொருட்டோ அல்லது ஹோட்டல்கள் போன்ற சேவை உருவாக்கத்தின் பொருட்டோ கட்டப்பட்டனவேயன்றி உற்பத்திக் கைத்தொழில்களுக்காக உருவாக்கப்படவில்லை.

வணிகப் பெருக்கம் என்பது நுகர்வுக் கலாசாரத்தை அடியொற்றியதாக இருப்பதானது தற்போதையை அரசாங்கத்தின் கிராமங்களை வலுப்படுத்துவதன் ஊடாக பொருளாதார வளர்ச்சியை அடைதல் என்னும் எண்ணக்கருவுக்குப் பெருந்தடையாக அமைவதுடன் தாக்குப் பிடிக்கமுடியாத ஒரு நகரமயமாக்கலுக்கும் இட்டுச் செல்லலாம்.

மாறாக பொருளாதார நடவடிக்கைகள் ஏற்றுமதி வணிகத்திற்கு உகந்த உற்பத்திகளை ஊக்குவிப்பதாகவும் நீடித்து நிலைக்கக்கூடிய நுகர்வை மையப்படுத்தியதாகவும் அமைதல் வேண்டும். பூட்டான் போன்ற நாடுகள் பாரிய நகரமயமாக்கலுக்கும் நுகர்வுக் கலாசாரத்திற்கும் உட்பட்டிராத போதிலும் சூழலை மாசுபடுத்தாத பேண்தகு வளர்ச்சியையும் மகிழ்ச்சியான மக்கள் வாழ்க்கையையும் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதையும் இங்கே நினைவிற் கொள்வது பொருத்தம்.

கொழும்புக்கு மீளத்திரும்பும் போது சிலநாட்களுக்கு முன்னர் ஊருக்குச் சென்ற அதே பாதை மிகவும் நீளமாகி விட்டது போலத் தோன்றியது. (தொடரும்)

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்.

Comments