பேரளவு கைத்தொழில் விரிவாக்கத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்? | தினகரன் வாரமஞ்சரி

பேரளவு கைத்தொழில் விரிவாக்கத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?

1980களில் இருந்து கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் இலங்கையில் பதவியிலிருந்த அரசாங்கங்கள் பெரும் எடுப்பில் இலங்கையில் கைத்தொழில் விரிவாக்கத்தை அடையப்போவதாக பிரசாரங்களைச் செய்துவந்த போதிலும் யதார்த்தத்தில் இலங்கைப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்டளவு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தவல்ல கைத்தொழில் பெருக்கம்  இடம்பெறவில்லை. எவ்வாறாயினும் இலங்கையின் கைத்தொழிற்துறை தேக்க நிலையிலும் காணப்படவில்லை என்பதனையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.  

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகள் இலங்கையின் கைத்தொழில் துறையின் முதுகெலும்பாகக் காணப்படுகின்றன. மொத்த கைத்தொழில் முயற்சிகளில் 75 சதவீதத்திற்கு மேற்பட்டவையாக இவை உள்ளன. அத்துடன் மொத்த தொழில் வாய்ப்புகளில் 45 சதவீதத்திற்கு இவை பங்களிப்புச் செய்வதுடன்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்களிப்பை இவை வழங்குகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை உள்நாட்டுச் சந்தைக்கு பொருள்களை வழங்கும் நிறுவனங்களாகும். ஏற்றுமதிச் சந்தையுடன் தொடர்புடைய சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.  

ஏற்றுமதிகளுடன் தொடர்புடைய பெரிய கைத்தொழில் முயற்சிகளின் விரிவாக்கம் போதியளவு இடம்பெறாமையே இலங்கையின் பிரச்சினையாகும். அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகளுக்கும் ஏற்றுமதிகளில் ஈடுபட்டுள்ள கைத்தொழில் முயற்சிகளுக்கும் இடையில் பின்னோக்கிய அல்லது முன்னோக்கிய தொடர்புகளோ காணப்படவில்லை. ஜப்பான் போன்ற நாடுகளில் அவற்றின் ஏற்றுமதிக் கைத்தொழில் துறையோடு அவற்றின் சிறிய நடுத்தர  கைத்தொழில்கள் மற்றும் குடிசைக் கைத்தொழில்களும் நெருக்கமாகத் தொடர்பு படுத்தப்பட்டிருந்தன.  

உதாரணமாக, டொயோட்டா அல்லது நிசான் போன்ற வாகன உற்பத்தியாளர்களின் வாகன உதிரிப்பாகங்களில் பெரும்பாலானவற்றை மேற்படி சிறிய நடுத்தரக்  கைத்தொழில்களே உற்பத்தி செய்தன. இத்தகைய தொடர்புகள் மூலம் அந்நாடுகளில்   பெருங்கைத் தொழில்களுடன் சிறிய மற்றும் நடுத்தரக்  கைத்தொழில்களின் விரிவாக்கமும் ஏக காலத்தில் ஏற்பட்டது. மாறாக இலங்கையில் பெரிய அளவிலான ஏற்றுமதிக் கைத்தொழில்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதுடன் அவற்றுக்கும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கும் இடையில் எதுவிதத் தொடர்புகளும் காணப்படவில்லை. பெரிய ஏற்றுமதிக் கைத்தொழில்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும்போது எதிர்நோக்க நேரும் உள்நாட்டுச் செலவுகள் மிக உயர்வாகக் காணப்படுகின்றன. 

அதாவது அரசாங்க நிருவாகக் கடப்பாடுகளைப் பேணுதல் இறக்குமதி செய்யும் நாட்டினால் விதிக்கப்படும் பொருளின் தரம் குறித்த தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல் என்பவற்றுக்காக அதிக செலவுகளை எதிர்நோக்க நேரிடுகிறது. எனவே  தீர்வைத் தடைகளுக்கு மேலதிகமாக நிருவாகக் கட்டுப்பாடுகளால் ஏற்றுமதிகளின் செலவுகள் அதிகரிக்கின்றன. உதாரணமாக இலங்கையிலிருந்து பொருளை ஏற்றுமதி செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன. இவை காலதாமதத்தையும் பணச் செலவுகளையும் ஏற்படுத்துகின்றன. பல்வேறு அரச நிறுவனங்களின் ஒப்புதல்களையும் சான்றிதழ்களையும் பெறவேண்டிய நிலை உள்ளமையே அதற்குக் காரணமாகும்.  

அத்தகைய செலவுகளையும் காலதாமதங்களையும் எதிர்கொண்டு வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்து விரிவாக்கம் அடையும் அளவுக்கு சிறிய மற்றும் நடுத்தரக்கைத்தொழில்கள் இருக்கப்போவதில்லை.

பெரிய ஏற்றுமதியாளர்களே ஏற்றுமதிச் செலவினங்களையும் காலதாமதங்களையும் சமாளிக்க முடியாதுள்ளதாகக் கூறுகின்றனர். அத்துடன் அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே இவற்றைச் செய்வதன் மூலம் வாரந்தேடலில் (rent seeking behaviour) ஈடுபடுவதாகக் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இத்தகைய செலவுகளைக் குறைத்து ஏற்றுமதியாளர் ஒருவர் ஒரே நிறுவனத்தில் மாத்திரம் ஏற்றுமதி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து ஏற்றுமதி அனுமதியைப் பெறும் வண்ணம் ஒற்றைச் சாளர (single window) நடைமுறையினை அறிமுகப்படுத்த சிலகாலத்துக்கு முன்னர் முயற்சிக்கப்பட்டது. ஆயினும் அது நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை.

அதனுடன் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என்பதனை நேரடியாக அவதானிக்கும் வாய்ப்புக் கிட்டியமையை இங்கு குறிப்பிடுதல் பொருத்தம். எனவேதான் இலங்கைக் கைத்தொழிற்துறையின் முதுகெலும்பாகக் கருதப்படும் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் முயற்சிகள் பெரும்பாலும் உள்நாட்டுச் சந்தைக்காக உற்பத்தி செய்வனவாக உள்ளன.  

எனவே வெளிப்படைத்தன்மையான இலகுபடுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சிறிய தொழில் முயற்சியாளரும் வெளிநாட்டுச் சந்தைகளை இலகுவில் அடையும் வண்ணம் நிருவாகச்  சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்முலம் இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டுச் சந்தைத் தேவைப்பாடுகள் பற்றியும் போட்டித் தன்மை பற்றியும் புரிதலுக்கு வரமுடியும். பரிவாரங்களுடன் வெளிநாடுகளுக்குச் சென்று வர்த்தகக் கண்காட்சிகளைச் செய்வதனால் ஏற்றுமதிக் கைத்தொழில் அதிகரிப்போ  உள்நாட்டுக் கைத்தொழில் விருத்தியோ ஏற்படுமென எதிர்பார்க்க முடியாது.

களத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு நீண்டகாலத் தீர்வுகளை வழங்கிய நாடுகளே வெற்றிகரமான ஏற்றுமதி விரிவாக்கத்தையும் கைத்தொழில் விருத்தியினையும் எய்தின. அத்துடன் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்களை மையப்படுத்திய கைத்தொழிலாக்கத்தின் மூலம் துரித கைத்தொழில் விரத்தியிகையோ நாடுகள் எதிர்பார்க்க விரும்பும் ஆச்சரியங்களையோ அடைய முடியாது. 

பாரிளவிலான முதலீட்டுடன் மேற்கொள்ளப்படும் பேரளவுக் கைத்தொழில் விரிவாக்கத்தின் ஊடாகவே ஒரு நாடு கணிசமானளவு கைத்தொழில் விரிவாக்கத்தினை கண்ணுக்கு எட்டிய எதிர்காலத்தில் எய்த முடியும். இலங்கையில் வாய்ச்சவடால் பேசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதிலும் பெரும்பாய்ச்சலை எற்படுத்தவல்ல பாரியளவு முதலீட்டை நாட்டில் கொட்டக் கூடியளவுக்கு இடரை எதிர்நோக்கவல்ல உள்நாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் இல்லை.

அவ்வாறு இருப்பினும் இலங்கைக்கு வெளியிலேயே தமது பணத்தைக் கொட்ட முயல்கின்றனர். அரசியல்வாதிகளுடன் உள்ள தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக ஒருசில முதலீடுகள் நாட்டுக்குள் வந்தாலும் காலப்போக்கில் அவை கட்டிய கோட்டைகள் சரிந்து விழுவதையும் அரச அனுசரணைகளை நாடிநிற்பதையும் கடந்த கால அனுபவங்களிலிருந்து உய்த்துணர முடிகிறது. 

நாட்டில் நிலவும் முதலீட்டாளலுக்கான பற்றாக்குறையை வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு பூர்த்தி செய்யலாமென கடந்த காலங்களில் பெருமளவு எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக 2009 இல் உள்நாட்டு யுத்த முடிவின் பின்னர் இலங்கை மிகப்பரியளவில் வெளிநாட்டு முதலீட்டைக் கவருமெனவும் எதிர்வு கூறப்பட்டது. ஆயினும் அதே காலப்பகுதியில் இலங்கையுடன் சமமான வைத்த நோக்கப்பட்ட நாடுகள் பெற்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் செயலாற்றம் எவ்வகையிலும் திருப்திகரமானதாக இல்லை.

மறுபுறம் ஏன் இலங்கையால் எதிர்பார்க்கப்பட்டளவு முதலீடுகளைப் பெறமுடியவில்லை எவை அவற்றை ஏனைய நாடுகளை நோக்கி நகர்த்தின. என்ன செய்தால் அவற்றை எதிர்காலத்தில் கவர முயற்சிக்கலாம் என்பது பற்றிய சுயபரிசீலனைகள் நேர்மையாக மேற்கொள்ளப்பட்டனவா? அவதானிக்கப்பட்ட குறைபாடுகளைக் களைந்து முன்னேற்றங்கான முயற்சிக்கப்பட்டனவா? என்பது பற்றிய வினாக்கள் விடையற்ற நிலையிலேயே உள்ளன. நேர்மையாக இவற்றுக்கு விடைகண்டு நிபுணர்களின்  துணையுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் எதிர்காலத்திலாவது ஓரளவு முன்னேற்றம் காணலாம். அல்லாதுவிடின் ஒருவரை ஒருவர் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டிக்கொண்டு இப்போதிருப்பது போன்றே எப்போதும்  இருக்கலாம்.  

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

 

Comments