கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

கடந்த 16ல் நடைபெற்ற ஒரு நிகழ்வு மிகமிக இனிப்பானது. அதுவும் வழங்கப்பட்ட இடம் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அலரி மாளிகையில். 

அந்த இனிப்புச் சுவையுடன் சிலபல கசப்புகள் சேர்ந்து விட்டதால் கசப்பில் தரவேண்டியதாகிறது.  எவ்வாறாயினும் இனிப்பு என்னவென்பதைத் முதலில் தெரிவிப்பது முறை. 

இலங்கை வரலாற்றில் – அதுவும் கலைஞர்கள் வரலாற்றில் – ஒரு முக்கிய நாளாக 16.03.2021 செவ்வாய்க்கிழமை அமைந்தது. 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுசரணையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தான் ஒருகால மேடைக்கலைஞர் என்பதை மறவாமல் மிக்க ஆர்வமாக அதனை ஏற்பாடு செய்திருந்தார். 

மேடை நாடகக் கலைஞர்களுக்கு மட்டுமென முதன் முதலாக ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தைக் கொண்டு விபத்து, ஊனம், நோய் அகால மரணம், இயற்கை மரணம் எனக் கலைஞர்கள் அனைத்து வகை அசம்பாவித நிகழ்வுகளையும் சமாளிக்க வென்று ஆயிரம் ஆயிரம், லட்சம் லட்சம் பெறுமதி மிக்க காப்புறுதிப் பத்திரங்கள் கலைஞர்களை நேரில் அழைத்து தேநீர் விருந்தளித்து வழங்கி வைக்கப்பட்டன.   பிரதமர், மூத்த, சிரேஷ்ட கலைஞர்களை மட்டும் அழைத்து தன் கரங்களால் அளித்தார். 

இந்த வகையில், தமிழ்க் கலைஞர் இருவர் மட்டுமே மேடை ஏறினர். திருமதி செல்வம் பெர்ணான்டோ ஒருவர். மற்றவர், இந்தப் பேனாக்காரன், ஒருகாலத்தில் தமிழ் – சிங்கள மேடைகளை இணைத்தவன் என்ற வகையில், ஏனையோருக்கு அவரவர் இருக்கைகளுக்கே சென்று அவர் சார்பில் டவர் மண்டப அரங்க அறக்கட்டளைப் பணிப்பாளர்கள் வழங்கினர். 

இப்படியாக இனிப்புகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மேடை இசை நிகழ்ச்சிகள் மற்றும் மேடைத் திரையில் ஓடிக் கொண்டிருந்த காப்புறுதி விவரணச் சித்திரங்கள்! அனைத்தும் சிங்களத்தில் மட்டுமே! மேடை அலங்காரத்தில் எந்தத் தமிழ்ப் பதாகைகளும் இல்லை. ஜனசக்தி காப்புறுதித் திட்டம் என்று கூட ஒரு பெயர்ப்பலகை இல்லை. 

பிரபல தொகுப்பாளினி, நடிகை ரஞ்சனி ராஜ் மோகன் மட்டும் நறுக்குத் தெறித்தாற் போல தமிழ் ஒலிக்கச் செய்தார் அறிவிப்புகள் மூலம்.  இவை எல்லாவற்றையும் தூக்கி வீசக் கூடிய முக்கிய கசப்பு. இதை நீங்கள் படிக்கிற இன்றையப் பொழுதுவரையில் தமிழ்க் கலைஞர்கள் எத்தனை பேர் காப்புறுதி பெற்றனர்? கொழும்புப் பகுதியிலிருந்து யார், யார்? வடக்கில் எத்தனை கிழக்கில் எத்தனை? வடக்குலிருந்து தேர்வான மூத்த கலைஞர் யார் எவர்?  
ஊஹூம்! ஒரே மூடு மந்திரம் மர்மம்! 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகை கலைஞர்களையும் யூகமாகச் சொன்னார்கள். முறையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியவர்கள் மௌனிகளாக, அங்கும் இங்கும் ஓடித்திரிந்தார்கள்! ஊடகங்களுக்கு வைபவத்தின் பின் அனுப்பி வைக்க வில்லை! நானும் கேட்டு அலுத்துப்போனேன். (செய்திருந்தால் ஆளுக்கு முந்தி ‘தினகரன்’ கடமையைச் செய்திருக்கும்)  கடவுளே, கலைஞர் என் போர், அதுவும் தமிழ்க் கலைஞர் மலையகத் தொழிலாளப் பெருமக்கள் போல் பாவப்பட்ட ஜன்மங்கள் தானா?  

கசப்பு-2

கடந்த 21ந் திகதி ‘வாரமஞ்சரி’யின் 28ஆம் பக்கத்துக் கட்டுரை ஒன்று எத்தனை பேர் பார்வையில் பட்டதோ, சொல்கிறேன் தலைப்பை” இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையப்போக்கு”  

“சிறி மதன்” என்கிறவரது கட்டுரை அது. அவர், இலங்கையின் சகல தமிழ் வானொலி அலைவரிசைகளையும் ஊறுகாய்போல் தொட்டுப் பார்ப்பதில் வல்லவராகத் தோன்றுகிறார். 

பாராட்டுகள். கட்டுரையின் பெரும்பகுதி ரேடியோ சிலோன் ஆகிய இலங்கை வானொலி பற்றியதே. அதன் பாரம்பரியம், பன்முகப் பரிமாணம் பற்றிப் பதித்திருக்கிறார். 
உண்மை, முன்னொரு காலத்தில் அப்படி இருந்தது உண்மை! இன்றை நிலையில் நிறையக் கசப்புகள் இருப்பது தான் யதார்த்தம் 

‘சிறி மத’னுக்கு ஒரு பொருளை அடையாளம் காட்டுகிறேன். அது ‘அரிவாள் மணை’ பார்த்திருக்கிறாரா? கேள்விப்பட்டிருக்கிறாரா? தமிழ்ச் சமூகக் குடும்பச் சமையலறையில் அது அரசோச்சும்! (முக்கியமாக தமிழ் இல்லங்களில்) தமிழ் எழுத்து “உ” போன்ற அமைப்புடன் கூடிய இருப்புத் தகடாலானது. காய்கறிகளை அரிவதற்குப் பயன்படும் சமையலறைச் சாதனம்.  

இத்தகையச் சாதனத்துடன் ஒப்பிடக்கூடிய இடமாக இப்போதைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை அழைக்கலாம். ஏன், “அரிவாள் மணைக் கூட்டுத்தாபனம்” என்றும் மாற்றுப் பெயர் சூடி அழைக்கலாம். 

பொழுது விடிந்தால் பொழுது போனால் யாருக்கு வெட்டு விழும், யாருக்குக் காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனை நோக்கி, ஓடுவார்கள் எனக் கணிக்க முடியாது! 

பாருங்கள், புதிய ஆட்சி பீடமேறியதும் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். நாலோ ஐந்தோ நாள் தான் அவர் பதவி நாற்காலியில் அமர்ந்திருந்தது. போய்விட்டார். அப்புறம் ஒரு மாதகாலத்தில் உலகிலிருந்தும் போய் விட்டார். அவர் ஒரு நல்ல நாடகக் கலைஞர்.  அந்தத் தலைவரின் நாற்காலிகள் பிரபல பாடகர் ஒருவர் வந்தமர்ந்தர். ஒரு பதினைந்து நாட்களுக்கு முன் அவரும் ‘அரிவாள் மணைக் காய்த்திற்குள்ளானார். 

பணிப்பாளர் சபைக்காரர்களுக்கும் காயங்களாம். ஆனால் ஊர்ஜிதப்படுத்த அவகாசமில்லை. 

சரி, பெரிய தலைகளுக்குத் தான் இப்படி வெட்டு, குத்து என்றால் சிறு கடைநிலை ஊழியரிலிருந்து பகுதி நேர அறிவிப்பாளர் ஈறாக அரிவாள்மணைக் காயங்களுக்குக் காரண காரியமில்லாமல் ஆளாவது சகஜமாகிவிட்டது. பொழுது போக்கும் ஆகிவிட்டது.  இது, “நேயர்” பெருமக்களுக்கும் நிகழும். அவர்கள் பல கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி, தங்கள் விருப்பப்பாடலைக் குறிப்பிட்டு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வெட்டு துண்டிப்பு! பலர் அனுபவித்திருப்பீர்கள். 

ஆக, கொட்டுவதிலும் கொத்துவதிலும் கைதேர்ந்த ஓர் இயல் இசை – நாடக ஊடகமே இன்றைய இ. ஓ. கூ.  அது என்ன வரம் கேட்டு இயங்குகிறதோ அறிய இயலவில்லை அறிவு ஜீவி அல்லாத எனக்கு! 

ஆனால் ஒரு தகவல் மட்டும் தெரியும். இப்போதைய டொரிங்டன் சதுக்க நிலையக் கட்டடம் ஒரு சமயம் ‘மன நோயாளர்’ தங்குமிடமாகவும் வைத்தியம் பார்க்கும் இடமாகவும் இயங்கியது. பல மன நோயாளர் இறப்புகளும் அங்கு நடந்துள்ளன.! 

இனிப்பு

இந்த படத்தை பாருங்கள், முதுமையிலும் முகம் லட்சுமிகரமாக இருக்கிறது. கடந்த 23ல் நூற்றாண்டுப் பிறந்த நாள். (1921.03.23)  ஆனால் கொண்டாடியது யார்? நினைத்துப் பார்த்தவர்கள் யார்? 

‘திரிபுரசுந்தரி’ – என்ற பெயருடைய இவர் தமிழகத் திருச்சிமா நகர் தொட்டியம் கிராமத்தவர்.

18ஆம் அகவையில் மருத்துவம் கற்க சென்னை மண்ணை மிதித்தார்! தொடர்ந்து கற்கப் பொருளாதாரப் பிரச்சினை. எழுதி் சம்பாதிக்கலாமா, என்று யோசித்து, ‘ஆனந்த விகடன்’ நிறுவனர் எஸ்.எஸ். வாசனையும், பொறுப்பாசிரியர் ‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தியையும் கண்டார். வெற்றி! 

1940- 03.10ல் ‘விகடன்’ முதல் கதையை வெளியிட்டு ஏழே ஏழு ரூபாய் சன்மானம் அளித்தது! அப்பொழுது அது பெரிய தொகை! அந்த ஆண்டு மொத்தம் 13 கதைகள் எழுதினார் “லட்சுமி” என்ற பெயரில்! 

தமிழ் வாசகர் வட்டம் நல்லதொரு படைப்பிலக்கியவாதியை புகழுடன் விளங்கிய ‘ஆனந்தவிகடன்” மூலமாகப் பெற்றது.  

‘50களில் என் ஒரு கரத்தில் ‘கல்கண்டு’வும் ‘கண்ணன் பயிலும் இருப்பான். மற்றொரு கரத்தில் ‘விகடன்’ சிரிப்பான். இதழ் வாங்கக் காசில்லாத போது அடுத்த வீட்டு கண்ணாடிக்காரர் மொகிதீன் நாநா இலவசமாகப் படிக்கத் தருவார். 

‘லட்சுமி’ என்ற மருத்துவக்கல்லூரி மாணவி எழுதிய. சிறுகதைகள், புதினங்களையும், மகப்பேற்று மருத்துவ நிபுணர் திரிபுரிசுந்தரி வழங்கிய மருத்துவ நூல்களையும் கரைத்துக் குடித்த சாமான்ய வாசகன் நான். 

அந்த வகையில், “தாய்மை” என்ற நூல் சிறந்த மருத்துவ நூலாகத் தேர்வாகி இலங்கையில் நடந்த ஒரு தமிழ் மாநாட்டில் விருதும் கௌரவமும் பெற வந்தவரை அணுகிப் பேசக் கூச்சப்பட்டவன் நான்! 

இதே இலங்கை விஜயத்தில், அவர் தன் வாழ்க்கைத் துணைவரையும் கண்டு பிடித்த சங்கதி சில ஆண்டுகளுக்குப் பின்னரே அறிய வந்தேன். 

அந்த மனிதர் கண்ணன். (கண்ணபிரான்?) தென் ஆபிரிக்காவிலிருந்து மாநாட்டுக்கு வந்தவரை இந்த டாக்டரம்மா’ வளைத்துப் பிடித்துக் கொண்டார்! அதுவொரு கலப்புத் திருமணமாக அமைந்தது.

ஆஸ்திக்கொரு பிள்ளையாக ஒரேயொரு மகன்மட்டுமே பிறந்தார் என்றும் தகவல்.  150 புதினங்களும், 08 சிறுகதைத் தொகுப்புகளும் ‘லட்சுமி’ தமிழ்ப் படைப்புலகத்திற்கு விட்டுச் சென்றிருப்பவை. 

“ஒரு காவிரியைப் போல...” சாகித்ய விருது பெற்றது. தேர்வுக்கு நூலைச் சமர்ப்பிக்க வற்புறுத்தி அனுப்பிவைத்தவர் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி. 

மருத்துவ நிபுண அம்மா ‘லட்சுமி’ தமிழ்ப் படைப்புலகத்திற்கு செய்திருப்பதைப்போல வேறெந்த திருமதிகளும் அடைந்தார்களில்லை. 

அன்னார் தன் நூறாம் ஆண்டை சொர்க்காபுரியில் கொண்டாடியதாக நம்பகரமாக இனிப்புச் செய்தி! 
வாழ்த்தி மகிழ்கிறேன் அம்மா, ஒரு வாசகனாக, அதே நேரத்தில் தங்கள் வழியில் என்
மகளாரையும் மகப்பேற்று நிபுணராக்கி நிம்மதியாக இருப்பதையும் அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

அடிக்குறிப்பு – இதில் தரப்பட்டுள்ள சில தகவல்கள், காலஞ்சென்ற எழுத்தாளர் விக்கிரமன் கட்டுரையிலிருந்து பெறப்பட்டவை. உதவி கனடா பசுபதி அய்யா! 

Comments