மன்னித்தலின் மகிமையை உணர்த்தும் உயிர்த்த ஞாயிறு | தினகரன் வாரமஞ்சரி

மன்னித்தலின் மகிமையை உணர்த்தும் உயிர்த்த ஞாயிறு

அக்கொடூர நிகழ்வு நடைபெற்று ஓராண்டு பூர்த்தியாவதற்கு இன்னும் 17 நாட்கள் எஞ்சி இருக்கையில் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இலங்கை வாழ் கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க சமூகத்தோடு இணைந்து உயிர்த்த ஞாயிறு பண்டிகையை கொண்டாடுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு கொண்டாடப்படும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்கள் கிறிஸ்தவர்களோ அல்லது வேறு மதத்தினரோ, எவரானாலும், இறைவனை ஆராதிக்க ஆலயங்களுக்குச் சென்ற குடும்பங்களைக் குறிவைத்தும் இலங்கையை ஆராதிக்க வந்த அப்பாவி வெளிநாட்டு பிரஜைகளையும் கொடூரமாகக் கொலை செய்த அந்த வெறித்தனத்தை நினைவு கூரவே செய்வார்கள்.

குண்டு வெடிப்புகளும், அப்பாவிகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்படுவதும் இந்நாட்டுக்கு புதிய, வியப்புக்குரிய செயல் அல்ல. பழக்கப்பட்டுப்போன ஒன்றுதான். ஆனாலும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் புனிதமான ஒரு தினத்தை தெரிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அவர்களை ஏவியவர்கள் எவருடனும் எந்தப் பகைமையும் பாராட்டாத அப்பாவிக் குடும்பங்களையும் நாடிவந்த சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்துத் தாக்கியது இதுவே முதல் முறை என்பதில் தவறிருக்க முடியாது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 பேர் வரை மரணடமடைந்தனர். நாநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவயங்களை இழந்து ஊனமுற்றோர் பலர். மனதளவில் ஊனமுற்றுப்போயினர். தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தவர் மற்றும் அவயங்களை இழந்து ஊனமுற்று, வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சை அவசியப்படுகின்றவர்களைக் கொண்ட குடும்ப அங்கத்தவர்களும் திரும்பத்திரும்ப கேட்கும் விடை தெரியாக் கேள்விகள், எம்மைத் தாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு நாங்கள் என்ன செய்தோம்? ஆலயம் சென்று வழிபட்டது தவறா? என்பதாகவே இருக்கிறது. இலங்கை வாழ் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்க சமூகமும் கேட்கும் இக் கேள்விகளைத்தான் கர்தினால் ஆண்டகையும் எழுப்புகிறார்.

பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்ற போதிலும் சூத்திரதாரி என்றழைக்கப்படும் சஹ்ரானுக்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்பதைக் கண்டு பிடித்துச் சொல்வதாக இல்லை.

இது மிகமுக்கியமான விஷயம். உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டில் முடிவுற்றதும் ஆயுத கலாசாரம் இலங்கையில் கடந்தபோன ஒரு விஷயமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அது அப்படி அல்ல. ஆயுத கலாசாரம், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விநியோகத்தர்கள் மற்றும் குழுவினரால் போஷித்து வளர்க்கப்படுகிறது என்ற உண்மையை நாம் உணர மறந்து போனோம்.

சில தினங்களுக்கு முன்னர் இந்திய கடலோர காவலர்களினால் இடைமறிக்கப்பட்டு சோதனைக்குள்ளான இலங்கைப் படகில் மூவாயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள், ஆயிரம் தோட்டாக்கள், ஐந்து ஏகே 47ரக துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டதோடு ஆறு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஐந்தாம் திகதி லட்சத்தீவு பகுதியில் போதைப் பொருட்களுடன் இலங்கையர்கள் கைதாகியுள்ளனர்.

இரு படகுகளும் இலட்சத்தீவுகளுக்கு அருகேயே கைப்பற்றப்பட்டிருப்பதால், இக்கைதுகள் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டிய நிகழ்வுகள் என்றே நாம் கருதுகிறோம். இச்சட்டவிரோதிகள் இலட்சத்தீவுகளை தமது சட்டவிரோத வர்த்தக, கடத்தல் மற்றும் தீவிரவாத செயல்களுக்காகப் பயன்படுத்துகின்றனரா என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பின் இரவு பொழுதுகள் பல சட்ட விரோதிகள், தீவிரவாதிகளினால் பயன்படுத்தப்படுவதாகவே நம்ப வேண்டியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் இவ்வகையில் இந்திய அரசுடன் இணைந்து புலனாய்வுகளையும், விசாரணைகளையும் முடுக்கிவிட வேண்டும். பரஸ்பர தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம்.

தீவிரவாதம் என்றால் அது சிறுபான்மையினரால் அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் என்றே இலங்கையில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். இவ்வாறான ஒரு நம்பிக்கை வெறுப்புணர்வையும் அவநம்பிக்கையையுமே தோற்றுவித்து வந்திருக்கிறது. ஒரு சமயத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களும் பிரபாகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆகப் பார்க்கப்பட்டனர். தற்போது அதேபார்வை இஸ்லாமிய சமூகத்தின் மீது திருப்பி விடப்பட்டுள்ளது.

நிச்சயமான காரணங்கள் தெரியாத, ஆனால் மிகக் கச்சிதமான திட்டமிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு ஒட்டுமொத்த இலங்கை இஸ்லாமியர்களையும் பழிசொல்ல முடியாது. இத்தாக்குதல்களை வழிநடத்தியோர் யார் என்பது கண்டறியப்பட்டால்தான் அப்பாவி இஸ்லாமியர் மீதான அபாண்ட பழி அகற்றப்பட முடியும். எனவே யுத்தத்தின் பின்னரான பயங்கரவாதம் ஏன் கட்டமைக்கப்பட்டு போஷிக்கப்படுகிறது என்பதை இந்திய புலனாய்வாளர்களின் உதவியோடு கண்டறியப்பட வேண்டியது அவசியம்.

இன்றைய உயிர்த்த ஞாயிறு இரண்டு முக்கிய விஷயங்களை முன்நிறுத்துகிறது. இதற்குக் காரணம் அடிப்படைவாத மதவாதி மட்டும்தானா அல்லது வேறு நோக்கங்கள் இத்தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளதா என்பது முதல் விஷயம். இரண்டாவது இத் தாக்குதலை ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான கறை துடைத்தெறியப்படுவது. இதற்கு இஸ்லாமிய மதத்தலைவர்கள் உதவ முன் வர வேண்டும்.

கிறிஸ்தவம் பரவிய உலக நாடுகள் எல்லாம் வேகமாக வளர்ச்சி காண்பதற்கும் கருத்து சுதந்திரம் நிலை பெறுவதற்கும் வாய்ப்புகள் மலிந்தன. ஆசியாவிலேயே முதலாவது மருத்துவக் கல்லூரி யாழ்ப்பாணத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் இலங்கைக்கான முதல் ஆஸ்பத்திரியும் அமெரிக்க மிஷனரிகளால் யாழ்ப்பாணத்திலேயே நிறுவப்பட்டது என்பதும் கிறிஸ்தவம் நமக்கு என்ன செய்தது என்பதைப் புலப்படுத்தும். ‘தன்னைப் போலவே பிறரையும் நேசி’, இரண்டு அங்கிகள் இருக்குமானால் அவற்றில் ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு,’ ‘நீ எதனால் மற்றவருக்கு அளக்கிறாயோ, அதன் மூலமே உனக்கும் அளக்கப்படும்’ என்பதுபோன்ற மிகச் சிறந்த இயேசு கிறிஸ்துவின் மொழிகளே உலகெங்கும் கல்விக் கூடங்களையும், மருத்துவ மனைகளையும் தோற்றுவித்தன. இலங்கையில் கல்வி வளர்ச்சிக்காக கிறிஸ்தவம் ஆற்றிய பெரும்பணிகளை நாம் மறந்துவிட முடியாது.

தன்னை சித்திரவதை செய்த உரோம போர்வீரர்களை கிறிஸ்து மன்னித்தார். தன்னுடன் சிலுவையில் அறையப்பட்ட இரு திருடர்களையும் மன்னித்தார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற குறள் சொல்லும் தத்துவம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முழுவதும் பிரதிபலித்திருப்பதை காண முடிகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முற்று முழுதான பின்னணியை கண்டறிவதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அதேசமயம், இக் கொடூரத்தைச் செய்தவர்கள் இயேசுவின் போதனையின் பிரகாரம் மன்னிக்கப்படலாம். மன்னித்தல் எம்மை மேன்மை படுத்தும். தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Comments