நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல்: எடப்பாடி வெட்டி வைப்பாரா?; ஸ்டாலின் கட்டி எடுத்து வருவாரா? | தினகரன் வாரமஞ்சரி

நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல்: எடப்பாடி வெட்டி வைப்பாரா?; ஸ்டாலின் கட்டி எடுத்து வருவாரா?

நாளை மறுநாள் ஆறாம் திகதி தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல். கடந்த இரண்டு மாதங்களாக தமிழகமெங்கும் களை கட்டியிருந்த தேர்தல் திருவிழாவுக்கு முடிவுரை எழுதப்படும் தினம் என்றும் கொள்ளலாம்.

இத்திருவிழாவை நடத்தஅதாவது மக்களுக்கு சேவையாற்ற இக் கட்சிகள் எவ்வளவு செலவு செய்திருக்கும் என்று குத்துமதிப்பாக கணக்கிட்டாலும் அது பல ஆயிரம் கோடிகள் தேறும். ஏனெனில் சாலைச் சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம் 400 கோடிவரை வருகிறது. பிடிபடாமல் வெற்றிகரமாக ஒளித்து எடுத்துச் செல்லப்பட்டு பட்டுவாடா செய்யப்பட்ட பணம் எவ்வளவாக இருக்கக் கூடும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறோம். பாருங்கள் மக்கள் சேவையாற்ற இந்த அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை!

மனிதனுக்கு எவ்வளவு பணமும் சொகுசான வாழ்க்கையும் கிடைத்தாலும் அவன் அவற்றில் திருமதி அடைவது இல்லை. அவன் எங்கே திருப்தி அடைகிறான் என்றால், ஒரு மக்கள் கூட்டத்தை நிர்வாகிக்கும், தனது சொற்படி நடக்கச் செய்யும், அவர்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் ஆளும் அதிகாரம் அவனுக்குக் கிடைக்கும் போதுதான் அம் மன நிறைவு அவனுக்குக் கிடைக்கிறது.

இது மிருகங்களுக்கும் பூச்சி, பறவை இனங்களுக்கும் பொதுவானது. குழுக்களாக வாழும் இயல்பு கொண்ட ஜீவராசிகளிடம் தலைமை தாங்கும் பண்பு காணப்படுகிறது. அதற்கான போட்டி, சண்டை, கொலைகள் அங்கும் நிகழ்த்தான் செய்கின்றன. அடிப்படையில் மிருக இயல்புகளுடனேயே மனிதன் உள்ளான் என்பதற்கு இது மற்றொரு சாட்சி.

மனிதன் அதிகார வெறி கொண்டவன், அதைக் குறைக்கவும் இல்லாமல் செய்யவும் மகான்கள் என்றழைக்கப்படுவோர், மதங்கள், மதத் தலைவர்கள் தொடர்ந்தும் முயற்சிகள் செய்து வந்துள்ள போதிலும் மனிதனின் அடிப்படை இயல்புகளை மாற்ற அவர்களால் முடிவில்லை. பதிலுக்கு, மாற்ற வந்தவர்களே அதே அதிகார வெறிக்கு அடிமையானார்கள். உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசியலுக்கு வந்தால் அதிகாரத்துடன் பெரும்பணமும் திரட்டலாம் என்பது நிச்சயமாகத் தெரிவதால் அன்றைய மன்னர்களும் சரி இன்றைய ஜனநாயக மன்னர்களும் சரி அந்த அதிகாரத்தை அடைய எதை வேண்டுமானாலும் செய்யத்தயார்!.

இப்போதெல்லாம் நிறைய பணக்காரர்களும் அரசியலுக்கு வருகிறார்கள், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக! அவர்கள் அரசியலுக்கு வருவது, அப்படியும் இப்படியுமாக சேர்த்த பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் அதிகாரத்தின் சுவையை சுவைக்கவும் தான். இவர்களின் வருகை இலங்கை மற்றும் இந்திய அரசியல் களங்களில் அதிகரித்து வருவது, அரசியல் வியாபாரமாகி வருகிறது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழக சட்ட சபைத் தேர்தலை நாம் இந்தப் பின்னணியை மனதில் வைத்து நோக்கினால்தான் சரியான தெளிவு கிடைக்கும். அ.தி.மு.க இத் தேர்தலை ஜெயலலிதா என்ற பேராளுமை இன்றி சந்திக்கும் முதல் சந்தர்ப்பமாகும். ஜெயலலிதா இருக்கும்போது ஏனையோருக்கு வேலை இருக்கவில்லை. அனைத்தையும் அம்மாவே பார்த்துக் கொண்டார் அவர் நடுநாயகமாக வீற்றிருக்க ஏனையோர் அடிமைகள் போல சேவகம் செய்பவர்களாக இருந்தனர்.

இரண்டாவது தலைவரை எம்.ஜி.ஆரும் உருவாக்கி வைக்கவில்லையானாலும் அவரால் கைகாட்டப்பட்ட ஜெயலலிதா ஏற்கனவே போதிய மக்கள் செல்வாக்கை வளைத்துப் போட்டவராகத் திகழ்ந்தார். அவர் மறைந்ததும் அடுத்ததாக யார் என்ற கேள்வி எழுந்ததால் ஆளாளுக்கு தம்மைத் தலைவராகக் கருதத் தொடங்கினர். இந்தப் போட்டா போட்டியில் முன்னணி வகித்தவர் ஜெயலலிதாவின் ஆஸ்தானதோழி சசிகலா. ஜெயலலிதாவின் வலது கரமாகவும், ஜெயலலிதாவின் சிந்தனையாகவும், சிந்தனைகளை நிறைவேற்றுபவராகவும் அவர் விளங்கியதால் அவரே அடுத்த அ.தி.மு.க தலைவர் என்ற பிம்பம் உருவானது. அவர் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரானார்.

அடுத்ததாக முதல்வராகவும் நாட்காலியில் அமர முயன்ற வேளையில் தான் சொத்துகுவிப்பு வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவரை நான்காண்டுகள் சிறையில் தள்ளியது. அதையடுத்தே எடப்பாடியா, பன்னீர்செல்வமா என்ற போட்டி ஏற்பட்டதும், மெரீனா கடற்கரையில் பன்னீர் செல்வம் தியானத்தில் ஈடுபட்டு அம்மாவின் ஆவியுடன் பேசியதெல்லாம் அரங்கேறியது. நான்கு கால்களில் ஊர்ந்து சென்ற எடப்பாடி பழனிச்சாமி சின்னம்மா சசிகலாவின் பாதம் தொட்டு வணங்கி முதல்வர் பதவியும் பெற்றார்.

அவருக்கு ஆதரவு தர மறுத்து சட்டசபையில் பன்னீரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் தனிக்குழுவாக இயங்கினர். ஆனால் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் தமிழக அரசியலில் காலூன்ற முயன்ற பா.ஜ.க. இந்தக் குழப்பத்தில் புகுந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. இவ்விருவரும் பிரிந்து நின்று முட்டிக் கொள்வதால் பயன்பெறப் போவது தி.மு.க.தான் என்பதை புரிந்து கொண்ட பா.ஜ.க. பன்னீர் செல்வத்தையும் எடப்பாடியையும் ஒன்றிணைந்து செயல்படும் படியும் அதன்பின்னர் ஏற்படக்கூடிய அரசியல் முட்டுக் கட்டைகளில் இருந்து தான் காப்பாற்றித் தருவேன் என்றும் உறுதிமொழி வழங்கவே, பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

அ.தி.மு.க. கட்சியின் யாப்பு திருத்தப்பட்டு பொதுச் செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டது. பதிலாக இருவரும் ஒருங்கிணைப்பாளர்களாக்கப்பட்டனர். சட்ட சபையில் சிக்கல்கள் ஏற்பட்டபோது சபாநாயகர் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஆனாலும் பன்னீர் செல்வத்துக்கு இப்போதும் முதல்வர் நாட்காலி மீது ஒரு கண் இருக்கவே செய்கிறது. உதாரணத்துக்கு, சின்னம்மா சிறையில் இருந்து விடுதலையானபோதும், சென்னைக்கு திரும்பி வந்த போதும் தானே அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் என சவால்விட்டபோதும் சசிகலாவைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பன்னீர் செல்வம் பேசவில்லை. அ.தி.மு.க.வினர் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டியபோது முதல்வர் எடப்பாடி அவர்களைக் கண்டித்ததோடு சசிகலாவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கினார். எனினும் பன்னீர் செல்வம் வாயே திறக்கவில்லை.

மேலும் பன்னீர் செல்வமும் எடப்பாடியும் இணைந்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை. பன்னீர் தனியாகவே பிரசாரம் செய்வதோடு விளம்பரங்களிலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார். இருவருமே தம்மை இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயற்படுவோம்’ என்றெல்லாம் வர்ணித்து பேசியதாகத் தெரியவில்லை. இருவருமே தனி வழிகளிலேயே பயணிக்கிறார்கள். மற்றுமொரு ஐந்து வருடங்கள் எடப்பாடியார் முதல்வராகவும் தான் தலையாட்டி தஞ்சாவூர் பொம்மையாகவும் இருக்க முதல்வர் நாட்காலியில் ஒரு தடவைக்கும் மேல் அமர்ந்திருந்த பன்னீர் செல்வம் சம்மதிப்பாரா? என்ற கேள்வியும் உள்ளது.

எனவே எடப்பாடியார் இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும். இல்லையேல் கட்சியில் முதன்மையானவர், பெருந்தலைவர் என்ற நிலையில் இருந்து அவர் இறங்க வேண்டியிருக்கும். இல்லையேல் இறக்கப்படுவார். அ.தி.மு.க.வின் தோல்வி கட்சியை இரண்டாகப் பிளக்கவும் கூடும் அ.தி.மு.கவின் தோல்வி, தினகரன் கூடாரத்துக்கு வலு சேர்க்கும் என்பதோடு தற்போது அரசியல் விடுப்பில் இருக்கும் சசிகலாவுக்கு எடப்பாடியின் வீழ்ச்சி புத்துயிரளிக்கும். அ.தி.மு.க.வுக்குள் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி கிளம்பும். எனவே, எடப்பாடியார் வெற்றிபெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தேயாக வேண்டும்.

இத்தேர்தலில் தி.மு.க. மிகுந்த நம்பிக்கையுடன், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற இறுமாப்புடன் களத்தில் நிற்கிறது. தி.மு.க.வின் பிரசார கூட்டங்களுக்கு பெருமளவில் கூட்டம் கூடுகிறது என்பது உண்மையானாலும் இந்திய தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு கூடும் சனத்திரளை வைத்து மக்கள் ஆதரவை கணிக்கவே முடியாது.
ஸ்டாலினுக்குக் கூடும் கூட்டம் எடப்பாடியாருக்கும் கூடவே செய்கிறது. ஆனால் தந்தி பத்திரிகை நிறுவனம் எடுத்திருக்கும் கள நிலவர கருத்துக்கணிப்பு தி.மு.க. வெற்றி வெறும் என்றே கூறுகிறது. ஆனால் பல தொகுதிகளில் கடுப்போட்டி நிலவும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஜூனியர் விகடன் எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு, தி.மு.க 153 ஆசனங்களை கைப்பற்றும் என்று ஆருடம் கூறியிருக்கிறது. இது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியாகும். அ.தி.மு.க. 52 ஆசனங்களைப் பெறும் என்பது ஜூனியர் விகடன் கணிப்பாகும். கமலின் மக்கள் நீதிமையம் ஒரு ஆசனத்தையும் ம.தி.மு.க. ஐந்து ஆசனத்தையும் கைப்பற்றும் என்பதோடு பா.ஜ.க. எல்லாத் தொகுதிகளிலும் கட்டுப்பணம் இழக்கும் என்றும் அரசியல் ஆருடங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளி வீசியுள்ளது. குடும்பத்துக்கு ஒரு சலவை இயந்திரம், வீட்டில் இருந்தபடியே ரேஷன் பொருட்களை பெறுதல், பெண்களுக்கு 1500ரூபா உதவிப்பணம் என பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை. தமிழ்நாடு ஏற்கனவே இரண்டரை லட்சம் கோடி ரூபா கடனில் இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. அரசின் நிலை இப்படி இருக்க, மென்மேலும் இலவசங்களை அறிவிப்பது எப்படி சாத்தியமாகும்? மக்களின் வரிப்பணத்தை இப்படி செலவு செய்யலாமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தோமானால் அதில் மாநில அபிவிருத்தி சம்பந்தமான ஆக்கபூர்வமான விடயங்கள் வெகு சொற்பமாகவும் ‘சீனி உருண்டை’கள் நிறையவும் இருப்பதாகவே தெரிகிறது. பத்து வருடங்கள் தொடர்ச்சியாக ஆளும் கட்சியாக இருந்துவிட்ட அ.தி.மு.க.வுக்கு எதிர்கட்சியான தி.மு.க. குறித்து சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் கிடையாது. பழைய பல்லவிகளைத் தான் திருப்பி போட வேண்டியிருக்கிறது. எதிர்க்கட்சியான தி.மு.க. வுக்கோ ஆளும் கட்சி குறித்து பேச வண்டி வண்டியாக விஷயங்கள் உள்ளன. அவற்றில் பிரதானமானவையாக சிலவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழகத்தில் பா.ஜ.க செல்லாக்காசு. இந்துக்கள் செரிந்து வாழும், பக்தி இயக்கம் கொடி கட்டிப் பறக்கும் மாநிலமாக தமிழகம் இருந்தாலும் ஆன்மிகத்தை கேள்வி கேட்கும் ஒரு எதிர்ப்பு பொறிமுறையும் தமிழகத்தில் வீரியத்துடன் இயங்கத்தான் செய்கிறது.

தமிழர்களின் பெருவாரியானோர் ஆங்கில மோகம் கொண்டவர்களாக இருந்தாலும் தமிழர் தனித்துவம், மொழியுணர்வு கொண்டவர்களை பரவலாகப் பார்க்க முடிகிறது. முன்னரை விட தமிழில் வாசிக்க விரும்பும், மொழியுணர்வு கொணட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வட மாநிலங்கள் அளவுக்கு தமிழகத்தில் சாமியார்கள் சாம்ராஜ்யம் நடத்த முடியாது. இவை அனைத்தும் பா.ஜ.க. இங்கே காலூண்றுவதற்குத் தடையாக உள்ளன எனவே, இந்தி – சமஸ்கிருத எதிர்ப்பு இன்றைக்கும் தி.மு.க.வுக்கு கைகொடுக்கிறது. தமிழர்களால் புறக்கணிக்கப்படும் இந்துத்துவ பா.ஜ.கவை தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை விமர்சிப்பது, எனவே, தி.மு.க.வுக்கு சுலபமாகி இருக்கிறது.

நீட் தேர்வை எழுதி சித்தி பெற்றால்தான் மருத்துவப் படிப்பு என்பது மத்திய அரசின் கொள்கை. ஜெயலலிதா இதைக் கடுமையாக எதிர்த்தாலும் எடப்பாடியார் தமிழகத்தில் நீட்டுக்கு இடமளித்தார்.

நீட் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு. தமிழில் கல்வி கற்றுவிட்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட்டை ஆங்கிலத்தில் எழுதி சித்தி பெறுவது என்பது நகரங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களால் கற்பனையும் செய்ய முடியாத காரியம். தி.மு.க. தான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வை இரத்துச் செய்வோம் என்கிறது. தி.மு.க.வுக்கு நீட் ஒரு சாதகமான அம்சம்.

இந்தி திணிப்பும் சமஸ்கிரு திணிப்பும் மோடி அரசினால் வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது. பௌத்தர்களே வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது போலவே தமிழகத்தில் ஒரு சதவீதமானோர் கூட பயன்படுத்தாத சமஸ்கிருதத்தில் பொதிகையில் செய்தி வாசிக்கப்படுகிறது. அ.தி.மு.க இதைக் கண்டு கொள்ளவில்லை. பா.ஜ.கவின் அடிமைபோல அ.தி.மு.க நடந்து கொள்வதாக தி.மு.க விமர்சனம் செய்யும்போது’ உண்மைதானே’ என மக்கள் நினைக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி போன்றோர் உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். உச்ச நீதிமன்றம் இச் சட்டம் செல்லுபடியாகும். அரசியல் சட்டத்துக்கு முரண் இல்லை என அறிவித்த பின்னர் சட்டமானது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக சட்டத்தை அ.தி.மு.க நடைமுறைப்படுத்தவில்லை. பிராமணர்கள் அல்லாத சாதியினர் அர்ச்சகர்களுக்கான பயிற்சிகளை முடித்துவிட்டு கோவில் நியமனங்களுக்காகக் கத்துக் கிடக்கின்றனர். இவ்வாறு தொழிலின்றி இருக்கும் சுமார் 300 அர்ச்சகர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி வழங்கியுள்ளார். இது பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

தி.மு.க.வின் மொழியுணர்வு, கொள்கை பிடிப்பு என்பன சரிதான். ஆனால் ஸ்டாலின் முதல்வரானதும் கொள்கை ரீதியான ஆட்சி நடத்துவாரா அல்லது குடும்ப ஆட்சி நடத்துவாரா? என்ற கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. 1970களில் கலைஞர் கருணாநிதி அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த போதிலும் ஊழல் ஆட்சியாலேயே தி.மு.க வீழ்ச்சி கண்டது. மாற்றாக வந்த அ.தி.மு.க.வும் கொள்கைகளை மறந்து மகா கொள்கைகளில் ஈடுபட்டதால் ஜெயலலிதாவும் கவிழ்ந்தார் சிறை சென்றார். இன்று ஜெயலலிதாவும் இல்லை; கருணாநிதியும் உயிருடன் இல்லை. சிஸ்டம் சரியில்லை என்பதால் அதை முழுக்க மாற்றுவேன் என்று விரல் உயர்த்தி பேசிய ரஜினியும் அரசியல் துறவறம் பூண்டு விட்டார். பெரும்பாலும் அடுத்த தமிழக முதல்வாராக ஸ்டாலின் வரக்கூடும். அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு வாரிசு பதவி வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் குடும்பத்தில் ஒரு 300 பேராவது இருக்கக் கூடும். இவர்கள் ஆளாளுக்கு காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டால் ஊழல் மலிந்து விடுமா இல்லையா? தேர்தல் நிதியாக பல கோடீஸ்வரர்கள் எக்கச் சக்கமாக தி.மு.க.வுக்கு நன்கொடை வழங்கி இருப்பார்கள். இவர்கள் சம்பாதிக்க வழி செய்ய வேண்டாமா?

ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவேன் என்றும் எடப்பாடி அரசின் ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் ஊர் ஊராக ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அந்த பிரசாரமே அவருக்கு எதிராகத் திரும்பலாம்.

முதல்வரானால் ஸ்டாலினுக்கு இது முதல் வாய்ப்பு அது கடைசி வாய்ப்பாக அமைந்துவிடக் கூடாது. அது அவர் கையில்தான் இருக்கிறது. பத்து வருடங்களாக கழகம் ஆட்சியில் இல்லை. அவர்கள் பெரும் பசியில் இருக்கிறார்கள். ஸ்டாலின் அவர்கள் பசி அடக்க என்னதான் செய்வார் பார்போமே என எடப்பாடியார் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்.

சரி, தி.மு.க. வெற்றி பெற்று நாட்காலியை பிடிக்க வேண்டாமா?

பொறுத்திருந்து பார்ப்போம், ‘காளி’யின் ஆட்டத்தை!

அருள் சத்தியநாதன்

Comments