பொலிஸ் கான்ஸ்டபிள் நடுவீதியில் பேயாட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

பொலிஸ் கான்ஸ்டபிள் நடுவீதியில் பேயாட்டம்!

பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான உறவைக் குறைத்து மதிப்பிட்டு இந்நாட்டு பொலிஸார் தொடர்பில் அல்ஜெஸீரா போன்ற முன்னணி சர்வதேச ஊடகங்கள் உள்ளிட்ட வெளிநாட்டின் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு, இலங்கை பொலிஸாரின் மோசமான நடத்தையினைக் காட்டும் ஒரு சில நிமிட வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வைரலாகியது. அது கடந்த 29ம் திகதி காலை இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பிலான செய்தியாகும். சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்களிலும் பிரசாரம் செய்யப்பட்ட அந்த வீடியோவினால் ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களத்திற்கும் பெரும் அவப்பெயர் ஏற்பட்டது.

அந்த வீடியோ தொடர்பில் அனேகமானோர் அக்கறை செலுத்திய நிலையில் பொலிஸ் திணைக்களமும் உடனடியாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் எந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
அதனடிப்படையில் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹரகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளான இஸ்மாயில் றிபாய்தீன் என்ற 29 வயதுடைய பொலிஸ் சேவையைச் சேர்ந்த ஒருவர் எனக் கண்டறியப்பட்டது.

கொரோனா தொற்றின் காரணமாக ஆறு மாத காலம் மூடப்பட்டிருந்த மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டதன்  காரணமாக கடந்த 29ம் திகதி திங்கட்கிழமை காலை கொழும்பு நகர் மற்றும் அண்மைய வீதிகளில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது,

ஹைலெவல் வீதியின் பன்னிப்பிட்டி மேம் பாலத்திற்கு அருகிலுள்ள சந்தியில் 29ம் திகதி காலை 8 மணியளவில் மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மைத்திரிபால உள்ளிட்ட குழுவினர் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சந்தர்ப்பத்தில் வீதியை இரண்டாகப் பிரிக்கும் சுற்றுவட்டத்தைச்  சுற்றியவாறு இரு பக்கங்களிலும் வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு மஹரகம போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி சுறுசுறுப்பாக கடமையில் ஈடுபட்டிருந்தார். அந்நேரம் கொழும்பிலிருந்து பயணித்த பட்டா ரக சிறிய லொறி ஒன்று அவ்வீதியின் அதிக வாகன நெரிசலைப் பொருட்படுத்தாமல் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.

அவ்வாறு வேகமாக வந்த அந்த லொறி வீதியின் மத்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த மஹரகம போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியின் மீது மோதிவிட்டுச்  செல்லும் காட்சி யாரோ ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவத் தொடங்கியது.

அருகாமையில் கடமையில் ஈடுபட்டிருந்த மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் றிபாய்தீன் உடனே அவ்விடத்திற்கு விரைந்து வந்து தனது பிரிவின் தலைவர்  மீது மோதிய வாகனச் சாரதியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு இறுதியில் அது அந்த சாரதி மீது  ரெஸ்லிங் பாணியிலான தாக்குதலுடன் அந்த தர்க்கம் நிறைவடைந்துள்ளது.

கீழே வீழ்ந்த அந்த சாரதியின்  மீது பாய்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளும்   மற்றொருவரும் தாக்கும் காட்சியும் யாரோ ஒருவரினால் வீடியோ பண்ணப்பட்டு அந்நிமிடமே சமூக வலைத்தளங்களில் உலாவ விடப்பட்டது. பொலிஸ் சீருடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பில் அந்நிமிடமே நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டு பொலிஸ் திணைக்களத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்தியிருந்தது.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து பொது மக்களுக்கு சுதந்திரமாக, நிம்மதியாக வாழக்கூடிய உரிமையினைப் பாதுகாக்க வேண்டியது பொலிஸ் திணைக்களத்திற்குரிய பாரிய பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை யதார்த்தமாக்கும் நோக்கில் நாட்டினுள் கடமையில் ஈடுபடும் 85 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு முழுவதிலும் பரந்திருக்கும் 494 பொலிஸ் நிலையங்களிலும், 44 பொலிஸ் பிரிவுகளிலும் 24 மணிநேரமும் கடமையில் ஈடுபடுகின்றார்கள்.

கடமையில் ஈடுபடும் மிகவும் சிறு தொகையினரான பொலிஸ் உத்தியோகத்தர்களால் இந்நாட்டின் பொலிஸ் திணைக்களத்திற்கே ஏற்பட்டிருக்கும் அவமானங்கள் கொஞ்சநஞ்மானதல்ல.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் உலாவிய பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் வீடியோ தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன இவ்வாறு கூறியிருந்தார்.

“தனது பொறுப்பதிகாரி கடமையில் ஈடுபட்டிருக்கும் போது ஒழுக்கமற்ற சாரதி ஒருவரால் மோதப்பட்டதன் காரணமாக மனிதராக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆவேசம் அடைய முடியும். என்றாலும்  அதிகாரி என்ற வகையில் கடமையாற்றும் போது அவ்வாறு பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முடியாது. இவ்வாறான சம்பவங்களை இலங்கை பொலிஸ் திணைக்களம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. எவரேனும் ஒருவர் குற்றம் புரிந்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய முறைகள் உள்ளன. எனவே இந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழும், பொலிஸ் ஒழுக்காற்று விதிகளின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”

அந்த மோசமான சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்கள் கடந்த நிலையில் பொலிஸ் திணைக்களத்திற்குப் பொறுப்பான பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சேவையை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார். “சாதாரண குடிமகன் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு பொலிஸ் உத்தியோத்தர் ஒருவருக்கு ஒரு போதும் எந்த உரிமையும் இல்லை. எனினும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும் மன அழுத்தங்களுடன் பணியாற்றுகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். கடந்த 3 மாதங்களில் 72 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகன விபத்துக்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

அவர்களுள் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த வருடம் 293 பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபட்டிருந்த போது விபத்திற்குள்ளாகியிருக்கின்றாாகள். அவர்களுள் 28 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். எது எவ்வாறிருந்தாலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது மக்களை அடக்கு முறைக்குள் வைக்கும் வகையில் நடந்து கொள்ள முடியாது. எனவே நாம் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராகவும்  நடவடிக்கைகளை எடுப்போம். முதலில் அவரது பணியை இடைநிறுத்துவோம். பின்னர் அவரைக் கைது செய்வோம்” என்றும் கூறினார்.

அந்த சாரதியினால் விபத்திற்குள்ளான பொலிஸ் பரிசோதகர் மைத்திரிபால களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட் நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரினால் தாக்கப்பட்ட லொறிச் சாரதியான பிரவீனும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டதோடு, இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அந்த விசேட பொலிஸ் குழுவின் விசாரணையின் மூலம் மஹரகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை விபத்திற்குள்ளாக்கிய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவரான 24 வயதுடைய பிரவீன் என்பவர்  களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 29ம் திகதி மாலை மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 30ம் திகதி காலை குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  சாரதி 30ம் திகதி மாலை நுகேகொடை, கங்கொடவில நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, லொறிச் சாரதி பிரவீனுக்கு முன்னைய குற்றச் செயல்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவர் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, அவரது சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அதேபோன்று அவருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 06ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.

எவ்வாறாயினும் சாரதி மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபில் றிபாய்தீனை, நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

1866ம் ஆண்டு செப்டெம்பர் 03ம் திகதி இந்நாட்டில் உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட பொலிஸ் திணைக்களம் 155 வருடம் நிறைவு செய்யவுள்ள இக்காலப்பகுதிக்குள் இவ்வாறான அவமானகரமான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளமை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது தெரிய வரும் உண்மையாகும். அவற்றினுள் 1970ம் ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த வீரசூரிய என்பவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானது அக்காலத்தில் நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாகும். வீரசூரிய இந்நாட்டு வரலாற்றில் இவ்வாறு உயிரிழந்த முதலாவது பல்கலைக்கழக மாணவராவார்.

அண்மையில் பொலிஸ் நிலையத்தின் மீது பிரதேச மக்கள் கல்லெறிந்து  தாக்குதலை மேற்கொண்டமை  ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களத்துக்ேக களங்கத்தை ஏற்படுத்தியது இந்த  சம்பவம் அங்குளான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

அது, கடந்த ஜூலை 10ம் திகதி இரவு அங்குளான கடற்றொழிலாளரான 39 வயதுடைய அமித் கருணாரத்ன என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த அங்குளான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

அங்குளான பொலிஸ் நிலையத்திலிருந்து இடம்பெற்ற அந்த சோகமான சம்பவத்திற்கு முன்னரும் அங்குளான பொலிஸ் நிலையத்தின் மீது அங்குளான பிரதேச மக்கள் கற்களால் எறிந்து தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

சிறிய குற்றத்துக்காக அங்குளான பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்ட அங்குளான பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களான தினேஸ் தரங்க மற்றும் தனுஷ்க உதயங்க ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர்களது சடலங்கள் இரு வேறு இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன. 2009ம் ஆண்டு அங்குளான இரட்டைக் கொலைச் சம்பவமாக நாட்டையே பெரும் சர்ச்சைக்குள்ளாக்கிய அந்த கொடுரமான குற்றத்தைச் செய்ததாக அப்போது அங்குளான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய நிவ்டன் மற்றும் மூன்று உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சில பொலிஸாரின் இவ்வாறான மோசமான நடத்தைகள் காரணமாக பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு பகல் பாராது மேற்கொள்ளும் கடமைகளை எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

தமிழில்:
எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments