கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

நாம் தமிழ் பேசும் சமூகத்தினராய் இருப்பதால் எப்பொழுதும் தமிழ்நாட்டு அக்கறை இருக்கத்தான் செய்யும் இயலாதது தவிர்க்க! 

அந்த வகையில் இன்னும் இரண்டே நாட்களில் (06.04.2021) அங்கே நடக்கப்போகும் சட்ட சபைத் தேர்தல் நம் கவனத்தைக் கவர்கிறது. 

கடந்த மாதத்தில் மூன்று கிழமைகளிலும் ‘அம்மா’ ஒருவரை வைத்து ஆளும் அ.தி.மு.க அரசு பிரசாரங்கள் நடந்தன. பிரதான எதிர்க்கட்சி தி.மு.க கலைஞர் ஒருவரை வைத்து மேள- தாளம் கொட்டியது.  

‘அம்மா’ என்பது ‘ஜெ’ ஆகிய ஜெயலலிதா ‘கலைஞர் என்பவர் ‘மு.க’ என்ற முதுபெரும் எழுத்து வித்தகர் கருணாநிதி. மற்றும், கமல் ஹாஸன், விஜயகாந்த், சீமான், தினகரன் எனத் தனித்தனி கதாபாத்திரங்கள். 

இங்கே நான் கொடுக்கப்போகிற கசப்பு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. அதுவும் மற்றொரு அம்மா” சம்பந்தப்பட்டது.  

இந்த இன்னொரு அம்மா கடந்த மாத, இறுதியில் திடுதிப்பென்று தோன்றினார்! அது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியின் அம்மா! 

தி.மு.க கட்சியின் முக்கிய புள்ளி இந்திய அரசின் நாடாளுமன்றத் தமிழகப் பிரதிநிதிகளுன் ஒருவராக இருந்தவர், ஊழலில் சிக்கியவர், ஆர். ராசா என்றொரு மனிதர், அவர் பிரசாரக் கூட்டமொன்றில் முதலமைச்சரின் தாயாரைப்பற்றி இழிவாகப் பேசி விட்டதாக ஒரு பூகம்பம் வெடித்தது. 

முதலமைச்சரும் தன் பிரசாரக் கூட்டத்தில் “என் அம்மா இழிவுபடுத்தப்பட்டு விட்டார்” எனக் கண்கலங்கி! பேச முடியாமல் தளதளத்து சில நிமிடங்கள் மௌனம் காத்தார்! 

தமிழகப் பெண்கள் இந்தக் காட்சியை நேரில் கண்டும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தும் அவர்களது கண்கலங்கினர். 

பல இடங்களில் போராட்டம். ஆர். ராசா உருவபொம்மை எரிப்பு. கொங்கு மண்டலம் எனப்படுகிற அழகான கோயத்தூர் பகுதியில் தி.மு.க.வுக்கு வாக்குகள் குறையும் சாத்தியக் கூறுகள். மற்ற பகுதிகளிலும் நிலைமை சரியில்லை. 

ஆ. ராசா வழங்கிய ஒரு தன்னிலை விளக்கத்தில், “முதல் – அமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கண் கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டுத் தவறாகப் புரிநது கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்தில் இருந்து வருத்தம் தெரிவிக்கிறேன். அவரிடம் திறந்த மனதுடன் மன்னிப்பைக் கோருவதில் எனக்குத் தயக்கமுமில்லை” எனத் தெளிவுப்படுத்தியுள்ளார். 

இருந்தாலும் என்ன ஒரு காலத்தில் ‘ஜெ அம்மா! இக்காலத்தில் முதல்வரின் அம்மா! 

உணர்ச்சி வசப்பட்டுப் போயிருக்கிற லட்சக் கணக்கான தமிழகத் தாய்மார்களால் தேர்தல் முடிவுகள் தாறுமாறாகப் போய் விடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை அள்ளி வீசுகின்றனர். 

பொறுத்துப்பார்ப்போம். ஆனாலும் பாருங்கள் அபிமானிகளே, முடிவுகள் தெரிய முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டுமாம். அப்பொழுது தான் வாக்கு எண்ணிக்கை நடக்குமாம்.  

ஏன்? ஏன்? இப்படித்தாமதம்? என்னும் புரியலையே ‘உலகத்திலே’ என்ற சந்திரபாபு பாட்டைப்பாடி மற்றொரு கசப்பு வில்லையைக் கையிலெடுக்கிறேன்.  

கசப்பு-2

‘மஞ்சள்’ என்கிற ஒரு பொருளின் மகிமை மேல்நாட்டவரைவிட நமக்கே நன்று தெரியும். 

‘ஒரு கிருமிநாசினி’ என்பதைவிட அது மனித குலத்திற்குச் செய்கிற பேருதவிகள் ஒன்று இரண்டா? 

இன்றைக்கு அது பெரும்தட்டுப்பாடு இறக்குமதி செய்யாமல் தன்னிறைவு காணவேண்டும் எனக் கனா கண்டதில் காரியம் கைகூடவில்லை. 

எந்தளவுக்கு அது கைகூடி வெற்றிக் கனி பறிக்கும் என்பது தான் பெரிய கேள்வி!  இன்றைய நிலவரப்படி கடல்வழி கள்ளக் கடத்தலில் மற்றனைத்துப் பொருட்களையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து மணம் வீசுகிறது.  

கடைசியாக நான் அறிந்த செய்தி இது: 

2.38 தொன் கொண்ட மஞ்சள் மூட்டைகள் தூத்துக்குடி – கொழும்பு கடல் பாதை வழியே கைப்பற்றப்பட்டுள்ளது. சென்ற 29 ஆம் திகதி ‘பிரேக்கிங் நிவ்ஸ்’ ! 

அதுவும் அகப்பட்டது ‘விரலி மஞ்சளம்! அகராதியில் அர்த்தம் தேடினேன். பூஜ்ஜியம் இருப்பினும் இது மிகவும் உசத்தியான தரம் மிக்கதாக இருக்க வேண்டும். 

செய்தி பேசுகிறது இப்படி: 

தூத்துக்குடியில் இருந்து விரலி மஞ்சள் கடத்தப்பட இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தூத்துக்குடி கடலோரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அதிகாலை 2.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து மினி லொறி ஒன்று கடலோரத்தில் வந்து நின்றது. அதில் இருந்து 5 பேர் மஞ்சள் மூட்டைகளை கடலில் நிறுத்தப்பட்டிருந்த வள்ளத்தில் ஏற்றினர். உடனே கியூ பிரிவு பொலிஸார் அந்த மினி லொறியையும் வள்ளத்தையும் சுற்றி வளைத்து அந்த 5 பேரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து வள்ளத்தில் ஏற்றியிருந்த 27 விரலி மஞ்சள் மூட்டைகளும் மினிலொறியில் இருந்த 43 மூட்டைகளும், கடத்ததலுக்கு பயன்படுத்திய மினி லொறியும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 4 இலட்சம் ரூபா ஆகும். மொத்தம் 2.38 தொன் விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதிலிருந்து புரிவது, இதுவரை அகப்பட்ட கள்ளக் கடத்தல் மஞ்சள் தொகையில் இதுவே எக்கச்சக்கம் தன்னிறைவு காணாத நிலையில், இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கள்ளக் கடத்தலில் வருபவைகளை யானை விலை குதிரை விலை கொடுத்து வாங்க இயலா சங்கடத்தில் ஒரு கிருமிநாசினியை ஒவ்வொரு நாளும் இழந்து கொண்டிருக்கிறோம். அப்பாடி! பயங்கரக் கசப்பு! 

இனிப்பு

‘விக்கி’ என்பார் (நம்ம ‘மாத்தளை செல்வா’ வோ அறியேன்) வழங்கிய செய்தி ஒன்றை 24.03.2021 'தினகரன்' 11ஆம் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. 

அதன் முக்கியப் பந்திகள் இரண்டு அதன் இப்படி:  அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சீரடி சாய்நாதர் பிரதிஷ்டை 29ஆம் திகதி காலை 09.30 மணி முதல் 10.30 மணிவரை நடைபெற திருவருள் கூடியுள்ளது.

காலை ஒன்பது மணி முதல் பத்து மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் திருக்கோவில் சீரடி சாயிபாபா கருணாலயத்தின் ஆதீன கர்த்தா ஸ்ரீமதி சாய் சீதா விவேக் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த இனிப்புச் செய்தியை அபிமானிகள் இரண்டு நாட்கள் கழித்து இன்று படிக்கிறீர்கள்.  

இப்பொழுது இருப்பாகவோ ஸ்ரீ சீரடி மகான் பற்றிய சிந்தனைகள் சிறகடிக்கின்றன. 

இந்த அம்பாறைப் பிரதேசத்தில் திருக்கோவில் உள்ள பகுதியுடன் பின்னிப்பிணைந்தவர்களாக முஸ்லிம் சமூகத்தினரும் வாழ்க்கை. சமீபகாலங்களில் சிங்களக் குடியேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. 

இருக்கட்டும் மூவினமும் புரிந்துணர்வுடன் நன்றாக வாழ்ந்தால் சரி வாழட்டும். 

பாரத நாட்டின் வடபகுதி மகாராஷ்டிர மாநில அகமது நகர் மாவட்டத்து சீரடி கிராமத்தில் அறுபது ஆண்டுகள் எளியவராய் இனியவராய் இருந்த மகான் சாயிபாபா. இந்தப் புரிந்துணர்வையே சொல்லிலும் செயலிலும் காட்டியவர். 

இவரைப் பின்பற்றிய ஸ்ரீ சக்தி சாயி பாபா அவர் பூர்வீகத்தை அருமையாக வெளிச்சம் இட்டியிருக்கிறார். அன்னாரின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு சிறு தொகுப்பை இனிப்பாக வழங்குகின்றேன். 

நடுக்காட்டில் கைவிடப்பட்ட ஒரு குழந்தையை, சீரடிக்குப் பக்கம் இருந்த- கிராமத்தில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் பக்கீர் கண்டெத்து, 1835லிருந்து 1839 வரையில் 04 ஆண்டுகள் தன் மனைவியை வளப்புத் தாயாக்கி வளர்த்தார். பின் காலமானார். விதவை மனைவி வறுமைக்குள்ளானாள். அதே சமயம், சிறுவனின் நடத்தைகளும் விசித்திரமாக இருந்தன. பள்ளிவாசலுக்குப் போகிறவன் இந்துக்கோவிலுக்கும் போகத்தலைப்பட்டான்.

இரு சமூகத்தவரும் இதை ஏற்கத் தயாரில்லை. கோபால்ராவ் தேஷ்முக் என்ற செல்வந்தரான வெங்குசா என்பவரின் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டான். 12 ஆண்டுகள்(1839--1851) வளர்ந்தான்.  

அங்கு அவன் பெற்ற செல்வாக்கும் புகழும் மற்றவர்களுக்குப் பொறாமையை உண்டு பண்ண பல தொந்தரவுக்குள்ளாகி ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. சில வருடங்கள் பல இடங்களிலும் சுற்றித்திரிந்து அதன் பின் மறைவு வரை வாழ்ந்த இடமே அகமது நகூர், சீரடி கிராமம். முதன் முதல் தன் 16ஆம் வயதில் வந்த இடம் ஒரு வேப்ப மரத்தின் அடியில்! 

பின்பு அங்கேயே ஒரு பாழடைந்த பள்ளிவாசலில் அவரை விரும்பிய பலர் கட்டடத்திற்குப் புதுப் பொலிவு கொடுக்க முயன்ற சமயம் மறுப்பு. எனினும் பின்னர் சம்மதிப்பு ஒரு நிபந்தனையுடன்! 

மேற்குப் புறச் சுவரில் மிம்பரை   (வெள்ளிக்கிழமை பகல் தொழுகைக்கு முன் இஸ்லாமிய சொற்பொழிவு இடம்பெறும் இடம்) அழகாக அமைத்து நல்ல லாந்தர் விளக்குகளும் பொருத்துங்கள்!  

அவ்வாறே நடந்தது! அங்கு அவர் வாழ்ந்த 60 ஆண்டுகாலத்திலும் பள்ளி திறந்தபடியே இருந்தது. இப்போது காலைத் தொழுகைக்கு (சுபஹூ) 4 மணிக்குத் திறந்து இரவு 09.30க்கு மூடல். சீரடிக்கு வரும் எவரும் இப்பள்ளிவாசலுக்கு வராமல் போவதில்லை. 

அவர் உடயோகித்த அடுப்பு, மாவு அரைக்கும் அரவைக்கல், உருவாக்கிய மரங்கள் அடர்ந்த சிறு தோட்டம் ஒரு கிணறு ஆகியவை அனைவர் பார்வையிலும் இன்றும் படுகிறது.  

இப்போது இந்த இடம் “துவாரகா மாயி’ என அழைக்கப்படுகிறது. மறைந்ததும் இங்கேயே! ஒரு கல்லறை கட்டப்பட்டுள்ளது. 

தான் வாழ்ந்த காலத்தில், பல ஊர்களிலிருந்தும் காணவந்த மக்களின் துயரங்களை தீர்த்து வைத்தவர் எனப் போற்றப்படுகிறார். அதற்காக எந்தக் காணிக்கையையும் பெற்றவரல்லர் எனவும் புகழப்படுகிறார். 

இவர், இந்துவா, முஸ்லிமா எனப் பலரும் வியக்குகிறார்கள். 

“அல்ல! இந்த இரண்டிலும் கலந்து கறைந்திருந்தவர். அவர் யார் மதத்தையும் இழிவுபடுத்தவோ, அந்த மார்க்கத்தை விட்டு அகலவோ சொன்னவரல்லர்” என ஆணித்தரமான பதிலை பலரும் சொல்கிறார்கள். 

இலங்கை, சீரடி சாயிபாபா மத்திய நிலையத்தின் தலைவரும், ஊடக ஜாம்பவானும் பலரின் எழுத்துலக வழிகாட்டியுமான அமரர் எஸ் டி. சிவநாயகத்தாரின் மைந்தருமான எஸ்.என். உதயநாயகன் ஒரு பதிவில் இப்படி எடுத்துரைத்துள்ளார். 

இவர் அனைத்து மதங்களுக்கும் உரித்துடையவர். எந்த மதத்தைப் பற்றியும் மாற்றுக் கருத்தே கிடையாது. இந்து பெற்றோருக்குப் பிறந்து. ராம் ராம் என்று உச்சரித்து, கீதை வழிநடந்ததால் இவர் ஒரு இந்து. அவரது வாழ்நாள் முழுவதும் மசூதியில் தங்கியிருந்து, ஒரு இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு, மாலிக் என்று அழைப்பதால் இவர் ஒரு முஸ்லிம். 
சீரடிபாபாவின் பிறப்பு 1835செப்டம்பர் 28, மறைவு 1918. வாழ்ந்த காலங்கள் 83.  

Comments