கோப்பை நிறைய சங்கடங்கள் | தினகரன் வாரமஞ்சரி

கோப்பை நிறைய சங்கடங்கள்

நண்பா, எப்படியிருக்கிறாய்? நமக்கிடையில் இந்த கேள்வி அவசியமற்றதாயினும் காலம் காலமாக கடிதத்திற்கென்று கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைக்காக எழுத வேண்டியிருக்கிறது. மட்டுமன்றி எதிலிருந்து ஆரம்பிப்பதென்ற என் நீண்ட நேர யோசனையின் இறுதியில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமையால் அந்த கேள்வியைக் கொண்டு தொடங்கிவிட்டேன்.

போன வாரமளவில் நான் அவனை சந்தித்தேன். எதிர்பாராத விதமாகத் தான்.இத்தனை நேரத்திற்கும் அது உனக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.உன்னை பற்றி நிறையவே அவன் சொன்னான். அது தான் இந்த கடிதம் மூலமாவது உன்னிடம் பேசிவிடவேண்டுமென்று முடிவெடுக்க காரணமாக அமைந்தது. நாம் இருவரும் சந்தித்து ஆறு ஏழு ஆண்டுகளாவது இருக்குமா?குறைந்த பட்சம் அதிகமாயிருக்கும். அவனையும் சேர்த்து நாம் மூவருமாக சந்தித்துக் கொண்ட காலம் இன்னும் அதிகம் தான்.

நான் நலமாக உள்ளேன். செவ்வக வடிவ மூக்குக்கண்ணாடியிலிருந்து வட்ட வடிவத்திற்கு மாறியுள்ளேன். அது எனது சிறந்த முடிவென்று பலரும் கூறியிருக்கிறார்கள். மற்றைய படி பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. நீ வாழ்ந்து பார்க்க ஆசைப்படுவதாய் ஒருமுறை கூறினாயல்லவா அப்படியொரு வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கிறது. ஒவ்வொரு ஊராக சுற்றித்திரிகின்றேன். ஊருக்கும் அப்பப்போ வந்து போவேன். ஆனாலும் யாரும் என்னை அடையாளம் கண்டுவிடாதபடி கவனமாயிருந்து கொள்வேன். அப்படியாயின் எதற்காக வருகிறாய் என்று நீ கேட்டால் ஊருக்காக தான். எங்கு அலைந்து திரிந்தாலும் சொந்த ஊரில் இருப்பது போல ஒரு திருப்தியை எதுவும் தராதல்லவா?

நானின்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமாகியிருந்தால் அதன் பொறுப்புகளும் கடமைகளும் இப்படி ஊர் ஊராக சுற்றித்திரியும் சுதந்திரத்தை பறித்து சுவாரசியம் ஏதுமில்லாமல் வாழ்க்கையை கடத்தும் நாட்களுக்குள் என்னையும் எப்போதோ தள்ளி விட்டிருக்கும். திருமணம் செய்து கொள்ளாமலிருக்க தனித்த காரணங்கள் என்று எதுவுமில்லை. மனிதனாக பிறந்தவன் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டுமென்ற எவ்வித கட்டாய விதிமுறைகளும் இல்லையே. அதுவுமில்லாமல் என் வட்டத்திற்குள் நான் புதிதாக யாரையும் சேர்த்துக் கொள்ளும் மன நிலையிலில்லை. ஏற்கனவே இருப்பவர்களையும் முடியுமான அளவு கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி வருகின்றேன். ஏன் என்று கேட்காதே என்னிடத்தில் அதற்கு பதிலேதுமில்லை. நான் காரணங்கள் கேட்கப்படுவதையும் வெறுக்கிறேன். பற்றுதல் இல்லாத வாழ்க்கையா எனக் கேட்கிறாயா?. பற்றுதல் மனிதர்கள் மீது தானில்லை. மற்றைய படி நான் வாழ்கையை சந்தோசமாக தான் வாழ்ந்து வருகிறேன்.இப்படி வைத்துக்கொள் ஒரு சூபியுடைய கண்களை கொண்ட, காதுகளை கொண்ட, மனதைக் கொண்ட லெளகீகத்தை விரும்பும் மனிதன். முரணாயிருக்கிறாதா?முதலாய் ஒன்று இல்லாதது தானே முரணுக்குக் காரணம். இந்த விடயத்தில் நான் முதலாவது ஆளாக இருந்து விட்டுப் போகிறேன். என் பின்னே வருபவனுக்கு இங்கு முரண் என்று எதுவுமிருக்காது.

இதுவரை இக்கடிதத்தை வேறு யாராவது படித்திருந்தால் இனிமேலும் படித்தால் நான் அதிகப்பிரசங்கி தனமாக பேசுவதாய் தோன்றலாம். என்ன இவன் இப்படி சுய புராணம் பாடிக்கொண்டிருக்கிறான் என நினைக்கலாம். ஆனால் நான் உன்னுடன் உரையாடுகிறேன்.நீ என் முன்னே இருந்திருந்தால் என்னென்ன கேள்விகள் கேட்டிருப்பாய் என்பதை உணர்ந்து அதற்கேற்ற பதில்களையும் சொல்லி வருகிறேன். இது பற்றி உனக்கு கூறி புரிய வைக்க வேண்டுமென்பதில்லை. அது உனக்கு தெரிந்திருக்கும். அல்லது இத்தனை ஆண்டுகளில் நீயும் மாறிப் போயிருந்தால் உனக்கும் நான் அதிகப்பிரசங்கி தனமாய் பேசுபவனாகவோ சுய புராணம் பாடுபவனாகவோ தெரியக்கூடும்.

ஊரை விட்டு தூரமாவதன் முடிவுகள் படிப்படியாக எடுக்கப்பட்டாலும் அதற்கான உடனடி காரணமாக அவளின் திருமணம் அமைந்து விட்டது.உனக்கு தெரியாததா என்ன அவளை நான் காதலித்தேன். சுமாராக ஆறு வருடங்கள். ஆனால் அவளைப் பொறுத்தவரையில் நான் அவள் பின்னால் அலையும் பத்துப் பேர் போல பதினொராவது ஆளாக இருந்திருப்பேன். அப்படி தான் நான் நம்புகிறேன். எனக்கு சரிவர காதலிக்கத் தெரியாது. பின்னால் சுற்றியலைந்து காதலை நிரூபிப்பதற்கான சாகசங்களை நிகழ்த்தத் தெரியாது. அதிசயங்களை நடாத்தி காதலிக்க வைக்கத் தெரியாது. நான் காதல் என்பதை மிக இலகுவானதொரு சமாச்சாரமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.அவள் மனதின் கடின தன்மையை புரிந்து கொள்ளாது இலகுவாக காதலிக்க வைத்து விடலாம் என நம்பியிருக்கலாம். அல்லது அவளை விடுத்து அவள் மீதான இந்த காதல் மட்டும் தான் எனக்குத் தேவையானதாய் கூட இருந்திருக்கலாம்.இவையெல்லாம் என் காதல் கைகூடாமல் போனதற்கு நான் அறிந்து வைத்துள்ள காரணங்கள். எப்படியாயினும் முயற்சியே எடுக்கப்படாத ஒரு விடயத்தில் பெரியதொரு நம்பிக்கையை மட்டும் வளர்த்துக் கொண்டது என் தவறு தான். ஆனால் அவளுக்கு நான் ஏதோவொரு விதத்தில் விசேஷமான ஆளாக இருந்தேன் என்பதில் மட்டும் இப்போது வரை உறுதியாக இருக்கிறேன்.

அவளின் வீட்டில் திருமண பேச்சுக்கள் எழுந்த ஆரம்ப நாட்களிலே அது பற்றி எனக்கு தெரிந்திருந்தது. ஒன்றுக்கு இரண்டாக அவளின் தொலைபேசி எண் கூட எனக்குத் தெரியும்.ஒரு அழைப்பு சரி எடுத்திருக்கலாம் தான். ஆனால் அத்தனை வருடங்களில் இல்லாத தைரியத்தை ஒரே நாளில் வரவழைத்துக் கொண்டு பேச என்னால் முடியவில்லை. நான் ஒரு கோழை தான். என்னுடையது போலவே இதே காரணத்திற்காக பல காதல்கள் இங்கு காணாமல் போயுள்ளதே எனக்கு ஆறுதலான ஒரு விஷயம். அதாவது நான் மட்டுமே இங்கு கோழையல்ல என்பதில் அபத்தமானதொரு நிம்மதி. நீ என்னை திட்டுகிறாய் என புரிகிறது. உன்னிடத்தில் நானிருந்தால் நான் அவளை நேரிலேயே சந்தித்திருப்பேன் என கூறுவதும் தெரிகிறது. அது தான் உனக்கும் எனக்குமான வேறுபாடு.நீ அடிக்கடி சொல்வாயல்லவா நாம் மூவரும் ஒரே கருத்துடையவர்கள் அது தான் உன்னையும், என்னையும், அவனையும் ஒன்றாக நட்பில் பிணைத்ததென்று.நான் அந்த கருத்தில் உடன்படவில்லை.

நாம் மூவருமே வேறு வேறு கருத்தை மாறுபட்ட சிந்தனையை கொண்டவர்கள்.மறந்து விட்டாயா நாம் மூவரும் ஒரு விடயத்திற்காக ஆளுக்கொரு கருத்தில் இருப்போம். அதற்காக அடித்துக் கொள்வோம்.இதே போல் தான் எத்தனை சண்டைகள் எத்தனை விவாதங்கள். இந்த சண்டைகள் தான் நம்மை நட்பில் பிணைத்தது. இப்படி வேறு யாருக்கெல்லாம் அமைந்ததோ தெரியாது. இல்லையெனில் இப்படி முட்டி மோதி நண்பர்களாய் ஆன மூன்று பேர் கொண்ட கூட்டணி உலகத்திலேயே நாம் மட்டும் தானோ தெரியாது.பழைய நினைவுகள் வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தந்தாலும் இறுதியில் மனதை அழுத்தும் கவலையில் தான் முடிகிறது. அதனால் பெரும்பாலும் நான் அதை விட்டும் அதிக தூரம் விலகியிருக்கவே முயற்சிக்கிறேன்.

உன் திருமண குளறுபடிகள் பற்றியும் அவன் சொன்னான். உண்மையில் நான் அது பற்றி அப்போதே அறிந்திருந்தேன். உன் சகோதரர்களின் திருமணம் பற்றி வீட்டிலெடுக்கப்படும் முடிவுகள் குறித்து நீ அப்பப்போ எங்களிடம் சொல்வாயல்லவா அதைக் கொண்டும் எனக்கு இரண்டு விடயங்கள் தெரிந்திருந்தது.ஒன்று உன் வீட்டில் எல்லா இறுதி முடிவுகளும் உன் அம்மாவினால் தான் எடுக்கப்படுகிறது. இரண்டு உன் சகோதரர்களோ நீயோ அல்லது உன் தந்தையோ கூட அந்த முடிவுகளை எதிர்க்கத் துணியாதவர்கள். உன் திருமண சமாச்சாரத்திலும் இது தான் நடந்திருக்கும் என நான் புரிந்து கொண்டேன். எது எப்படியோ எந்த தாயும் தன் பிள்ளைக்கு தீயதை தர விளைவதில்லை.பெற்றோரின் முடிவுகள் ஆரம்பத்தில் நமக்கு பிடிக்காவிட்டாலும் போகப் போக அதன் நன்மைகள் நம்மை உணரச் செய்து அதற்குள் ஒன்றிப்போகச் செய்து விடும். இந்த திருமணம் குறித்து நீ ஆரம்பத்தில் அதிருப்தியில் இருந்திருந்தாலும் இத்தனை வருடங்களில் அவற்றிலிருந்து மீண்டு வந்திருப்பாயென நம்புகிறேன். கணவன்- மனைவி உறவு குறித்தோ திருமண வாழ்வு குறித்தோ அதிலிருக்கும் சிக்கல்கள் குறித்தோ பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது.இருந்தும் ஒரு நண்பனாக நீ நல்லபடியாக இருப்பதை பார்க்க ஆசைப்படுவதால் இதைப்பற்றியெல்லாம் கதைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் கூட நீ உன் திருமண விஷயம் பற்றி அடிக்கடி கூறி கவலைப்படுவதாக அவன் சொன்னான்.பழைய கசப்புகளிலிருந்து மீண்டு வா.கவலைப்படுவதற்கோ குற்றவுணர்ச்சிக்கு ஆளாவதற்கோ இங்கு எதுவுமில்லை. நம் அனைவர் குறித்த எல்லா முடிவுகளும் ஒரே கையினால் தான் எழுதப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளில் நம் நட்பு வட்டத்திற்குள் என திடத்தை யாராவது நிரப்பியிருப்பார்கள் என நம்புகிறேன். நான் புதிதாய் மனிதர்கள் எவரையும் சம்பாதித்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் தம் பக்க கருத்தில் உறுதியாக இருப்பதில்லை. விவாதம் செய்வதில்லை. மாறாக அவர்கள் என் பேச்சுக்கு தலையாட்டுகிறார்கள்.நான் எதைச் சொன்னாலும் அதை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாமல் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய உரையாடல்கள் எனக்கு துளியளவும் சுவாரஸ்யத்தை தருவதில்லை.இத்தகையவர்களிடத்தில் எங்கனம் நான் நட்பை வளர்த்துக் கொள்வது. இத்தனைக்கும் நம் உரையாடல்கள் எவ்வளவு சுவரஸ்மாயிருக்கும். கேள்வி, கிண்டல் மற்றும் பல மூக்குடைப்புகள் என கலை கட்டும். நான் கவனித்த வரையில் நம் கதையாடல்களில் எதிரிகள் இருவர் பேசிக்கொள்ளும் போதுள்ள விட்டுக் கொடுக்காத தன்மையும், முன்னைய காதலர்கள் இருவர் பேசிக்கொள்ளும் போதுள்ள இறுக்கமும் எப்போதுமிருக்கும். இதையெல்லாம் நினைத்து ஏங்கவோ அல்லது கவலைப்படுவதற்கோ எனக்கு எவ்வித அருகதையுமில்லை. ஏனெனில் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு தூரமாய் ஒதுங்கிக் கொண்டது நான் தானே. நான் ஏதேதோ உலறிக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.எப்படியோ இக்கடிதத்தை எழுத தொடங்கிவிட்ட எனக்கு எப்படி முடிப்பதென்று தெரியவில்லை.எனக்கு தேவையானதெல்லாம் என்னிடமிருந்து உனக்கு ஒரு கடிதம் வந்து சேர வேண்டும்.என்னால் உண்டான, என் மீது உண்டான குற்றவுணர்ச்சியிலிருந்து நீ மீள வேண்டும். உன் மீது எனக்கு எவ்வித கோபமோ, மன தாபமோ இல்லையென்பதை புரிய வைக்க வேண்டும். உன்னையும் நம் நட்பையும் நான் மறந்துவிடவோ, மறக்க நினைக்கவோ முயற்சிக்கவில்லை என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும்.

தினமும் ஏதாவதொன்று உன்னை நினைவுப் படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஒரு சிறிய தேநீர் கோப்பைக் கூட அதற்கு போதுமானது. நியாபகமிருக்கிறதா? முன்பெல்லாம் நீ கையிலெடுக்கும் ஒவ்வொரு தேநீர் கோப்பைக்கும் நிறைகளையும் குறைகளையும் வரிசைப்படுத்திக்கொண்டே அதற்கு புள்ளிகள் இடுவாய். அதன்படி யார் யாரின் கைப்பக்குவத்தில் ஊற்றப்பட்ட தேநீர் சிறந்தது என்று ஒரு பட்டியலே வைத்திருந்தாய். நான் கூட உனக்கு திருமணமாகட்டுமே ஏதோவொரு மாலை வேளையில் நான் வந்து உன் வீட்டு தேனீருக்கு புள்ளியிடுகிறேன் எனக் கூறினேன். நீயும் அதை சவாலாக எடுத்துக் கொண்டு அப்படியானால் பிரமாதமாய் தேநீர் ஊற்றத் தெரிந்த ஒரு பெண்ணைத் தான் எங்கிருந்தாவது தேடிப் பிடித்து திருமணம் செய்து கொள்வேன் என்றாய்.

உண்மையில் எல்லோருக்கும் ஏதோவொன்றை குறையாய் கூறும் உனக்கு எப்படியான கை பக்குவம் வாய்க்கப்பெற்ற மனைவி அமைந்திருக்கிறாள் என்பதை தெரிந்துகொள்ளத்தான் நான் ஆசை பட்டிருக்கலாம். ஊருக்கு வரும் போதெல்லாம், உன் வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் இந்த தேநீர் கோப்பை சமாச்சாரம் தான் நினைவுக்கு வரும். அது ஏதோவொரு குதுகலத்தையும் உள்ளூர ஒரு சிரிப்பையும் கூட தரும். ஆனால் இறுதியில் நமக்கிடையில் கோப்பை நிறைய சங்கடங்கள் மட்டுமே நிரம்பியிருக்குமென அஞ்சி உன் வீட்டை கடக்கையில் வேகமெடுத்து விடுகிறேன்.

இறுதியாக ஒரு விடயம் சொல்ல வேண்டும்.இல்லை இரண்டு விடயங்கள்.ஒன்று அவளின் தேநீர் பிரமாதமயிருக்குமாம்.நான் காதலிக்கும் காலத்தில் எனக்கும் அவளுக்குமான பொதுவான உறவினர் ஒருவர் சொல்ல இதை கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றையது நீயும் அவளும் கூட பிரமாதமானதொரு ஜோடி தாம்.

பாஹிம் எம்.பரிட்

Comments