கூட்டு ஒப்பந்தம் கைவிடப்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

கூட்டு ஒப்பந்தம் கைவிடப்படுமா?

கூட்டு ஒப்பந்த பொறிமுறைக்குள் இடம்பெற்ற சம்பள அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில் சம்பள நிர்ணய சபையை நாடவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. வேறு வழியின்றி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களும் இதற்கு இணங்கின. இதன் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று முடிவெடுத்தது சம்பள நிர்ணயசபை. இதனை வர்த்தமானியிலும் வெளியிட வைத்தது.

ஆனால் இதற்கு உடன்படாத 20 பெருந்தோட்டக் கம்பனிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. வர்த்தமானி அறிவித்தலை தடைசெய்ய வேண்டுமென்பதே கம்பனி தரப்பின் முறைப்பாடு. மனுவை எற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அன்றைய தினம் தொழிற்சங்கங்கள் இம்மனுவிற்கு எதிராக ஆட்சேபணை மனுக்களை தாக்கல் செய்தன. அதன் பேரில் விசாரணையை எதிர்வரும் 5ஆம் திகதி (நாளை) வரை ஒத்திவைத்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.

விசாரணை முடியும் வரை 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதா? அல்லது இடைக்கால தடை விதிப்பதா என்னும் தீர்மானம் குறித்து நீதிமன்றம் அறிவிக்க இடமுண்டு. எமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி மிகத்திறமை வாய்ந்த சட்டத்தரணிகள் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்காக வாதிடப் போகிறார்கள். பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் எவ்வாறு ஈடுகொடுக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே விளைவுகள் ஏற்படும். வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் எழுதப்படும். அந்தவகையில் மலையக தொழிற்சங்கங்களின் சார்பில் வாதிடப்போகும் சட்டத்தரணிகள் தமது பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றப் போகின்றார்கள் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் நானுஓயா, ரதல்ல தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை 1000 ரூபா வழங்கத் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் இருப்பதாகவும் அதனை தொழிற்சங்கங்கள் ஏற்கமறுத்ததே இன்றைய சிக்கல்களுக்குக் காரணம் என்றும் கூறியுள்ளார். தவிர, இத்தொழிற்சங்கங்கள் சம்பள நிர்ணய சபையில் இருந்து விலகவேண்டும். மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் பிரவேசிக்க முன்வந்தால் அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அந்தஸ்து கொண்ட தொழிற்சங்கங்களான இ.தொ.கா, இ.தே.தோ.தொ. சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு (10 மலையக தொழிற்சங்கங்களின் இணைப்பு) கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப் போவதாக கூறியிருந்தன. ஆனால் அது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.

கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள ஏனைய தரப்பின் உடன்பாடு அவசியம். அப்படி இல்லாவிடில் தாமாகவே வெளியேறுவதை சம்பந்தப்பட்ட தரப்புகள் பகிரங்கப்படுத்த வேண்டும். ஆனால் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் இதுவரை பட்டவர்த்தனமாக எதனையும் அறிவிக்கவில்லை. சம்பள நிர்ணய சபையின் முடிவான 1000 ரூபாவை வழங்க வேண்டும் என்ற ஆவேச அறிவிப்புகளாகவே கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப் போவதாக எழுப்பிய குரல்கள் அமைந்தன. அப்படியே அமுங்கியும் போயின.

ஆனால் இ.தொ.காவுக்கு இது பிடித்தமான சங்கதியாக இருக்க முடியாது. ஏனெனில் இ.தொ.கா.வின் அப்போதைய தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் தான் கூட்டு ஒப்பந்தத்ததின் சூத்திரதாரி. எனவே அதனைக் கைவிடுவது என்பது உசிதமாக இருக்கப் போவதில்லை. இ.தொ.கா 2016 களில் சம்பள நிர்ணயத்துக்கான கூட்டு ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்யப்போவதாக அமரர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார். ஆனால் இறுதிவரை அவர் எதனையுமே செய்யவில்லை. கூட்டு ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர்ளை தன் வசப்படுத்திக்கொள்ள ஒரு பொறி. அதனைக் கைவிடுவது என்பது சாதாரண விடயமாக இருக்காது.

பொதுவாக கூட்டு ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சாதகமான பல அம்சங்களை உள்ளடக்கவே செய்கிறது. போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் இன்றி சம்பள விவகாரத்தைக் கையாளும் வாய்ப்பு. இணக்கப்பாட்டின் அடிப்படையில் தொழிலாளர் நலன்கள் பாதுகாப்பு என்று நல்ல சமாச்சாரங்கள் இருக்கவே செய்கின்றன.

எனினும் கடந்த காலங்களில் குளறுபடிகள் இழுத்தடிப்புகள் ஏற்படவே செய்தன. இதற்குக் காரணம் ஒப்பந்த ஷரத்துக்களை உரியமுறையில் செயற்படுத்தாமையே ஆகும். இதற்கான அழுத்தங்களைக் கம்பனி தரப்புக்கு ஏற்படுத்துவதில் தொழிற்சங்க தரப்புகள் பலவீனமாகவே இருந்துள்ளன.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் இருக்கும்வரை கூட்டு ஒப்பந்தம் பற்றிய ஒரு நம்பிக்கை இருக்கவே செய்தது. கம்பனி தரப்பை வழிக்குக் கொண்டுவரக் கூடிய ஆளுமையும் அனுபவமும் அவருக்கு இருந்தன. ஆனால் அந்த முதிர்வு நிலை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இல்லை என்கிறார்கள் நோக்கா்கள்.

ஜீவன் தொண்டமானைப் பொறுத்தவரை 1000 ருபா சம்பளத்தை. ஏதாவது ஒருவழியில் பெற்றுத்தந்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம். அவருக்கு சவாலாகவே 1000 ரூபா சம்பள விவகாரம் மாறிப்போயிருந்தது. எனினும் தொழிலாளர்களது சம்பள விடயம் வருங்காலத்தில் எவ்வாறு கையாளப்படப் போகிறது. அது எந்தவகையில் தொழிலாளர்களுக்குச் சாதகமான தன்மையை உள்வாங்கப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் சாணக்கியம் வெளிப்படும் என்பதே உண்மை.

தொழிற்சங்க தரப்பு இப்படி குழப்பத்தில் இருந்து விடுபட்டு தொலை நோக்கிலான ஒரு தீர்மானத்துக்கு வராத நிலைமையிலேயெ நீதிமன்றத்தில் வாதிடப் போகின்றன. ஆனால் கம்பனி தரப்பு என்ன செய்கின்றதாம்? அது ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளது. அதனாலேயே சம்பள நிர்ணய சபையின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்துணையை நாடி இருக்கின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தாம் விலக வேண்டிவரும் என்னும் அச்சுறுத்தலுடன் தான் அது வாதங்களை முன்னெடுக்கும்.

ஆய்வாளர்களின் பதிவுகளின்படி வழக்கு இடம்பெறும் கால இடைவெளியைப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களை மேலும் பலவீனத்துக்குத் தள்ளி விடவே பயன்படுத்த முயலும். தற்போதைய நிலையில் தோட்டத் தொழிற்றுறையில் பெண்கள் மட்டுமே அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை வைத்து போராட்டங்கள் நடத்துவது எல்லாம் முன்னைய காலங்களைப் போல விளைவுகளை ஏற்படுத்தப்போவது இல்லை. இது கம்பனி தரப்புக்கும் தெரியும். மலையக தொழிற்சங்கங்களுக்கும் புரியும்.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மீதான தமது நம்பிக்கையை சிறுகச்சிறுக இழந்து வருகிறார்கள். அத்துடன் மலையக தொழிற்சங்கங்களிடம் ஒற்றுமை என்பது மருந்துக்கும் கிடையாது. தமது அரசியல் இருப்புக்கான ஆதார கருவிகளாக மலையக மக்களை மாற்றியமைப்பது ஒன்றையே பல சங்கங்கள் கொள்கையாக கொண்டுள்ளன.

அந்த வகையில் பார்க்கப் போனால் கம்பனி தரப்பின் கை ஓங்கித்தான் இருக்கிறது. சம்பள நிர்ணய சபையோடு மோதுவது என்பது அரசாங்கத்தோடு மோதுவது தான். ஆனால் அதற்குத் தயாராகிய நிலையிலேயே அது கோதாவில் குதித்துள்ளது. கூட்டு ஒப்பந்தம் ரத்தாகும் பட்சத்தில் அது பல வகைகளிலும் கம்பனி தரப்புக்கே சாதகமாக அமையும். மீண்டும் பெருந்தோட்டக் கட்டமைப்பை தாம் விரும்பியபடி கையாள முழுமையாகவே வாய்ப்புக் கிடைக்கும். இதனால் தொழிலாளர்கள் அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம்.

பன். பாலா

Comments