முற்றுமுழுதான ஆராய்வுக்குரியதாக தமிழ் அரசியல் முன்னெடுப்பு | தினகரன் வாரமஞ்சரி

முற்றுமுழுதான ஆராய்வுக்குரியதாக தமிழ் அரசியல் முன்னெடுப்பு

தமிழ்த் தரப்பின் தேசியவாத அரசியல் முன்னெடுப்புகள் குறித்து கேள்விகளை எழுப்பி, மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்கிறார் கருணாகரன். அரச எதிர்ப்பு அரச ஆதரபு என்ற இரு நிலைப்பட்ட அரசியலில் பெற்றுக் கொண்டது என்ன? என்று கேள்விக்கான பதிலாகப் புதியதொரு வழிமுறை இடையூடாட்ட அரசியல் வேண்டும்  என்பதை வலிறுத்தும் இந்தக் கட்டுரைத் தொடர் அதற்கான மாதிரியை  அடையாளப்படுத்துகிறது. இதைக்குறித்த கருத்துகளை எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த்தேசியக் கட்சிகளின் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) அரசியல் போதாமைகளும் ஜனநாயகப் பற்றாக்குறையும் சமூக நீதி குறித்த அக்கறையின்மையும் செயற்பாட்டுப் பலவீனமும் அவற்றை விட்டு நம்மைத் தூரத் தள்ளுகின்றன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற நெருக்கடிகளை முறியடிக்கக் கூடிய விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படைத் தகுதிகளை இவை கொண்டிருக்கவில்லை என்பது இதில் முக்கியமான குறைபாடாகும். இதிலும் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தினரோடு கொள்ள வேண்டிய உறவைப் பற்றியும் இணைந்து செயற்பட வேண்டிய அரசியல் தேவையைப் பற்றியும் இவற்றிடம் எந்த விதமான தெளிவான சித்திரங்களும் இல்லை. நடைமுறைகளும் இல்லை.

இதைப்போலவே வடக்கும் கிழக்கும் எப்படி அகரீதியாகவும் புறரீதியாகவும் இணைந்து அரசியல் மற்றும் பண்பாட்டு உறவில் நீடிப்பது என்பதைக்குறித்தும் இவற்றிடம் எந்த விதமான சிந்தனைகளையும் செயற்பாட்டு முறைமைகளையும் காணமுடியவில்லை. அவ்வாறே வடக்குக் கிழக்கில் உள்ள சிங்கள மக்களுடன் எப்படியான அரசியல் தன்மைகளை மேற்கொள்வது? அரசியலுக்கு அப்பால் சமூக வாழ்விலும் பண்பாடு, நிர்வாகம் உள்ளிட்ட பிற செயல்முறைகளிலும் எப்படி இணக்கப் புள்ளிகளையும் ஒருங்கிணைவையும் கொள்வது என்பதிலும் எந்தத் தெளிவும் இல்லை. (இதைக் குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயலாம்).

இந்த நிலையில் தனியே அரச எதிர்ப்புவாதமும் சர்வதேசத்தை நோக்கிய கையேந்தலுமாக தமிழ்த்தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியுமா? அது பயன் தருமா? அதுவும் போராடிப் பேரிழப்புகளைச் சந்தித்த நிலையிலிருக்கும் மக்களுக்கு இவ்வாறான மேலோட்டமான அரசியல் (சட்டை கசங்காத அரசியல் அல்லது வெள்ளை வேட்டி அரசியல்) பயனுடையதா? சரியானதா?

இவ்வாறான நியாயமான கேள்விகளை நாம் எழுப்பும்போது உடனடியாக நம்மைநோக்கி, “அப்படியென்றால், நீங்கள் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவரா? அரச சார்பானவரா, ஒத்தோடியா?” என்று கேட்கிறார்கள்.

ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று உண்மையில் விளங்கவில்லை. இதொரு குறுக்கு வழி எண்ணமே இவர்களை இப்படிக் கேட்க வைக்கிறது. மாற்றுச் சிந்தனைக்கு செல்ல முடியாத, மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்க முடியாத, மாற்றுச் செயல் முறையில் தம்மை ஈடுபடுத்த முடியாததன் காரணமே இது.

நாம் சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது அந்தத் தரப்பிலுள்ளவர்களின் பொறுப்பாகும். அதுவும் அரசியல் ரீதியான கேள்விகளையும் கருத்துகளையும் வெளிப்படையாக முன்வைத்தால் அதை அதே வெளிப்படைத் தன்மையோடு அணுகி, அவற்றுக்கான பதிலைக் காண முற்படுவதே நியாயம். அதுவே அழகு. அதுவே சரியானது. அதை விடுத்து, எதிர்க்கேள்விகளின் மூலம் திசை திருப்பல்களை மேற்கொள்வதும் அரச ஆதரவாளர் என்று குறிசுட்டு ஒரு பக்கம் தள்ளுவதும் நியாயமற்றது. அது கீழ்மையானது.

அரச ஆதரவு என்பதும் அரசை  எப்படிப் பயன்படுத்துவது என்பதும் அரசைப் புரிந்து கொள்வது என்பதும் வெவ்வேறானது. நிபந்தனையற்ற (கேள்விகளற்ற) அரச ஆதரவு என்பதும் நிபந்தனையற்ற (கண்மூடித்தனமான) அரச எதிர்ப்பு என்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அடித்தால் மொட்டை. கட்டினால் குடும்பி என்ற மாதிரி. இதையே கறுப்பு – வெள்ளை அரசியல் என்கிறோம். இந்தப் பார்வையே துரோகி – தியாகி என்ற பிரிகோட்டை உருவாக்கக் காரணமாகியது. இரண்டினதும் விளைவுகளில் வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் அரசியல் அடிப்படைகளில் இரண்டுக்கும் ஒத்த தன்மைகளுண்டு. முக்கியமாக உண்மைகளைக் காணத் தவறும் போக்கில்.

மற்றும்படி அரச ஆதரவு – அரச எதிர்ப்பு என்பதற்கு அப்பாலானதொரு வழிமுறையைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று பலரும் கேட்கலாம். அல்லது இதைக்குறித்த குழப்பம் அவர்களுக்கிருக்கலாம். இதற்கு முன்பு நாம் ஒன்றைப் பற்றி அறிய வேண்டும்.

இதுவரையான (60 ஆண்டுகளுக்கு மேலான) அரச எதிர்ப்பு நமக்கு எதைப் பெற்றுத் தந்தது? அதைப்போல இதுவரையான (20 ஆண்டுகள் வரையான) அரச ஆதரவு தந்தது என்ன?

எனவேதான் நாம் இரண்டுக்கும் அப்பாலான ஒன்றைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அது கண்மூடித்தனமான அரச எதிர்ப்போ அரச ஆதரவோ அல்ல. இரண்டுக்கும் இடையிலானதைப் போன்றது. அதாவது தேவையானபோது – சரியானவற்றுக்கான ஆதரவைக் கொடுப்பது. பிழையானபோது அவற்றை எதிர்ப்பது. மறுப்பது.

இதை ஒரு அரசியல் வழிமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது சற்றுக் கடினமானதே. ஆனால் இந்தக் கடினங்களை எதிர்கொண்டே நாம் நம்முடைய அரசியலை முன்னெடுக்க வேண்டும். எந்தக் கடினங்களையும் எதிர்கொள்ளாமல் எந்த இலக்கையும் எட்ட முடியாது.

சரி, ஆனால், இதற்கான சாத்தியங்கள் எப்படி? என்ற கேள்வியொன்று உங்களுக்குள் எழலாம். ஏனென்றால் அரச எதிர்ப்பில் பிரச்சினையே இல்லை. அரச ஆதரவை வரையறை செய்வதில்தான் பிரச்சினையே. நாம் நினைப்பதைப்போல அரச ஆதரவை வரையறுத்து வழங்க முடியாது. அது அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று நீங்கள் வாதிடலாம்.

அதில் உண்மையுண்டு. நிபந்தனையற்ற ஆதரவையே அதிகாரம் விரும்பும். அதையே அனுமதிக்கும். இந்த மாதிரி இடைநிலை நிற்கும் தன்மையை அது அனுமதிக்காது. அதற்கு இடமளிக்காது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும் அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் சில தேவைகள் – அவசியங்கள் உண்டு. அதைக் கவனித்து அதற்குள் காரியங்களைச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செயற்படுத்திக் கொள்ளலாம். அது சோரம் போதல் அல்ல. அது அரசியல் சாதுரியமாகும். மக்கள் நிலைநின்று, மக்கள் நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாகும். இதை இராஜதந்திர ரீதியாகச் செயற்படுவது என்றும் கருதிக் கொள்ளலாம்.

இவ்வாறு வலிமையாகச் செயற்படுவதன் மூலம் ஒரு புதிய அரசியல் அடையாளத்தையும் வழிமுறையையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த அரசியல் வழிமுறையும் அடையாளமும் முக்கியமானது. இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியதும் அதுவே. எப்படியென்றால், அரச எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல்  சரியானதை ஏற்றுக் கொண்டு, தவறானதை நிராகரித்தும் மறுத்தும் நியாயமாகச் செயற்படுவதாக ஒரு அடையாளத்தை உருவாக்குதல். இந்த அடையாளம் முக்கியமானது. இது எதிர்த்தரப்புகளுக்கும் வெளிச்சமூகத்துக்கும் ஒரு புதிய சேதியைச் சொல்லும். குறிப்பாக சிங்கள மக்களிடம் ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தும்.

இப்போதுள்ள அரச எதிர்ப்பை அல்லது தமிழ்த்தேசிய அரசியலை நாட்டுக்கும் தமக்கும் எதிரான போக்கு என்று கருதும் அல்லது கருதப்பட வைக்கும் நிலையே காணப்படுகிறது. எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பைக் காட்டுவது என்பது “எதிர்த்தரப்பு - எதிரித் தரப்பு” என்று அடையாளமாக்கி, அதற்கான எதிர் மனநிலையை சிங்கள மக்களிடத்தில் வளர்த்திருக்கிறது. இந்த அடையாளத்தையும் மனநிலையையும் பயன்படுத்தியே சிங்கள மேலாதிக்க – இனவாத அரசியல் நடத்தப்படுகிறது.
இதை நான் மேற்சொன்ன இடையூடாட்ட (சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் கருதிச் செயற்படும்) அரசியல் உடைக்கக் கூடியதாக இருக்கும். நாம் எதற்கும் எப்போதும் எதிரானவர்களல்ல. சரியானதை ஏற்றுக் கொள்வோம். அதற்கு ஆதரவழிப்போம். தவறானதை எதிர்ப்போம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆகவே நாம் எப்போதும் சரியானதை – நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானதை ஏற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்த்துவது. இதன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற எதிர் அடையாளத்தை மாற்றியமைப்பது.

“இதிலும் பிரச்சினை உண்டே!” என்று நீங்கள் கேட்கலாம். “எங்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது அவர்களுடைய நோக்கில் தவறாகத் தெரியும். அவர்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது எங்களுக்குப் பிழையாகத் தோன்றும். இப்படியிருக்கும்போது நாம் எப்படிப் பொதுவான சரியை ஏற்றுக் கொள்வது?” என்ற விதமாக.

இந்தச் சிக்கலும் சிரமமும் உண்டே. அதுதான் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு மிகமிகக் கடினமான வழிமுறை என்று. ஆனால் வேறு வழியில்லை. போர் மட்டும் இலகுவான வழியாக இருந்ததா, என்ன? அதில் எவ்வளவு இழப்புகள்? முக்கியமாக உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்புகள், வாழ்விழப்புகள், உடமை, வாழிட இழப்புகள் என ஏராளம் இழப்புகளை நாம் சந்திக்கவில்லையா? முப்பது ஆண்டுகள் அந்த வழியில் நம்மைச் செலவிடவில்லையா?

இது அதை விட இலகுவானது. ஆனால், மிகப் பொறுமையாக, மிக நிதானமாக, மிக விவேகமாகச் செயற்பட வேண்டியது.

இரண்டு தரப்புக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய சரிகளை முதலில் ஏற்றுக் கொள்வது. அதற்கான ஆதரவை வழங்குவது. அதைப்போல சிக்கலான இடங்களில் மிக நிதானமாக எமது தரப்பின் நியாயப்பாடுகளைச் சொல்லி, முன்பு சரியானவற்றுக்கு வழங்கிய ஆதரவை நினைவூட்டி எதிர்ப்பது.

இப்படிச் செய்து கொண்டு வரும்பொழுது நியாயமாக நாம் எதிர்ப்பைக் காட்டுகிறோம். நியாயங்களைக் கேட்கிறோம். நியாயமாகப் பேசுகிறோம் என்ற உணர்வு ஏற்படும். ஏனெனில் எதிர்த்தரப்பில் (சிங்களத்தரப்பில்) உள்ளவர்களுக்கு இதயமும் மூளையும் மனச்சாட்சியும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அவர்களிடமும் அறவுணர்வும் புரிதலும் உண்டு. உண்மையில் அவர்களை நாம் எதிர்த்தரப்பு என்றே கருத வேண்டியதில்லை. அப்படிக் கருதுவதே ஆயிரம் பிரச்சினைகளை உற்பவிக்கக்  கூடியது. இது நம்முடைய கடந்த கால அனுபவம் இல்லையா? என்பதால் நாம் இந்தச் சரியென்றால் அதை ஏற்றும் பிழையென்றால் அதை எதிர்த்தும் நிற்கும் ஒரு அரசியல் வழிமுறையை உருவாக்கி நிலைப்படுத்த வேண்டும்.

அதன் மூலம் புதிய அரசியல் திறப்பை (சாவியை) நம்முடைய கையில் எடுத்துக் கொள்ள முடியும். இன்றுள்ள ஒரே வழிமுறை இதுதான். அரசியலில் மாற்றுப்பார்வைகளுக்கு எப்போதும் இடமுண்டு என்பது யதார்த்தம். ஆனால், அந்த பலதரப்பட்ட பார்வைகளில் எவை சரியானவை, அனுபவத்துக்கும் அறிவுக்கும் நெருக்கமானவை என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது. தமிழ் அரசியல் முன்னெடுப்பு என்பது முற்று முழுதான ஆராய்வுக்குரியதாக இன்றுள்ளது. அதைச் செய்தே தீர வேண்டும்.

கருணாகரன்

Comments