ஆயிரம் கிடைக்கும் ஆனால் வேறொன்றும் கிட்டாது என்பது கம்பனி நிலைப்பாடு! | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் கிடைக்கும் ஆனால் வேறொன்றும் கிட்டாது என்பது கம்பனி நிலைப்பாடு!

இ.தொ.கா.வால் மட்டுமே இதனைச் சாதிக்க முடிந்தது என்று அது கொக்கரிக்கலாம். அதற்கான களநிலவரம் சாதகமாகவே உள்ளது. விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத்  தேர்தலில் பிரதான துரும்புச்  சீட்டாக 1000 ரூபா பெற்றுத் தந்ததைப் பாவிக்க இ.தொ.காவுக்கு நிறையவே வாய்ப்பு. இதனால் வீடமைப்புத் திட்டம் போன்று பாதியில் கைவிடப்பட்டுள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி மக்களின் அங்கலாய்ப்புகள் ஆறப்போடப் படலாம்' 

சம்பள நிர்ணய சபையின் ஆயிரம் ரூபா சம்பளம் என்ற முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் கம்பனி தரப்பு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.  

இதனால் சம்பள நிர்ணய சபையின் முடிவு நடைமுறைக்கு வருகிறது. மார்ச் 5ஆம் திகதியிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் தினசரி வேதனமாக 1000 ரூபாவைப் பெற அருகதை உடையவர்கள் ஆகிறார்கள். கம்பனி தரப்பு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவை வழங்கவேண்டும். வாழ்கைச் செலவுப்படியாக 100 ரூபாவை அரசாங்கம் திறைசேரியிலிருந்து வழங்கும். இது எந்த அடிப்படையில் வழங்கப்பட போகிறது என்பதை பற்றி அறிவிக்கப்படாவிட்டாலும் காரியம் என்னவோ சித்தி. இதை வாசிக்கும் நேரம் 1000 ரூபா நாட் சம்பளத்தை தொழிலாளார்கள் பெற்றிருப்பார்கள்.  

இதன் மூலம் அரசாங்க தரப்புக்கு ஒரு தலைவலி தீர்கின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தல்கால வாக்குறுதியொன்றை நிறைவேற்றியுள்ளார்கள். பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன கூற்றில் சொல்வது என்றால் இது அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றி. அரசே போராட வேண்டிய அளவுக்கு பலம் பொருந்தியதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் காணப்படுகின்றது.  

இ.தொ.கா.வைப் பொறுத்தவரை இது ஆறுவருட போராட்டத்தின் அமோக அறுவடை. இ.தொ.கா.வால் மட்டுமே இதனைச் சாதிக்க முடிந்தது என்று அது கொக்கரிக்கலாம். அதற்கான களநிலவரம் சாதகமாகவே உள்ளது. விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் பிரதான துரும்புச் சீட்டாக 1000 ரூபா பெற்றுத் தந்ததைப் பாவிக்க இ.தொ.காவுக்கு நிறையவே வாய்ப்பு. இதனால் வீடமைப்புத் திட்டம் போன்று பாதியில் கைவிடப்பட்டுள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி மக்களின் அங்கலாய்ப்புகள் ஆறப்போடப் படலாம். 

மேலோட்டமாக பார்த்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரதான பிரச்சினையாக பேசும் பொருளாகிய 1000 ரூபாய் தினச்சம்பளம் சாதிக்கப்பட்டாயிற்று. சரி தான். ஆனால் உள்ளோட்டமாக ஆராய்ந்தால் சில சங்கடங்களும் சண்டித் தனம் காட்டப் போவதைப் புரிந்து கொள்ளலாம்.  

எவ்வித மேலதிக கொடுப்பனவுகளும் உள்ளடக்கப்படாமலே 1000 ரூபாய் கிடைக்கின்றது. அதனால் இதர சிறப்புக் கொடுப்பனவுகள், மாதம் இத்தனை நாட்கள் குறைந்தபட்சம் வேலை வழங்கப்பட வேண்டும் என்னும் புரிந்துணர்வு ஏற்பாடு, தொழிலாளர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்துமே கம்பனி தரப்புகளின் கரங்களுக்குள் தாரைவார்க்கப் பட்டிருக்குமோ என்னும் அச்சம் சிலருக்கு. ஏனெனில் இவைகளே கூட்டு ஒப்பந்தத்தின் சக்திவாய்ந்த சரத்துக்கள். இப்போழுது கூட்டு ஒப்பந்தம் ஓரங்கட்டப்பட்டுள்ளது. அது மீளவும் களத்துக்கு வரவேண்டுமானால் சம்பள நிர்ணய சபையில் இருந்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறி மீண்டும் கூட்டு ஒப்பந்தப் பொறிமுறைக்குள் வந்தால் மட்டுமே தற்போது கேள்விக் குறியாகியிருக்கும் பல நன்மைகள் கிடைக்கும். இதனையே தோட்ட முதலாளிமார் சம்மேளன ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை அண்மையில் சூசகமாக சொல்லியிருந்தார்.  

இதனாலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுள்ளார்கள் என்று ஒரு பிடி பிடிக்கின்றார் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம். அவர் சொல்கிறார், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு நடைமுறைக்கு வந்திருந்தாலும் மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் இல்லாமல் செய்யப்பட்டு தொழிலாளர்கள் எமாற்றப்பட்டுள்ளதை எதிர்த்து போராட்டம் நடாத்த போகிறோம். புத்தாண்டுக்குப்பின் இது ஆரம்மாகும் என்கிறார்.  

இதிலிருப்பது அரசியலாகவும் இருக்கலாம். மன அழுத்தத்தின் ஆதங்கமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை இருக்கின்றது என்பதை முன்னாள் ஊவா மாகாண கல்வியமைச்சரும் பெருந்தோட்ட அபிவிருத்திக்கான பிரதமரின் இணைப்பாளருமாகிய செந்தில் தொண்டமான் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை எடுத்துக் காட்டவே செய்கின்றது.  

பதுளை மாவட்டத்தில் பல தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவை வழங்க கம்பனிகள் மறுக்கின்றன. இந்த அராஜக போக்கை கண்டிக்கின்றோம். அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தில் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை. அடிப்படைச் சம்பளம்தான் 1000 ரூபாய். மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் தொழிலாளர் மேலதிக வேலைத் திட்டங்களை முன்னெடுப்பார்கள். அப்படி வழங்கப்படாவிடில் 30 நாட்கள் செய்யும் வேலையை இதுவரை 20 நாட்களில் செய்து வந்த நிலையை மாற்றி 30 நாட்கள் செய்து முடிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டிவரும். இதனால் கம்பனிகள் நாளாந்தம் 1000 ரூபா வீதம் 30 நாளைக்கு 30000 ரூபாவைச் சம்பளமாக வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதுதான் செந்தில் தொண்டமானின் அறிவிப்பு. ஆக தொழிலாளர்கள் போராட்டம் 1000 ரூபா நாட் சம்பளத்தோடு அடங்கப் போவதில்லை. அதனைத் தக்க வைக்கவும் இதுவரை காலமும் பெற்றுவந்த மேலதிக கொடுப்பனவுகளைத் திரும்பவும் உறுதி செய்யவும் போராடியாக வேண்டியுள்ளது. இதனைத்தான் பழனி திகாம்பரமும் சொல்கிறார். செந்தில் தொண்டமானும் உறுதிப்படுத்துகிறார்.  

முன்னையவர் வீதிப் போராட்டத்துக்கு விதி செய்யப்போகிறார். பின்னையவர் பீதியைக் கிளப்பி மெதுவாக வெலை செய்யம் திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டுகின்றார். சம்பள நிர்ணய சபை அதன் கடமையை சரியாக செய்து முடித்துவிட்டது என்னவோ உண்மைதான். அரசாங்கமும் 1000 ரூபாய் நாட் சம்பளத்தை சட்டபூர்வமானதாக்கிவிட்டது. ஆனால் பிரச்சினை மட்டும் தீரவில்லை.  

எனினும் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு கம்பனிகளுக்கு விருப்பமான விடயமல்ல. கடந்த ஆட்சிக்காலத்தில் 50 ரூபா அதிகரிப்பு தர மறுத்து அது ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசிவரை கம்பனி தரப்பை பணிய வைக்க முன்னைய ஆட்சியால் முடியாமல் போனது. அந்த வகையில் இந்த அரசாங்கம் கம்பனி தரப்பின் கடும் போக்கிற்கு தக்க பாடம் புகட்டியிருக்கின்றது. இனி தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில் ஏதாவது நடக்க வேண்டுமானால் கம்பனி தரப்பை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர முடியுமே தவிர பணிய வைக்க வாய்ப்பே இல்லை. பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பெருந்தோட்டங்களைச் சுவீகரிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார்.  

இனி அரசாங்கம் ஓரங்கட்டி நின்று நடப்பதை வேடிக்கைப் பார்க்கவும் செய்யலாம். சம்பள நிர்ணய சபையால் வேறு எந்த மேலதிக கொடுப்பனவுகளுக்கான பணிப்புரையை கம்பனிகளுக்கு விடமுடியாது. இதற்கிடையே என்னதான் வீராப்புப் பேசினாலும் மலையக தொழிற்சங்கங்களின் பலவீனம் சந்திக்கு வந்து நெடுநாளாயிற்று.  

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்றொரு பழமொழி இருக்கிறது. 1000 ரூபாய் சம்பளத்தை தருகிறோாம் என்று முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை மகிழ்ச்சியுடன் கூறியிருப்பார் என்று நம்ப முடியுமா?  

கம்பனி தரப்பு இந்தச் சம்பள விவகாரத்தை தமக்கு எற்பட்ட சறுக்கலாகவே கருதும். தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கும் பாமரத் தன்மையில் அது இயங்காது. இதற்காக இது சும்மாவும் இருக்காது. 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பயனை முழுமையாக அநுபவிக்க முடியாதவாறு கம்பனிகள் கட்டாயம் காய் நகர்த்தவே செய்யும். அது முதலாளி வர்க்கத்துக்கே உரிய முதலீடு. இதன் ஆரம்பக் கட்டம் இப்பொழுது அரங்கேற ஆரம்பித்திருக்கிறது.   இதனை எதிர்கொள்ள வேண்டிய தார்மீக பொறுப்பு சகல மலையக தலைமைகளுக்கும் இருக்கிறது. 1000 ரூபாய் வாங்கிக் கொடுத்த இ.தொ.காவுக்கு மேலதிக கொடுப்பனவு 40 ரூபாவை வாங்கித் தர முடியாதா என்று கேட்கிறார் செந்தில் தொண்டமான். அப்பாவித் தொழிலாளர்களை வீதிக்கு இறக்காமல் போராட்டங்களில் ஈடுபடுத்தாமல் சாதிக்க முடியுமானால் வரவேற்கத்தான் வேண்டும்.     புலிவாலை பிடித்த கதையாகிவிட்டதா 1000 ரூபா சம்பள அதிகரிப்பு?

பன். பாலா

Comments