30 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா; 15 பில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கீடு | தினகரன் வாரமஞ்சரி

30 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா; 15 பில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கீடு

பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் ஏற்பட்ட பின்னடைவு, மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பொருளாதார தாக்கம், பொருளாதார நெருக்கடி என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இந்த சவால்களுக்கு முகங்கொடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பிரயத்தனம் மேற்கொள்ளும் நிலையிலே கொரோனா தொற்று எனும் உலகளாவிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி,கல்வி,சுகாதாரம் அன்றாட வாழ்க்கை என அனைத்திலும் தாக்கம் செலுத்திய இந்த வைரஸ் பாதிப்பு மரத்தால் விழுந்தவனை மாடு குத்தியது போன்ற நிலைமைக்கு தள்ளியது எனலாம்.

கொரோனா தாக்கம் மாத சம்பளம்  பெறும் குடும்பங்களை விட அன்றாடம் உழைத்து காலத்தை ஓட்டும் குடும்பங்களையும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களையும் அதிகமாக நெருக்கடிக்குள் தள்ளியது. பெரும் நெருக்கடி நிலையிலும் அந்த மக்கள் குறித்து சிந்தித்து அவரகளுக்கு உதவி வழங்க பொதுஜன பெரமுன அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்தது. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் வருமான வழியிழந்த தரப்பினருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் அன்று ஆரம்பித்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் வழிகாட்டலுடன் இந்த செயற்பாடு இடம்பெற்றாலும் இதன் பின்னணியில் முன்னாள்  அமைச்சரும் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தலைவருமான பெசில் ராஜபக்‌ஷ இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வறுமை ஒழிப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயற்படுத்திய அவருக்கு  வறிய மக்களின் இதயத் துடிப்பு நன்கு தெரியும். வறுமை கோட்டிற்குக் கீழ்  இருந்து மக்களை மீட்டெடுக்கும் திட்டங்கள் ஒருபக்கம் இடம்பெறுகையில் மறுபக்கம் அவர்களுக்கான நிவாரண செயற்பாடுகள் அவரின் ஆலோசனையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலே சிங்கள தமிழ் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்று ஏக்கத்துடன் இருந்த வறிய குடும்பங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியது. கடந்த வருடம் புத்தாண்டில் கொரோனா  தாக்கத்தினால் வீடுகளில் முடங்கி இருக்க நேரிட்டது.ஆனால்  இம்முறை நிலைமை ஓரளவு சீராகியுள்ள நிலையில் புத்தாண்டை கொண்டாடும் ஆர்வம் அனைவருக்கும் இருந்தது.பின்தங்கிய குடும்பங்களுக்கு எவ்வாறு உதவுவது என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தலைவரான பெசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு சில வாரங்களுக்கு முன்னரே ஆராய்ந்தது. இதற்கு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்குவதே உகந்தது என இந்தக் குழு பரிந்துரை செய்தது.

வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின்  தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த சிறப்பு புத்தாண்டு கொடுப்பனவை ஏப்ரல் 11  தொடக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழ், - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ரூ. 5,000 கொடுப்பனவைப் பெற தகுதியானவர்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. நாட்டில் நிலவும் கொவிட்-19 நோய்த்தொற்று நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக வெளியிடப்பட்ட இந்த   சுற்றறிக்கையானது, நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களுக்காக விடுக்கப்பட்டது.

அதற்கமைய, கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து ரூபா 5,000 விநியோகிகப்பட்ட குடும்பங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த 10 பிரிவுகளைச் சேர்ந்தவர்களிலிருந்து 7 பிரிவினர் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய
1. சமுர்த்தி பெறுநர் குடும்பங்கள்
2. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்
3. முதியோர் கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்
4. ஊனமுற்றோர் கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்
5. சிறுநீரக நோய் காரணமான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்
6. நூறு வயதை கடந்தவர்களுக்கான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்
7. கோரிக்கை விண்ணப்பம் முன்வைத்து தகுதி பெற்ற குடும்பங்கள்
(மேலுள்ள 6 பிரிவுகளின் கீழுள்ள கோரிக்கை முன்வைத்து உதவி பெற தகுதியான குடும்பங்கள்)

அத்துடன் ஒரே குடும்பத்தில் இருவர் இதற்கான தகுதியை பெறும் நிலையில், அக்குடும்பத்திற்கு உச்சபட்சமாக ரூ. 5,000 மாத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குடும்பங்களிடையே காணப்படும உப குடும்பங்களுக்கும் குறித்த ரூ. 5,000 கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதோடு அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை பிரதேச செயலாளரினால் எடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.

விசேட பண்டிகை கொடுப்பனவை பயனாளிகளுக்கு மிக விரைவாக விநியோகிக்கும் பொருட்டு, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன், தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.தமிழ், - சிங்கள புத்தாண்டு காலத்தில், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள கஷ்டங்களை ஈடுசெய்து, அவர்களது நாளாந்த வாழ்க்கையை சீராக்கும் வகையில் இக்கொடுப்பனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வழமை போன்று இந்த திட்டத்தையும் எதிரணி விமர்சித்து கேலி செய்திருந்தது.இது மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதியாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டவாறு 5000 ரூபா கொடுப்பனவு திட்டம் 11 ஆம் திகதி நாடுமுழுவதும் ஆரம்பிக்கப்பட்டது. ஏப்ரல் 12 ஆம் திகதி மாத்திரம் கொடுப்பனவாக 1.2 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது,

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்களுக்கு தீர்வாக இந்த கொடுப்பனவு குறைந்த வருமானம் கொண்ட 3 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைவாக 3 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ .5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க 15 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் ரூ .5 ஆயிரம் கொடுப்பனவை வழங்கியிருந்த நிலையில் இந்த திட்டமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. பிரதேச செயலக மட்டங்களில் முறையான வழிகாட்டல்களுடன் கொடுப்பனவு பகிரப்பட்டது. வருமான வழிகள் யாவும் அடைபட்டிருந்த நிலையில் நப்பாசையுடன் இருந்த பல ஆயிரம் குடும்பங்கள் நிம்மதியாக சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாட இந்த விசேட கொடுப்பனவு அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களில் மாத்திரம் தங்கியிருக்காது சொந்தக் காலில் எழுந்து நிற்கும் வகையில் பெசில் ராஜபக்‌ஷவின் தலைமையிலான செயலணி முன்னெடுக்க இருக்கும் காத்திரமான திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றும் என்று நம்பலாம்.

ஷம்ஸ் பாஹிம்

Comments