கண்டல் தாவரங்கள் | தினகரன் வாரமஞ்சரி

கண்டல் தாவரங்கள்

இலங்கை கரையோரங்களில் சமூக பொருளாதார ரீதியில் முக்கிய அம்சமாக கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன. இவை சிறிய புதர்களில் இருந்து பெரிய மரங்கள் வரை வளர்கின்றன. கண்டல் என்ற சொல் களப்புக்களின் கரைகள், பொங்கு முகங்கள், வாவிகள் போன்றவற்றின் அலையடிப்பு பிரதேசங்களுக்கு இடையில் வளரும் வைரம் செறிந்ததும் வித்துக்களின் மிகவும் செறிந்த இசைவாக்கம் கொண்டதுமான தாவர இனங்களைக் குறிக்கிறது.

ஆதிகாலத்தில் இருந்து மனிதன் இந்த சூழல் தொகுதிக்கு தீங்கு விளைவிக்காமல் நிறைய நன்மைகளைப்பெற்று வந்தான். ஆனால் நவீன கால மனிதன் பல்வேறு தீமைகளை இச்சூழல் தொகுதிக்கு செய்து அதன் மூலம் நன்மைகளைப்பெற்று வருகிறான். உணவு மற்றும் உபகரண உற்பத்திகள் ஆக்ரோஸ்ரிக்கத்தின் இளந்தளிர்கள் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கண்டல் தாவரங்களின் தளிர்கள் பெருமளவில் கரையோர மக்களால் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் கண்டல் மரங்கள் கட்டடப் பணிகளுக்கும் கம்பாகவும் றைசோபோறா, புறுகைறா, அபிசினியா போன்றவற்றில் இருந்து பெறப்படும். வெட்டுமரங்கள் படகு கட்டவும் மீன்பிடி உபகரணங்கள் செய்யவும் பயன்படுகின்றன.

உவர் நீரில் மட்டுமன்றி நன்னீரிலும் வளரக்கூடியதாக இருக்கும் இந்த கண்டல் தாவரங்கள் இலங்கையின் கம்பஹா, யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உரிஞ்சும் தன்மை உடையதாக காணப்படுகிறது. இதனால் வாவிகளின் மாசுபடலைக் குறைக்கின்றது. கண்டல் காடுகளில் இருக்கும் பறவை, விலங்குகளை இரசித்து பொழுது போக்கும் இடமாகவும் காணப்படுகிறது. அத்துடன் பெருமளவான உல்லாசப் பயணிகளை கவரும் இடமாகவும் பெருமளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் காணப்படுகிறது. அத்துடன் உள்நாட்டுப் பறவைகள் விலங்குகள் வெளிநாட்டுப்பறவைகள் விலங்குகளின் புகழிடமாகவும் தொழிற்படுகிறது. இவை உயிரினப் பல்வகமையைப் பேணுவதில் முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் குறைப்பதிலும் மற்றும் சூழலில் அதன் தாக்கத்தைக் குறைப்பதிலும் பாரிய செல்வாக்குச் செலுத்தும் ஒரு தாவர இனமாகும். கண்டல் காடுகள் பல்வேறு வழிகளிலும் மக்களுக்கும் இயற்கைக்கும் உதவுகின்றது. கண்டல் காடுகளை அண்டிய பகுதிகளில் அதிகளாவன மீன் இனங்கள் நண்டு மற்றும் இறால் போன்றவையும் வாழ்கின்றன. இவை அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவதுடன் கண்டல் தாவரங்களை அண்டி வாழும் மீனினங்கள் பவளப்பாறைகளை உருவாக்கும் செயற்பாட்டிலும் ஈடுபடுவதால் கண்டல் காடுகள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய நன்மையாக விளங்குகின்றது.

கண்டல் தாவரங்கள் சூழல் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் காணப்படுவதால் அதனைப் பல்வேறுபட்ட அழிவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய பொறுப்பாகும். இது பற்றி மக்கள் தெளிவு பெறுவதன் மூலமாக இயற்கை பொக்கிஷங்களையும் அழகாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும். சதுப்பு நில மரங்களை சுத்தம் செய்து பாதுகாத்து பயன்பெற வேண்டும். கண்டல் சூழற்றொகுதி அரிய புத்தகங்கள் நிறைந்த நூலகம் போன்றது. இதனை நாம் பாதுகாத்து எமது சந்ததிகளுக்குக் கொடுப்பது எமது தலையாய கடமைகளில் ஒன்றாகும்.

என். வினோ மதிவதனி

Comments