நாட்டை அல்ல கொவிட்டை முன்னிறுத்தி சிந்திப்போம் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை அல்ல கொவிட்டை முன்னிறுத்தி சிந்திப்போம்

நாடெங்குமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தோமானால் நாடு மற்றொரு கொவிட் -19 அலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. தடுமன் காய்ச்சலைப்போல வெகு எளிதாகத் தொற்றக் கூடிய ஒரு நோயாக இது காணப்படுவதே இதன் பலமும் பலவீனமுமாகும். எளிதாக பரவக் கூடியது பலமான அம்சம் என்றால் இத் தொற்றை வெகு எளிமையான முறைகள் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதே இதன் பலவீனதாகும்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இத் தொற்று இலங்கையில் காணப்படுவது ருசுப்படுத்தப்பட்டவுடன், இலங்கை ஒரு தீவு என்ற வாய்ப்பான அம்சம் எமக்கு இருந்ததால், அதைப் பயன்படுத்தி தொற்றை தடுத்திருக்கலாம் என்றும் விமான நிலையத்தை மூடி முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி இருந்தால் இத்தொற்று அபாயத்தில் இருந்து நாடு விடுப்பட்டிருக்கலாம் என பரவலான ஆதங்கம் ஒன்று வெளிப்பட்டது. இது உண்மையானாலும் அம்மை, மலேரியா போன்ற பெருந்தொற்றுகளின் பரவலான பாதிப்புகளில் இருந்து நாடு விடுபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் எடுத்த எடுப்பிலேயே கடினமான முடிவுகளை மேற்கொள்ளும் தீர்மானமொன்றுக்கு வருவது சிறிது கடினமாகவே இருக்கும். மேலும் கொவிட் எவ்வளவு மோசமான தொற்று என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் நிலையில் உலக அனுபவங்களும் இருக்கவில்லை.

எனினும் மார்ச் மாதத்தில் இருந்து அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததையும், பரவலான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் கொவிட் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையும் நாம் மறப்பதற்கில்லை. சீனாவில் இருந்தே கொவிட் தொற்று ஆரம்பமாகி இருந்தாலும் அந்நாடு அத்தொற்றை வெற்றிகரமாகக் கையாண்டு அபாயத்தில் இருந்து விடுபட்டது. மக்களின் ஒத்துழைப்பும், கம்யூனிச ஆட்சி முறைகளுக்கு அச்சமூகம் பழகிப் போயிருந்தமையும் சீனா அடைந்த இவ் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கலாம். எனினும், ஒரு தீவு என்ற வாய்ப்பான அம்சம் எமக்கிருந்தும் கூட அதை மதிநுட்பத்துடன் பயன்படுத்தி தொற்றில் இருந்து விடுபட நாம் தவறிவிட்டோம்.

இரண்டாம் அலை கம்பஹா மாவட்டத்தில் இருந்து கிளம்பியது. முதல் அனுபவத்தைப் பயன்படுத்தி அந்த அலை அம்மாவட்டத்தை விட்டு வெளியேறிச் செல்லாமல் தடுத்திருக்கலாம். அதிகாரிகள் வெகுதுரிதமாக செயல்பட்டு அம் மாவட்டத்தை முடக்கி தனிமைப்படுத்தியிருக்கலாம். அதைச் செய்யாததால் ஒரு முடக்க நிலையூடாக நாடு பயணிக்க நேர்ந்தது. நாடும் மக்களும் பொருளாதார நலிவுக்கு ஆளானார்கள். இரண்டு தடவைகளிலும் நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை, முன் கூட்டியே சிந்திக்கவில்லை; பொருளாதார அபிவிருத்திக்கே முதலிடம் என்பதை முன் நிறுத்தவில்லை.

முதல் தடவையில் நாடெங்கும் தொற்று எண்ணிக்கை குறைவடைந்து வந்த போது, தடுப்பூசிக்கான வாய்ப்பு அப்போது இல்லாத நிலையிலும் கூட, தொற்றைத் தவிர்ப்பதற்கான அந்த மூன்று எளிய வழிகளையும் மக்கள் கைவிட ஆரம்பித்திருந்தார்கள். முகக்கவசம் அணிவதும் இடைவெளி பேணுவதும் பலருக்கு மறந்தே போயிருந்தது.

இப்போது மூன்றாவது முறையாகவும் அதே தவறை பெரும்பாலான மக்கள் மீண்டும் செய்திருக்கிறார்கள். தொற்று குறைந்து வந்த நிலையில், நாடு வழமையான நிலைக்கு திரும்ப முயற்சிக்கையில் பெரும்பாலான மக்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றதால், தொற்று நாடெங்கும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகின் சில நாடுகளிலும் இந்தியாவிலும் மற்றொரு கொவிட் அலை உருவாகி இருப்பதை நாம் பார்க்கிறோம். ஐந்து மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றதாலும் கும்பமேளா, வேண்டாமென இந்திய மத்திய அரசு பரிந்துரைசெய்திருந்தும் கூட, நடத்தப்பட்டதாலும் இந்தியாவில் கொவிட் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இக்கும்பமேளாவில் 40 லட்சம் பக்தர்கள் சுகாதார வழிமுறைகள் எதனையும் உதாசீனம் செய்த நிலையில், கலந்து கொண்டனர். இவர்கள் தத்தமது இடங்களுக்கு திரும்பிய பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததோடு புதுடில்லியை ஒருவார காலத்துக்கு முழுமையாக முடக்கவும் வேண்டியிருந்தது. இந்தியாவில் கும்பமேளா மற்றொரு கொவிட் வீச்சுக்கு கால்கோள் இட்டதென்றால் இலங்கையில் கொண்டாடித் தீர்த்த தமிழ் – சிங்கள புத்தாண்டு, தொற்றாளர் அதிகரிப்புக்கு மையப் புள்ளியாக அமைந்திருக்கிறது. இப் பண்டிகை நாட்டு சனத்தொகையில் எண்பது சதவீதமானவர்களால் கொண்டாடப்படுவதாலும், பௌத்தர்கள் கொண்டாடுவதற்கான ஒரே பண்டிகையாக இப்புத்தாண்டு விளங்குவதாலும், கடந்த முறை முழுமையாக கொண்டாடப்படாமல் நாடு தழுவிய ஊரடங்குக்குள் மக்கள் வாழநேர்ந்ததும் 2021 பண்டிகையை மக்கள் கொண்டாட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தியலும் கொண்டாட்ட காலப்பகுதியில் கடுமையான நடைமுறைகள் வலியுறுத்தப்படவில்லை. கும்பமேளாவில் கை வைப்பது இந்திய வட மாநில மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளில் கை வைப்பது போன்றது என்பதால் இந்திய மத்திய அரசு கடைபிடித்த மெத்தனமே, இன்று அதிகரித்துள்ள தொற்றாளர் மற்றும் மரணமடைவோரின் எண்ணிக்கைக்கான காரணமாகக் கூறப்படுகிறது.

இவ்விதழின் மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருக்கும் நுவரெலிய வசந்தகால கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுரையில் தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிமுறைகள் சுற்றுலா வந்தவர்களினாலும் அவர்களை வரவேற்ற உள்ளூர்வாசிகளினாலும் கடுமையாக உதாசீனப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதை ஒரு உதாரணமாக சுட்ட விரும்புகிறோம். அடுத்தமாக இறுதிவரை எவ்வாறான சுகாதார நடைமுறைகள் மக்களால் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாம் மீண்டும் ஒரு இக்கட்டுக்கு முகம் கொடுத்திருக்கிறோம் என்பது தெளிவு. பி.சி.ஆர். பரிசோதனைகள் நாடெங்கும் அதிகரித்த அளவில் மேற்கொள்ளப்படும்போது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இம்மூன்று அனுபவங்களும் எமக்கு சுட்டிக் காட்டுபவை, தொலைநோக்குத் திறன் குறைந்தவர்களாக நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதைத்தான். முன்னேற்றம், அபிவிருத்தி அவற்றின் மூலமான நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதா அல்லது கொண்டாட்டம், பாரம்பரியம், கட்டுப்பாடுகளுக்கு ஒரு சிறு இடைவேளை கொடுத்துப்பார்த்தால்தான் என்ன என்ற மெத்தன சிந்தனை என்பனவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதா என்பதை கடந்த மூன்று அனுபவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ள இலங்கை சமூகம் தவறியிருக்கிறது. அரசு அதிகாரிகளும் மெத்தனமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இம் மெத்தனப் போக்கை இவ்வாறே சிறுசிறு மகிழ்ச்சிகளுக்காக தொடர்வோமானால் எப்போது தான் கொவிட் தொற்றில் இருந்து விடுதலை பெறுவது? எப்போது வழமைக்கு திரும்புவது? இத் தொற்று ஏற்படுத்தியிருக்கும் ஏராளமான பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறுவது எப்போது?

இது மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம். நாட்டை முன்னிறுத்தி சிந்திக்க வேண்டும் என இங்கே அடிக்கடி பேசப்படுகிறது. இனிமேல் கொவிட்டை முன்நிறுத்தி சிந்திக்கப் பழகுவோம்.

Comments