பாடசாலைகள் மே. 07 வரை பூட்டு | தினகரன் வாரமஞ்சரி

பாடசாலைகள் மே. 07 வரை பூட்டு

- 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும்  7ஆம் திகதி அறிவிக்கப்படும்

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மே 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மீண்டும் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அதிகரித்த கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஏப்ரல் 30ஆம் திகதிவரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க நாட்டில் அனைத்து அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், கத்தோலிக்க பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள், டியூஷன் வகுப்புகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள், பிரிவேனாக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

புதிய அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் 7ஆம் திகதி வரை மேற்படி அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருக்கும் என்று கல்வியமைச்சர் நேற்று மீள உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை முக்கியஸ்தர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.அதேவேளை பாட விதானங்களில் கவனம் செலுத்தும் வகையில் ஆகஸ்ட் விடுமுறையை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Comments