தொழிலாளர் ஒன்றுபடாமல் கம்பனிகளை அசைப்பது கஷ்டமே! | தினகரன் வாரமஞ்சரி

தொழிலாளர் ஒன்றுபடாமல் கம்பனிகளை அசைப்பது கஷ்டமே!

'ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை  கொடுத்தால் ஒருநாள் சம்பளம்  வழங்க வேண்டுமென்பது சட்டமாகும். ஆனால்  இச்சட்டத்தை துச்சமாக மதித்து 1  நாள் சம்பளம் கொடுப்பதில் பல சுரண்டல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன்  தேயிலை மலைகளில் உள்ள புல், பூண்டு, செடி, கொடி போன்றவற்றையும் சுத்தம்  செய்துகொண்டு கொழுந்து பறிக்கும்படி தொழிலாளர்கள்  கட்டாயப்படுத்தப்படுகின்றனர்' 

1886ல் மே மாதம் அமெரிக்க சிக்காகோ நகரிலுள்ள மெக்கோமிக் தொழிற்சாலை தொழிலாளர்களால் 8 மணி வேலை நேரக் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கை போராட்டமாக உருவெடுத்து வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அமைதியாக நடைபெற்ற இப்போராட்டத்தை சீர்குலைக்க கருங்காலிகள் முயன்றதால் ஏற்பட்ட மோதலில் பொலிஸாரால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இச்சம்பவத்தை ஆட்சேபித்து மே மாதம் 4ம் திகதி நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் இனந் தெரியாத நபரொருவர் எறிந்த குண்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் காயமடைந்தனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் 8 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஒருவருக்கு 15 வருட சிறைத்தண்டனையும் ஏனையஏழு பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பிற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாரிய எதிர்ப்பு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இருவருக்குமான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏனைய ஐவரில் ஒருவர் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்தினம் அதாவது 09.11.1887ல் தற்கொலை செய்துகொண்டார். ஏனைய நான்கு பேரும் 10.11.1887ல் தூக்கிலிடப்பட்டனர். இதுதான் மே தினத்தின் ஆரம்பப் புள்ளு. 

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு 8 மணி வேலை நேரக் கோரிக்கை சம்பந்தமாக உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதலாவது மகாநாடு பாரிஸில் 1890ல் நடைபெற்றது. இம் மாநாட்டில் 1890ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியை நினைவுகூர வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இத் தீர்மானத்தின்படி சர்வதேச தொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி அனைத்து நாடுகளிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

இலங்கையில் முதலாவது மே தினம் 1933ல் ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. 1956ல் மே தினம் சம்பளத்துடனான பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தற்போது தொழிலாளர்கள் மாத்திரமல்ல ஏனையோரும் களியாட்டமாக ஆடிப்பாடி கும்மாளம் போடுவதும் உண்டு.

தொழிலாளர் தினமான மே தினத்திற்கு 131 வருடங்கள் கடந்தும் இலங்கையின் தேசிய வருமானத்தில் 75 வீதத்திற்கு மேல் சம்பாதித்துக் கொடுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் சுரண்டலில் இருந்து விடுபட முடியாமல் உள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டத்துறையின் ஆரம்ப காலங்களில் அதிகாலையில் வேலைக்குச் சென்று இரவில் தீப்பந்த வெளிச்சத்தில் வேலைவிட்டு வீட்டுக்கு வந்த சம்பவங்களும் உண்டு. 

இப்போது நீண்டகாலமாக கைவிடப்பட்ட தேயிலை மலைகளை தற்போது வெளியாா் உற்பத்தி முறையில் (Out Grower System) புல், பூண்டு, செடி, கொடி போன்றவைகளை வெட்டி சுத்தம் செய்து கவ்வாத்து வெட்டி தேயிலை கொழுந்து பறித்து ஆகக் குறைந்த கணக்கிற்கு தோட்ட நிருவாகத்திற்கு விற்கிறார்கள். இதற்காக குடும்பமே இரவு பகல் பார்க்காமல் வேலை செய்கின்றன.

இந்த நவீன சுரண்டல் மூலம் தோட்ட நிருவாகம் ஒரு சதமேனும் செலவு இல்லாமல் பெரும் இலாபத்தை சம்பாதித்துக் கொள்கின்றது. 

பெருந்தோட்டத்துறை ஆரம்பகால முதல் தொழிலாளர்களுக்கு சதக் கணக்கில்தான் நாட் சம்பளம் வழங்கப்பட்டன.

அதன் விபரங்கள்:- 

1965ல் ஏனைய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விசேட அலவன்ஸ் ரூபா 17.50 தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டதால் இக் கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஜ.தொ.கா முன்வைத்தபோது அதற்கு எதிராக இ.தொ.கா நாளொன்றுக்கு ஒரு ரூபா கோரிக்கையை முன்வைத்தது. பின்பு இ.தொ.கா இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் 27.04.1967ல் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அதன் பிரகாரம் வேலை செய்யும் நாளொன்றுக்கு 10 சதமே வழங்கப்பட்டன. இது ஒரு கறைபடிந்த வரலாறாகும்.   1984ல் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சமசம்பளமாக ரூபா 21.00, பிள்ளை தொழிலாளர்களுக்கு ரூபா 17.50 

2000ல் முதலாளிமார் சம்மேளனத்தோடு இ.தொ.கா, இ.தே.தோ.தொ.சங்கம், தோ.தொ.ச.கூட்டமைப்பு ஆகிய மூன்று சங்கங்களும் கைசாத்திட்ட சம்பள கூட்டு ஒப்பந்தப்படி தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 101 ரூபா மற்றும் விலைக் கேற்ப கொடுப்பனவாக 6 ரூபா. இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 98 ரூபா வழங்கப்பட்டன. இதன்பின் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்கள் நடைபெற்று சம்பள உயர்வுகளும் கிடைக்கப்பெற்றன. 

2015ல் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது முன்னாள் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் 1000 ரூபா கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால் தோட்டக் கம்பனிகளும் அவர்களின் சம்மேளனமும் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க முடியாது என 2015ம் ஆண்டிலிருந்து பிடிவாதமாக இருந்ததோடு மாற்று திட்டமொன்றும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவர்களின் மாற்றுத்திட்டம் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்குமென்பதால் தொழிற்சங்கங்களால் நிராகரிக்கப்பட்டது.

இவ் விவகாரம் சம்பள நிர்ணய சபைக்கு பாரப்படுத்தப்பட்டதும் சம்பள நிர்ணய சபை இப்பிரச்சினையை ஆராய்ந்து வாக்கெடுப்பில் அதிகப்படியான வாக்குகளால் வெற்றியடைந்ததால் ஆகக்குறைந்த நாளாந்த சம்பள அளவு 900 ரூபாவாகவும் வரவு செலவுத்திட்ட சலுகைக்கொடுப்பனவாக ரூபா 100 ஆக மொத்தம் 1000 ரூபா மார்ச் 5ம் திகதி முதல் வழங்க வேண்டுமென வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கவும் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க முடியாதெனவும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தோட்டக் கம்பனிகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஏப்ரல் மாதம் 5ம் திகதி இவ்வழக்கின் முதல் கட்டமாக வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்க வேண்டிய வேண்டுகோளை மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் மார்ச் 5ம் திகதி முதல் நாளொன்றுக்கு 1000 ரூபா வீதம் சம்பளம் வழங்கப்பட வேண்டியதால் ஏப்ரல் மாதம் 9ம் திகதி வெள்ளிக்கிழமை 1000 ரூபா சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மார்ச் 5ம் திகதிக்குப்பின் மேலதிக கொழுந்து போன்றவைகளுக்குரிய கொடுப்பனவுகள் கொடுக்கப்படவில்லை. இந்த சம்பள உயர்வால் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப் பணம், வருடாந்த விடுமுறை சம்பளம், எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் வழங்கப்படும் கொடுப்பனவு (over time), பிரசவ சகாயப் பணம் போன்ற கொடுப்பனவுகளிலும் 1000 ரூபா பிரகாரம் வழங்கப்பட வேண்டுமென முதலாளிமார் சம்மேளனத்தால் 06.04.2021ல் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 ரூபா சம்பள உயா்வு வழங்கவேண்டியேற்பட்டால் தொழிலாளா்களின் சலுகைகள் நிறுத்தப்படும் என முதலாளிமாா் சம்மேளனம் அபாய அறிவித்தலை முன்வைத்தது.

ஆனால், தோட்டங்கள் தனியாா் கம்பனிகளுக்கு 1992ல் குத்தகைக்கு கொடுக்கும்போது ஏற்றுக்கொண்ட எந்த உறுதி மொழிகளையும் நிறைவேற்றவில்லை. அதுமட்டுமல்ல கொழுந்து பறிக்கும் தொழிலாளா்களுக்கு கொழுந்துக் கூடைகள், மட்டக் கம்புகள், ஏனைய தொழில் செய்வதற்கு தொழிலாளா்களுக்கு தேவைப்படும் ஆயுதங்கள், மருந்து அடிக்க தாங்கிகள் போன்றவை வழங்கப்படுவதில்லை, தேயிலைச் செடிகளிலிருந்து பறித்த கொழுந்தை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல போதிய வாகன வசதிகள் இல்லாததினால் நீண்ட தூரம் சுமந்துகொண்டு சென்று கொழுந்து நிறுப்பவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அப்போது ஒவ்வொரு நிறுவைக்கும் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்து 2 அல்லது 3 கிலோ வீதம் கழித்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இதன் பேரில் எவ்வித ஆவணங்களும் தொழிலாளருக்கு கொடுக்கப்படுவதில்லை. வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் பெயர்களை பதிவது, கொழுந்து நிறுப்பது போன்றவை கங்காணிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கு சாதாரண தொழிலாளர் சம்பளமே வழங்கப்படுகின்றன. அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன, உத்தியோகத்தர்களின் தொகையும் நாளுக்கு நாள் குறைக்கப்படுகின்றன.

இன்னும் சுருக்கமாகக் கூறப்போனால் தேயிலைக் கொழுந்து பறித்து தூளாக்கி விற்பதும் அதைப்போல் இறப்பர் பால் எடுத்து விற்பனை செய்வது போன்றது மட்டுமே முக்கிய தொழிலாக நடைபெறுகின்றன.

மிக நீண்டகாலமாக சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் சேவையிலிருந்து ஒய்வு பெற்றவர்களுக்கும் 500 கிராம் தேயிலைத்தூள் வழங்கப்பட்டு வந்தது. இதிலும் மாற்றங்கள் ஏற்படுத்தி தற்போது அதிகமானவர்களுக்கு தேயிலைத்தூள் வழங்கப்படுவதில்லை.

பிரித்தானியர் காலத்தில் ஒரு நாள் சம்பளத்திற்கு 14 இறாத்தல் கொழுந்து பறிக்க வேண்டும். ஆனால் இப்போது 20 - 22 கிலோ என ஒவ்வொரு தோட்டத்திலும் ஒவ்வொரு அளவு வைக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல, கொழுந்து பறித்து நிர்வாகத்திடம் நிறுத்து பாரம் கொடுக்கும்போது ஒரு நாள் சம்பளத்திற்குரிய கொழுந்துக்கு மேலதிகமாக பறித்த கொழுந்து கணக்கையும் பெயர் அட்டையில் சரியாக பதிவதும் இல்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை கொடுத்தால் 1 நாள் சம்பளம் வழங்க வேண்டுமென்பது சட்டமாகும். ஆனால் இச்சட்டத்தை துச்சமாக மதித்து 1 நாள் சம்பளம் கொடுப்பதில் பல சுரண்டல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தோடு தேயிலை மலைகளில் உள்ள புல், பூண்டு, செடி, கொடி போன்றவற்றையும் சுத்தம் செய்துகொண்டு கொழுந்து பறிக்கும்படி தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட காரணங்களால் கைத்தொழில் அமைதியின்மை அதிகமான தோட்டங்களில் நிலவுகின்றன. தோட்டத்தில் மரணம் சம்பவித்தால் அல்லது சம்பளம் வழங்கும் நாட்களில் பகல் உணவுக்கு நேரம் இல்லாமல் பி.ப 2.00 மணிக்கு வழமையாக லீவு கொடுப்பது வழக்கம்.

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மாருக்கும், கர்ப்பிணி தாய்மாருக்கும் லீவு கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது இப்படிப்பட்ட நாட்களில் லீவு கொடுப்பதென்றால் அந்த நாளுக்குரிய கொழுந்தின் அளவு பறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் முழு சம்பளம் வழங்கப்படுவதில்லை. மற்றும் சகல தோட்டங்களிலும் கைகாசு தொழிலாளர், கிலோ கணக்கில் கொழுந்து பறிப்பவர், வெளியார் உற்பத்தி முறையில் வேலை செய்பவர், கொந்தரக்கு முறையிலுள்ளவர் போன்றோர் கணிசமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு முறையான சம்பளமோ அல்லது வேறு சலுகைகளோ, தொழில் உரிமையோ, பாதுகாப்போ கிடையாது.

இவர்கள் முழுவதும் தங்கள் உடல் உழைப்பை மட்டும் நம்பியே வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இப்படியிருந்தும் தோட்டங்கள் நட்டமடைவதாக தெரிவிப்பது முதலாளிகளின் வழமையான பல்லவியாகும்.

ஆகையால், 131 வருட மேதின படிப்பினையை புரிந்துகொண்டு தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டு சக்திமிக்க இயக்கமாக எழுந்து நிற்காவிட்டால் உரிமைகளை இழக்க வேண்டியிருக்கும்.

ஆ. முத்துலிங்கம், 
பொதுச் செயலாளர், 
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்.   

Comments