ஸ்டாலினின் வெற்றியும் இலங்கை தமிழர் தரப்பின் வீண் கற்பனாவாதங்களும்! | தினகரன் வாரமஞ்சரி

ஸ்டாலினின் வெற்றியும் இலங்கை தமிழர் தரப்பின் வீண் கற்பனாவாதங்களும்!

இந்தியாவின் தமிழ்நாடு மாநில சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கின்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நேற்றுமுன்தினம் காலை மிக எளிமையான முறையில் பதவியேற்பு வைபவம் நடைபெற்றது. கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாக உள்ளதனால் இவ்வாறு எளிமையான முறையில் பதவியேற்பு வைபவம் நடைபெற்றது.

தமிழக அரசியலில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற தி.மு.கவின் அரசியல் வெற்றிடத்தை ஈடு செய்யும் வகையில், ஸ்டாலின் இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளார். தமிழக அரசியல் களத்தில் கலைஞர் கருணாநிதி இல்லாத காலகட்டத்தில், தி.மு.கவின் ஆட்சியொன்று இப்போது மலர்ந்துள்ளதால், ஸ்டாலின் தொடர்பில் பலரும் எதிர்பார்ப்புக்களை கொண்டிருப்பதுடன், அவருக்கு உலகெங்குமிருந்து பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்த வரிசையில் வடக்கு, கிழக்கு அரசியல் களத்திலுள்ள இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் பலரும் ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதுடன், தமிழர்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஸ்டாலின் மீதும் நம்பிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் குறிப்பாக தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் பண்டைய காலம் தொட்டு உறவுகள் தொடர்ந்து வருகின்றன. இலங்கை கடந்த காலங்களில் இக்கட்டான, நெருக்கடியான சூழல்களுக்கு முங்கொடுத்த போதெல்லாம் இந்தியா வழங்கிய உதவிகள் ஏராளம். தமிழகத்துக்கும், இலங்கைத் தமிழர்களுக்குமிடையே ‘தொப்புள் கொடி உறவு’ உள்ளதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பமானதில் இருந்து இலங்கைத் தமிழர்களை வரவேற்று அரவணைப்பதில் தமிழகம் கொண்டிருந்த அக்கறையை வார்த்தைகளால் விபரிக்க இயலாது.

இருந்த போதும், தமிழக சட்டமன்றத்துக்கோ அல்லது இந்திய நாடாளுமன்றத்துக்கோ தேர்தல் வரும் போது, தமிழக அரசியல்வாதிகளின் பிரசாரத்துக்கு ஈழத் தமிழர்கள் விவகாரம் வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுவதை காலங் காலமாக நாம் கண்டு வருகின்றோம்.

யுத்தம் இடம்பெற்று வந்த காலங்களில் தமிழகத்தில் தேர்தல் வரும் போது இலங்கைத் தமிழர்கள் குறித்த கரிசனைகள் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டன. இந்த நிலைமை இன்னமும் மாற்றமடையவில்லையென்பது நடைபெற்ற முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலிலும் புலப்பட்டது.

தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளுமே தத்தமது தேர்தல் அறிக்கைகளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அல்லது அது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்தன.
இவற்றில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையிலும் இவ்வாறு ஈழத் தமிழர் மீதான கரிசனைகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது.

'இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் நடந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், தமிழர் தரப்பினால் முன்வைக்கப்படும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் பற்றியெல்லாம் சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் என மத்திய அரசை தி.மு.க.கழகம் வலியுறுத்தும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே ஐ.நா சபையின் மேற்பார்வையில், பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை  தி.மு.க.கழகம் தொடர்ந்தும் வலியுறுத்தும்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாம்களில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் உறவுகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும் மத்திய அரசை தி.மு.க வலியுறுத்துவதுடன், இவர்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யும்' என ஸ்டாலின் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் கச்சதீவு குறித்தும் தி.மு.க சுட்டிக் காட்டியிருந்தது.

'கச்சதீவில் மீன் வலைகளை உலர்த்துவதற்கும், தேவாலயங்களில் வழிபாடு நடத்துவதற்கும் இருந்த உரிமை 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசரநிலை காலத்தில் பறிக்கப்பட்டன. இதன் காரணமாக அடிக்கடி கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக அதிகரித்து வருவதால் தமிழக மீனவர்களைப் பாதுகாத்திட, கச்சதீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிள் மேற்கொள்ளப்படும்' என்பதாக தி.மு.கவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது தி.மு.க ஆட்சியமைத்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் அக்கட்சி குறிப்பிட்டுள்ள இந்த விடயங்களை நிறைவேற்றுமா என்பது சாத்தியமானதல்ல. தி.மு.க கூறியதெல்லாம் தேர்தலுக்கான வெறும் வார்த்தைகள் என்பது உலகுக்கே தெரிந்த விடயமாகும்.

ஆனால் தி.மு.கவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அடிப்படையாக வைத்தே அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு  இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதுடன், தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் நம்பிக்கை கொள்வதாகவும் கூறி வருகின்றனர்.

'தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கைத் தமிழினமும், தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும் இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம்' என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்று ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பல இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஸ்டாலினின் ஆட்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்து விடும் என்ற தோரணையில் நம்பிக்கை தரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அரசியல் நோக்கத்துக்காக முன்வைக்கப்படும் இந்த நம்பிக்கைக் கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பொருட்படுத்தப்படும் என்பது குறித்து முதலில் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் இந்திய தரப்பில் இருந்தும், தமிழ் அரசியல் தரப்பில் இருந்தும் வெளிவந்த வாக்குறுதிகளும், கிடைத்த அனுபவங்களும்   சிந்திக்கத் தூண்டுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், மத்தியில் ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடே இலங்கையில் பிரதிபலிக்கும் என்பது கடந்த கால நிகழ்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது. இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்திலும், இந்திராவின் மறைவின் பின்னரும் இலங்கையில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் வளர்த்து விடப்பட்டன. தீவிரவாத இயக்கங்களுக்கான ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பல உதவிகள் அன்றைய காலத்தில் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் கிடைத்தன.

இவ்வாறான பின்னணியிலேயே ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இந்தியா கொடுத்த அழுத்தத்திற்கு அமைய 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது செல்வாக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா தன்னால் வளர்க்கப்பட்ட இயக்கங்களிடம் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க முயற்சித்தது.

இதனையடுத்து இயக்கங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோன்றி ஒருவரை ஒருவர் அழிக்கும் நிலைக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு இருக்கையிலேயே எல்.ரி.ரி.ஈயினர், நேரு மற்றும் இந்திரா மறைவுக்குப் பின்னர் இந்திய தேசத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிய ராஜீவ் காந்தியை படுகொலை செய்திருந்தனர்.

இச்செயலானது ஒட்டுமொத்த இயக்கங்கள் மீதும் இந்தியாவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியதுடன், தாம் உருவாக்கிய இயக்கங்களையே வழிக்குக் கொண்டு வருவதற்கு தமது படைகளை அனுப்பும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டமையை நாம் அறிவோம்.

அதன் பின்னரான காலப் பகுதியில் அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தாலும், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் எதனையும் பிரயோகித்திருக்கவில்லை. அது மாத்திரமன்றி 2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தது.   

அப்போது இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் தி.மு.கவும் ஆட்சியதிகாரத்தில் இருந்தன. குறிப்பாகச் சொல்லப் போனால் எல்.ரி.ரி.யினருக்காக ஆயுதங்களைக் கடத்தி வந்த பல கப்பல்கள் இந்திய கடற்படையினரின் உதவியுடனேயே இலங்கை கடற்படையினரால் அன்று தாக்கி அழிக்கப்பட்டன. இலங்கையில் தீவிரவாதக் குழுக்கள் இனிமேல் இயங்கலாகாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தமைக்கு இந்த செயற்பாடுகள் எடுத்துக்காட்டுக்களாக அமைந்தன.
 
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் பொறுப்புக் கூறல் விடயங்களில் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்குப் பாரிய அழுத்தங்கள் கொடுக்கவில்லை என்பதுடன், அவ்வப்போது அதிகாரப் பகிர்வு குறித்த தனது நிலைப்பாட்டை மாத்திரம் வலியுறுத்துவதையே மேற்கொண்டு வந்தது. இதில் கவனித்துப் பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில், தமிழகத்தில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய மத்திய அரசாங்கமே இலங்கை குறித்த நிலைப்பாட்டை தீர்மானிக்கின்றது என்பதாகும்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் அவ்வப்போது தமது அரசியல் இருப்புக்களுக்காக ஈழத் தமிழர் விவகாரத்தை துரும்பாக எடுப்பதையே காணக் கூடியதாகவுள்ளது.

அதேபோன்றுதான், இலங்கையின் வடக்கு, கிழக்கு அரசியலில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுடன் தமது நட்புக்களை நீடிப்பதற்காகவும், இங்குள்ள மக்களை உஷார் நிலையில் வைத்திருப்பதற்காகவும் அவ்வப்போது குரல் கொடுப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் வரும் போது தமிழகத்தின் புதிய ஆட்சியாளர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு பொற்றுக் கொடுக்கப்படும் அல்லது இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்பன போன்ற போலியான நம்பிக்கைகள் இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளால் விதைக்கப்படுவதையும் காணக் கூடியதாகவுள்ளது.
 
இலங்கை தமிழர்களுக்கு தனியான அரசியல் அதிகார அலகொன்று பெற்றுக் கொடுக்கப்படுமானால், அது இந்தியாவுக்கே பாதகமாக அமைந்து விடும் என்பது அந்நாட்டின் மத்திய அரசாங்கத்துக்கு தெட்டத் தெளிவாகத் தெரியும். காஷ்மீர் போன்ற பல மாநிலங்கள் தனி அலகாகப் பிரிந்து செல்வதற்காக இலங்கை விவகாரம் மேற்கோள் காட்டப்படலாம்   என்பதால் இலங்கை விடயத்தில், குறிப்பாக அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் இந்திய மத்திய அரசாங்கம் பட்டும் படாமலுமே காய்களை நகர்த்துமென்பதுதான் உண்மை.

இந்த கள யதார்த்தம் சாதாரண மக்களால் நன்கு உணரப்பட்டுள்ள  நிலையில், தமிழக ஆட்சி மாற்றங்கள் இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வுகளைப் பெற்றுத் தரும் என்று நம்பிக்கை கொள்வது அபத்தமானதாகும்.

இவ்வாறான யதார்த்தங்களை வடக்கு, கிழக்கு தமிழர்கள் நன்கு அறிவர். அதேவேளை தமிழர் தரப்பு அரசியல்வாதிகளும் நன்கறிவர். ஆனாலும் தமிழ் மக்களை அரசியல் கொதிநிலையில் வைத்திருப்பதற்காகவும், நம்பிக்கைகளை ஊட்டுவதற்காகவும் இவ்வாறான துரும்புகளையே தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் பயன்படுத்தி வருகின்றனர்.

 

Comments